கந்தர்வன் [சிறுகதை]
அன்புநிறை ஜெ,
எனது குழந்தைப் பருவத்தில் எங்கள் தெருவில் ஒருவன் இருந்தான். ஊரார் சோறிட்டு வளர்ந்தவன். யார் பிள்ளை, எதனால் அங்கு வந்தான் என்பதெல்லாம் தெரியாது. கைகால் எல்லாம் சற்று சூம்பிப் போய் பற்கள் எத்தி இருக்கும். ஆனால் முகத்தில் ஒரு நிரந்தர சிரிப்பு. பேசுவதும் சற்றுக் குழறல்தான். மிக எளிய வேலைகளே அவனால் செய்ய இயலும். கடைகளுக்கு சென்று சிட்டில் எழுதிக்கொடுத்த பொருட்களை வாங்கி வருவது போன்ற வேலைகள், அதிலும் காசு கணக்கெல்லாம் தெரியாது, கொடுத்த காசை வாங்கிக்கொண்டு வருவான். பிள்ளையார் கோவிலில் இருப்பான், சிதறுகாய் பொறுக்குவான். காலை மாலைகளில் குளித்து நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டையணிந்து சத்சங்க வாசலில் அமர்ந்திருப்பான். அவனது பெயர் ஆடல், அப்படித்தான் கூப்பிடுவார்கள். ஆடலரசு போல ஏதேனும் இருந்திருக்கலாம்.
நான் சிறுவயதில் சாப்பிட மிகவும் படுத்துவேன். எனை அரைக்கிண்ணம் சாப்பிட வைக்க தெருவில் இருக்கும் காக்காய், அணில், குருவி அனைத்தையும் வேடிக்கை காட்டி உணவூட்டுவார் அத்தை. அந்த வரிசையில் ஆடலும் ஒருவன். அவன் ஆடுவது போலவும் பாடுவது போலவும் ஏதேதோ செய்து வேடிக்கை காட்டுவான். ஒரு நாள் அவன் எதையோ திருடிவிட்டான் என அடுத்த தெருவில் புதிதாகக் குடியேறிய ஒருவர் அவனை அடித்துக் கொண்டிருந்தார்.
சாதாரணமாக எதற்குமே அதிர்ந்து பேசாத பூக்கடை அம்மாச்சி அன்று தெருவிலேயே சண்டைக்கோழி போல அந்த அயலவருடன் சண்டைக்கு நின்றார். அப்பன் ஆத்தா இல்லாததால் கேட்க யாருமில்லைன்னு நினைச்சீகளா என்றும் பெத்தாதான் பிள்ளையா, அவனுக்கு இந்த ஊரில் அத்தனை பேரும் ஆத்தாதான். இந்தக் கையாலதான் உணவூட்டியிருக்கிறோம் அவன் திருடமாட்டான் என்றும் சண்டைக்கு நின்ற அந்த அம்மாச்சியும் வள்ளியம்மை போலதான். அக்கம்பக்க பெண்களும் சேர்ந்து கொண்டு வெகுகாலம் அதுகுறித்து அங்கலாய்த்தார்கள்.
அவன் தீனமாக முனகிக் கொண்டே விடுங்க ஆத்தா அவர் பொருளைக் காணோமின்னு கோபத்துல அடிச்சிட்டார் என சொன்னதோடு சரி. அதன் பிறகும் அவர்கள் வீட்டுப் பிள்ளைக்கும் அவனே வேடிக்கை காட்டுவதும், அவருக்குத் தெரியாமல் அந்த அம்மாளுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும் உண்டு.
இக்கதை வாசித்ததும் அது நினைவில் வந்தது. எனைக் கலங்க செய்த பகுதி அவரிடம் ரொம்பக் காரியமாக பேசிவிட முயலும் மாராயக்குட்டிபிள்ளைக்கும் அணைந்தபெருமாளுக்குமான உரையாடல். ‘கொஞ்சம் மங்கின’ ஆளு என்று இந்த ஊர்ப்பெரிசுகள் சொல்லும் அவன் கோவிலுக்கே ஒளியேற்றுபவன். அவர் ஆஞ்சநேய பக்தி என்று இழுக்கத் தொடங்கும்போதே எலும்பு கூட எஞ்சாது என்று உணர்பவன். அவன் புத்தி அணைந்தவன் அல்ல, சிவன் அணைந்த பெருமாள்.
அவர்களது திட்டங்களுக்குள்தான் எத்தனை கணக்குகள். தன்னுயிரை அளிக்க சித்தமாக இருக்க வேண்டும், மரணத்தையே எண்ணித் தனிமையில் இருந்தாலும் தளரக்கூடாது, ராஜா தலையில் விழுந்து வைக்கும் மடையனோ மட்டியோ ஆகாது, தெளிவாக செய்தியை சொல்லிவிட்டு உயிர்விடக்கூடிய தெளிவுள்ளவன், கோபுரத்தில் ஏறக்கூடிய உயர்ந்த சாதியாக வேறு இருக்கவேண்டும். அவர்களை சபித்து விட்டோ, மனதில் ஒரு சொல் சடைத்துக்கொண்டோ உயிர் விடக்கூடாது. மொத்தத்தில் குறைகளற்ற ஒரு உன்னதன் தற்பலி கொடுக்க வேண்டும். அங்குள்ள அனைவரும் அத்தனை உயரமான கோபுரத்தில் ஏற ஏலாதவர்களே.
“ஊருக்காக செத்தா நல்லதுதான். இது ஊரு போட்ட சோத்திலே வளந்த உடம்பு”
நடுகல்லு நாட்டுதது, கொடை குடுக்குதது, இந்தமாதிரி…”
“வேண்டாம்”
கன்னி களியாம…. அதாக்கும். ஆசை இருந்தா ஒரு குட்டிய பாத்து கெட்டி வைக்குதோம்”
“அவ தாலியறுக்கணுமா? வேண்டாம்”
“தாலி அறுக்காத சாதி இருக்கே… தாசிக்குடியிலேகூட நல்ல குட்டிகள் இருக்கு”
“வேண்டாம்”
இவrகளிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் அப்போதே அவன் இல்லை.
நடுகல்லோ தன் பெயரோ எதுவும் அவனுக்கு முக்கியமல்ல.
“செரி. நல்லா வாழுங்க…நல்லபடியா நெறைஞ்சு வாழுங்க” என்ற வரியிலேயே அவன் கந்தர்வனாகிவிட்டான். அவனுக்கு சலனமில்லை.
வள்ளியம்மை அவனைத் தன் கணவனில்லையென மறுக்கமாட்டாள் என்பதை முன்னுணர நேர்வது அதனால்தான். ஆனால் அவள் தீப்பாய்ந்து அவனது தியாகத்தில் இணை சேர்வது பெரும் உச்சம்.
அவனது வயது, தோற்றம், அனைத்தையும் வைத்து அனுதினமும் பெண்களை அவன் மேல் மையல் கொண்டவர்களாகப் பார்க்கும் சமூகம். தனியன், தூயன், எளியன், அன்றாடங்களுக்கு அப்பாற்பட்டவன் பெண்களை ஈர்ப்பதில் வியப்பில்லை. முலையூறி, மகன் என்று வரிப்பதும் அனுதினம் வயிறுக்கு சோறிடுவதும், அவனை மானசீகமாக காதலனாக வரிப்பதும் எல்லாம் ஒன்றின் வெவ்வேறு வெளிப்பாடுகளே. அனைத்தும் பாவனைதான், வரித்துக்கொள்ளுதல்தான். சிதையேறுவதன் மூலமாக அவள் அன்றாடம் அவளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரே ஒரு விடையை அளிக்கிறாள்.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள ஜெ,
கந்தர்வன் கதை மிகச்சீக்கிரத்திலேயே ஒரு தொன்மமாக ஆகிவிடும். சிறந்த கதை என்பது சொன்னாலே நிலைகொள்வது என்று நீங்கள் ஓர் உரையில் சொன்னீர்கள். ஒரு செவிவழிக்கதையாக மாறிவிடும் தன்மைகொண்டதே நல்ல கதை. நவீனக்கதைகளில் எல்லாவகையான சோதனைகளுக்கும் இடமுண்டுதான். ஆனால் சிறந்தகதை எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்கும்
கந்தர்வன் ஓர் அழகான காதல்கதையும்கூட. இன்னொரு மொழியில் என்றால் உடனே ஒரு நல்ல சினிமாவாக ஆகிவிடும்
எம்.ராஜேந்திரன்
யட்சன் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
யட்சன் கந்தர்வன் இருகதைகளையும் ஒரே கதையாக வாசிக்கலாம்.சூழல், கதைத்தொடர்ச்சி எல்லாம் சமம்தான். ஆனால் கொஞ்சம் கூட பொருந்தாத வேறுபட்ட வாழ்க்கைப்பார்வையை அவை வெளிப்படுத்துகின்றன. அர்ப்பணிப்பு களங்கமின்மை ஆகியவற்றின் வெற்றியை கந்தர்வன் கதை சொல்கிறது என்றால் முற்றிலும் அபத்தமான ஒரு வரலாற்றுப்போக்கையோ புராணப்போக்கையோ சொல்கிறது யட்சன். எதற்கும் எந்த அர்த்தமும் இல்லை. என்னவேண்டுமென்றாலும் நடக்கும். நாம் வெறும் பார்வையாளர்கள் என்கிறது.
முருகப்பனின் வாழ்க்கை அவனுடைய எந்த முயற்சியும் இல்லாமல் ஒரு பெரிய ஒழுக்குபோல ஓடிச்செல்கிறது. அதில் எந்த இலக்கும் இல்லை. ஆனால் அவனும் தெய்வமாகி அமர்ந்திருக்கிறான். வெறும் தீவிரமே அங்கே அவனைக்கொண்டுசென்று சேர்க்கிறது. ஒரு கதையை எழுதியபின் அந்த உச்சம் மேல் சந்தேகப்பட்டு நேர் எதிர்த்திசையில் சென்றதுபோலிருக்கிறது யட்சன் என்ற கதை
ஜெயராமன்
அன்புள்ள ஜெ
யட்சன் கதையில் அணைஞ்சபெருமாளுக்கும் முருகப்பனுக்கும் இருக்கும் வேறுபாடு ஆச்சரியப்படுத்துகிறது. சாவதற்குள் தாசி வேண்டுமா என்ற கேள்விக்கு ஒன்றுமே வேண்டாம் என்று சொன்னவன் அவன். இவன் தாசிகளுடன் வாழ்ந்தவன். அவன் ஆணழகன் என்றால் இவன் நோயாளி. அவன் எந்த அடையாளமும் வேண்டாம் என்றவன். இவன் பொன்னைப்பதுக்கி வைத்தவன். மாலையைப்பிடுங்கப்போய் செத்தவன்
இந்தக்கதைகளில் வரும் நாயக்கராட்சிக்கால தமிழகம் ஒரு சிக்கலான உலகம். அப்போதுதான் ஏரிகள் வெட்டப்பட்டன. கோயில்கள் கட்டப்பட்டன. சாலைகளும் சந்தைகளும் வந்தன. ஆனால் அன்று போர் நடந்துகொண்டே இருந்தது. பலமுறை முகலாயர் படைகொண்டுவந்தனர். அவர்களுக்கு உரிய கப்பம் அளித்து திருப்பி அனுப்புவதுதான் நாயக்கர்களின் வழக்கம். ஆகவே வரிவசூலும் உச்சத்தில் இருந்தது
இந்தக்கதையிலேயே அந்தச் சூழல் இருக்கிறது. வரிவசூல் பற்றிய குறை இருந்துகொண்டே இருந்தாலும் அமைதியான கொண்டாட்டமான வாழ்க்கையும் இருக்கிறது
ராஜசேகர்
கந்தர்வன், யட்சன் – கடிதங்கள்
கந்தர்வன் – கடிதங்கள்