நாஞ்சில்நிலத்தின் நாக்கு

ராம் தங்கம்

ஒரு நிலத்தின் அக யதார்த்தம் என ஒன்று உண்டு. புறத்தே காணும் செய்திகளால் ஆனது அல்ல அது. ஓர் எழுத்தாளன் தன்னை ஒரு நிலத்துக்கு ஒப்புக்கொடுத்து, அதில் வாழ்ந்து, தனக்குள் அந்த அக யதார்த்தத்தைக் கண்டடைகிறான். அதை அவன் இலக்கியமாக ஆக்குகிறான். அதன் வழியாகவே பிறர் மட்டுமல்ல, அந்நிலத்தவரே அந்நிலத்தை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

ஆகவேதான் எழுதப்பட்ட நிலமே வரலாற்றில் நிலைகொள்கிறது, எழுதப்படாத நிலம் வெறும் பருப்பொருள் மட்டுமே எனப்படுகிறது. நிலம் என நாமுணரும் பண்பாட்டு வெளி எழுதி எழுதி உருவாக்கப்பட்டது மட்டுமே.

தமிழில் நாஞ்சில்நாடே மிக அதிகமாக எழுதப்பட்ட நிலம். தஞ்சைதான் தொடக்ககாலத்தில் நிறைய எழுதப்பட்டது. ஆனால் ஒரு தலைமுறைக்காலமே அது நீடித்தது. அதுவும் தஞ்சையின் ஒரு சிறுபகுதி, பெரும்பாலும் பழைய அக்ரஹாரங்கள். தஞ்சையின் மாபெரும் வேளாண்மையுலகம் இன்னமும் கூட எழுதப்படவில்லை. அதை எழுதிய சி.எம்.முத்து, சோலை சுந்தரப்பெருமாள் போன்றவர்களால் அதன் அகத்தை முழுமையாகக் கொண்டுவர முடியவில்லை.

குமரிநிலத்தின் அகம் முதலில் வெளிப்பட்ட படைப்பு கவிமணியின் ’நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம்’. அபாரமான புனைகதை எழுத்தாளராக கவிமணியை அந்நூல் இன்று அடையாளம் காட்டுகிறது. அதன்பின்னர் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஹெப்சிபா ஜேசுதாசன்,நீல பத்மநாபன்,பொன்னீலன் தலைமுறை. அதன்பின் நாஞ்சில்நாடனின் தலைமுறை. அதன்பின் என்னுடைய, குமாரசெல்வாவின் தலைமுறை. அதன்பின் லக்ஷ்மி மணிவண்ணனின் போகனின் தலைமுறை.

அதற்குமடுத்த தலைமுறையில் நாஞ்சில்மண்ணை எழுதுபவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம் தங்கம். திருக்கார்த்தியல் என்னும் தொகுதி அவரை நாஞ்சில்நாடனின் மிகச்சரியான வாரிசு என அடையாளம் காட்டியது.

ராம் தங்கத்தின் தனிச்சிறப்பு என்பது அவர் உடலால் உணர்வால் மொழியால் நாஞ்சில்நாட்டவர் என்பது. திரும்பத்திரும்ப இந்நிலத்தில் அலைகிறார். இந்நிலத்தின் இயல்பான இருமொழிப் பண்பாட்டில் ஈடுபாடுகொண்டிருக்கிறார். இதன் வரலாறு, தொன்மம் ஆகியவற்றில் திளைக்கிறார். அ.கா.பெருமாள் முதலிய ஆய்வாளர்களுடன் அணுக்கமான உறவுகொண்டிருக்கிறார். சலிப்பின்றி இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆகவேதான் அவருடைய கதைகள் நாஞ்சில்நாட்டின் இயல்பான வெளிப்பாடுகளாக உள்ளன. எல்லாக் கதைகளையுமே சுவாரசியமாக எழுதுவதென்பது ஒரு அருங்கலை. ராம் தங்கம் அவ்வகையிலும் நாஞ்சில்நாடனின் வழித்தோன்றல்.

திருக்கார்த்தியல்

ராஜவனம்

முந்தைய கட்டுரைகந்தர்வன், யட்சன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதையின் அகமும் புறமும்