வலம் இடம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
உங்கள் சிறுகதைகளில் படிமங்களால் மட்டுமே எழுதப்படும் சிறுகதைகள் சில உள்ளன. உச்சவழு, பாடலிபுத்திரம் போன்றவை. மிக நேரடியான கூறுமுறைகள் போல தோன்றினாலும், இக்கதைகளின் மையப்படிமத்தையும், அவை உங்கள் படைப்புலகில் எடுத்தாளப்பட்டுள்ள விதங்களையும் அறிந்தவர்களுக்கே அக்கதைகள் திறக்கும். அத்தகைய கதைகளின் ஒன்று தான் ‘வலம் இடம்’. ஒரு எருமையின் இறப்பும், அதை நிரப்பும் மற்றொரு எருமையின் வருகையுமாக அமைந்த ஒரு கதை. இதன் மையப்படிமம் எருமை தான். அதை நிரப்பும் துணைப் படிமங்கள் என ‘இடம்’, ‘மூக்கணாங்கயிறு’ இரண்டையும் சொல்லலாம்.
உங்கள் படைப்புலகில் எருமை என்பது வளத்தின் அடையாளம். காலத்தின் குறியீடும் கூட. பஞ்சத்தில் செத்தவர்களுக்கு இரங்கி பாதாளத்தில் இருந்து தோன்றிய காமதேனு. கதையிலும் அது ஐஸ்வரியமே என்று தான் குறிப்பிடப்படுகிறது. முருகேசனும் சரி, அவன் மனைவியும் சரி அந்த எருமையைச் சுற்றியே தங்கள் வாழ்வை அமைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முருகேசன். அவன் அந்த எருமையின் நினைவிலேயே திளைத்து, நிறைந்து இருக்கிறான். அந்த எருமையைக் குளிப்பாட்டுகையில் கரையில் போகும் வைத்தியர் ஒருவர் சொல்வது முக்கியமான குறிப்பு – ‘என்னடே கூட்டுகாரியோட கும்மாளமா?’. அவனுக்கு மனைவி கூட இரண்டாம் இடம் தான். அந்த எருமைக்காக மனிதர் அஞ்சும் பாம்பு உலவும் இடத்தில் சென்று கூட புல் கொண்டு வருகிறான். அந்த எருமையே அவன் நிரந்தரம் என வாழ்ந்துவருகிறான். கண்ணாடி போல வழுக்கிச் செல்லும், புண் ஏற்படுத்தாத, அடிக்கடி மாற்றியாக வேண்டிய மூக்கணாங்கயிறால் அந்த உயிரை என்றென்றும் இழுத்து வைத்திருக்கிறான். எனவே தான் அதன் மரணம் அவனை அப்படி புரட்டிப் போடுகிறது. அந்த மரணத்தை அவன் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உணர்த்துவதைத்தான் அந்த இடப்பக்கத்து எருமை என்னும் படிமம் கதையில் வருகிறது. அந்த எருமைக்கு ஒரு மூக்கணாங்கயிறு இடவில்லையே என தன்னைத்தானே நொந்து கொள்கிறான்.
சரி வாழ்வையும், மரணத்தையும் தான் அவன் உணர்கிறான் என ஒற்றை வரியில் இதை முடித்துவிடலாமா? இக்கதையின் உடன் இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு புராணக்கதை ஒன்று உண்டு. கிராதம் நாவலில் வரும் காலபீதி என்னும் முனிவரின் கதை. “ஏன் பிறக்க வேண்டும்? பிறந்து பின் இறக்க வேண்டும்?” என்ற ஒரு வினாவால் அன்னையின் கருவாயிலை அடைத்துக் கொண்ட ஒரு குழந்தையிடம், பார்த்திவப்பரமாணுவாகி, கருவாகி, உருவாகி, உடலாகி, ஊனாகி, கூடாகி, நீறாகி பின் மீண்டும் பார்த்திவமாகி ஆடும் அந்த சிவநடனத்தினை சிவனென்றே ஆகி ஆட நீ பிறந்தாக வேண்டும் என்ற அறிதலை அக்குழந்தைக்கு அளிக்கும் ஒரு தந்தையின் கதை. இங்கு முருகேசனுக்கு கிடைப்பதும் அத்தகைய ஒரு அறிதலே. ஒவ்வொரு எருமையும் இடத்தில் மற்றொரு இணை எருமையுடன் தான் இருக்கிறது என அவன் அறிவது, அந்த இடப்பாகத்து எருமை, வலப்பாகத்து எருமையுடன் இணைந்தே பிறக்கிறது என்பதையும், அது வளர வளர இதுவும் உடன் வளர்கிறது என்பதையும், வலதின் ஐயங்களாகவும், விழைவுகளாகவும் இருந்து இறுதியில் அதனுடன் இணைகிறது என்பதையும் முழுமையாக உணர்கிறான். அந்த அறிதல் அவனுக்கு சித்திக்கையில் தான் அளப்பங்கோட்டு அப்பச்சி அவனுக்கான எருமையை மீண்டும் அவனுக்கு அளிக்கிறார்.. அவனும் தன் தந்தையை முழுமையாக மூச்சுலகில் விட்டுவிட்டு தனக்கென ஒரு மைந்தன் என்னும் நீட்சியையும் உருவாக்குகிறான். ஒருவகையில் அந்த புராண கதையின் யதார்த்த தள நீட்சி என்று கூட இக்கதையைச் சொல்ல இயலும். முக்கியமான கதை.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.
அன்புள்ள ஜெ
கதைகளைப்பற்றி வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள்தான் உண்மையில் இந்தக் கதைத்திருவிழாவை ஒரு கொண்டாட்டமாக ஆக்குகின்றன. இனி எல்லா கோடையிலும் கதைகளை வெளியிட்டே ஆகவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது என்று தோன்றுகிறது. ஃபிலிம் ஃபெஸ்டிவல்போல இந்த சீசனில் இதற்காக ஏங்க ஆரம்பித்துவிடுவோம்
எருமை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம். சங்க இலக்கியத்தில் எருமை, காரான் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. பசுவைவிட எருமைதான் சங்க இலக்கியத்தில் அதிகமாக வருகிறது. ஆனால் நவீன இலக்கியத்தில் எருமையைப்பற்றிய நல்ல சித்திரங்கள் மிகமிகக் குறைவு. ஆச்சரியமாக இருக்கிறது
உங்கள் கதைகளில் எருமை வந்துகொண்டே இருக்கிறது. எருமையைப்பற்றி தமிழில் எழுதப்பட்ட அற்புதமான கதை என்றால் மதுரம் தான். அதன்பின் இந்தக்கதை
இரா.கார்த்திகேயன்
கொதி[ சிறுகதை]
அன்புள்ள ஜெ
கொதி கதையை வாசிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. ஏன் இந்துத் துறவிகளில் மிகச்சிலர் தவிர பிறர் சேவையை வழியாகக் கொள்ளவில்லை. ஒருவன் இந்து என்றால் அவன் மதத்தால் கைவிடப்பட்டவன். கிறிஸ்தவன் என்றால் அவனுக்கு அவ்வளவுபெரிய அமைப்பு இருக்கிறது. நான் இந்துத்துறவிகளில் பெரும் மானுடசேவை ஆற்றியவர்களைக் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் மிகக்குறைவுதான்.
இந்துசமூகம் ஏழைகளுக்குச் சேவைசெய்வதை முக்கியமாக கருதவில்லை. ஒரு கோயில்கட்ட குவியும் பணத்தில் நூறிலொருபங்குகூட சேவைக்கு வராது. இந்த அடிப்படைப்பிழை இந்து மதத்திலேயே உள்ளது.
அதோடு நமக்கு துறவு என்றால் விரக்தி. எல்லாவற்றையும் துறப்பது. அதாவது பசியற்றவர்களாக ஆவது. பற்றில்லாமலிருப்பது. இங்கே ஞானையாவின் வழி என்பது பற்றுதான். சோற்றின்மேல் கொண்ட பற்று அப்படியே மக்கள்மேல் கொண்ட பற்றாக மாறி ஏசுவின்மே கொண்ட பற்றாக ஆகிவிடுகிறது
கே.என்.ராஜாராம்