”ஷீலா ஒர்ட்டேகா” என்று ஷிவ் சொன்னான். அதை ரகசியமாக என் காதில் சொன்னான்.
“யாரு?”என்றேன்.
“ஷீலா ஒர்ட்டேகா” அதை அவன் மேலும் ரகசியமாகச் சொன்னான். அப்படி ரகசியமாகச் சொல்லியிருக்கவே வேண்டியதில்லை. அந்தக் கல்யாணமண்டபமே இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது. தோளோடு தோள் முட்டும்படி நெரிசல். அத்தனைபேரும் கத்திப் பேசிக்கொண்டிருந்தனர்.கூடவே நாதஸ்வரம் தவில். எதிரொலி வேறு.
”யாரு?”என்று நான் மீண்டும் கேட்டேன்.
அவன் உடனே செல்போனை திறந்து அந்த படத்தை காட்டினான். யாரோ ஒரு குண்டுப்பெண் கண்ணாடி போட்டுச் சிரித்துக்கொண்டிருந்தாள். கொஞ்சம் முன்னுந்திய தாடைகொண்ட முகம். பெரிய பற்கள், ஆனால் அவை மிகச்சீராக இருந்தன. தடித்த புருவங்கள்.
”யார்டா இவ?”என்றேன்.
“பாரு” என்று அவன் காட்டினான். ஒரு சிறு காட்சித்துளி ஓடியது. நான் திடுக்கிட்டு செல்லை அணைத்துவிட்டு சுற்றிலும் பார்த்தேன்.
ஷிவ் சிரித்தான். “யாரும் பார்க்க மாட்டாங்க. பயப்படாதே”
”இதை ஏன் இப்ப காட்டுறே? நல்ல காரியம் நடக்கப்போகுது”
”இதுவும் நல்ல காரியம்தானே? என்ன தப்பு?” அவன் கண்களைச் சிமிட்டி “அதோ அங்கே மணவறையிலே இருக்கிறவங்களும் இந்த நல்ல காரியத்துக்காகத்தான் காத்திருக்காங்க. அவங்க ரெண்டுபேருமே இதைத்தான் நினைச்சுக்கிட்டிருக்காங்க”
நான் பெருமூச்சுவிட்டேன். ஷிவ் நான் தவிர்க்க நினைக்கும் ஆள். எம்.இ முடித்து திருவனந்தபுரத்தில் பெரிய வேலையில் இருக்கிறான். என் கூடவே படித்தவன். நான் எஞ்சீனியரிங்கை ஒப்பேற்றிவிட்டு ஒரு கட்டுமானக் கம்பெனியில் ஓவர்சீயராக அலைந்து கொண்டிருக்கிறேன். உண்மையில் மேஸ்திரியின் வேலைக்காரன் என்று சொல்லவேண்டும். அவன் போட்டிருக்கும் சட்டையின் விலை பதினைந்தாயிரம் இருக்கும். நான் உள்ளூர் ரெடிமேட் சட்டை போட்டிருக்கிறேன். என்னிடம் இருப்பவற்றிலேயே நல்ல சட்டை. ஆனால் இந்த கல்யாண மண்டபத்திலேயே மலிவான சட்டை இதுதான்.
ஆகவேதான் கல்யாணத்துக்கு வரமாட்டேன் என்று அம்மாவிடம் அடம்பிடித்தேன். அம்மாவுக்கு நேற்று சர்க்கரை ஏறிப்போய் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசி போட வேண்டியிருந்தது. கல்யாணம் அம்மாவின் ஒன்றுவிட்ட அக்காளின் மகளுக்கு. வேறு வழியே இல்லை. கல்யாண மண்டபத்தில் நல்ல கூட்டம் என்பதுதான் எனக்கு ஆறுதல். எவர் கண்ணுக்கும் படாமல் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கவேண்டும். பரிசெல்லாம் கொடுக்கவேண்டியதில்லை. இவர்களுக்கு பரிசு கொடுக்குமளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. சாப்பிட்டுவிட்டு சந்தடியில்லாமல் நழுவிவிடலாம். அப்போதுதான் ஷிவ்வை பார்த்தேன். அவனும் கூட்டத்தில் ஒட்டாமல் இருந்தான். அந்தவகையில் நல்லதுதான் என்று சேர்ந்துகொண்டேன்.
“ஷீலா ஒர்ட்டேகாவுக்கு ஒரு சிஸ்டர் உண்டு. அவ பேரு கேஷா ஒர்ட்டேகா. இரட்டைபோல இருப்பாளுக” என்றான் ஷிவ்.
“வாயைமூடு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது”
“ஷீலா ஒர்ட்டேகா இங்கே வந்திருக்காடா மடையா”
நான் மூச்சுத்திணறினேன். “இங்கேயா? எங்கே?”
”இந்தக் கல்யாணத்துக்கு… இதோ இந்த மண்டபத்த்துகு. நமக்கு மிகப்பக்கத்திலே இருக்கா”
“டேய்!” என்றேன். எப்படி ஒருகணம் நம்பிவிட்டேன் என்று ஆச்சரியமாக இருந்தது.
“நீ என்ன செய்றே, நல்லப்புள்ள மாதிரி நேராக மணமேடை வரை நடக்கிறே. ஏதாவது ஒரு வேலை இருக்கிற மாதிரி பாவலா செய்கிறே. அப்படியே திரும்பி இடதுபக்கம் பாத்துக்கிட்டே வர்ரே. அவளை பார்த்திருவே”
“போடா”
“வேண்டாம்னா வேண்டாம்…”
நான் கொஞ்சம் யோசித்துவிட்டு “பார்க்கிறேன்…” என்றபடி எழுந்து நடந்து மணமேடைப் பக்கம் போனேன். பெண்ணுக்கு ஏதோ சடங்கு நடந்துகொண்டிருந்தது. மணமகன் அதை வாய் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். கேசவபிள்ளை தாத்தா அச்சடங்கை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.
நான் திரும்பி வரும்போது இடதுபக்க வரிசையைப் பார்த்துக்கொண்டே வந்தேன். என்ன சொல்கிறான் என்று தெரியவில்லை. பெண்களைத்தான் பார்த்தேன். இளம்பெண்கள் குறைவுதான்.
சட்டென்று என் மேல் ஓர் உதை விழுந்ததுபோல் இருந்தது. மூச்சுத்திணறல் போல வந்தது. ஓடி வருபவன் போல வந்து ஷிவ் அருகே அமர்ந்துகொண்டேன்.
“என்ன பார்த்துட்டியா?”
”டேய் ,டேய்”என்றேன்.
ஷிவ் சிரித்து என் முதுகைத் தட்டினான். “எப்டி? சாயல் இருக்குல்ல? ஐயா சொன்னா அது அச்சொட்டா இருக்கும் பாத்துக்க”
“டேய், வேண்டாம்டா”
”நான் என்னடா பண்ணினேன்? அவ அப்டி இருக்கா”
“டேய்”
நான் பதறிக்கொண்டே இருந்தேன். அது என் அத்தை பிரபாவதி. அவளுக்கு கொல்லம் பக்கம் சொந்த ஊர். மாமாவை கல்யாணம் செய்துகொண்டு நாலைந்து ஆண்டுகள்தான் ஆகிறது. ஏதோ மத்திய அரசு வேலையில் இருக்கிறாள். இப்போதுதான் பாறசாலைக்கு வேலைமாறுதலாகி வந்திருக்கிறாள். நானே நாலைந்து தடவைதான் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை.
கொல்லம் பக்கம் எங்கள் சாதியில் பலருக்கு தோற்றத்தில் கொஞ்சம் ஆப்ரிக்கக் கலவை உண்டு. கல்யாணமாகி அத்தை வந்த நாட்களில் அவளைப் பார்க்க ஆட்டோகிராஃப் படத்தில் நடித்த மல்லிகா போல இருப்பதாகப் பேசிக்கொள்வார்கள். பற்கள் பெரிதாக, பளிச்சென்று, சீரான வரிசையாக இருக்கும். ”சிரிச்சா ஜிப் திறந்தமாதிரி தெரியும்”என்று கோமதி அத்தை சொல்ல அவளுக்கு ஜிப் என்ற பேரும் ரகசியமாகப் புழங்கியது.
“சாயல் இருக்குல்ல?”என்று ஷிவ் கேட்டான்
“வேண்டாம், நாம இதைப்பத்தி பேசவேண்டாம்”
“சரி, இதோ இவ எப்டி இருக்கான்னு சொல்லவா?” என்று இன்னொருத்தியைக் காட்டினான்.
“உனக்கு வேற வேலையே இல்லியா?”
“பாத்தா எல்லா பொண்ணும் ஏதாவது ஒரு போர்ன் ஸ்டார் மாதிரியே இருக்காடா. நான் என்ன பண்றது? அனிதா ராஜ்னு ஒருத்தி… கொஞ்சம் பழசு.அவளுக்கு சிலிக்கா ராஜ்னு பேரு வச்சிருக்கணும்… அவ ஆக்சுவலா…”
“ப்ளீஸ்”
“சரி”
அதன்பின் நான் பேசவில்லை. கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். என் மனம் ஏன் அத்தனை கிளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தெரியவில்லை. அந்தக் கல்யாணவீட்டில் அமர்ந்திருக்கவே பிடிக்கவில்லை. எழுந்து வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றியது
கல்யாணச் சடங்குகள் மிகமிக மெதுவாக நடந்துகொண்டிருந்தன. என்னென்ன சடங்குகள்! எல்லாமே மிகத் தொன்மையானவை. தலைப்பாகை கட்டிக்கொள்வது, குச்சி ஏந்திக்கொள்வது. செடிநடுவது, நீர் ஊற்றுவது, குடத்தில் நீர் கொண்டு செல்வது, மரக்காலில் அரிசியை அள்ளுவது, தென்னைப்பூக்குலை நடுவது…இதெல்லாம் ஏதோ பழங்குடிக் காலத்துச் சடங்குகள். இன்னும் அப்படியே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண் திருவனந்தபுரத்தில் ஒரு ஃபேஷன் டிசைனர். பையன் துபாயில் ஒரு எஞ்சீனியர். பெண் முகத்தை பியூட்டி பார்லருக்குச் சென்று பார்பி பொம்மை போல ஆக்கிக்கொண்டிருந்தாள். முகம் தொலைவிலிருந்து பார்க்க அழகாகவும், அருகே செல்லச்செல்ல ஜெல்லிமீன் போலவும் தெரிந்தது.
”அவ பேரு என்ன?” என்றேன்.
“எவ?”என்று ஷிவ் கேட்டான்
”டேய் வெண்ணை, நீ காட்டினியே அவ”
“ஷீலா ஒர்ட்டேகாவா?”
“ஆமா”
“அப்ப அவளைத்தான் நினைச்சிட்டிருக்கே?”
“அவ ஆப்ரிக்காவா?”
“இல்ல. லத்தீனா. ஆப்ரிக்க வெள்ளைக்கார கலவை. அதான் நம்மூரு கலர், நம்மூரு முகம். நம்ம பயக்க பாதிப்பேரு லத்தினா பொண்ணுகளைத்தான் பாக்கிறாங்க”
“நான் பாக்கிறதில்லை”
”இனிமே பாப்பே”
“போடா”என்றேன்.
“இப்ப இது சாதாரண ஹேபிட்டா ஆயாச்சு. காலேஜ் கேர்ல்ஸெல்லாம்கூட பாக்கிறாளுக. எல்லார் பேரும் எல்லாருக்கும் தெரியும். ஏதாவது பேரைச் சொல்லிப்பாரு, சின்னப்பொண்ணுகளுக்குக் கூட கண்ணிலே சிரிப்போ ஜாக்ரதையோ வந்திட்டுப் போகும். பழைய சினிமாக்களிலே அந்தக் காலத்து பையன்கள் போர்ன் படம் பாக்க நாயா அலையறத இப்ப பாத்தா வேடிக்கையா இருக்கு. இப்ப இது மெயின்ஸ்டிரீம் கல்ச்சர்… அதனாலே இதை தவிர்க்கவே முடியாது”
“ஆமா. ஆனா நீ செய்றது அநியாயம். நான் இனிமே எப்டி அவங்க முகத்தைப் பாக்கமுடியும்?”
“நீ எதுக்கு முகத்தை பாக்கிறே?”
“டேய்”
“சரிடா, இங்க பார். போன ஜெனரேஷன்லே ஒவ்வொரு பொண்ணையும் எந்த நடிகைய மாதிரி இருக்கான்னு வெளிப்படையாச் சொல்லி ஞாபகம் வச்சிருந்தாங்கள்ல?”
“ஆமா, இந்த அத்தையைக்கூட ஆட்டோகிராஃப் மல்லிகான்னு சொல்லுவாங்க”
“அதேதான் இப்ப இப்டி. இத்தனைபேர் இவ்ளவு போர்ன் பாக்கிறப்ப இது நடக்காம இருக்குமா?”
”அதுவும் இதுவும் ஒன்னா?”
“என்ன வித்தியாசம்?”
”நீ வேணும்னே பேசுறே. நான் ஆர்க்யூ பண்ண வரலை”
”போர்ன் பத்துவருசம் முன்னாடி குடுத்த பரபரப்பை இப்ப குடுக்கலை. இன்னும் கொஞ்சநாளிலே எல்லாம் பழகிரும். சன்னி லியோன் மெயின்ஸ்டிரீம் சினிமாவுக்கு வந்தாச்சு. கடைதிறப்புவிழாவுக்கு கூப்பிடறாங்க. ஆயிரக்கணக்கானபேர் திரண்டு அந்தம்மாவைப் பாக்க போறாங்க. ஏர்ப்போர்ட்டிலே காலேஜ்பொண்ணுக அந்தம்மாகிட்டே ஆட்டோகிராஃப் வாங்குறாங்க… மியா கலிஃபா அரசியல் கருத்துக்கள் சொல்றாங்க. அப்றம் என்ன?” என்றான் ஷிவ் “போன வாரம் எங்க காலேஜ் கிளப்லே ஒரு பொண்ணை கிளப்டேக்கு அறிமுகம் செய்றப்ப அவளைப் பாத்தா இசபெல்லா டெய்லர் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. அவ வெக்கப்பட்டு சிரிச்சுக்கிட்டே கையாட்டுறா… ஈஸி”
“அது யாரு இசபெல்லா?”
“ஒரு தெய்வம்… டெய்லர்களோட சாமி. விடு. இது வேற உலகம்”
“இது நடந்திட்டிருக்குன்னு நானும் ஒப்புத்துக்கறேன். ஆனா கேவலமா இல்லியா?”
“என்னது?”
“பொண்ணுங்களை இப்டி வெறும் உடம்பா, செக்ஸ் டாய்ஸா பாக்கிறது?”
“உடனே உன்னோட தங்கச்சியை அப்டி நினைப்பியா அப்டீன்னெல்லாம் ஆரம்பிச்சிராதே. க்ளீஷே”
“எதிக்கலா இது சரியா இருக்கா? பொண்ணுகளை இப்டி வெறும் சதையா பாக்கிறது?”
“சதையா பாக்கலை டூட், டிரேட் ஆப்ஜெக்ட்ஸா பாக்கிறோம். டிஸ்ப்ளே மெட்டீரியலா பாக்கிறோம். ஆனா பொம்புளைங்களை மட்டுமில்லை எல்லாரையுமே அப்டித்தான் இப்ப பாக்கிறோம்… நான் மாசம் எட்டாயிரம் ரூபா குடுத்து ஃபிட்னெஸ் பாருக்கு போய் பைசெப்ஸையும் செஸ்டையும் ஏத்திக்கிட்டு வந்திருக்கேன்ல? லீவ் இட்”
நான் பெருமூச்சு விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஷிவ் அவனுடைய நண்பன் ஒருவனைப் பார்க்க எழுந்து சென்றான். “வரேண்டா… பாப்பம். சிலசமயம் அப்டியே போய்டுவேன்”
சந்திரசேகர் மாமா என்னை அழைத்தார். “அங்க என்னடா பண்றே தனியா உக்காந்து?”
“சும்மா”
“என்ன சும்மா? இதான் உன்னோட பிரச்சினை. இத்தனைபேர் இருக்காங்க. எல்லாரும் உன்னோட ரிலேட்டிவ்ஸ். பாதிப்பேரு பெரிய இடங்களிலே இருக்காங்க. உன்னை கைதூக்கி விடுறதுக்கு பல பேருக்கு சக்தி இருக்கும். அதெல்லாம் தண்ணியிலே கிடக்கிற எறும்பை தூக்கிவிடுறது மாதிரி அவங்களுக்கு… நீ என்ன பண்ணணும்? அறிமுகம் செஞ்சுக்கிடணும். உன்னைப்பத்தி அவங்களுக்கு ஞாபகம் இருக்கிற மாதிரி செஞ்சுகிடணும். அதுக்குப்பேருதான் மார்க்கெட்டிங். உன்னை நீ மார்க்கெட்டிங் பண்ணிக்கிடணும். கூவிக்கூவி விக்கணும். இல்லேன்னா இங்கதான் இருப்பே. நெய்யாற்றங்கரையிலே மேஸ்திரிகள் கிட்டே மல்லாடிக்கிட்டு. என்ன பேமெண்ட் குடுக்கிறான் உனக்கு?”
நான் முனகியது அவர் காதில் விழவில்லை.
“சத்தமாச் சொல்லு, எவ்ளவு?”
“பன்னிரண்டாயிரம்”
“டீசல் செலவு சேத்தா, சேக்காமலா?”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“அதாவது சோறு போடுறான், அவ்ளவுதான். மேஸ்திரி வாங்குறதுலே பாதிச்சம்பளம். வெக்கமா இல்லை?”
நான் தலைகுனிந்து நின்றேன்.
“நான் சிலபேரை அறிமுகம் பண்றேன். பாத்து பதமா நடந்துக்க. அவங்களுக்கு உன்மேலே நம்பிக்கை வரணும்”
நான் உதட்டை இழுத்துக் கடித்துக்கொண்டேன். அப்படியே நழுவிவிடலாமா என்று யோசித்தேன். இதனால்தான் நான் எந்த விழாக்களுக்கும் போவதில்லை.
“வா, அவருதான் ஜிஎம் கன்ஸ்டிரக்ஷனோட ஆடிட்டர். அனந்தகிருஷ்ணன்னு பேரு. உனக்கு முறையிலே பெரியப்பா வேணும்…”
“இல்ல, நான்…”
“என்ன?”
”அவரு ஏதாவது கேட்டா?”
“கேட்டா பதில்சொல்லு…வாடா”
நான் அவர் பின்னால் சென்றேன். மாமா என்னிடம் “கல்யாணத்துக்கு வர்ரே, ஒரு நல்ல சட்டை போட்டுட்டு வரக்கூடாதா? பழசுபட்டையை போட்டுட்டு கட்டுமான சைட்டுக்கு போறது மாதிரி வந்திடறே…”என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
மிகமெல்லிய சட்டம்போட்ட கண்ணாடியும் வெண்ணிற சட்டையும் வேட்டியுமாக நின்ற அனந்தகிருஷ்ணனைச் சுற்றி நான்குபேர் நின்றனர். அவர்கள் உரையாடிச் சிரித்துக் கொண்டிருக்க அவர் மிகமெல்ல புன்னகைத்து ,தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார், கூடிநின்றவர்கள் அவரை மகிழ்விக்க முயல்வது அவர்களின் முகபாவனைகளில் தெரிந்தது. கோயிலில் சாமிச்சிலையை சுற்றி நிற்கும் முனிவர்களின் பாவனை.
சந்திரசேகர் மாமா வைத்த வணக்கத்தை அவர் மிகச்சிறிய புன்னகையால் ஏற்றுக்கொண்டார். என்னை திரும்பிப் பார்க்கவில்லை. நானும் வணக்கம் வைத்தேன். அவர் அதை கண்டாரா என்று தெரியவில்லை.
ஏதோ ஒரு எஞ்சீனியரைப் பற்றிய பேச்சு போய்க்கொண்டிருந்தது. ”அவனுக்கு டிரிகோனமெட்ரியே தடுமாறுது… பின்ன என்ன?”என்றார் அனந்தகிருஷ்ணன். அத்தனைபேரும் சிரித்தனர்.
அந்த வேடிக்கை முடிந்து சிரிப்பு கொஞ்சம் அடங்கியதும் சந்திரசேகர் மாமா “எஞ்சீனியருங்க பெருத்துப் போய்ட்டாங்க… இந்தா இவனும் எஞ்சீனியர்தான். நம்ம மீனாட்சிக்க மகன்… அதான் செத்துப்போன பிரபாகரனோட பெஞ்சாதி. பிரபாகரன் உங்களுக்கு முறையிலே தம்பி” என்றார்.
அவர் என்னைப் பார்த்தார். புன்னகையா என்று சொல்லாதபடி உதடுகள் கொஞ்சம் இழுபட்டன.
“இங்க நெய்யாற்றங்கரையிலே எஞ்சீனியரிங்குக்கு என்ன சான்ஸ்? சும்மா ஏதோ வேலை பாக்கிறான்… நான்தான் சொன்னேன், நம்ம சொந்தத்திலேயே மகாராஜாக்கள் மாதிரி ஆளுங்க இருக்காங்கன்னு. கடைக்கண்ணாலே பாத்தாப்போரும், அப்டியே மேலே பறந்திரலாம்னு சொன்னா முழிக்கறான். பெரியவங்க அருள் பெருமாள் அருள்னு சொல்றதுண்டு. என்ன நான் சொல்றது? டேய், பெரியப்பாவை பாத்து கும்பிட்டுக்க. இப்பல்லாம் தெய்வம் கோயிலிலே இல்லை. கண்ணெதிரிலே மனுஷங்களா நடமாடுது. பெரியப்பா ஒரு வார்த்தை சொன்னா அதோட உனக்கு ஒரு லைஃப் அமைஞ்சாச்சுன்னு வைச்சுக்கோ”
அனந்தகிருஷ்ணன் என்னை பார்த்தார். கண்களில் என்ன என்று சொல்லத்தெரியவில்லை.
“பையனுக்கு ஏதாவது கண்பார்த்து செய்யணும்”என்றார் சந்திரசேகர் மாமா.
“என்ன படிச்சிருக்கே?”என்று அனந்த கிருஷ்ணன் கேட்டார்.
“பி.இ” என்றேன்.
“எவ்ளவு பர்சண்டேஜ்?”
“கம்மிதான்”
”அதாவது நாலுபேர் நடுவிலே சொல்லிக்க முடியாது…நல்லது” அவர் இன்னொருவரிடம் ”இப்பல்லாம் படிப்புன்னா என்ன? நாலஞ்சு வருஷத்தை வெட்டியா செலவழிக்கிறது. தினம் சினிமா ,கண்டபடி தீனி, ராத்திரி கண்ணுமுழிப்பு. உடம்பு பஞ்சுப்பொதி மாதிரி ஆயிடும். உண்மையைச் சொன்னா அந்தப் படிப்பு இல்லேன்னா மண்ணு சுமந்தாவது வாழலாம்” என்றார்.
“ஆமா, இதெல்லாம் என்ன படிப்பு? ஒண்ணுமே தெரியாது. டிகிரிய மட்டும் தூக்கிட்டு வந்திருவானுக” என்றார் ஒருவர்.
“சொல்லாதீங்க. நான் உக்காருற இடத்திலே வந்து ஒருநாள் உக்காந்து பாருங்க. வருவானுக, மண்ணு கூட சுமக்க முடியாத தடியனுங்க. ஒருத்தன் இப்டித்தான் எம்.காம்.னு சொல்லிட்டு வந்தான். போஸ்டாபீஸுக்கு அனுப்பினேன். அவன் எங்க போனான் தெரியுமா? போஸ்டல் சூப்ரண்டெண்ட் ஆபீஸுக்கு. அங்கே போய் என் பேரைச் சொல்லி என்னமோ உளற அவரு என்னை கூப்பிட, என்னத்தைச் சொல்ல?” என்றபின் “ நீ என்ன ஐடியா வச்சிருக்கே?”என்று என்னிடம் கேட்டார்.
“கன்ஸ்டிரக்ஷன்”
“கன்ஸ்டிரக்ஷன்னா? மண்ணு கல்லு சுமக்கிறது?” என்றார். பின்னால் மெல்லிய சிரிப்பொலிகள் கேட்டன.
“இல்ல” என முனகினேன்.
“பின்ன?”
”எஞ்சீனியரிங்”
”உன் மார்க்கை வைச்சுகிட்டு நீ எஞ்சீனியரிங் வேலை செஞ்சா கட்டிடம் தலையிலே விழுந்திருமே?”
“அதெல்லாம் கத்துக்கிடுவான்”என்று சந்திரசேகர் மாமா சொன்னார்.
“அதாவது சம்பளம் குடுத்து கம்பெனிக்காரன் உனக்கு எஞ்சீனியரிங் கத்துக்குடுக்கணும். கத்துக்கிட்டதும் கூடுதல் சம்பளம் வேணும்னு கேப்பே?”
அதற்குள் முகூர்த்தநேரம் அணுக, நாதஸ்வரம் வேகமெடுத்தது. அவர் திரும்பிப் பார்த்துவிட்டு என்னிடம் “நான் யாரையும் ஈசியா ரெக்கமெண்ட் பண்றதில்லை. மொக்க மடையனுங்களை ரெக்கமெண்ட் பண்ணி இதுவரை நான் அனுபவிச்சது போரும்… பாப்பம்”என்றார்
ஒருவர் அருகே வந்து அவரிடம் பேச ஆரம்பிக்க அனந்த கிருஷ்ணன் திரும்பிய தருணம் பார்த்து சந்திரசேகர் மாமா என் கையைப் பிடித்து “டேய் அப்டியே காலிலே விழுந்திரு” என்றார்.
நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். என் காதில் மொத்த ஓசையும் ஒரு பெரும் ரீங்காரமாக ஒலித்தது.
“நான் ஒரு நல்ல வாக்கு சொல்லுறேன். அப்ப நீ அப்டியே காலிலே விழுந்து கும்பிட்டிரு…”
என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. என் மூளையே களிமண் மாதிரி இருந்தது
அனந்தகிருஷ்ணன் திரும்பியதும் மாமா “பையனுக்கு ஆருமில்லை. உங்க கருணையாலே மேலே வந்தாத்தான் உண்டு… இல்லேன்னு சொல்லிரப்பிடாது”என்றார். கூடவே என் கையை அழுத்தினார்.
நான் சட்டென்று குனிந்து அவர் காலைத் தொட்டேன்.
“சேச்சேச்சே, என்ன இது… ச்சே” என அவர் பின்னகர்ந்தார். ”ஒரு தெறமையும் இல்லேன்னாலும் காலுபிடிக்க கத்து வச்சிருக்கானுக. என்னைய கேட்டா காலுபிடிக்கிறவனுகதான் காலை வாரவும் செய்வானுக”
நான் ஒரு கணத்தில் உடலெங்கும் ஒரு குறுகலை உணர்ந்தேன். எல்லாத் தசைகளும் இழுத்துக்கொள்வதுபோல.
“அப்டி விட்டிரப்பிடாது”என்றார் மாமா.
“பாப்பம் பாப்பம்”என்று அனந்த் கிருஷ்ணன் அவரை அழைக்க வந்தவருடன் நடந்தார்.
மாமா என்னிடம் “செய்வாரு… நீ நம்பிக்கையா இருடே’என்றார்.
அங்கே நின்ற ஒருவர் “கெட்டியா காலைப்புடிச்சுக்கோ தம்பி, முன்னுக்கு வந்திருவே” என்றார்.
“அதான் பையன் படிப்பில்லேன்னாலும் மத்ததிலே சூட்டிகையா இருக்கானே. சட்டுன்னு விழுந்துட்டான் பாருங்க. நம்ம பையனுங்க செய்வானுகளா?”
என் கண்களில் நீர் நிறைந்தது. என்னால் நிற்கவே முடியவில்லை. தொண்டை ஏறியிறங்கியது.
“செரி,போ. நாம சொல்லியாச்சு. இனி தெய்வ சங்கல்பம்”என்றார் சந்திரசேகர மாமா.
நான் அடிபட்ட நாய் போல அங்கிருந்து ஓடினேன். அத்தனை கண்களும் என்னையே பார்ப்பதுபோல உணர்ந்தேன். மையவாசல் வழியாக வெளியே போகமுடியாது. ஆகவே சந்துக்குள் நுழைந்து கைகழுவும் இடம் வழியாக வெளியே சென்றேன். கார் பார்க்கிங்கை அடைந்து அவ்வழியாக வெளியே செல்லலாம். மண்டபத்திற்கு பின்பக்கம் அது. அங்கும் மையச்சாலைதான்.
கூட்டமில்லாத பகுதியை அடைந்தபோது அப்பால் செல்போனில் பேசியபடி ஷிவ் நிற்பதைக் கண்டேன். உடனே எதிர்ப்பக்கம் திரும்பிவிட்டேன். அருகே கழிப்பறை வரிசை. ஒன்றைத் திறந்து உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். சிறிய தனிமையான அந்தச் சதுரம் எனக்கு ஆறுதலை அளித்தது. என் உடல் அவ்வளவு வியர்த்திருப்பதை, என் கைகள் அத்தனை நடுங்குவதை, என் கால்கள் அவ்வளவு பதறிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
மெல்ல மெல்ல என் உடல் தளர்ந்தது. இயல்புநிலையை அடைந்தேன். அப்போது ஒரு சிகரெட் வேண்டுமென்று தோன்றியது. நான் சிகரெட் பிடிப்பதில்லை. வாழ்க்கையிலேயே பத்துப்பதினைந்து தடவைக்குமேல் சிகரெட் பிடித்ததில்லை. பிடித்த போது சிகரெட் ஒத்துக்.கொள்ளவுமில்லை. ஆனால் அப்போது சிகரெட் தேவைப்பட்டது.
ஆனால் எழுந்து வெளியே செல்லவும் பிடிக்கவில்லை. செல்போனை எடுத்து வெறுமே வாட்ஸப் செய்திகளை பாத்தேன். பெரும்பாலும் ஃபார்வேர்ட் மெசேஜ்கள். அவற்றிலும் பெரும்பாலும் நம்பிக்கையூட்டும், உற்சாகமூட்டும், சுயமுன்னேற்றப் பொன்மொழிகள். அவை எனக்குப் பிடிக்கும். அவற்றை வாசிக்கையில் நான் அடையும் ஆறுதல் அந்தரங்கமானது. ஆனால் அவற்றை நண்பர்களிடம் கேலியாகப் பேசிக்கொள்வேன்.
நான் ஓர் எண்ணத்தால் தொடப்பட்டேன். அதை எவரோ என்னை உண்மையாகத் தொட்டதுபோல் உணர்ந்து அங்குமிங்கும் பார்த்தேன். அந்த இடத்தின் அந்தரங்கம் எனக்கு இனிமையான ஓர் உணர்வை அளித்தது. புன்னகையுடன் ஷீலா ஒர்ட்டேகா என்று தேடினேன். சிறு வீடியோ கிளிப்கள் ஓடின. அவற்றை பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு காம உணர்வு உருவாகவில்லை. விந்தையான ஒரு நிமிர்வு உருவானது. ஒரு திமிர், கொஞ்சம் கசப்பும் ஏளனமும் கலந்த ஒரு கெத்து.
வெளியே எவரோ கதவை தட்டினர். நான் திடுக்கிட்டு விழித்தேன். செல்போனை ஆஃப் செய்துவிட்டு எழுந்து ஆடை சீரமைத்து வெளியே வந்தேன். யாருமில்லை. யாரோ எங்கோ தட்டிய ஓசை.
முகம் கழுவிக்கொண்டேன். கர்ச்சீஃபால் முகத்தை அழுத்தமாகத் துடைத்தேன். தலையைச் சீவிக்கொண்டேன். முதல் பந்தி முடிந்து மக்கள் வெளியேறுவதை பின்பக்கம் நின்று பார்த்தேன். வந்தது வந்துவிட்டோம். போய் சாப்பிட்டுவிட்டால் என்ன?
வேண்டாம் என்று தோன்றியது. இந்த கெத்து ஏன் வந்தது என்று தெரியவில்லை. இதை இப்படியே தக்கவைத்துக்கொண்டு போய்விடுவதே நல்லது. நான் பைக் கொண்டுவரவில்லை. என் பைக் அரதப்பழசான டி.வி.எஸ். பத்தாண்டுகள் கட்டுமான பகுதிகளில் உழைத்து மண்ணும் துருவும் படிந்தது. குஞ்சன் மேஸ்திரியிடம் வாங்கினேன்.ஆட்டோதான் பிடிக்கவேண்டும். ஆனால் மண்டபத்தின் முகப்புக்குச் சென்றால் அங்கே மீண்டும் சந்திரசேகர மாமாவைச் சந்திக்கவேண்டும். அல்லது அனந்த கிருஷ்ணனை.
கார் பார்க்கிங்குக்கு போக ஒரு சின்ன இடைவழி இருந்தது. அதன் வழியாக நான் அங்கே சென்றேன். மதியவெயிலில் விதவிதமான கார்களின் சிப்பியுடல்கள் தெரிந்தன.வண்ணம் வண்ணமாக விதைகளைப் பரப்பி வைத்ததுபோல.சிறிய நீர்ச்சுனைகள் போல முகப்புக்கண்ணாடிகளில் ஆங்காங்கே சூரியன்கள் சுடர்ந்தன.
நான் கார்கள் நடுவே செல்லும்போது பிரபா அத்தையை பார்த்தேன். ஒரு காரில் ஏறப்போனாள். எனக்கு ஏன் அப்படித் தோன்றியது என்று தெரியவில்லை. நான் நேராக அவளை நோக்கிச் சென்று குனிந்து “ஹாய்” என்றேன்.
“ஹாய்” என்று அத்தை சொல்லி அணிந்திருந்த கூலர்ஸை கழற்றினாள்.
“நான் விஜி… விஜயகுமார். நான் உங்களை பாத்திருக்கேன். பேசினதில்லை”
பிரபா அத்தை புருவம் சுருங்க “ஓ”என்றாள்.
“நான் மீனாட்சியோட பையன்”
அத்தை முகம் மலர கார்க்கதவை திறந்து இறங்கி நின்று “மீனாட்சி பையனா? நாலஞ்சு வருஷம் முன்னாடி பாத்தது. வளந்திட்டே”என்றாள்.
“ஆமா, இப்ப பிஇ முடிச்சுட்டேன். கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பண்றேன்”
“அப்டியா, நைஸ்… அம்மா கல்யாணத்துக்கு வரலியா?”
“இல்லை. அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. சுகர்… நான் மட்டும்தான் வந்தேன். உங்களை அப்பவே பாத்தேன்”
“அப்பவே பாத்திருக்கலாமே. நான் உடனே போகணும். இன்னிக்கு ஒரு போர்டு மீட்டிங் இருக்கு. இந்தா என்னோட கார்டு. திருவனந்தபுரம் வந்தா வந்து பாரு என்ன? ஃபோன் பண்ணு”
அவள் நீட்டிய கார்டை பார்த்தேன். நேஷனல் ஹைவேஸ் நிறுவனத்தின் வட்டார மேலாளர். நானெல்லாம் கும்பிட்டு காலடியில் புழுதியாக அமரவேண்டிய அளவு பெரிய பதவி.
மீண்டும் ஏன் அதைச் செய்தேன் என்று தெரியவில்லை. நான் ஒரு கோணல் புன்னகையுடன் “உங்களுக்கு ஷீலா ஒர்ட்டேகாவோட சாயல் இருக்கு” என்றேன் “ஷீலா ஒர்டேகா, போர்ன் ஸ்டார்”
“ஆமா, சிலர் அப்டிச் சொல்லுவாங்க…” என்று அத்தை வாய்விட்டுச் சிரித்தபோது சீரான பெரிய பல்வரிசை ஒளியுடன் தெரிந்தது. எத்தனை நேர்த்தியான பற்கள். சிறிய பற்கள்தான் அழகு என்பார்கள். ஆனால் பெரிய பற்கள்போல அத்தனை பெரிய சிரிப்பை அவற்றால் உருவாக்க முடியாது.
நானும் சிரித்தேன். உண்மையில் அப்போது எல்லாவற்றையும் மறந்து மனம்விட்டுத்தான் சிரித்தேன்.
“நைஸ், பாப்போம். வந்துபார் என்ன?” என்று அத்தை கைகுலுக்க கைநீட்டினாள்.
எங்களூர்ப் பக்கம் அந்த வழக்கமே இல்லை. ஆண்களே கைகுலுக்குவதில்லை. பெண்களுடன் நான் கைகுலுக்கியதே இல்லை.
நான் ஒருகணம் திகைத்தபின் கைநீட்டினேன். அத்தை என் கையைப் பற்றி குலுக்கினாள். உறுதியான வலிமையான கைகுலுக்கல்.
“பை”என்று காருக்குள் அமர்ந்தாள். கதவு மூடியபோது நான் ஒரு சொல்லும் இல்லாமல் நின்றிருந்தேன். வெண்ணிறமான ஆடி கார் ஓசையில்லாமல் முன்னகர்ந்து மிதந்து சென்றது.
என் கைகளில் அந்தக் கைகுலுக்கல் அப்படியே இருந்தது. என்ன ஒரு வலுவான கை. பெண்களின் கைகள் இத்தனை வலிமையாக இருக்குமா என்ன? அந்தக் கையை அசைத்தாலே அக்குலுக்கல் அதிலிருந்து விலகிவிடும் என்பதுபோல அப்படியே கொண்டுசென்றேன்.
ஆட்டோவுக்காக சாலையோரம் நின்றேன். ஷீலா ஒர்ட்டேகாவை நினைத்துக்கொண்டேன். என்ன ஒரு அழகான பல்வரிசை. பற்கள் பெரிதாகத்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் அத்தனை விரிந்து சிரிக்க முடியும்.
***