கொதி, வலம் இடம் – கடிதங்கள்

கொதி[ சிறுகதை]

அன்பின் ஜெ,

நலமா?   நூறு சிறுகதைகள் பலவற்றை மீண்டும் வாசித்தேக்கொண்டிருந்தேன்.அவை தனிமைநாட்களில் உண்டாக்கிய மனநிலைகளை பற்றி சில வாரங்களாக நினைவு படுத்திக்கொண்டேஇருந்தேன். ஆனையில்லா, கீர்டிங்ஸ், குருவி, நற்றுணை, அங்கி, வருக்கை என்று ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு வாசிப்பனுபவங்களை எனக்கு அளித்தவை.சென்ற ஆண்டு இருந்த இறுக்கமான புறச்சூழல் களை மறந்து வாசிப்பில் ஆழ்ந்திருந்த நாட்களை அவை மீண்டும் எனக்களிப்பவை.

இப்பொழுது மீண்டும் சூழ்ந்துள்ள தேர்தல் செய்திகளிலிருந்து தப்பிக்க நான் மீள் வாசிப்பை தொடங்கிய  சிலநாட்களில்  கொதி சிறுகதை வந்துவிட்டது.மிக அற்புதமான நிகழ்வு தான் இது.

கொதி சிறுகதை அளிக்கும் மனநிலை நான் உள்ளுக்குள் எப்போதும் வேண்டுவதே. ஃபாதர் ஞானய்யா  அவரது இறைப்பணி , நல்ல பண்டாரம்,மலைமக்களின் கொதிப்புகள் எல்லாமே சில மாறுதல்களுடன் நான் பார்த்தவையே.பழங்குடிகளுக்கு ஓதுவது போன்ற ஒரு புற அடையாளம் எப்பொழுதுமே தேவைப்படும்.

விவிலியத்தை நன்கறிந்த விசுவாசிகளுக்கு அவையெல்லாமே சாத்தானின் சடங்குகள் என்ற அனுமானம்.இத்தகைய பல்வேறு முரணான இந்திய கிறித்தவ மனநிலை எனக்குமே இளம் வயதில் இருந்ததுன்டு.ஞானய்யாவைப் போன்றே திருநெல்வேலியில் நடந்த  ஒரு சாதிக்கலவரத்தில் யாருமற்று நின்ற ஒரு சிறுவனாக பிஷப் ஸ்டீபன் நீல் என்பவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர் என் தாத்தா.அது ஒரு சுவையான கதை.ஆனால் அதனாலேயே இன்று நாங்கலெல்லாம் நல்ல கல்வியுடன் மேம்பட்ட நிலையிலிருக்கிறோம் என்பது எங்கள் குடும்பத்தின் மூத்தவர்கள் அனைவரின் நம்பிக்கை.பிஷப்பின் பெயர் இன்றும் எங்கள் குடும்ப பிள்ளைகளின் பெயர்களில் தொடர்கிறது.அது ஒரு நன்றிக்கடன்.

இச்சிறுகதை எனக்களித்த உணர்வு ற்புதமானது.பழங்குடியினருடன் சிறிய மலையில் வளர்ந்ததால் எனக்கு அந்த பசி நன்கு தெரிந்ததே. எலி,ஓணான், உடும்பு, நீர்க்கோழிகள், காட்டுப்பறவைகளின் முட்டைகள் என்று காணும் அனைத்தையும் பிடித்து சுட்டுத்தின்னும் மக்களுடன் நானும் திரிந்திருக்கிறேன்.மிக நல்ல வாசிப்பு.

 

அன்புடன்

மோனிகா மாறன்.

 

கொதி கதையைப்பற்றி கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எனக்கும் அந்த கதைக்கொண்டாட்ட காலம் திரும்பிவந்துவிட்டது என்ற பரவசம்தான் ஏற்பட்டது.

ஆன்மிகம் பற்றிப் பேசும்போது ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓரிடத்தில் சொல்கிறார் உலகத்திலிருந்தே தொடங்கமுடியும். எது நம் வாழ்க்கையோ அதிலிருந்தே தொடங்கமுடியும். எது அன்றாட அனுபவமோ அதைத்தான் ஆன்மிக அனுபவமாக ஆக்கிக்கொள்ளமுடியும். துறந்து வேறெதையோ அடைந்து ஆன்மிகமாக ஆக்கிக்கொள்ளமுடியாது

ஞானையா அறிந்ததெல்லாம் பசிதான். அந்தப்பசியையே தன் ஆன்மிகமாக அவர் ஆக்கிக்கொண்டார். அதன்வழியாகவெ ஞானமீட்பையும் அடைகிறார்

என்.சத்யநாராயணன்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதையை வெறிகொண்டு பலமுறை வாசித்தேன். எனக்கு அதிலிருந்த இனிய குடும்பச்சித்திரம்தான் அழகான அனுபவமாக இருந்தது. அந்த தம்பதிகளுக்கு எருமை என்பது செல்வம் அல்ல, உறவு. எருமையை அவர்கள் பார்த்துக்கொள்ளும் விதமும் எனக்க ராத்திரியே என அவள் அதை எண்ணி அலறுவதும் ஆகா என்ன ஒரு வாழ்க்கை என்ற எண்ணத்தை உருவாக்கின. அன்புகாட்டுவதையே தொழிலாகக் கொள்வது என்பது ஓர் அதிருஷ்டம். விவசாயத்திலும் மாடுமேய்ப்பதிலும்தான் இது உள்ளது

இதை நான் ஒரு ரொமாண்டிக் மனநிலையில் சொல்லவில்லை. என் அப்பா விவசாயிதான். அவரை கவனித்து வருகிறேன். அவர் அந்த மனநிலையில்தான் இருக்கிறார். இன்றைக்கு அவரால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஆனாலும் விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்று இருக்கிறார். ’மாடும், தோட்டமும் இல்லேன்னா செத்திருவேன். நான் யார்ட பேசுறது வேற?” என்று சொல்வார்

என் இளமையில் வீட்டில் எருமைகள் இருந்தன. ஒவ்வொரு எருமைமுகமாக நினவில் வந்து செல்கிறது. எல்லாமே தெய்வங்களின் கனிவு கொண்ட கண்களுடன் ஞாபகம் வருகின்றன

நன்றி ஜெ

செந்தில்குமார் அருணாச்சலம்

 

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகனுக்கு,

வலம் இடம், தன் வளர்ப்பு பிராணியின் மீது உயிரையே வைத்திருப்பவர் அதன் இறுதி காலத்தில் அடையும் தடுமாற்றத்தையும், மனப் பிரம்மையையும் காட்சி படுத்தும் சிறந்த கதை.

ஆறு மாதம் சினையுள்ள எருமைக்கு ஏதோ பிரச்சனை என அது நிலைக்கொள்ளாமல்  குளம்போசை எழுப்புவதை செல்லம்மை அவளுடைய கணவனான குமரேசனிடம் சுட்டிக்காட்டும்போது அவனும் கவனிக்கத் தொடங்குகிறான். அந்த எருமைக்காகவே வாழ்வதைப்போல வேப்பெண்ணை தடவிவிட்டு, உண்ணிப்பொருக்கி, குளத்தில் குளிப்பாட்டி, தேடிப்போய் நாக காட்டிலுள்ள கொழுத்த புல்லை அறுத்துப்போட்டு கண்ணும்கருத்துமாக பார்த்துகொள்கிறான்.

குளத்தில் எருமையின் கொம்புகளைப் பற்றியபடி மிதப்பவனை அது அப்படியே தூக்கி விளையாடுவதைப் பார்த்த நாராயண வைத்தியர்  “கூட்டுக்காரியோட கும்மாளமா” என்று கேட்பதும் அவனும் அப்படிதான் என்பதும்.. அட என்ன ஒரு சித்திரம். எருமைக்கும் குமரேசனுக்கும் உள்ள நேசத்தை வாசகர் மனதில் ஆழமாக உணரச்செய்கிறது.

அந்த ஆழமான நேசம் அவன் ஆழ்மனதை ஊடுருவி கனவில் விரிகிறது. கனவில் எருமை அதன் பிம்பத்தைப்போல் வேரொரு எருமையுடன் கொம்பு பூட்டி விளையாடுவதைக் காண்கிறான். கனவிற்கும் நனவிற்குமான ஊசலில் தன் மனதிலிருக்கும் எருமையை உண்மையென அதையும் சேர்த்து பராமரிக்கிறான்.

ஒருநாள் கனவில் அவன் அப்பாவே எருமையை அழைத்து செல்கிறார். அவனால் தடுக்க இயலாமல் போவது அவன் அப்பாவை காலன் வடிவாக கண்டிருக்கக்கலாம் எனத் தோன்றியது.  கனவின் வழியாகவே நகரும் கதை இறுதியில் அவர்கள் வணங்கும் அளப்பங்கோட்டு அப்பச்சி கையால்கனவில் வரும் மீட்பு.

மிகவும் நெகிழ்ச்சியான கதை. நல்லதொரு வாசிப்பனுபவம்.

நன்றி

விஜய் சத்யா

வாஷிங்டன்

முந்தைய கட்டுரைகதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇருளில், கூர்- கடிதங்கள்