கொதி,குமிழிகள் – கடிதங்கள்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள  ஆசானே,

இரண்டு நாட்களாக கொதி சிறுகதை மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

படித்ததும் டால்ஸ்டாயின் மூன்று குருமார்கள் கதை நினைவுக்கு வந்தது. எனினும் இதில் பல நுண்ணடுக்குகள் உள்ளன. இன்னும் பொறுமையாக வாசிக்கவேண்டும்.

கிறித்தவத்தின் அடிப்படை நான் கருதுவது பாவம் குறித்த அதன் விழுமியங்கள். மனிதனை குற்ற உணர்வுக்குள் தள்ளி, மீட்பு தருவது அதன் வழி. தன்னை முழுமையாக ஒப்புவிக்க தயாராக இருக்கும், விமோசனம் மூலமாக மனித மனதின் மகத்தான உயரங்களை அடைய விரும்பும் தனி மனிதனுக்கு அது உதவலாம். ஆனால், அந்த விழுமியங்களை அடிப்படை உண்மையாக எண்ணி, அவற்றை அளவுகோலாகக் கொண்டு எல்லோரையும் வரையறுப்பதென்பது பிளவுண்ட மனம் கொண்ட சமூகத்தை உருவாக்கும்.

அதுதான் மேற்கில் நடந்து முடிந்திருக்கிறது. மதம் மூலமாக  மூதாதையர்களுக்கு தந்த நோய்களுக்கு, உளநல சிகிச்சை மூலம், இப்போது மருந்து தடவ முயன்று கொண்டிருக்கிறார்கள்.

தனி மனிதன் இதிலிருந்து தப்பவியலாது. அவன் செய்யக்கூடியதெல்லாம் தன நோயை அறிந்து, ஏற்றுக் கொள்வதுதான். அதன்பின் அவன் மதத்துக்குள்ளேயோ, வெளியேயோ இருக்கலாம்.

Chogyam Trungpa-வின் வரிகளில் ஒன்று – Knowledge becomes wisdom thorugh compassion. ஞானியாவையும், ஃபாதர் சூசைமரியானையும் பிரிக்கும் புள்ளி அதுதான்.

இதில் சொம்பு, மெழுகுவர்த்தி, தண்ணீர், ரத்தம் போன்ற உருவகங்கள் அருமை. பசியைத் தீயாக உருவகித்தால், மெழுவர்த்தி சுடர் மேலும் பிரகாசமாகிறது. அது கதையில் புரியாத அனைத்தையும் உள்ளிழுத்து கவிதையாக்கி விடுகிறது.

[இன்னும் விரிவாக எழுதவேண்டும் சார். நான் சரியாக வாசித்திருக்கிறேனா என்று தெளிவுபடுத்திக் கொள்ளவே, அவசரமாக அனுப்புகிறேன். பிற கதைகளையும் படித்துவிட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றை குறித்தும் தனியாகவும், மொத்தமாகவும் எழுதும் எண்ணம் உள்ளது. விரிவாக எழுதுகிறேன் சார்]

“தொண்ணூத்தொண்ணு வருசமாச்சு… அறிஞ்சது எல்லாம் பசிதான். பசி அடங்கணும்… கடேசிப்பசி.” என்ற வரிகள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

(இக்கடிதத்தை தளத்தில் வெளியிடுவதெனில், பெயரை நீக்கிவிடுங்கள். இன்னும் படிக்க புரிந்து கொள்ள நிறைய  இருக்கின்றன. அதுவரை hybernation-ல் இருக்க விரும்புகிறேன்)

அ.

 

அன்புள்ள ஜெ

கொதி கதையைப் பற்றிய வாசிப்புகள் வர வர அது பெருகிக்கொண்டே செல்கிறது. நீங்கள் பலமுறை எழுதிய ஒரு வாழ்க்கைச்சூழல். ரப்பர் நாவலில் அது வருகிறது. பலகதைகளில் வருகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மலைப்பகுதிகளிலிருந்த கொடிய வறுமை, பஞ்சம். பசியைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். எத்தனை எழுதினாலும் எழுதித்தீராது என்றும் தோன்றுகிறது. இந்தக்கதைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு பெரிய நாவலாக ஆகிக்கொண்டே இருக்கின்றன என் மனதில். எத்தனை முகங்கள். காடுநாவலில் வரும் ஃபாதர். சாமர்வெல்.

எத்தனையோ முகங்கள். இத்தனை முகங்களை வேறெந்த இலக்கியப்படைப்பாளியின் உலகில் பார்க்கமுடியும்?  உங்கள் நூறு கதைகளில் வரும் முகங்களை பட்டியலிட்டாலே ஆயிரம் தாண்டும். அனைவருமே தனித்தன்மைகொண்ட மனிதர்கள். எவருமே டைப் கதாபாத்திரங்கள் அல்ல. சொல்லப்போனால் மனிதர்களை எழுதுவதுதான் இலக்கியம். மானுடத்தைப் பாடுவது என்றால் இதுதான். இத்தனை ஏழைகள் எளியவர்கள் சாமானியர்கள் சரித்திரநாயகர்கள் வேறெந்த புனைவுலகிலும் இல்லை

என்.சம்பத்குமார்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் சார்,

குமிழிகள் சிறுகதை வாசிக்கும் எவரையும் உடனே சீண்டக்கூடியது. நம் காலத்தின் மிகத் தீவிரமான  உறவுச்சிக்கலை எந்த காவியத்தன்மையும் இன்றி வாசகனை தரையில் ஊன்றி நிற்க வைத்து அவன் முன் நிறுத்துகிறீர்கள். கதையை வாசித்து முடித்தவுடன் மேற்கத்திய தத்துவத்தின் Ship Of Theseus paradoxதான் நினைவுக்கு வந்தது. இன்றைய லிலி நேற்றைய லலிதா இல்லை. சாம் சாமிநாதன் இல்லை. இன்றைய லிலி நேற்றைய லிலிகூட இல்லை. முற்றிலும் புதிய ஒருத்தி. அதே தான் சாமுக்கும். ஆனால், இருவரும் தங்களை மாற்றிக்கொண்டே அந்த மாற்றத்தை வெறுக்கிறார்கள். சாமிநாதன் விரும்பிய லலிதா, லிலியாக மாறாமல் தடுக்க சாம் முயலும் அபத்தம், நம் காலத்தின் முரண்தான்.

இந்த சமூக வலைதள யுகத்தில் நாம் அனைவருமே நம்மை தினமும் புதிதாய் கட்டி எழுப்பி நிறுவவே போராடிக்கொண்டிருக்கிறோம். நம் ஆளுமை என்பது அப்படி நாம் கட்டி எழுப்பும் ஒன்றுதான். ஆனால், அதன் அஸ்திவாரமாக நமக்குள் இருக்கும் சுயம், நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்று. அந்த சுயம் நமக்கு ஒவ்வாததாகிவிட்டது. அதை மாற்ற போராடுகிறோம். அதன் மேல் ஆயிரம் தர்க்கங்களை கொட்டி அதை மறைப்பதை நியாயப்படுத்த முயல்கிறோம். சிலிக்கான் ஜெல்லிக்களையும், ஹேர் ட்ரான்ஸ்பிளாண்ட்களையும், கேமரா பில்டர்களையும் கொண்டு  உண்மையில் நாம் செய்ய முயல்வது அதைதான்.

கதையின் உச்சமாக நான் நினைப்பது அந்த ஐடியல் ஆளுமைக்கான தேடல்தான். வட இந்தியர்களை போல மாறும் தென் இந்தியர்கள், அமெரிக்கர்களை போல மாறும் வட இந்தியர்கள், சீனர்களை போல மாறும் அமெரிக்கர்கள் என்று இந்த ஐடியலுக்கான தேடல் ஒரு வேடிக்கையான சங்கிலியாக நீண்டு கொண்டே இருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன் இந்த சங்கிலி ஐரோப்பியர்ளிடம் சென்று முடியும். அவர்கள் அவர்களுடைய தொன்மங்களில் இருந்து கிரேக்கர்களை மீட்டெடுத்து அவர்களை ஐடியல்களாக முன்னிறுத்துவர். இப்படி மனிதனின் ஐடியல்களுக்கான தேடல் முடிவற்றதாகவே இருக்கிறது. இந்த ஐடியல் ஆசைகளும் அங்கீகாரத்திற்கான தவிப்பும் இன்று நம் எல்லோர் வாழ்க்கையிலும் இயல்பாகவே கலந்துவிட்டது. சில லட்சங்கள் இருப்பவர்கள் சிலிக்கான் ஜெல்லிக்கள் வழியாகவும், சில ஆயிரங்கள் இருப்பவர்கள் நல்ல கேமரா போன்கள் வழியாகவும் இதை தீர்த்துக்கொள்கிறோம். இந்த அதிவேக பரிணாம வளர்ச்சிகளுக்கு சம்பந்தமே இல்லாமல், ஆண்-பெண் உறவு மட்டும் திருவிழாவில் தொலைந்த பிள்ளைபோல மிரண்டு நிற்கிறது.அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

 

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதையை பற்றி நாங்கள் வாசித்துப் பேசிக்கொண்டே இருந்தோம்.இந்தவகையான இண்டெலக்சுவல் கதைகள் அடிப்படையான கேள்விகளை எழுப்பும்போதுதான் ஆழமாகின்றன. ஆணுக்கோ பெண்ணுக்கோ மாற்றுப்பாலினத்தைப் பற்றி கவலையே படாமல் தன்னை டிஃபைன் செய்துகொள்ள உரிமை உண்டா என்பதுதான் கேள்வி. ஏன் இல்லை என்று சொல்லலாம். ஆனால் உண்மை அது அல்ல. அப்படிச் செய்யலாம் என்றால் இயற்கையுடன் ஒத்திசையாமல் மனிதர்கள் தங்களை டிஃபைன் செய்துகொண்டே செல்லலாம் என்றுதான் பொருள். ஒரு மிஷின் உறுப்பு இஷ்டத்துக்கு வடிவம் எடுக்கமுடியாது. அதன் பங்களிப்பு என்பது ஒட்டுமொத்தச் செயல்பாட்டுடன் இணைந்ததுதான். அதன் ஐடியல் வடிவம் அப்படித்தான் உருவாக முடியும்

அருண்குமார்.எம்

 

குமிழிகள், கடிதங்கள்

குமிழிகள் -கடிதம் 

குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள்,கடிதங்கள்

குமிழிகள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைபடையல், தீற்றல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகந்தர்வன், யட்சன் கடிதங்கள்.