குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்பின் ஜெ,

‘குமிழிகள்’ வெளியான அன்று இரவே (நடுநிசி!) படித்த பின் பல இருத்தலியல் கேள்விகள் அலைக்கழிக்கின்றன.

இதில் ஒரு ஆணாக, அதிலும் (இந்தியக்) கணவனாக, எனக்கு லிலியின் கனவுகள், குறிக்கோள்கள் குமிழிகளாகத் தோன்றுகின்றன – தனக்குரிய புற அங்கீகாரத்திற்கு அவள் தரும் முக்கியத்துவம் (‘அப்படியே இன்ஷுரன்ஸ் மேனேஜராகவே இருந்திருக்க வேண்டியதுதான்’) மட்டுமே அவளை ஊக்குவதாகத் தெரிகிறது. ஆனால் மிகவும் ஆணித்தரமாக முன்வைக்கப்படும் அவளது வாதங்கள் ஒரு தேர்ந்த புத்திசாலி கணவனால் கூட புறந்தள்ளமுடியாதவை.

அவள் கணவன் வாயிலாகவே அவளது வாதத் திறமை சொல்லப்படுகிறது (‘வழக்கம்போல, சொல்லி சொல்லி அவளால் தன்னைத் திரட்டிக் கொள்ள முடிகிறது’), அவன் வாய்விட்டும் ஒத்துக் கொள்கிறான் – “என்னால் உன்னை மாதிரி கோவையாக, கூர்மையாய்ச் சொல்ல முடியலை” என்று மூன்று முறை சொல்லிச்சொல்லி தன் வாதங்களைச் முவைத்தபிறகும் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் அவனால் சொல்லமுடிவதில்லை. மாறாக லிலியின் வாதத்திறமை அபாரமாக வெளிப்படுகிறது – முக்கியமாக சமூகஊடகங்களில் மனிதர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களின் அவளது கூர்மையான அவதாங்கள், தன் நிறைகளை, கனவுகளை (மட்டுமே) தனக்குத்தானே சொல்லி தான் அதுவாகவே ஆகிவிடுவதும், ‘என் குறைகளை என்னால் முன்னிலைப்படுத்தப்படாததனாலேயே அவை மெல்ல என்னிடமிருந்து விலகிவிடும்’ போன்ற வாதங்களுக்கு ஆணிடம் எந்த பதிலுமில்லை. ஆனால் அவனது நியாயமான மௌனங்களை கூட அவனது எரிச்சலின் வெளிப்பாடாகவே அவள் பார்க்கிறாள். இது போன்ற அவளது செய்கைகள் (அவன் கவனித்துக் கேட்கும் அவளது எளிதில் பொதுமைக்குத் தாவும் மனோபாவம்…) ஏதோவொரு வகையில் அவளது நிச்சயமின்மையை வெளிப்படுத்துவதாகவே நினைக்கிறேன்.

இக்கதையின் வாசகியருக்கு மரபு, வரலாறு. எதிர்காலம் குறித்தான ஆணின் கேள்விகள் குமிழிகளாகத் தெரியலாம். இமைக்கணத்தில் கூட திரௌபதி இதை கேள்விகேட்கும் ஒரு இடம் நினைவிலிருக்கிறது (‘இவ்வினிமைகளை மறுக்கும் மெய்ம்மையினை நான் எவ்வாறு ஏற்க முடியும்’). நீங்களே கூட பலமுறை பெண்களின் நடைமுறைவாதம் குறித்து பேசியும் எழுதியுமிருக்கிறீர்கள்; அவர்கள் கோட்பாட்டுச்சிக்கல் போன்ற சிடுக்குகளையெல்லாம் போட்டு தேவையில்லாமல் குழப்பிக்கொள்வதில்லை. மாறாக ‘இன்று’ குறித்தான பிரக்ஞை பெண்களை வலுவாக முன்னடத்துகிறது

லிலி, அவள் கணவன் இருவரின் பாத்திரவார்ப்பும், தர்க்கபுத்தி முன்னோங்கியிருக்கும், இன்றைய (திருமணமான) நகர இளைஞர்களை மிகச்சரியாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதிலும் பாலியல் போன்ற சங்கதிகளையும் அறிவார்த்தமாக விவாதிக்கும் சூழல் (அவர்களின் பாலியல் சார்ந்த உரையாடல்கள் எந்தவொரு கிளர்ச்சியையும் தருவதில்லை என்பது மிக முக்கியம்) அவர்களை அறிவுத்தளத்தின் ஒரு உச்சத்தில் காட்டுகிறது. இதனாலேயே அவர்களுக்குள் எழும் இச்சிக்கல்கள் பெரும்பாலான நகரத்து இளைஞ இளைஞிகளின் (இவ்வளவு கூர்மையாக இல்லாவிட்டாலும், ஏதோவொரு விகிதத்தில்) சிக்கல்களாகவே படுகிறது. நவீன கல்வி கற்று, அறிவு சார்ந்த பணிகளில் பெரும்பான்மையாக ஈடுபடும் ஒரு தலைமுறைப் பெண்கள் மிகவேகமாக அதிகரித்துவரும் இத்தருணத்தில் இந்தக்கதை முன்வைக்கும் கேள்விகள், அதன் சமகாலப் பொருத்தப்பாடு இதெல்லாம் தனியே விவாதிக்க வேண்டிய விஷயங்கள்.

தொடரும் மற்றுமொரு சிறுகதைப் பருவத்திற்கு நன்றிகள் பல.

அன்புடன்
வெங்கட்ரமணன்.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். குமிழிகள் கதை வாசித்ததும் எனக்கு நினைவில் வருவது  பன்னாட்டு நிறுவங்களின் அலுவலகச்  சூழல். இங்கு  வேலை பார்ப்பதில் முன்னேற்றம் என்பதின் அடிப்படை – எலிப் பந்தயம்.முன்னேற்ற இலக்கு எனக்  காட்டப்படுவது பொருள் வெற்றி அடைந்த முன்னுதாரணங்கள். தலைமைப் பண்பு என காட்டப்படுவது   அமெரிக்க/மேற்கத்திய  முறைமை.

இத்தனை  பெண்கள் தலைமைப்  பதவிகளில் அமர்த்தப் பட வேண்டும் என்று இலக்குகளும் உள்ளன. இந்தச் சூழலில் எளிதில்  காணக்  கிடைப்பது லிலி போன்ற போராளிகளே. பொருள் ரீதியாக அல்லது பதவி ரீதியாக இவர்கள் முன்னுள்ள  மாதிரிகள் மேற்கத்தியப்  பெண்கள். இவர்கள் முன்னால் இருப்பது  Individualistic மனப்பாங்கு உடையவர்கள். இவர்களின் குடும்ப அமைப்போ இன்னும் நம் வழியில்.

லிலிகள்  கொள்ளும் உணவு வழக்கங்கள் CEO என்ன செய்கிறாரோ அது! உடை, நடை, பேச்சும் அத் திக்கிலேதான்! லிலிகளைத்  தொடரும் அல்லிகள், அல்லிகளைத்  தொடரும் வள்ளிகள்  எனப்  பல பேர்கள் ‘கான  மயிலாடக்  கண்டிருந்த வான் கோழி போல’ ஆடுவது கேலிக் கூத்தாவதுண்டு. லிலியை மாதிரியாகக் கொண்டு  அது போல உயர  எண்ணும்  பெண்கள் திரிசங்கு  போல சிக்கி கொள்ளும் குடும்பச் சிக்கல்களும் நொய்மை தருபவை. .

என் ஒன்பதாம் வகுப்பில் ஒரு உயிரியல் பாடம் இருந்தது – போலச்  செய்தலும் வண்ணம் ஏற்றலும் (mimicrying  and  colouration  என்பதின் மொழிபெயர்ப்புத்  தலைப்பு!). எல்லாம் சர்வைவலுக்கும் த்ரைவலுக்கும்! கொடுக்கும் விலை மனதிற்கு உகந்ததாக இருந்தால் ஒன்றும்  துன்பம்  இல்லைதான்! லிலி போல ஒற்றைப்  போக்கு கொண்டு தான் எண்ணுவதில் சந்தேகம் இன்றி செல்வோர் மிகக் சிலர், அவர்களுக்கு அவர்கள் எண்ணம் மாறாத வரை மனத்தொல்லை  இல்லை. ஆனால்  லிலியை ‘போலச் செய்யும்’ அல்லிகள், அவர்களைப்  போலச்  செய்யும் வள்ளிகளின் மனக் / மணக் குழப்பங்கள் மிக பெரிய துன்பமே – அவருக்கும், அவர் குடும்பத்திற்கும், குட்டிகளுக்கும் – குழுமத்திற்கும்  கூட.

ஆனந்தா ராஜ்குமார்

 

வணக்கம் ஜெ

முலைகள்- தொட்டால் உடையும் குமிழ்கள்; போலிகள்; போலிகளே இங்கு அனைத்தையும் கைப்பற்றிவிட்ட காலம். நாம் என்னதான் போலிகள், அபத்தங்கள் என்று கத்திக்கொண்டிருந்தாலும் அது மேலும் செல்வாக்கு பெற்று ஆதிக்கம் செலுத்தியே வருகிறது. இன்று வென்றவர்களை நோக்கிச் செல்கிறது உலகம். தென்னிந்தியர்கள் வடஇந்தியர்களாகவும், வடஇந்தியர்கள் வெள்ளையர்களாகவும் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியெனில் தோற்றுக்கொண்டிருக்கும் (கிட்டத்தட்ட தோற்றுவிட்ட) பண்பாட்டின் பிரதிநிதியா நான் ? நாம் பேசிக்கொண்டிருக்கும் பெருமிதங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. உலகம் வேறுதிசையில் செல்கிறது.

எது வெல்கிறதோ அதையே தம் சுயமாகக் கொள்ளும் காலம். ‘மனிதனுக்கு சுயம் என்பதே இல்லை; அவன் எவ்வாறு தன்னை முன்னிறுத்துகிறானோ அதுவே அப்போதைக்கு அவனுடைய சுயம்’. கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு. அதுவே வென்ற தரப்பு என்று நாம் எண்ணும் கணம்தான் நம் தோல்வி. அது வெல்லவில்லை. வெற்றிபெற்றதாக எல்லோரையும் நம்ப வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரச் சூழல். அதை எதிர்கொள்ள நாம் பேச வேண்டும்; செயலாற்ற வேண்டும். ஆனால் நம்மிடம் பெரிய தயக்கம் இருக்கிறது. அதுவே நம் தோல்வி.

உரிமை கொள்வதற்கும் அதிகாரம் செலுத்துவதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது ? அல்லது வேறுபாடு இல்லை ? உணர்வுபூர்வமாகவும், உடல்பூர்வமாகவும் ‘உரிமை கொள்வதில்’ தான் உறவுகள் சாத்தியமாகின்றன. அது இல்லையெனில் எல்லோரும் தனித் தீவுதான். ‘கணவன் மனைவி’ உறவுகூட பாலியல் தொழிலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவைப்போல ஆகிவிடும். தனி மனிதர்களே இல்லாத காலத்தில் ‘தனிமனிதவாதம்’ தேவையாயிருந்தது. ஆனால் அதீத தனிமனிதவாதமே இன்று முதன்மையான சிக்கலாகிவிட்டது. ‘அந்தரங்கம் புனிதமானது’தான்;  அதே அளவுக்கு உறவுகளும் புனிதமானதே என்பதைப் பேச வேண்டிய தருணமிது.

உடலை அழகுபடுத்துவது என்பது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்று நான் எண்ணுவதுண்டு. ஆனால் எப்படி அதுவும் கூட அந்நியப்பட்டுப் போய்விட்டது ? இன்று ஆண்கள் சிக்ஸ் பேக்குக்காக ஏன் இப்படி அலைகிறார்கள் ? வரலாற்று மனிதர்களையும் உருமாற்றிவிட்டார்கள். மருது பாண்டியர்களும், வீரபாண்டியக் கட்டபொம்மனும் சிக்ஸ் பேக்குடன் காட்சியளிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் லெட்சுமி, சரஸ்வதி, காளி, மாரி அனைவரும் மேற்கத்திய ஓவியங்களைப் போல ஆகிவிடுவார்கள். உடல் குறித்த நம் அதீதப் பேச்சுக்களை கவனித்தால் தெரியும். ‘என் உடல் என் உரிமை’, ‘I Love Myself’ என்று. யார் உன்னை love பன்ன வேணாம்னு சொன்னது ? அதை என் இப்படி லூசு மாதிரி பெரிய கோட்பாடு மாதிரி பேசிக்கிட்டு இருக்க ? ஒருவித பதற்றத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

எளிய கதையாக இருந்தாலும் பல்வேறு சிக்கல்களை பேசக்கூடிய கதை.

விவேக் ராஜ்

 

அன்பு ஜெ,

லிலியைப் போலவே இங்கு பெரும்பாலான பெண்கள் தன் உடல் அழகை ஆராதிப்பவர்கள் தான். எந்த ஒரு பெண்ணும் ஏதோ ஓர் உணர்வான பால்ய காலத்தில் உடலை உற்று நோக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதன் நிலையாத்தன்மையை புரிந்தொழுகும் வயது வரையுமே இந்த ஆடி ஒத்திகை நடந்து கொண்டுதானிருக்கும். ஒவ்வொரு பெண்ணையும் கணக்கெடுத்தால் தன் உடல் சார்ந்த ஏதோவோர் போதாமையை அவர்கள் சொல்வார்கள். பற்களின் வரிசை சீராக இருக்க வேண்டும், மூக்கு கூர்மையாக இருக்க வேண்டும். இப்படி ஏகத்துக்கு அவர்களிடம் பட்டியலுண்டு.

என் பால்யத்திலிருந்தே என் பற்களின் தெற்றின் மேல் வருத்தமிருந்தது. அந்தத் தெற்று தெரியாமல் இருக்கவே வாயை ஒவ்வொரு கோணத்திலும் வைத்துப் பேசுவேன். பால்யத்தில் அந்தப் பல்லில் துணிக் கிளிப்பைப் போட்டு உந்தித் தள்ளிக் கொண்டிருப்பேன். அது முன்னகர்ந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் மிகச் சரியாக காலப்போக்கில் பின் நகர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்தவர்களை முதல் முறை பார்க்கும் போது அவர்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்பதைவிட என் பல்லைப் பிடிக்குமா என்று நினைப்பதுண்டு. அதுவே என்னை அவர்களிடம் சரியாக பேசவிடாமல் முதலில் தடுப்பது. அது போலவே என் சுருட்டை முடியின் மேலான ஒவ்வாமையும் பால்யத்தில் இருந்தது. குறிப்பாக ஊரில் என் கூட்டுப் பிள்ளைகள் என்னை “சூம்பிப்போட்ட பனங்கொட்ட மண்ட” என்ற கூப்பிடும் போது ஒவ்வாமையின் உச்சத்திற்கு சென்றுவிடுவேன். பெரிதானதும் பல்லை சீர்செய்ய வேண்டும், முடியை குச்சிகுச்சியாக நீட்டியிருப்பது போல மாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் அந்த இரண்டுமே என் அடையாளங்களாக இன்று மாறிப்போயின.

லிலிக்கு தன் மூக்கின் மீதான ஒவ்வாமை கூட அப்படியான ஒரு காலகட்டத்தில் ஆரம்பித்து மேலும் மேலும் அது பெருகி திராவிட மூக்கு என்ற சொல்லில் உச்சமடைந்திருக்கும். அவள் உதிர்த்த ஒவ்வொரு வாதமும் தன்னையே அவள் திருப்தி கொள்ளச் செய்வதற்கே. அவளுக்கு அதற்கான வாய்ப்பும் அதற்கான தேவையுமிருப்பதே அவளுக்கான நிறைவான சாக்குபோக்குகள் தான்.

இதைத் தாண்டி அவளின் வாதத்திலிருந்த இந்த வரிகள் என்னை மேலும் சிந்திக்கத் தூண்டியது.

‘என்னோட எக்ஸ்பிரஷன்தான் நான். அதுக்கு அப்பாலே உண்மையிலே நான் யார்னு யாருக்கும் தெரியாது’; சோஷியல் மீடியால எதை முன்வைக்கிறானோ அதான் அவன்… அதுக்குமேலே அவனுக்கு எந்த செல்ஃபும் இல்லை. அப்டி ஒரு மாறாத செல்ஃப் இருக்குன்னு சொல்றது பொய். அப்பப்ப எப்டி முன்வைச்சுகிடறோமோ அதுதான் நாம…’

ஒட்டு மொத்தமாக ஒருவருடைய சோஷியல் மீடியா பக்கத்தை புரட்டினாலே அவர் தன்னை எப்படி முன் நிறுத்துகிறார் என்பதை அறிந்துவிடலாம் தான். இது மட்டும் இவர் இல்லை என்று எப்போதும் தோன்றுமெனக்கு. ஆனால் இன்று வோறொன்றை யோசித்தேன். ஒவ்வொருவரும் தன்னை இந்த சமூக நீரோட்டத்தில் முன்னிறுத்திக் கொள்ள அந்தந்த காலகட்டத்தைக்குத் தேவையான பதிவைப் போடுகிறார்கள். ஒவ்வொரு நாளுமென அவர்கள் அந்த லைக்குகள் போடும் ஆயிரம் பேருக்காகவே அவர்களை முன்னிருத்தியே  தங்கள் வாழ்வை முன்னிருத்துகிறார்கள்.

இவர்களை நினைக்கும்போதே வாசகர் சக்திவேல் அவர்கள் புகழையும் பாராட்டையும் ஒதுக்கி அவர் எழுதுவதும் வாசிப்பதும் மகிழ்ச்சிக்காக என்று சொன்னது நினைவிற்கு வர லிலி போன்றவர்களுக்கான ஆன்ம திருப்தி என்பது எது? என்ற கேள்வி எழுந்தது. கண்ணுக்குத் தெரியாத, நம் வாழ்வின் அருகிராத,  ஓர் சந்தை உலகம் முன் வைக்கும் ஒரு பிம்பத்தை நோக்கி நம் இயற்கை உடலை செலுத்தி வேறொன்றாக மாறி அடைவதென்பது எதை? நம்மை நம் திறமையை எந்தவித புறத்தோற்ற அளவுகோளின்றி ஏற்றுக் கொள்ளும் சாமிநாதன் போன்றோர்களிடமிருந்து விலகியபின் ஏற்படும் மகிழ்ச்சி/வெற்றி என்பதன் நிறைவு நிறைவாகுமா? நுண் உணர்வுகளினின்று விலகி சந்தையின் ஓட்டத்திற்கேற்ப நம்மை நம் வாழ்வை கட்டமைத்து அந்த தொடரோட்டத்தில் அடைவதென்பது எதை என்பதை நானுமே தன் மூக்கம்மாவை இழந்த சாமிநாதன் போல் குழப்ப நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பட்டமாக நம் கண்ணால் காணும் உடலை நம் இயற்கையான உடல்மொழியை வெறுக்கச் செய்து வேறொன்றாக மாற்ற எத்தனிக்கும் சந்தை மனநிலையின் வழி நான் இறுதியில் தரிசித்தது காந்தியைத் தான். சந்தை மனநிலையினின்று நம்மை மீட்டெடுக்க அவர் விட்டுச்சென்ற காலடித்தடங்களே நமக்குப் போதும். அவரே அந்த காலகட்டத்தின் உண்மையான புரட்சியாளர். குமிழியின் சிறுகதையின் இறுதியில் நான் தரிசித்தது காந்தி தன்னை முன்னிருத்திக் கொண்ட பிம்பத்தைத்தான். நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

முந்தைய கட்டுரைநீர்ச்சுடர் – அவல நகைச்சுவை
அடுத்த கட்டுரைவலம் இடம்,கொதி- கடிதங்கள்