நாகர்கோயிலில் ஓர் உரை

லக்ஷ்மி மணிவண்ணனின் ‘விஜி வரையும் கோலங்கள்’ கவிதை வெளிவந்தபோதே என் தளத்தில் சுட்டி அளித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அழகிய கவிதைச்சித்திரம் அது- கவிதை நிகழ்வை படிமமாக ஆக்கி மேலெழுவதற்கு மிகச்சிறந்த உதாரணம். அக்கவிதையை தலைப்பாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது அவர் அண்மையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் கவிதைச் சிறுதொகுதிகளின் நிரையில் மூன்றாவது நூல்.

ஐயா வைகுண்டருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்நூலை ஐயா வைகுண்டர் அவதார நாளான மார்ச் 4 அன்று நாகர்கோயிலில் வெளியிட்டார். கவிஞர் விக்ரமாதித்தன், கவிஞர் மதார், எழுத்தாளர் பிகு, எழுத்தாளர் சுஷீல்குமார் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.

நண்பர் கே.பி.வினோத் மாலை நான்குமணிக்கு வீட்டுக்கு வந்திருந்தார். அருள், சுஷீல்குமார், ஜி.எஸ்.எஸ்.வி நவீன் ஆகியோரும் வந்திருந்தார்கள். நானும் அருண்மொழியும் சைதன்யாவும் கிளம்பினோம். இரு கார்களிலாக விழா அரங்கை அடைந்தோம். ஐம்பதுபேர் வரை வந்திருந்தனர். அரங்கில் அ.கா.பெருமாள் வந்திருந்தார். நெல்லையிலிருந்தும் பல நண்பர்கள் வந்திருந்தனர்.

நெடுநாட்களுக்குப்பின் பல நண்பர்களைப் பார்க்கமுடிந்தது. என் தளத்தில் சிறுகதை எழுதி அறிமுகமான ஜெயன் கோபாலகிருஷ்ணனைப் பார்த்தேன். அதன்பின் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்று சொன்னார். எழுத உத்தேசமிருப்பதாக தெரிவித்தார். மதுரையிலிருந்து குக்கூ ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டிருந்த ‘ஜே.சைதன்யாவின் சிந்தனைமரபு’ நூலுடன் வந்திருந்தார்.

விக்ரமாதித்தன் லேசாக தொப்பை போட்டிருந்தார். மதுவை ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடுவதில்லை என்றார். ஆச்சரியமாக இருந்தது. அவருடைய சிரிப்பு கட்டற்றது. எந்தவிதமான எச்சரிக்கையும் தன்னுணர்வும் இல்லாமல் சிறுவனைப்போலச் சிரிப்பவர். நீண்டநாட்களுக்குப் பின் அண்ணாச்சியைப் பார்ப்பது நெகிழ்ச்சியூட்டும் அனுபவம்.

அன்றுதான் சுஷீல்குமாரின் ’மூங்கில்’ சிறுகதைத் தொகுதி வெளிவந்திருந்தது. சுஷீல் எழுத்தாளராக ஆன நாள். உற்சாகமாக இருந்தார். நூலை சம்பிரதாயம் மீறி அந்த அரங்கிலேயே வெளியிட்டோம். விக்ரமாதித்தன் வெளியிட சுஷீல் பெற்றுக்கொண்டார். விக்கி கையால் ஓரு வாழ்த்து என்பது எந்த எழுத்தாளனுக்கும் நல்லூழ் என்பது என் எண்ணம். அவர் கவிஞர் என்பதற்கும் சற்றுமேல் ஒரு நிறைவான ஆளுமை.

விழாவில் நான் லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகளை வெளியிட்டுப் பேசினேன். அண்ணாச்சியின் சிறப்பான பேச்சுக்களில் ஒன்று. மதார், பிகு இருவருமே சிறப்பாக தயாரித்துக் கொண்டுவந்து பேசினார்கள். லக்ஷ்மி மணிவண்ணனின் உரை அவருடைய வாழ்க்கையனுபவங்களிலிருந்து எழுந்து நேரடியாக, உணர்ச்சிகரமாக வெளிப்பட்ட ஒன்று. ஜி.எஸ்.தயாளன் தொகுத்து வழங்கினார்.

சிறப்பான நிகழ்வு. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பிவந்தேன். சிலநாட்களுக்கு முன்னரே எடுத்த முடிவுதான், இதுதான் நான் நாகர்கோயிலில் கலந்துகொள்ளும் இறுதிப் பொதுநிகழ்வு. இனி இங்கே கூட்டங்கள் இல்லை, பேச்சுக்களும் இல்லை. அது லக்ஷ்மி மணிவண்ணனின் நிகழ்வாக அமைந்தது நிறைவளித்தது.

விஜி வரையும் கோலங்கள் வாங்க


வெளியேற்றம்- கடிதங்கள்

நாகர்கோயில்- கடிதங்கள்

நாகர்கோயிலும் நானும்

முந்தைய கட்டுரைகுமிழிகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகூர் [சிறுகதை]