கொதி,வலம் இடம்- கடிதங்கள்

கொதி[ சிறுகதை]

அன்பிற்கினிய  ஆசான் ஜெ அவர்களுக்கு, வணக்கம்.

‘கொதி’ கதை என்னைப்போல நூறு கதைகளுக்குப் பிறகு “கொதிகுத்திக்” காத்திருந்தவர்களுக்கு சரியான தீனிதான்.,

நீங்கள் சோற்றைப்பற்றி எத்தனை கதைகள் எழுதினாலும், எப்படி எழுதினாலும் அத்தனையும் எனக்கு ருசிக்கிறது. சோற்றின் ருசியை அறிந்துகொள்ள எனக்கு சற்றேறக்குறைய பத்துவருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இன்றெல்லாம் பசி இல்லை என்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை அடுத்தவர் பசியை உணரும் மனிதர்கள்தான் இல்லை என்பேன். சோறிருந்தும் சாப்பிட இயலாதவர்கள் மத்தியில் இன்றும்கூட சோற்றுக்காய் பரிதவிக்கும் மக்களை எத்துனை பெரிய நகரத்திலும் என்னால் காணமுடிகிறது. கையில் காசு வைத்திருந்தும் உணவகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத கந்தலாடை மனிதர் முதல், “தல கிறுகிறுன்னு வருது. எனக்கு சாப்பாடு வாங்கித்தாப்பா”.. என உரிமையுடன் கேட்ட அந்த தாய் வரை எத்தனைபேர்! உணவக வாசல்களில் உள்ளே செல்லும்போது ஏதும் கேட்காமல், வெளிவரும்போது ஏந்தப்படுகிற அந்தக் கைகளும், மட்டை வெயிலில் கோவை பாரிஸ் சிக்னலில் முழு உடலும் நடுங்க பேனா விற்றுக்கொண்டிருந்த முதியவரும் அந்த அதலபாதாளத்தை அஞ்சுவிரல் கைப்பிடிகொண்டு நிறையவைக்க முயற்சிப்பவர்களின் பிரதிநிதிகள்தானே!

ஏன் இவர்களுக்கு இத்தனை பசி? கொதி அதற்கு தன்னளவில் ஒரு விடை சொல்கிறது. இது வெறும் வயிற்றுப்பசியல்ல…மனமும் அதைத்தாண்டிய ஆத்மாவும் கொண்ட சூன்யம். இந்த அதலபாதாளத்தை நிறைக்க முயலும் அஞ்சுவிரல் கைப்பிடி.

எது சூன்யம்? எது அஞ்சுவிரல் கைப்பிடி? இது நிறையுமா? அல்லது நிறைவு என்பதே ஒரு நிமித்தம்தானா? எத்தனை கேள்விகள்!!

மனித வாழ்வின் ஆகப்பெரிய சுமை என்பது உடல்தானே! தேவைப்படும்போது கைவிடுவதும், தேவையற்ற பொழுதில் குறுக்கிடுவதும், சோர்வையும், வலியையும் உணர்வதுமாக என்றென்றும் இங்கு மனிதனை கட்டிவைப்பதுமான இந்த உடலுக்கு என்னதான் தேவை? இந்தக் குறுக்கீடுகளும் வேதனைகளும் சோர்வும் உடலால் மட்டும் தான் வருகிறதா என்ன?

ஃபாதர் ஞானையாவின் வார்த்தைகளில் சொன்னால் “பாவப்பெட்ட சனங்க. பசிதான் அவங்களுக்கு எல்லாமே. அது வெறும் சோத்துப்பசி இல்லை. ஒண்ணுமே போய்விழாத அவ்ளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு. அதை நிறைக்கிறதுக்கு உண்டான வெறியைத்தான் பசீன்னு நினைச்சுக்கிடுறானுக. கொண்டா கொண்டான்னு உடம்பும் மனசும் ஆத்மாவும் சத்தம்போடுது. அது அதலபாதாளம், ஆனா அள்ளிப்போடுதது அஞ்சுவிரல் கைப்பிடி…..”

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பிரிவினை சபை ஒன்றில் போதகராக இருப்பவர் ஒருமுறை ஆதாம் ஏவாள் செய்த சாவான பாவத்தைப்பற்றி பேசி என்னை “நல்வழிப்படுத்த” முயன்றுகொண்டிருந்தார். நான் கேட்டேன்…”அது சாவான பாவம்னா, பைபிள்ங்குற பட்டயத்த தூக்கிட்டே நடந்துக்கிட்டிருக்கற ரட்சண்ய வீரரே….நீங்க முதலில் அறுத்தெரிய வேண்டியது என்ன சொல்லுங்க?” – அவர் என் உறவை அறுத்து எறிந்து எனக்கு சாத்தான் பட்டமும் கொடுத்துவிட்டுப்போனார்.

சரிதானே? பசிதான் பிரச்சினை என்றால் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் இல்லையா? எவ்வளவு எளிது! எதை மறக்க பசியை மட்டுமே பிரதானமாக எண்ணி வாழும் வாழ்வை ஏற்கிறோம்? கைநிறைய அள்ளி அள்ளித்தின்றாலும் அடுத்தவேளை என்று ஒன்று வரத்தானே செய்கிறது! வெறும் கொதி. இது சுழல்…மாபெரும் சுழல். எண்ணிப்பார்க்கையில் பசியை மட்டும் எண்ணும்போது, அதற்குப்பின் மறைந்திருக்கும் அதல பாதாளத்தை அந்த சூன்யத்தை எதிர்கொள்ளாமல் முகம்திருப்பிக்கொள்ள முடியுமல்லவா! பசியைத்தாண்டி பார்க்கும் கண்கொண்ட ஒருவன் அதற்கு அடுத்த நிறைவின்மையத்தானே கண்டுகொள்ள முடிகிறது, ஃபாதர் சூசைமரியானைப் போலவும், ஞானையாவைப் போலவும். முன்னவருக்கு விடுதலை இறையியல், பின்னவருக்கு பாவப்பட்ட சனங்களின் வாழ்வு. வருகொதி தீர்ந்து, போக்கொதி நிறைவுறும் வரை எத்தனை எத்தனை வேதனை!

ஆனால் ஃபாதர் ஞானையா அதைத்தாண்டி பார்க்கிறார், தன் மீட்பராகிய ஃபாதர் பிரென்னனைப்போல. புசித்துக் குடித்து மகிழ்ந்திருந்த ஃபாதர் பிரென்னன், இந்த மக்களிடையே பார்த்தது என்ன? மூதாதையர் சொத்தை துறந்து பாவப்பட்ட சனங்களோடு வந்து தங்கி தன் வாழ்வை அர்பணிக்க தூண்டுகோல் என்ன? அவர் கொண்ட கருணை….அவர் வாரிசான ஃபாதர் ஞானையாவிடம் வெளிப்படும் “பாவப்பட்ட சனங்க’’ என்கிற அந்த மகத்தான கருணை. தனது இறையியலை ஒதுக்கி இறைவனுடன் உரையாடும் அந்த இரு மகத்தான மனிதர்களின் சித்திரம் இது.

பசி மட்டுமே பிரதானமாகக்கொண்ட ஞானையா, அதன் மூலம் ருசியையும் தெரிந்து கொள்கிறார். அவருக்கு ஆண்டவர்கூட ருசிக்கும் உணவுதான், கிறிஸ்தவ இறையியலில் இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் தானே உண்கிறார்கள். பசியறிந்து, அதன் ருசியறிந்து உண்ணும் ஞானையா, கிறிஸ்துவின் துக்கத்தையும் அவரது இரக்கம்மிகுந்த இருதயத்தையும் ருசித்துவிடுகிறார். இறையியல் வழியாக அவர் இறைவனை சென்றடையும் பயணம் அது. நேரெதிராக விடுதலை இறையியலில் இருந்து, கண்ணீருடன் ஓடிவந்து இறையியலில் தஞ்சம் புகும் சூசைமரியானுக்கும் அவர் இறைவனின் ருசியை காட்கிறார். இன்று இங்கு நடப்பதுவும் இதுதானே. இந்த மக்களை மட்டுமல்ல எந்த மக்களையும் மேய்க்க எவரும் வரவேண்டியதில்லை, அவர்களுக்கு கொடுக்க மட்டுமே செய்யவேண்டும் அல்லவா! தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல, இன்று பைபிள் தூக்கியவனல்லாம் பாஸ்டராகிவிடுவது நடக்கிறது.

ஃபாதர் பிரென்னனைப்போல இந்த மக்களின் சுகதுக்கங்கள் புரிந்து, அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடன் நடக்கும் போதகர்கள்தானே இன்று தேவை. இன்றுமட்டுமல்ல என்றுமே அவர்கள் மட்டும் தான் தேவை. இதை புரிந்துகொள்ளும் ஞானையாவையும், அவரது ஞானவாரிசான சூசைமரியானையும் போன்றவர்களை இன்று காணவேண்டும் என்பது எனது கொதி.(பலமுறை சாத்தானே என்று அன்போடு அழைக்கப்பட்ட பிறகும்)

மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள் மற்றும் சூனியக்காரிகள் புத்தக அறிமுகம் உங்கள் தளம் மூலம் எனக்கு ஏற்பட்டது. அதிலுள்ள குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளுக்குப் பிறகு, கிறிஸ்தவ இறையியல் மற்றும் கிறிஸ்து குறித்த என் பார்வை வெகுவாக மாற்றம் பெற்றது எனலாம்.(சில கருத்துக்கள் என் தர்க்கத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்கிறபோதிலும்)

ஃபாதர் ஞானையா சிறில் ஐசக்கிடம் சொல்லும் அந்த வார்த்தைகள் “கடப்பொறம் ஆளாடே – அந்த ஏரியாப்பக்கம் போகாதே. அவனுகளுக்குள்ள ஆயிரம் சண்டை. அதிலே உன்னையும் இளுத்து விட்டிருவானுக… மலைப்பக்கமா போ. பாவப்பெட்ட சனங்களாக்கும் அங்க…”

ஆம் அந்த கடப்பொறம் ஆளின் (புனித இராயப்பர்) வழிவந்தவர்கள், நிச்சயம் நம்மை அவர்களின் சண்டைக்குள் இழுக்கத்தான் செய்வார்கள்.  மலைமேலல்லவா நாம் செல்லவேண்டும்!

ஃபாதர் ஞானையாவுக்கு சங்கீதம் 34:8 என்றால், எனக்கு மத்தேயு 5:48 (“உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராயிருங்கள்”). இன்று இயேசுவின் போதனைகளாக நான் மனம் நிறைந்து, கண்கள் பனிக்க ஏற்பது மலைப்பிரசங்கத்தை மட்டும் தான். மற்றவை எனக்கு பெரிதாகப்படவில்லை. அதன் அடிப்படையில் அந்த திரு இருதயத்தை நானும் நேசிக்கிறேன். எரிந்து கொண்டிருப்பதுவும், பிறருக்காக இரத்தம் சிந்திக்கொண்டு, முள்முடியால் நெருக்கப்பட்டிருப்பதுவுமான அந்தத் திரு இருதயம் கிறிஸ்துவத்தின் மையம். முழுவாழ்வையும் பிறரன்புப்பணியில் செலவிட்டு, இறுதிவரை அந்த பாதாளத்தை நிறைக்க முடியாத ஃபாதர் ஞானையாவின் கொதியை, அதைவிட பல மடங்கு கொதி கொண்ட தன்னிடத்தில் எடுத்துக்கொள்ளும் அந்த மாசற்ற திரு இருதயம் எனக்கும் அருளட்டும்.

மனம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.

 

அன்புடன்,

பிரபு செல்வநாயகம்.

வலம் இடம் [சிறுகதை]

வணக்கம் ஜெமோ,

1963ல் கி.ரா எழுதிய “குடும்பத்தில் ஒரு நபர்” என்ற சிறுகதைக்கும் நீங்கள் சமீபத்தில் எழுதி “ஓலைச்சுவடி” இணைய இதழில் வெளிவந்த ‘வலம் இடம்’ கதைக்கும் தொடர்புகளும் ஒற்றுமைகளும் இருப்பதாகப்படுகிறது. கி.ராவின் கதை எதார்த்தத்தின் பக்கம் நின்று கதைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது உங்களுடையது மாயத்தோற்றத்தின் பக்கத்தில் நிற்கிறது. அங்கு காளை, இங்கு எருமை. அங்கு மூடநம்பிக்கையின் பின்னணியில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை. இங்கு பிரம்மையினுள் மூழ்கிவிட்டிருக்கும் ஒரு விவசாயி மற்றும் அவனின் பிரக்ஞையின் பிரதிபலிப்பிலிருந்து வெளிப்படும் கதை. தொட்டணன் கவுண்டரைவிட அயிரக்கா பாத்திரப்படைப்பின் நேர்த்தியின் வழியாக காளையின் கதைவடிவம் வெளிவரும். அவளுக்கும் “புல்லை”க்கும் இருக்கக்கூடிய உறவு, அது அப்படியே வாக்கப்பட்டு போகின்ற தொட்டணனின் அகத்திற்குள்ளும் புகுந்துவிடும். மாட்டைக் காப்பாற்ற அவன் எடுக்கும் சிரத்தையையும் மாடு இறந்து போய் இயலாமையில் துவண்டு புலம்பித் தவிக்கின்ற போதும்கூட  செல்லாமாவையும் குமரேசனையும் இங்குப் பொருத்திப் பார்க்கலாம்.  உங்கள் கதையில் மாயை இன்னொரு எருமையாய் காட்சியளித்திருக்கிறது.

செல்லம்மாள், அயிரக்காவின் குணத்தைப் பெற்றிருந்தாலும் அவளுக்குள் தொட்டணனின் ஊற்றே சுரந்துகொண்டிருக்கிறது. குமரேசனின் ஆழ்மனச்சிக்கலில் கிளர்ந்து சுரந்துகொண்டிருக்கும் பிம்பத்தினை நீங்கள் இதற்குமுன் உங்களின் வேறு கதைகளில் கையாண்டிருப்பதாய் எனக்குத் தோன்றினாலும் கதைப்போக்கின் தன்மை உள்ளுக்குள் ஒட்டி நிற்கிறது.  தற்கால கதைகளில் பாத்திரங்களின் உரையாடல்கள் மலிந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை உரையாடல்களே சிறுகதைக்கு வலு சேர்க்கும் அச்சாணி. இந்தக் கதையின் உரையாடல்களே இக்கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. கி.ரா, காளை இறப்பதோடு கதையை முடித்துவிடுவார். நீங்கள் இன்னொரு குட்டி எருமையை செத்த எருமையின் உருவில் உயிர்ப்பிக்க செய்வது போன்ற அளவீடைக் கொண்டு முடித்திருக்கிறீர்கள். இது வாசகனுக்குத் தரக்கூடிய முடிவு அல்ல, குமரேசனின் பித்துநிலைக்கு கொடுத்திருக்கும் வைத்தியம்.

– தமிழ்மணி

அருப்புக்கோட்டை.

கொதி,வலம் இடம்- கடிதங்கள்

கொதி, வலம் இடம்- கடிதங்கள் 

வலம் இடம்,கொதி- கடிதங்கள்

கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3

கொதி -கடிதங்கள்-1

வலம் இடம்- கடிதங்கள்

கொதி- கடிதங்கள் 2

கொதி, வலம் இடம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஏழாம் கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபடையல்,தீற்றல்- கடிதங்கள்