கந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்.

கந்தர்வன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கந்தர்வன் யட்சன் என்ற இரு கதைகளிலும் முக்கியமானது தலைக்குமேல் எழுந்து நின்றிருக்கும் அந்த கோபுரமும் அதிலிருக்கும் சிற்பங்களும்தான். அந்தச் சிற்பங்களில்தான் யட்சர்களும் கந்தர்வர்களும் தேவ கன்னிகைகளும் இருக்கிறார்கள். அவர்களின் மனமெல்லாம் அங்கே நோக்கித்தான் இருக்கிறது. அவர்களில் சிலர் அங்கே சென்று சேர்கிறார்கள். இரண்டுபேர் இரண்டு வழிகளினூடாக அங்கே சென்று சேர்ந்தார்கள்.

முன்பு நீங்கள் எழுதிய ஒரு உவமைதான். அம்பும் இலக்கை அடைகிறது. அம்பின் நிழல் சேறு குப்பை எல்லாவற்றிலும் விழுந்து அதேபோல இலக்கை சென்று அடைந்துவிடுகிறது

மகேஷ்

அன்புள்ள ஜெ

கந்தர்வன் : இக்கதை வரிசைகளில், மத தொன்மங்கள் உருவகங்கள் குறியீடுகளுக்கு மேலதிக பொருளும் வாழ்க்கை கோணமும் கொடுக்கப்படுகிறது.

மத தொன்மங்களின் குறியீடுகளின் உண்மையை நவீன இலக்கியம் வாழ்க்கையிலிருந்து தொடுகிறது என்று இக்கதைகளை புரிந்துகொள்ளலாம். கருத்துருக்களாக புராணங்களில் உறைந்துள்ள ஒன்றை மீண்டும் வாழ்க்கையிலிருந்து சென்று தொடும் கதைகள். இந்த இயல்பு நூறு கதைகளிலும் இருந்தது. வெண்முரசுக்கு பின்பாக உங்களின் புனைவில் ஏற்பட்ட மாறுதலாக இதை பார்க்கலாம். இதற்க்கு முன் இறுதியாக வந்த  உங்களின் சிறுகதை தொகுப்பு பிரதமன். அது முழுக்க நவீன இலக்கியத்தின் வாழ்வு. அதில் பெரிதாக தொல்படிமங்களின் பங்கில்லை (archetype). வெண்முரசுக்கு முன்பும் மத நாட்டார் தொன்மங்கள் உங்கள் கதைகளில் இருந்திருந்தாலும் என்னுடைய வாசிப்பில் அது அவ்வுலகங்களுக்குள் மட்டுமிருக்கும். ஆனால் இக்கதைகள் சாமானிய மானுட வாழ்விலிருந்து அத்தொன்மங்களின் உண்மைகளை தொடுபவைகளாக, கூடதல் அர்த்தம் சேர்ப்பவையாக அமைந்துள்ளது. வெண்முரசுக்கு பின்பாக முக்கியமாக நிகழ்ந்த மாறுதலிது.

கந்தர்வர்கள் கதை வாசித்தேன். எனக்கு பெரிதாகா புராணங்களும் மத்தொன்மங்களுத் அறிமுகமில்லை. தேடி அறிந்ததை வைத்து என்னால் முடிந்தவரை இக்கதையை இப்படி புரிந்து கொள்கிறேன்.

கந்தர்வர்கள் மகிழ்ச்சியில், இசையில்,கொண்டாட்டத்திலிருப்பவர்கள். அப்சரசுகள் கந்தர்வர்களுடன் நடனமாடி உடனிருப்பவர்கள். அணஞ்சபெருமாள் கந்தர்வன் அவனால் ஈர்க்கபட்ட பெண்கள்  அவனை நினைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

முதலில் அணஞ்சபெருமாள் துள்ளலுடையவனாக பெண்களை ஈர்ப்பவனாக கந்தர்வனாக உருவகிக்கபடுகிறான். பின் அவன் அணுமானாக தியாகத்தின் சின்னமாக ஆகிறான். கந்தர்வனிலிருந்து அனுமானாக முருகையாவாக எறிமாடானாக ஆகிறான்.  முதலில் அப்சரசுவுனான பின் முருகனின் வள்ளியான  ஒருத்தி அவன்  எரியில் உடனேறி நங்கையாகிறாள். ஒன்றிலிருந்து ஒன்று என முடிச்சிடப்பட்டு ஒரு நீட்சியாகிறது.

தங்களின் உயிரையும் வாழ்வையும் காப்பாற்றிக்கொள்ள போராடும், கண்ணீர்விட்டு கையெடுத்து கும்பிட மட்டுமே முடியும் மக்களுக்கும், அவர்களுள் உள்ள தெய்வத்துக்கும் இடையே நிகழும் ஆடல் இக்கதை.

எனக்கு கோயில் சிற்பங்களை பற்றி தெரியவில்லை.  சிற்பங்களின் அடுக்குகள் தெரிந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாசிக்கலாம். அதே போல் கதை பின்னணியில் உள்ள சாதிகள் பற்றி ஓரளவுக்கு தெரிந்தாலும் விரிவான அறிதல் இல்லை.

அணஞ்சபெருமாளுக்கு இக்கோயிலில் தனி சன்னதி ஒன்று கட்டப்படும். அனுமானுக்கு வைணவ கோயில்களில் இருப்பது போல். இயல்பில் கந்தர்வனாக இருக்கும் அணஞ்சபெருமாள் தன் தியாகத்தின் மூலம் அனுமானாகிறான். பின்  முருகையாவாகி வள்ளியம்மை உடன் கட்டையேருவதால் எறிமாடானாக ஆகிறான்.  அடிப்படையில் கந்தர்வனான ஒருவன் வைண கடவுளாக, சைவ கடவுளாக, தமிழ் கடவுளாக, நாட்டார் தெய்வமாக இருப்பது தான் இக்கதையா. அப்படியென்றால் தெய்வம் என்பது இயல்பில் மகிழ்வும் கொண்டாட்மும் இன்னிசையும் மட்டுமே ஆனதா, அதாவது கலைஞனா. சூழல்தான் அதை வேறு ஒன்றாக்கி கொள்கிறதா.

இறுதியில் உணர்வாக இது தெய்வங்களை பற்றிய கதை. நம்மிடம் சொல்ல ஒன்றுமில்லை. பார்த்திருக்கத்தான் முடிகிறது.

 

நன்றி

பிரதீப் கென்னடி.

யட்சன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கந்தர்வன் யட்சன் இருகதைகளும் ஒரு சிறிய நாவலை வாசித்த அனுபவத்துக்குக் கொண்டுசென்றன. வந்துகொண்டே இருக்கும் முகங்களும் ஊர்களும் மிகப்பெரிய நாவல்களுக்குரியவை. பணகுடி, திருக்கணங்குடி, மணக்கரை, அஞ்சுதெங்கு, கொல்லம் என விதவிதமனா ஊர்கள். அங்குள்ள வாழ்க்கைகள். அன்றைக்கிருந்த ஆசாரங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள். குறிப்பாக அன்றும் அரிசி-நெல் கள்ளக்கடத்தல் இருந்தது என்பது ஆச்சரியமானது. இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எழுபதுகளில் உடுமலை கேரளா பாதையில் இதேபோல அரிசி நெல் போய்க்கொண்டிருந்தது.

அன்றிருந்த சாதிநிலைகளும், ஆனால் ஒருவகை பகடியுடன் ஒருவரை ஒருவர் அணுகிக்கொண்டதுமெல்லாம் வாழ்க்கைச்சித்திரங்கள்

அர்விந்த்

 

அன்புள்ள ஜெ

பதினேழாம்நூற்றாண்டில் கோட்டாறு கம்போளம் இருந்ததா? அது  பாலராமவர்மா உருவாக்கிய சந்தை என்றுதான் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

செல்வின்குமார்

அன்புள்ள செல்வின்,

கலிங்கத்துப் பரணி பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கன் கோட்டாற்றை வென்றதைப் பற்றி பாடுகிறது. “முன்னொருநாள் அநபாயன் முனிந்த போரில் கோட்டாறும் வெள்ளாறும் புகையால் மூட” என்கிறது. அன்றுமுதலே கோட்டாறு கம்போளம் இருந்து வருகிறது

ஜெ

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
அடுத்த கட்டுரைகொதி,வலம் இடம்- கடிதங்கள்