கதையின் அகமும் புறமும்

சாந்தாரம்- சிறுகதை

பொதுவாக சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் கதைக்களம், கதைக்கரு ஆகியவற்றுக்காக வெளியே பார்ப்பது குறைவு. காரணம் அனுபவத்தையே எழுதவேண்டும் என்று ஆரம்பகட்ட இலக்கியவாதிகளில் சிலர் முணுமுணுத்து முணுமுணுத்து உருவாக்கிக்கொண்ட சோகையான இலக்கியக்கருத்து.

நடுத்தரவர்க்க இந்தியனுக்கு மூன்றுநான்கு கதைகளுக்குமேல் எழுத அனுபவமிருக்காது. ஆகவே திரும்பத்திரும்ப சின்னச்சின்ன விஷயங்களையே எழுதுவார்கள். ‘ரொம்பச் சின்ன விஷயம்தான். ஆனா பிரம்மாதமா எழுதியிருக்காரு’ என்று அதையே ஒரு பாராட்டாக சொல்வார்கள்

நான் எழுதவந்தபோது ‘சின்னவிஷயங்களை எதுக்கு எழுதணும்.யானையை வைச்சு ஊசியை எடுக்கவைக்கிறது மாதிரி அது. யானையோட பிரம்மாண்டத்தை ஊசியளவுக்கு சின்னதா ஆக்க மாட்டேன்’ என்று சொன்னேன். தமிழின் தன்னனுபவச் சூம்பல்கதைகள்தான் நம் நவீன இலக்கியத்தின் மிகப்பெரிய நோய்க்கூறு.

இலக்கியம் புறவுலகில்லாமல் உருவாவதில்லை. வெறும் அகவுலகை எழுதுகிறேன் என்பவர்கள்கூட புறவுலகைக்கொண்டுதான் அகத்தைச் சொல்ல முடியும். அந்தப் புறவுலகு எளியதாக, அன்றாடமானதாக, பழகிப்போனதாக இருக்கும் அவ்வளவுதான். புறவுலகம் மட்டும் கலையாவதில்லை. அதில் அகம் சென்று படியுமிடமே கலையை உருவாக்குகிறது

இலக்கியவாதியின் கற்பனை புறவுலகை துழாவிக்கொண்டே இருக்கிறது. சட்டென்று ஒரு பொருள், ஒரு நிகழ்வு, ஓர் இடம் அவன் கற்பனையை சீண்டி துடிப்பை உருவாக்குகிறது. அந்த புறத்தின் துளி அவன் அகத்தை சென்று தொடுவதனால்தான் அவ்வாறு நிகழ்கிறது. அவன் அகத்தில் வெளிப்பாடுகொள்ள தவித்திருக்கும் ஒன்று தன்னை ஏற்றிக்காட்ட ஒரு புறவிஷயத்தைக் கண்டுகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதுதான் கலைத்தருணம்

ஆகவே, திரும்பத்திரும்ப தன்வயக்குறிப்புகளை கதையென எழுதுபவர்களை நான் ஓரிரு படைப்புகளுக்குமேல் வாசிக்கமாட்டேன். நேரவிரயம். புறவுலகின் அலகிலாப் பிரம்மாண்டம் கலைஞனை சீண்டிக்கொண்டே இருக்கவேண்டும். வரலாறு, அறிவியல், பண்பாட்டுக்களம், சமூகச்சூழல், அன்றாடக் குடும்பவாழ்க்கை, தொழிற்சூழல் எதுவானாலும். அங்கிருந்து ஒரு புதியவிஷயம் எழுந்து வருகையில் அது கலையாகும் வாய்ப்பு மிக அதிகம்

மயிலன் சின்னப்பன் தமிழினி இதழில் எழுதிய சாந்தாகாரம் அப்படிப்பட்ட ஒரு கலைமுயற்சி. தஞ்சை கோயிலின் ரகசியக் கலைக்கூடம் பற்றிய கதை. மானுட மனதின் ரகசியக்கூடம் ஒன்றின் வெளிப்பாடாக அது கதையில் மாறியிருக்கிறது.

ஆனால் கதைத்தொழில்நுட்பம் என நோக்கினால் இக்கதையில் அந்தக் கலைக்கூடத்தின் எந்தக் குறிப்பிட்ட அம்சம் அகவெளிப்பாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது என அழுத்தப்பட்டிருக்கவேண்டும். இக்கதையின் கோணத்தில் என்றால் மாபெரும் ஆலயத்தின் பார்க்கப்படாத ரகசிய அறை என்பதே அந்த அம்சம். அந்த ரகசியத்தன்மை, இருள், மர்மம் மேலும் அழுத்திச் சொல்லப்பட்டிருக்கவேண்டும்

அகவுலகை புறவுலகுடன் இணைக்கும் இத்தகைய கதைகளில் அவ்விணைப்பை வாசகன் நிகழ்த்துவதே கலை. இதில் ஆசிரியர் கதைத்தலைவனின் சொற்கள் வழியாகச் சொல்லிவிடுகிறார். காமிரா லென்ஸ்கள் ஃபோகஸ் ஆகி காட்சி தெளிவதுபோல இரு உலகங்களும் இணையும் மாயப்புள்ளியை வாசகன் அடையமுடியாமலாகிறது

கதையில் கதைத்தலைவன், கதைசொல்லி ஆகியோருக்கு அப்பாலுள்ள கதாபாத்திரங்கள் [வங்கப்பேராசிரியர், கைடு போன்றவர்கள்] கதையை சிதறடிக்கிறார்கள். கதையின் ஒருமை அதன் மையம்நோக்கிச் செல்ல தடையாக ஆகிறார்கள். அவர்கள் எந்தப் பங்களிப்பையும் ஆற்றவில்லை.

ஆனாலும் சுவாரசியமான ஒரு கதை. மயிலன் சின்னப்பனின் கதைகளை தொடர்ச்சியாக வாசித்துவருகிறேன். இவருடைய பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்னும் நாவல் பரவலாக வாசிக்கப்பட்டது. நூறு ரூபிள்கள் என்னும் சிறுகதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது. கூர்ந்த வாசிப்புக்குரிய படைப்பாளி.

மயிலன் சின்னப்பன் நூல்கள்
முந்தைய கட்டுரைநாஞ்சில்நிலத்தின் நாக்கு
அடுத்த கட்டுரைபடையல் [சிறுகதை]