வெண்முரசு’ நாவல்தொடரில் மூன்றாவது நாவல் ‘வண்ணக்கடல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘கடல்’ என்பது, நீரால் ஆனது அல்ல; சினத்தால் ஆனது.
ஒருவர் தன்னைப் படைத்த தெய்வத்தாலேயே வஞ்சிக்கப்படுவது என்பது மீள முடியாப் பெருந்துயர். அத்தகைய துயரை அடைந்தவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள் அல்லது தமக்கு நிகரானவர்களை அழிக்கத் துடித்தெழுவார்கள்.
அவ்வாறு அவமானமடைந்தவர்களைக் காலவரிசைப்படுத்திக் காட்டுவதாகவே இந்த ‘வண்ணக்கடல்’ நாவல் அமைந்துள்ளது. இந்த நாவல், ‘மகாபாரதப்போரே அவமானமடைந்தவர்களின் சினத்தால் தொடங்கியதுதானோ?’ என்று நம்மை நினைக்க வைத்து, திகைக்கச் செய்கிறது.
இத்தகைய பெருந்துயரை மனிதர்கள் மட்டுமல்ல தேவர்களும் அசுரர்களும் அடைந்திருக்கிறார்கள். ‘இவர்களைப் படைத்த தெய்வமே ஏன் இவர்களைக் கைவிட்டது, வஞ்சித்தது?’ என்று வினா எழுப்பிக்கொண்டால், அதற்கு விடையாக ஒற்றைச் சொல் மட்டுமே கிடைக்கிறது. ஆம், அது ‘ஊழ்’ என்ற பெருஞ்சொல்.
அன்பு, அறிவு, வலிமை ஆகிய மூன்று முதன்மையான குணநலன்களைப் பெற்றிருந்த துரியோதனன், துரோணர், கர்ணன் ஆகிய மூவரையும் மூன்று பெரும்புள்ளிகளாக மாற்றியது ஊழ்தான். அந்த ஊழ்தான் அவர்களை அவமானமடையச் செய்து, அவர்களை வரலாற்றில் இடம்பெறத்தக்க பெரிய மனிதர்களாக்கியது.
இவர்களை இவ்வாறு ஆக்கியதற்கு அடிப்படைக் காரணமாக இவர்களின் பிறப்பினையே நாம் கருதமுடிகிறது. துரியோதனன் மதங்கக் கர்ப்பத்திலிருந்து பிறந்தவன். துரோணர் குலமுறைப் பிறழ்வுடைய கர்ப்பத்திலிருந்து பிறந்தவர். கர்ணன் தெய்வத்தால் உண்டான கர்ப்பத்திலிருந்து உதித்தவன். இவர்கள் அவமானப்படுவது இவர்களின் பிறப்பினாலேயேதான்.
துரியோதனன் யானைக்கு நிகரான வலிமையுடன் திகழ்வதாலேயே தன்னுடைய வலிமைக்குச் சிறிதளவு இழுக்கு ஏற்படும்போதும் அவன் தன்னுள்ளேயே பொங்கிக் கொந்தளித்துச் சரிகிறான்.
துரோணர் அதீத திறனிருந்தும் தன்னுடைய குலமுறைப் பிறழ்வாலேயே எல்லா இடத்திலும் சரிக்கப்படுகிறார். அதன் பின்விளைவாக அவரின் ஆசைகள் விரிந்து வரிந்து பேராசைகளாக மாறிவிடுகின்றன.
கர்ணன் தன்னுடைய தனித்திறமையை நிறுவ முயலும் ஒவ்வொரு இடத்திலும் பிறப்பு குறித்து பழிக்கப்பட்டே எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறான். புறக்கணிப்பின் வலியே அவனுக்கு மேலும் மேலும் வலிமையை வாரி வழங்குகிறது.
இவர்கள் மூவரும் தாங்கள் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்முடைய ஆன்மாவைப் பற்றிக்கொண்டு, தம்மை முழுவதுமாகவே புதுப்பித்துக் கொள்கிறார்கள். துரோணரும் கர்ணரும் தம்முடைய வாழ்விடத்தையே மாற்றிக்கொள்ள நேர்கிறது. துரியோதனனோ பரந்து விரிந்த அஸ்தினபுரியில் வாழ்ந்தாலும் தன்னுள்ளேயே சிறைப்படுகிறான்.
துரோணர் தன் மகன் அஸ்வத்தாமனுக்கும் தன்னுடைய முதன்மையான மாணவன் அர்சுணனுக்கும் ஏற்பட்ட பிணக்கினைச் சீர்செய்ய இயலாமல் திண்டாடும் தருணத்தில்தான் கர்ணன் அவரிடம் வந்து சேர்கிறான். தன் மகனுக்குத் துணையாகவும் அர்சுணனுக்கு இணையாகவும் அவரால் கர்ணனை மட்டுமே வைக்க முடிகிறது. துரோணருக்கும் கர்ணனுக்கும் இடையில் ஒருவித மனப்பிணைப்பு ஏற்படக் காரணம் ‘இருவருமே பிறப்புசார்ந்து பிறரால் புறக்கணிக்கப்படுபவர்கள்’ என்பதே!. இருவருமே தங்களின் வாழ்வில் பல்வேறு தருணங்களில் அவமானப்பட்டவர்கள் என்பதையும் நாம் இங்குக் குறிப்பிட்டுக் கூறலாம்.
‘அவமதிப்பு’ குறித்து, துரோணர் கர்ணனிடம் எழுப்பும் வினாக்கள் மிக முக்கியமானவை. துரோணர் கர்ணனிடம் “அந்த அவமதிப்பில் இருந்து நீ வில்வேதத்தால் மீளமுடியுமா என்ன? நான்குவேதங்களையும் கற்றாலும் இவ்வுலகையே வென்றாலும் அந்த அவமதிப்பின் நாற்றம் உன் ஆன்மாவிலிருந்து நீங்குமா?” என்று கேட்கிறார்.
‘அவமானமே’ ஒருவரின் ஆன்மாவை அசைக்க வல்ல பேராயுதம். அந்த ஆயுதத்தைத்தான் ‘ஊழ்’ தன் கையில் எடுத்து, துரியோதனன், துரோணர், கர்ணன் ஆகிய இந்த மூவரையும் தாக்கியுள்ளது. ஊழால் தாக்கப்பட்ட இந்த மூவரும் அடிபட்ட புலிபோலவே தன்னுள் தானே போரிட்டு, தன்னைத்தானே வென்று, நிமிர்வுகொள்கின்றனர். அந்த நிமிர்வு இவர்களிடமிருந்து பெருஞ்சினமாக வெளிப்படுகிறது.
இந்த மூவரின் பெருஞ்சினத்தால்தான் ஒட்டுமொத்த மகாபாரதமும் விரிவும் ஆழமும் கொள்கிறது. ‘ஊழ்’ இவர்கள் வெளிப்படுத்தும் பெருஞ்சினத்தைக் கொண்டே ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் உருவாக்கிவிட்டது எனலாம். இந்த மூன்று பெரும்புள்ளிகளுள் யாரேனும் ஒருவர் வலுப்பெறாமல் இருந்திருந்தாலும்கூட ‘மகாபாரதம்’ இத்தனை வலிமையுடையதாக இருந்திருக்க முடியாதுதான்.
பீமசேனன் காட்டிலும் துரியோதனன் நாட்டிலும் அரக்கர்களைப் போலவே நடந்து கொள்கின்றனர். இருவருமே தம் அன்னை அஞ்சும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சுவதில்லை. ஆனால், இருவருமே ‘தமக்கான இணை எதிரிகள் தாமே’ என்பதைக் கண்டுகொண்டவுடன், ஒருவரையொருவர் மோதி, சரிந்து, ‘இருவருமே சமமான அளவு வலிமையுடையவர்களே!’ என்பதைத் தங்களுக்குள் நிறுவி, தங்களின் ஆழ்மனம் அதை ஒப்புக்கொண்ட பின்னர், இணைபிரியாத நண்பர்களாகி விடுகின்றனர்.
ஒருகட்டத்தில் பீமசேனனும் துரியோதனனும் நகுலன், சகாதேவன் போலவே இரட்டைப் பிள்ளைகளாகவே மாறி விடுகின்றனர். ஒரே காந்தத்துண்டின் எதிரெதிர்த் துருவங்கள் போல அவர்கள் இருக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இரண்டு துருவங்களாகத் தெரியும். ஆனால், அந்தக் காந்தத்துண்டைப் பொருத்தவரை அது ஒரே காந்தத்தின் இரண்டு முனைகள் மட்டுமே. இளமையில் பகையும் நட்பும் நீட்டிப்பதில்லைதான். காலத்தின் முன் அது அலுங்கும்போது மட்டுமே, மெல்ல நழுவும்போது மட்டுமே அது நட்பாகவோ அல்லது பகையாகவோ தனித்து நிலைத்து, நீட்டிக்கும்.
கானாடுதலின்போது அன்னைக் கரடி துரியோதனனைத் தாக்குகிறது. பீமசேனன் துரியோதனனைக் காப்பாற்றுகிறான். பீமசேனனின் இந்தச் செயலால் தான் தன் தம்பியர்களின் முன்னால் தான் வலுவிழந்தவனாக உணர்ந்த துரியோதனன் கடும்சினம் கொள்கிறான். தன்னுடைய உடல்வலு அவமானப்படுத்தப்பட்டதாகவே அவன் கருதுகிறான். அந்த அவமானத்தால் அவனுள் பொங்கிய சினம்தான் பீமசேனனைக் கொல்லத் தூண்டுகிறது. அதற்கு முயற்சி செய்கிறான்.
இந்த நிகழ்வுக்கு முன்பாகவே துரியோதனனும் துச்சாதனனும் மதம் ஏறிய ‘சியாமன்’ என்ற யானையைத் தேடிச் செல்கின்றனர். அவர்களுடன் யானைப் பாகர்களும் வீரர்களும் இருக்கின்றனர். துரியோதனனையும் துச்சாதனனையும் அந்த யானையில் உறைந்திருந்த தெய்வம் துரியோதனனைத் தாக்கத் தொடங்குகிறது. அப்போது துச்சாதனன் துரியோதனனைக் காக்கிறான். பின்னர் துரியோதனன் அந்த யானையுடன் தனித்துச் சண்டையிட்டு, அதனை அடக்குகிறான்.
தன்னைத் துச்சாதனன் காப்பாற்றியதற்காகவோ அல்லது தான் யானையுடன் தனித்துச் சண்டையிடுவதைத் தடுக்கும் விதமாகத் துச்சாதனன் குறுக்கே வந்துவிட்டான் என்றோ துரியோதனன் துச்சாதனன் மீது துளியும் சினம்கொள்ளவில்லை. துச்சாதனன் தன்னைத் தன்னுடைய வீரர்கள், யானைப் பாகர்கள் ஆகியோரின் முன்பாகக் காப்பாற்றியதால், வலுவிழந்தவனாகத் தன்னைத் துரியோதனன் உணரவும் இல்லை, தன்னுடைய உடல்வலு அவமானப்படுத்தப்பட்டதாகவும் கருதவும் இல்லை. ஆனால், கானாடுதலின் போது கரடியிடமிருந்து தன்னைப் பீமசேனன் காப்பாற்றியதற்காகத் துரியோதனன் கடும் சினம் கொள்ளக் காரணம் என்ன? இதற்கு விடை ‘ஊழ்’ என்பது தானோ?
துரியோதனனைப் பொருத்தவரை துச்சாதனன் அவனுக்கு நிழல்தான். தன் நிழலை யாரும் வெறுக்க மாட்டார்கள். அதனைத் தன்னிலிருந்து பிரித்து நோக்கவும் விரும்ப மாட்டார்கள். தன் தாய் காந்தாரியின் ஆணையின்படிதான் துச்சாதனன் தன் அண்ணன் துரியோதனனை நிழல் போலத் தொடர்கிறான் என்றும் கொள்ளலாம்.
துரியோதனனைப் பொறுத்தவரை பீமசேனன் அவனுக்கு ஆடிப்பாவை. தான் நிஜம் என்பதால் ஆடியில் தெரியும் தன் உருவான பீமசேனன் அவனுக்கு வெற்றுருதான், மாயைதான். ‘தன்னுடைய வெற்றுருவா தன்னைக் காப்பாற்றுவது?’ என்று கூடத் துரியோதனன் இறுமாப்பு அடைந்திருக்கக் கூடும். அதன் இறுமாப்புதான் அவனுக்குள் அவமானத்தை உணரச் செய்து, அவனைச் சினங்கொள்ள வைத்து, பீமசேனன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தூண்டியிருக்கிறது.
ஆனால், அந்தத் தாக்குதலைத் துச்சாதனன்தான் முதலில் தொடங்குகிறான். அதுவும் துரியோதனன் அறியாத வகையில். ‘துச்சாதனன் நாகநச்சினை உணவில் கலந்து பீமசேனனுக்கு அளித்தமை துரியோதனனுக்குத் தெரியாது’ என்றுதான் இந்த நாவலில் காட்டப்பட்டுள்ளது.
தெரிந்திருந்தால், ஒருவேளை துரியோதனன் துச்சாதனனின் மீது சினம்கொள்ளவும் கூடும். ‘தன் எதிரியைத் தன் தம்பி கொல்வதால் தன்னுடைய வலிமை வெளிப்படாமல் போக வாய்ப்புள்ளதே!’ என்றோ அல்லது ‘தன்னுடைய எதிரியைத் தன்னால் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சிசெய்து வீழ்த்த நேர்ந்ததே!’ என்றோ கருதி துரியோதனன் துச்சாதனனை வெறுக்க நேர்ந்திருக்கும்.
ஆனால், துச்சாதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அஸ்தினபுரியில் படைக்கலப்பயிற்சிக்குக் களம் அமைக்கின்றனர். ‘பீமசேனனும் துரியோதனனும் கதாயுதச் சண்டையிடுவார்கள்’ என்றுதான் அனைவருமே எதிர்பார்க்கின்றனர். தன்னைச் சந்திக்க வந்த துரியோதனனிடம் துச்சாதனனிடமும் சகுனி பீமசேனனின் வீரத்தை உயர்த்தியும் துரியோதனனின் வீரத்தைத் தாழ்த்தியும் பேசுகிறார். துரியோதனன் சினமடைந்து அங்கிருந்து செல்கிறான். சகுனி, துச்சாதனனிடம் ‘துரியோதனனுக்குச் சினம் ஏற்பட்டால்தான் அவனால் பீமசேனனை வெற்றிகொள்ள முடியும்’ என்கிறார்.
துரியோதனனின் மனத்தை முழுவதும் அறிந்தவர் சகுனி. அதனால்தான் துரியோதனனை அவமானப்படுத்துகிறார். அந்த அவமானமே அவனுள் பெருவலிமையைத் திரளச்செய்யும் என்று நினைக்கிறார். சகுனி தன்னை அவமானப்படுத்தியதை நினைத்து நினைத்து துரியோதனன் தொடர்ந்து பயிற்சி செய்கிறான். இரவில் துயிலாமல் தவிக்கிறான். பீமசேனன் மீது அவனுக்குத் தீராச் சினம் ஏற்படுகிறது.
பொழுது விடிந்தபோது துரியோதனன் பேராற்றல் கொண்டவனாக உருவெடுத்து, படைக்கலப்பயிற்சிக் களத்துக்குத் தன் கதாயுதத்துடன் செல்கிறான். அங்குக் கிருபர் பீமசேனனுடன் கதாயுதச் சண்டையிட துச்சாதனனை அழைக்கிறார். அதுவே, துரியோதனனுக்கு ஏமாற்றமாகவும் அவமானமாகவும் இருக்கிறது.
வேறுவழியின்றித் தன்னுடைய கதாயுதத்தைத் துச்சாதனனிடம் தருகிறான். அதைக் கொண்டு பீமசேனனனை எதிர்கொள்ளும் துச்சாதனன் முதல்தாக்குதலையே கொலைவெறியுடன் தொடங்குகிறான். அதைப் பீமசேனன் உணர்கிறான். அந்தச் சண்டையில் பீமசேனன் எளிதாக வெற்றி பெறுகிறான். ஒருவேளை அந்தச் சண்டையில் துச்சாதனன் பீமசேனனை வென்றிருந்தால் துரியோதனன் துச்சாதனனை வெறுத்திருப்பான் என்றுதான்படுகிறது. தனக்கு இணையான எதிரியெனப் பீமசேனனையே நினைத்திருந்த துரியோதனனுக்கு அது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கும். அதனால், அவன் துச்சாதனனைச் சினந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
எழுத்தாளர் ஜெயமோகன் மற்ற இரண்டு நாவல்களைவிட (முதற்கனல், மழைப்பாடல்) இந்த நாவலில்தான் கதைநிகழ்வுகளைப் பெரும் பாய்ச்சலுடன் கொண்டு சென்றுள்ளார். அந்தப் பாய்ச்சலுக்கு இடைப்பட்ட வெற்றிடங்களை ‘இளநாகன்’ என்ற சூதனின் பயணத்தைக் கொண்டு நிரப்பியுள்ளார்.
இளநாகன் இந்தியாவின் அதிதென்முனையிலிருந்து அஸ்தினபுரி வரை பயணிக்கிறான். அனைத்து நாட்டு அரசுகள் சார்ந்த அனைத்துத் தகவல்களும் சூதர்களின் வாழ்வு வழியாக எவ்விதமாக பலநாடுகளைக் கடந்தும் பரப்பப்படுகின்றன எனபதை நாம் இளநாகனின் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சூதர்களின் சொற்களைக்கொண்டு தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருவகையில் பார்த்தால், சூதர்களின் சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் நாம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து அறிந்துவருகிறோம் என்ற உண்மை புலப்படுகிறது.
இளநாகனின் பயணத்தின் வழியாகப் பாரதவர்ஷத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் எழுத்தாளர் ஜெயமோகன் நம் கண்முன் கொண்டுவருகிறார். காரணம், இந்த ‘பாரதவர்ஷப் பொதுக்குடிகளின் மனத்தில் அஸ்தினபுரி எத்தகைய இடத்தில் உள்ளது?’ என்பதை நமக்குக் காட்டுவதற்காகத்தான்.
நாம் இந்தியாவின் அதிதென்முனையில் இருந்த, இருக்கும் நகரங்களைப் பற்றியும் ஆறுகள், மலைகள் ஆகியன குறித்தும் சங்க இலக்கிய வரிகளிலிருந்து சிறிதளவு தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை ஆகிய நூல்களின் வழியாக. சிலப்பதிகாரம் கடலாடுகாதையில் மேலும் சில குறிப்புகளைக் கண்டடைய முடிகிறது.
அவற்றின் வழியாக இவற்றை அறிந்தவர்களுக்கு இந்த ‘வண்ணக்கடல்’ நாவல் பெருங்களிப்புணர்வை ஏற்படுத்தும். அக்காலப் பெருவழிச்சாலைகளில், அக்காலப் பெருவணிகக் குழுக்களுடன் (வணிகச் சாத்துகளுடன்) நம்மைப் பயணிக்க வைக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இந்த மகாபாரதத்துக்கும் இந்த நாவலில் இடம்பெற்றுள்ள இளநாகனுக்கும் என்ன தொடர்பு? அவன் தையல்ஊசிபோலவே பாரதவர்ஷத்தின் பாதைகளில் ஊடாடிச் சென்று அஸ்தினபுரியை நெருங்குகிறான். அவன் சென்ற பாதை தையல்ஊசியால் பின்னிப்பிணைக்கப்பட்ட நூல்போல நமது மனத்தில் ஒட்டிக்கொள்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் தன் வாசகர்களை நேரடியாக அஸ்தினபுரிக்கு அழைத்துச் செல்ல விரும்பாமல், அவர்களைத் தன் சொற்பல்லக்கில் ஏற்றி, பாரதவர்ஷத்தின் பலவண்ணப் பெருநிலங்களில், அவற்றின் ஊடுபாதைகளின் வழியாகவே தூக்கிச் சென்று அஸ்தினபுரியை நெருங்குகிறார்.
ஒட்டுமொத்தத்தில் ‘வண்ணக்கடல்’ நாவல், பாரதவர்ஷத்தின் பல வண்ணம் கொண்ட நிலப்பரப்பைச் சொற்களில் ஏந்தி, அலையாடும் பெருங்கடல்.
– முனைவர் ப. சரவணன், மதுரை