பெண்ணெழுத்துக்கள்

பெருந்தேவி

அன்புள்ள ஜெ,

இந்தப் புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் ஒரு கேள்வி. நீங்கள் நூல்களைப் பரிந்துரை செய்கிறீர்கள். இளம்படைப்பாளிகளின் நூல்களையும், மூத்த படைப்பாளிகளின் நூல்களையும். உங்களுக்கு இலக்கியத்தை கொள்கைகளின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பதில் ஈடுபாடில்லை என்று தெரியும்.இருந்தாலும் பெண்ணியம் பற்றி எழுதுபவர்களை நீங்கள் பரிந்துரை செய்வதென்றால் எதைப் பரிந்துரைசெய்வீர்கள்?

எம்.லலிதா

உமா மகேஸ்வரி

அன்புள்ள லலிதா,

நான் இலக்கியத்தை கொள்கைகளின் அடிப்படையில் பிரித்துப்பார்க்கக் கூடாது என நினைப்பவன் அல்ல. கொள்கைகளின் அடிப்படையில் எழுதக்கூடாது என நினைப்பவன். ஏனென்றால் எழுத்து எழுதியபின்னரே தெளிவடையும் ஒரு செயல்பாடு. எழுதித்தெரிந்துகொள்ளவே நல்ல படைப்புக்கள் எழுதப்படுகின்றன. எழுதியபின் உருவாகும் கண்டடைதலே எழுத்தாளனின் கொண்டாட்டம்.

கொள்கைகளின் அடிப்படையில் இலக்கியத்தை வரையறைச் செய்யலாம், அது இலக்கியவிமர்சனத்தின் வழிமுறை. ஆனால் கொள்கைகளின் அடிப்படையில் எந்தப்படைப்பையும் அறுதியாக வரையறைசெய்துவிடக் கூடாது. அது படைப்பைக் குறுக்குவது. ஆகவே எந்த அடையாளத்தையும் கொஞ்சம் ரத்துசெய்துவிட்டே பயன்படுத்தவேண்டும்.

ஏனென்றால் எத்தனை வரையறை செய்தாலும் நல்ல படைப்பில் எப்போதும் கொஞ்சம் மிச்சம் கிடக்கும். என்ன ஆச்சரியமென்றால், கலைப்படைப்பில் அது எதை முதன்மையாகச் சொல்கிறதோ அதற்கு நேர் எதிரான தரப்பும், அதன் மறுப்பும் கவிழ்ப்பும்கூட, பதிவாகியிருக்கும். அது தன்னைத்தானே ரத்துச்செய்யவும் கூடும்.

ஆகவே ஒரு படைப்பை நான் ஒரு உணர்வுக்களமாக, ஒரு விவாதப்பரப்பாக மட்டுமே பார்க்கிறேன். ஒற்றைப்படையாக இருந்தால் என்னால் அதை கலை என ஏற்கமுடியாது. அதை தேவையானவர்கள் எழுதுவதில், தேவையானவர்கள் படிப்பதில், எனக்கு எந்த மாற்றுத்தரப்பும் இல்லை. ஒரு வாசகனாக, விமர்சகனாக அவை எனக்கு அளிக்க ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

இக்கோணத்தில் நான் பெண்ணியம் என்று ஒரு படைப்பைச் சுட்டுவேன் என்றால் அது பெண்ணியக்கோணத்தை முன்வைப்பதாக இருக்காது. அது பெண்ணியம் சார்ந்த ஒரு உணர்வுதளத்தை, விவாதக்களத்தை உருவாக்குவதாக இருக்கும். வரையறை செய்யும்போதே மிஞ்சியும் கிடக்கும். தலைசெல்லும் திசைக்கு எதிராக வால்செல்லவும்கூடும்.

இரு படைப்பாளிகளை முக்கியமானவர்களாகச் சுட்டுவேன். உமாமகேஸ்வரிதான் எனது தலைமுறையின் பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். அவருடைய கவிதைகளும் மொழியின் அழகும் உணர்வுத்தளமும் சந்திக்கும் அழகிய வரிகளாலானவை.

ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்கள் அவருடையவை. அவருடைய சிறுகதைகளைப் பற்றி முன்னரும் விரிவாக எழுதியிருக்கிறேன். தொலைகடல், மரப்பாச்சி என்னும் தொகுதிகள் முக்கியமானவை.

யாரும் யாருடனும் இல்லை என்னும் நாவலும் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் வம்சி, தமிழினி பதிப்பகங்களில் அவர்களின் நூல்கள் கிடைக்கும்.

சமீபமாக உரைநடைக்குள் வந்துள்ள பெருந்தேவி தமிழின் பெண் கவிஞர்- எழுத்தாளர்களில் முக்கியமானவர். மூன்று தளங்களில் அவர் தமிழ் அறிவுச்சூழலுடன் மோதுகிறார். நாம் அறிந்த வழிவழியாக வந்த படிமக்கவிதை, சித்தரிப்புக் கவிதை, படிமமற்றக் கவிதைகளின் பாணியிலிருந்து மீறிச்செல்லும் எதிர்கவிதைகளை எழுதுகிறார். அக்கவிதைகளுக்கு நேர் எதிர்த்திசையில் சென்று ஸ்ரீவள்ளி என்றபேரில் கற்பனாவாதம் கனிந்த கவிதைகளையும் எழுதுகிறார்.

சமகால அரசியல், சமூகவியல் விவாதங்களில் எப்போதும் விடுபடும் ஒன்றைச் சொல்லி வலுவான ஊடுருவலை நிகழ்த்துபவராக பெருந்தேவி இருக்கிறார். கவிதை என்பதற்கு அப்பால் இது முக்கியமானது. தமிழில் எழுதும் பெண்எழுத்தாளர்களில் தன் கலை, சமூகப்பார்வை ஆகியவற்றைப் பற்றி புறவயமாக விவாதிப்பவர்கள் என வேறு எவருமில்லை. முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க அம்பைகூட குறிப்பிடத்தக்கவகையில் ஏதும் எழுதியதில்லை.

நான் அரசியல்நிலைபாடுகளை உரக்கச் சொல்வதை குறிப்பிடவில்லை. அடிப்படையான தத்துவப்பார்வையுடன் எல்லா பக்கங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கும் விவாதங்களையே குறிப்பிடுகிறேன். எப்போதும் மறுதரப்புடன் விவாதிக்க முனையும் நிதானம் கொண்டவை அவருடைய கட்டுரைகள்.

குறுங்கதைகள்

சமீபகாலமாக பெருந்தேவி புனைகதைகளை எழுதிவருகிறார். அவருடைய குறுங்கதைகள் இணையவெளியில் வெளியாகி விரும்பப்பட்டன. அவை நூலாக வெளிவந்துள்ளன.

இவர்களை பெண்ணிய எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியாது. பெண்ணியக்கூறுகள் இவர்களின் புனைவுலகிலும் கருத்துலகிலும் ஆழமாக வெளிப்பட்டுள்ளன, ஆனால் நான் சொல்லிவருவதைப்போல உடனே அவற்றை மறுத்து எதிர்த்திசையில் செல்லும் கூறுகளும் உள்ளன. இவற்றை பெண்ணெழுத்து என்று சொல்லலாம்.

அதைக்கூட, நான் இவர்களின் பேசுபொருளில் பெண் என்னும் பார்வை இருப்பதனால் ஓரு புறவயமான அடையாளமென சொல்கிறேன். உண்மையில் பெண் எழுத்து என்று பெண்கள் சொல்லிக்கொள்கிறார்களே ஒழிய, எழுத்தில் அப்படி எந்த பால் வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.

ஜெ

இறந்தவனின்  நிழலோடு தட்டாமாலை ஆடும்போது..

உடல் பால் பொருள்- கட்டுரைகள் பெருந்தேவி

பெருந்தேவி குறுங்கதைகள் ஹைன்ஸ்ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்

உன் சின்ன உலகத்தை தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

முந்தைய கட்டுரைகொதி, வலம் இடம்- கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைகந்தர்வன் – கடிதங்கள்