கொதி- கடிதங்கள்

கொதி[ சிறுகதை]

அன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

கொதி சிறுகதை எழுப்பி விட்ட நினைவுகள் பற்றியது. என்னுடைய பாட்டி இருபது வயது வரை குமரி, திருவனந்தபுரம் வட்டாரங்களிலேயே வாழ்ந்தவர். அவரது சிறு வயது நினைவுகளை நிறையப் பகிர்ந்துகொள்வார். அவரது நினைவுகளில் மிக முக்கிய இடம் பெறும் விஷயங்கள்  யக்ஷி, ஆயுர்வேத வைத்தியம், யானைகள்,, கேரளத்துக்கென்றே பிரத்யேகமான வீட்டை ஒட்டினாற்போன்ற நீர்நிலைகள் (அது சார்ந்து வாழக்கூடிய தாவரங்கள், உயிரினங்களும் சேர்த்து), திருவிதாங்கூர் ராஜா, . அது போன்ற விஷயங்களைத் தமிழில் எந்த ஒரு எழுத்தாளரும் பதிந்ததில்லை, அவற்றுக்கு இலக்கியத்தில் ஒரு இடம் உண்டு என்றுகூட நான் அறிந்திருக்கவில்லை, உங்கள் எழுத்தைப் படிக்கும் வரை.

அது வரை யக்ஷி போன்ற விஷயங்கள் பிடி சாமி, கோட்டயம் புஷ்பநாத் வகை துப்பறியும் நாவல்களுக்கானது என்றே நினைத்திருந்தேன். மத்தகம் படித்தபோது பாட்டி காலமாகி இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. நீ சொன்ன விஷயங்கள் இலக்கியத்தில் இடம்பெற்றுவிட்டன என்று பாட்டியிடம் சொல்லி மகிழ முடியாததற்கு வருந்தினேன்.

இப்போது கொதி சிறுகதை. என் பாட்டி கொதி மந்திரம் சொல்லி உணவு சம்பந்தமான கண் திருஷ்டியைப் போக்குவார். சுளுக்கு, வாய்வுப்பிடிப்பு போன்றவற்றுக்கும் ஓதுவார். நீங்கள் சொல்லியிருந்த முறையில்தான் சின்ன வேறுபாடு. செம்புக்குள் நீர் உறிஞ்சும் முறை வாய்வுப் பிடிப்புக்குச் செய்வார். ஒரு சிறு துணியைக் கிழித்து செம்பில் போட்டு அது எரிந்து முடிந்ததும் செம்பை வாய்வுப்பிடிப்பு வந்த பகுதியில் வைத்தால் செம்பு உடலில் அப்படியே ஒட்டிக்கொண்டு எந்தப் பிடிமானமும் இல்லாமல் நிற்கும். சற்று நேரத்தில் கீழே விழ முற்படும். அப்போது அதை ஒரு தாம்பாளத்தில் நீரில் வைப்பார். சில மணி நேரங்களில் அந்த நீர் சுத்தமாக மாயமாகி இருக்கும். (சோதனைக்காக வேறொரு தாம்பாளத்தில் வேறொரு செம்பை அதே நேரம் கவிழ்த்து வைத்தால் அதில் நீர் மாறாது. அதையும் நான் செய்து பார்த்திருக்கிறேன்)

கொதிக்கு பாட்டி செய்வது நார்த்தங்காய் ஊறுகாயின் ஒரு துண்டத்தை மந்திரித்து பாதிக்கப்பட்டவரிடம் உண்ணக்கொடுத்துவிட்டு இட்லி அல்லது சாத உருண்டையை மீண்டும் மந்திரித்து அதை நான்கு துண்டுகளாக்கி வீட்டைச் சுற்றி நான்கு திசைகளிலும் எறிவார். கண் பட்டவருக்கு உடல் சரியாகிவிடும். கண் வைத்தவருக்கு நோவு வரும் என்று கேள்விப்பட்டதில்லை.

மேற்படி விஷயத்தில் செய்முறைகளில் பல்வேறு வெர்ஷன்கள் இருந்திருக்கலாம். நான் சொல்ல வந்தது அதுவல்ல, ஒரு வட்டார வழக்கத்தை உலகம் முழுமைக்கும் பொதுவான பசி என்கிற  உயிரவஸ்தை என்ற படிமத்துடன் நீங்கள் சேர்த்திருக்கும் முறை அருமை. ஞானையா தமது உரைகளில் உதாரணங்களெல்லாம் தீனி தொடர்பாகவே இருப்பது பற்றிச் சொன்னபோதுநூறு நாற்காலிகளில்

”சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம். ஒருகட்டத்தில் என்னால் மேற்கொண்டு உண்ண முடியவில்லை. வாய்வரை உடம்புக்குள் சோறு மட்டுமே நிறைந்திருப்பதாகத் தோன்றியது”

என்ற வர்ணனை நினைவு வந்தது.

எனக்குச் சில காலம் முன்பு சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக உணவு உண்ண முடியாமல் போனது. பசியும் ருசியும் இருக்கவில்லை. பாதிச் சாப்பாட்டை அப்படியே தட்டுடன் மூடி வைத்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து உண்பேன். உணவில் ஆர்வமே இருக்கவில்லை (என்றே நினைத்திருந்தேன்.) அந்நாள்களில்  எனக்கு வரும் கனவுகள், கற்பனைகள் எல்லாம் உணவு பற்றியே இருக்கும். உணவு யூட்யூப் சேனல்களைப் பார்க்கும் வழக்கம் வந்தது, தினுசுதினுசான உணவுகளை உண்பதுபோல் கற்பனை செய்துகொள்வேன். என்னையும் அறியாமல் அது ஒரு போதை போலாகிவிட்டது. ஓரளவு அந்த உடல்நலப் பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தபின்பே என் உடல் உணவை ஏற்காதபோது மனம்  உணவுமயமாகவே ஆகி இருந்ததை உணரவே இயன்றது. பசி என்ற ஆதி உணர்ச்சியின் சக்தி புரிந்ததும் உணவுதான் பிரம்மம் என்றுகூடத் தோன்றியது.

பாட்டி பசி என்று யார் சொன்னாலும் பொறுக்க மாட்டார். அவரது பதினான்கு வயதில் ஒரு பிச்சைக்காரர் வீட்டு வாசலில் வந்து பாவமாக நிற்பாராம். அதற்கு சில காலம் முன்புதான் பாட்டியின் தாய் காலமாகிப் பாட்டி தானே சமையல் கற்றுக்கொண்டு தன் அப்பாவுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் தானே தாயாகி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். பஜ்ரா என்ற தானியம் அதுவும் வாரத்துக்குக் குடும்பத்துக்கு இவ்வளவு என்று ரேஷன் பண்ணப்பட்டுதான் கிடைக்குமாம். அதை ஒரு நாளுக்கு இவ்வளவு என்று திட்டமிட்டு வகுத்துக்கொண்டு  ஒரு கலயத்தில் கஞ்சி பண்ணி வைத்திருப்பாராம்.

பாட்டியின் தந்தை உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு வந்து உண்டபின்பே பாட்டி தானும் சாப்பிட்டு உடன் பிறந்தவர்களுக்கும் தருவார். ஆனால் அந்தப் பிச்சைக்காரர் கஞ்சி வடிக்கும் சமயத்துக்கே வந்து அம்மே என்று அழைப்பாராம்.  ஆக வீட்டில் யாரும் உண்பதற்கு முன்னால் அவருக்குத்தான் முதலில். இவ்வளவு கஷ்டத்திலும் அவருக்கு ஏன் முதலில் என்று நான் கேட்பேன்.  பாட்டி சொல்வார். தொண்டைக்குக் கீழே எல்லாருக்குமே கசம்டீ என்பார். பசி எல்லா ஜீவனுக்கும் ஒன்று என்ற பொருளில். அதைக் கேட்கும்போது கண்ணீர் வரும்.

அம்மாவை இழந்து சமையல் கற்றுக்கொண்டு ரேஷன், உணவுப் பஞ்சத்துக்கு நடுவிலும் ஐயமிட்டு உண்ட என் பாட்டி, அந்த மலையாள எல்லை கிராமம் இவற்றையெல்லாம் கொதி சிறுகதை மூலம் நினைவுபடுத்திவிட்டீர்கள். என் பாட்டி பிற உயிர்களின் பசியை உணர்ந்ததற்கும் அவர் கொதி மந்திரம் ஒதியதற்கும்கூட ஏதோ சூக்ஷ்மமான தொடர்பு இருப்பதாக இப்போது தோன்றுகிறது. உணவுப் பஞ்சம் என்றால் என்னவென்று தெரியாத, பசித்தால் ஸ்மார்ட் ஃபோனை எடுத்து விரல் நுனியால் ‘ஸ்விக்கி பண்ணி’ சாப்பிடுகிற ஒரு தலைமுறைக்கு இந்தக் கொதி சிறுகதை அவசியம் சென்று சேர வேண்டும்.

என் மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டியதற்கு மன்னிக்கவும் மீண்டும் அன்பு, நன்றி, வணக்கங்களுடன்,

வித்யா ஆனந்த்.

 

அன்புள்ள வித்யா

பசி ஒரு தலைமுறைக்கு முன்புவரை நம்முடைய அன்றாடமாகவே இருந்திருக்கிறது. முப்பதாண்டுகளாகவே அதைக் கடந்திருக்கிறோம். மிக எளிதில் அது வெறும் நினைவாக ஆகி அந்தத் தலைமுறையுடன் அழிந்துவிடும். அது அழியலாகாது. அந்நினைவை குறியீடாக, படிமமாக ஆக்கிக்கொள்வதே நாம் செய்யவேண்டியது. இலக்கியத்தின் பணி என்பது நினைவைச் செறிவாக்கி, காலத்தொடர்ச்சியாக்கி, நிலைபெறச்செய்வதுதானே?

ஜெ

அன்புள்ள ஆசானுக்கு

பசியென்னும்  அனலின் உக்கிரமான வாழ்க்கைச்சித்திரங்களை ஒரு  கையெறி குண்டு போல வாசகனின் மனதில் வீசிவிட்டு  படுகாயத்துக்கு நிவாரணமாக ஒரு bandaidஐ கொடுத்துவிட்டு போகிறது “கொதி”,  , எனக்குள் இன்னும் கொஞ்சம் புகைந்து கொண்டிருக்கிறது.

பசியைக் கொல்ல பிற உயிர்களை உண்கிறோம் அப்படி  முடியாதவர்களை பசி எனும் பாம்பு  உண்டுவிடுகிறது  ஞானையாவின் சின்னத் தம்பியை விழுங்கிய மலைப்பாம்பு போல, அந்த மலைப்பாம்பை  உயிரோடு இருக்கும் மனிதர்களின் பசி உண்கிறது. பசியை பசி உண்டு பிரபஞ்சம் பல்கி பெருகுகிறது, இந்த ஆடல் நிகழ்வதற்க்காக பசி கொள்ளும் தற்காலிக பரு வடிவம் மட்டும் தானா  உடல்கள்?  பசியற்ற உடல் நிலைக்குமா? பசி என்பது உயிரே  தானா? உயிர் தான் பசியா?

பசியில் வெந்து கொண்டிருப்பவனிடம் ஆன்மிக தேடலை பேசுவது போல இழிவான ஆபாசம் வேறேதும் உண்டாஎன்ற கேள்வியை ‘கொதி’ எழுப்புகிறது, இருக்கலாம்.., உண்டு நிறைந்து  இந்த உலகத்தின் எல்லா வகையான வளங்களும் தேவைக்கு மேல் கிடைத்த பின்னும் ஒரு துளி ஆன்மிகம் கூட அகத்தில் இல்லாமல் பொருளுக்கான வேட்க்கையுடன் மட்டும் வாழும் வாழ்க்கையை வேண்டுமானால் அதை விட இழிந்த ஆபாசம் என்று சொல்லிக்கொள்கிறேன். கலாச்சாரம், மனிதம் என்றெல்லாம் நாம் செய்துகொள்ளும் அலங்காரங்களை கிழித்தகற்றி பசியினால் செலுத்தப்படும் விலங்காக மனிதனை(நம்மை நாமே) அடிக்கடி உங்கள் படைப்புலகத்தில் காண்கிறோம்,

ஏழாம் உலகத்தில் குய்யன் மீல்ஸ் சாப்பிட தயாராவது, சோற்றுக்கணக்கின் கதை சொல்லி தெருவில் இறந்து கிடைக்கும் நாயின் சடலம் கண்டு எச்சிலூறுவது, நூறு நாற்காலிகள் கதை நாயகன்  சொல்லும் நாயாடி வாழ்வின் தீராப்பசி,  என்று இந்தமாதிரி பசியை இந்த தலைமுறையில் உள்ளவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன், ஆனால் கடந்த தலைமுறையில் இருந்திருக்கிறது, ஒருவேளை அப்படி ஒரு நிலை நம் வாழ்நாளில் மீண்டும் வந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்? இலக்கியம் படிப்போமா? சிறுகதை படித்து ஆசிரியருக்கு கடிதம் எழுதும் நிலையில் இருப்போமா? விடிய விடிய இலக்கியம் பேசி வாழ்க்கையை கொண்டாடுவோமா? இலக்கியம் எழுதப்படுமா?  அந்த மாதிரி நிலையில் ஒருவருக்கு தேவையான உணவு இருந்தால் கூட மனிதத் தன்மையை சமரசம் செய்து தானே வாழ முடியும்?

“அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு,  வாழணும்னு வேதம் சொல்லுது ஆனா பத்துபிள்ளை பெத்து ஒத்த கைப்பிடி சோறு வைச்சிருக்கிற அம்மைகிட்ட அதைச் சொல்லமுடியாது. இல்லாத கூட்டம் இது. அயலானுக்குக் குடுத்து தின்னா எல்லாரும் சேந்து சாவணும்னு இருக்கு வாழ்க்கை”

இந்த நிலையில் என்ன மாதிரி ஆன்மிகம் இருக்க முடியும்? எந்த மதமாகவும் இருக்கட்டும் அதற்க்கெல்லாம் ஏதேனும் மதிப்பு உண்டா? எழுத்தாளனுக்குள் இருள் இருக்கும் என்கிறீர்கள், எல்லா கவசங்களையும் அகற்றி விட்டு படைப்புக்கு தன்னை ஒப்புக்கொடுத்து வாசிக்கும் வாசகனும் அந்த இருளில் கொஞ்சம்  திளைப்பான் என நினைக்கிறேன்,  கதையை படித்துவிட்டு நள்ளிரவில் வானத்தைப்  பார்த்துக்கொண்டு வரப்போகும் பஞ்சத்தை வித விதமாக கற்பனை செய்துகொண்டு நின்றிருந்தேன்.  வானத்தில் நட்சந்திரங்கள் பார்த்தேன் என்று சொல்வதை விட முட்டாள்தனம் ஏதேனும் உண்டா என்று கேட்டுக்கொண்டேன்.  வானத்தில் இருப்பது இருள் அல்லவா?  முடிவே இல்லாத நிலையாக இருக்கும் கன்னங் கரிய இருள். அந்த இருளில் பொத்தல்கள் போல அங்கங்கே கொஞ்சம் நட்சத்திரங்கள்  அவ்வளவுதான், அவைகூட ஒருளுடன் ஒப்புநோக்க தற்காலிகமானவை. கதையின் முடிவு நட்சத்திரங்களை காட்டுகிறது, சரி நம்புகிறேன்,  நானும் நட்சத்திரத்தை தான் பார்த்தேன் என்று உங்களிடம் சொல்கிறேன் நீங்களும் நம்புவீர்கள் என நினைக்கிறேன்.

அன்பும் வணக்கங்களும்

ஷங்கர் பிரதாப்

பிகு :அன்புள்ள ஆசானே, இதை எழுதியபின்  வெள்ளையானையில் எய்டன் கருப்பர் நகரமான புதுப்பேட்டைக்கு போகும் அத்தியாத்தை வாசித்தேன், கொடும் வறுமையிலும் விருந்தாளிக்கு உணவளிக்கும் அந்த முது அன்னையை மனதில் நிறுத்தி கொண்டேன்

 

அன்புள்ள சங்கர்

பசி ஒரு நல்ல கதைப்புலம். மிக எளிதில் ஏராளமானவற்றுக்குக் குறியீடாக ஆகிறது. ஏனென்றால் காமம் வன்முறை போன்ற எதைவிடவும் அது மிக ஆழமான அடிப்படை உணர்வு

ஜெ

அன்பிற்கினிய ஜெ,

கொதி பற்றி எழுதாமல் விட்ட பல உண்டு, எழுத மறந்த ஒன்றுண்டு. இந்தக் கதையை எந்த போதகராவது அல்லது குருவானவராவது, சர்ச்சிலோ அல்லது தங்கள் கூட்டங்களிலோ சொல்வார்களா என எண்ணிப்பார்த்தேன். நிச்சயம் சொல்ல மாட்டார்கள். உங்கள் ஓலைச்சிலுவை, அங்கி, ஏதேன் என எந்தக்கதையையும்
அவர்களால் சொல்ல முடியாது. ஒரு இருபது அல்லது இருபத்தைந்து தட்டையான மொக்கைக் கதைகளை வைத்துக்கொண்டு மட்டையடி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதைத்தாண்டி அவர்களால் முடியாது.

எந்த நிறுவனம் சார்ந்த மனிதரும் தங்கள் மக்களிடையே சொல்லத் தயங்கும்ஒன்றால் ஆக்கப்பட்டிருப்பதால்தான் இவை உயர்ந்த இறையியல் மதிப்பைபெறுகின்றன.  ஆனால் அதற்குத்தான் உலகியலில் இடமே இல்லையே.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பு என்றென்றைக்கும்

 

பிரபு செல்வநாயகம்

 

அன்புள்ள பிரபு,

சர்ச்சில் சிலகதைகளையே சொல்லமுடியும். புதியகதை சொல்வதன் சிக்கல் என்னவென்றால் அது தவறாகப்புரிந்துகொள்ளப்படும். என் நண்பர் ஒருவர் ஏசு பற்றிய என் கதையை ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார். கேட்டவர்கள் நெகிழ்ந்துவிட்டனர். கதைமுடிவில் எழுதியவர் என என்பெயரைச் சொன்னார். கேட்டவர்கள் கொதித்து எழுந்து வசை மழை பொழிந்தனர். நான் எவர் என தெரியாது, ஆனால் கிறிஸ்தவர் அல்ல என்று தெரிந்ததும் சீற்றம். இங்கே கிறிஸ்தவர்களில் உச்சகட்ட மதவெறியும் பிறன்வெறுப்பும் இல்லாதவர்கள் மிகமிகமிகச் சிலர் மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைபடிமங்களின் உரையாடல்
அடுத்த கட்டுரைதிரை, அறமென்ப – கடிதங்கள்