குமிழிகள் கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழி கதையை அதன் கதையிலிருக்கும் விவாதங்களைக்கொண்டும் அதன் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைக்கொண்டும் புரிந்துகொள்ளலாம். இரண்டு கதாபாத்திரங்கள். ஒன்று ஆண், இன்னொன்று பெண். பெண் தன்னுடைய ஐடியல் வடிவத்தை அடைய நினைக்கிறாள். என்ன பிரச்சினை என்றால் ஆணே இல்லாமல் அந்த முழுமையை அடைய நினைக்கிறாள். அப்படியென்றால் ஆணின் இடமென்ன என்பதுதான் கேள்வி. இதையே ஆணுக்கும் கேட்டுக்கொள்ளலாம்.

மானுடம் ஆணும் பெண்ணுமாக பிணைந்து வாழ்ந்த காலகட்டத்தைக் கடந்து ஆணும்பெண்ணும் தொடர்பே இல்லாமல் வாழும் காலம் நோக்கிச் செல்லப்போகிறதா? குழந்தைபெறக்கூட இனி காமம் தேவையில்லையா? என் உடல் என்னுடையது என்ற எண்ணம் அங்கேதான் செல்கிறதா? அது லிலி சொல்லும்போது சரி என்றுதான் எனக்குப் படுகிறது. அது பரிணாமத்தின் ஒரு கட்டம் என்றால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைக்கிறேன்

எம்.

 

அன்பு ஜெ,

மீண்டும் சிறுகதைகள் கொண்டாட்டத்தை தொடங்கியதற்கு மிக்க நன்றி. நோய்சூழ் காலத்தில் தங்களின் சிறுகதைகள் தந்த ஆசுவாசம் அளப்பரியது.

இன்றைய குமிழி சிறுகதை அனைத்து விதத்திலும் புதுமையானது. இருத்தலின்மையை, இருத்தலை  நவீன காலத்திற்கேற்றவாறு காலச்சிடுக்குகளுக்கேற்ப பின்னி எழுதப்பட்டுள்ளது. தன்னை என்று எதை முன்னிறுத்துவது என்ற கேள்வி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதன் முன் உள்ள சிக்கல். இந்த பிரபஞ்சத்தில் நான் என்பது உடல்தானா? காமம்தான் என்னை வழிநடத்துவதா? எதை நான் அவன் முன் நான் என முன்னிறுத்துவது எனும் பெரும்வினாவாக இந்த சிறுகதை எழுந்துள்ளது. லிலி தன்னை வெறும் உடலாகத்தான் உணர்கிறாள். தன் வேலையில், தன் திறமையைவிட தன் உள்ளொளியைவிட அவள் தன் சதைக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறாள். அனைத்துவிதத்திலும் உடலால் மட்டுமே எண்ணக்கூடியவளாக இருக்கிறாள். தன் எண்ணங்கள் எவ்வளவு அபத்தமாக இருந்தாலும், அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதையின் இறுதியில் தன் கணவன் சாம் முன் அவள் தோற்றுவிட்டாள் ஆனால் அவளின் தன்முனைப்பு அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஒரு பெண்ணியவாதியாக அவளால் யார் முன்னிலையிலும் தோற்கமுடியவில்லை. தான் எனும் கர்வம், அந்த மாயை தான் நம் மரபில் முதலில் அகற்றவேண்டிய ஒன்று. ஆனால் அதுவே அவளை முழுவதும் வழிநடத்துகிறது.

அனைத்துவிதத்திலும் உடலால் மட்டுமே எண்ணக்கூடியவர்கள் ஒருகட்டத்தில் மேல் அவர்களால் எவ்விதத்திலும் செயலூக்க நிலையுடன் இருக்கமுடியாது என்று கூறியிருப்பீர்கள். இதில் அவள் தான் செயலூக்கநிலையில் இருப்பதற்காக மட்டுமே தன் உடல் அங்கங்களை மாற்றுகிறேன் என்று நிலைப்பாடு எடுக்கிறாள். அது அவள் வேலையில் எங்கே தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்ற அன்செர்ட்டைனிட்டியில் ஏற்படுவது.

சமீபத்தில் சாருவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் இப்படி ஒரு பகுதி வரும்

“நீ நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய், அதுதான் உன் தோல்வி. நீ நேசிக்கப்பட வேண்டும் என்று ஏங்கினால் நீ யாராக இருக்கிறாயோ அதிலிருந்து நீ விலகிச் செல்கிறாய். மற்றவர்கள் நீ எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே நீ மாறுவாய். பிறகு அதற்கு முடிவே இராது. நீ எப்போதும் மற்றவர்களின் விருப்பமாக மாறிக்கொண்டேயிருப்பாய். அதனால்தான் என்னதான் மனிதர்கள் புதிய விடியலை மகிழ்ந்து கொண்டாடினாலும் ஜனநாயகங்கள் முடிவில் தோல்வியுறுகின்றன. அவை தங்கள் உண்மையான முகத்தை வெளிக்காட்டாத மனிதர்களாலேயே செலுத்தப்படுகின்றன. நிழல்கள் நிழல்களோடு பொருதுகின்றன. எல்லோரும் நிழல்களை விரட்டிச் செல்கிறார்கள்.

இதில் குறிப்பட்டது போல அவள் மற்றவர்களுக்காக, மற்றவர்களின் விருப்பத்திற்காகவே மாறுகிறாள். ஆனால் மற்றவர்களுக்காக அல்ல தனக்காகவே தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று அவள் தொடர்ந்து கூறுவது மற்றவர்களின் பார்வையில் தான் இளமையாக தெரிய, செயலூக்கத்துடன் தெரிய, மற்றவர்களின் பார்வை வழியே தனக்கான கேள்வியையும் பதிலையும் கண்டடைகிறாள். இங்கு இளமைக்கு சமமாக செயலூக்கத்தை பொருத்துகிறாள். செயலூக்கம்தான் இளமையைதரவல்லது, இளமை செயலூக்கத்தை தரவல்லதல்ல எனும் நிலைப்பாட்டை அவள் ஏற்கமறுக்கிறாள். நம் மரபில் வாழ்ந்த வாழும் உதாரணங்கள் நிறையவே உள்ளனர். தன் உடலை மாற்றுவதன் மூலம் தன் மரபை தன் அடையாளத்தை, தன் இனத்தை அனைத்திலும் இருந்து விடுபட்டு மற்றொரு கூண்டிற்குள் செல்ல விரும்புகிறாள். அதுவே தனக்கான விடுதலை என்றும் மயங்குகிறாள்.

இதன் அடுத்தக்கட்ட உச்சநிலை பரிணாமமாக அவள் அகாலமின்மைக்கு செல்வாள் என்று தோன்றியது. தன்னை இளமையாக காண்பித்துக்கொள்ள இன்னும் ஒருபடி முன்னேறி பெரும் குமிழிவழியே தன் செல்களை மாற்றிக்கொள்வதன் மூலம் மரணமின்மையை நோக்கி செல்வாள். அவள் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள சிறுக சிறுக மாற்றும் உடலமைப்பின் அடுத்தகட்டம் செல்களை மாற்றிக்கொண்டு மரணமற்றவளாக உருமாறுவாள் என்று தோன்றியது. அவள் அகாலமின்மைக்கு சவால் விடும் கண்ணி. என்றும் கண்ணியாகவே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள துடிப்பவள். அவள் அவ்வாறுதான் எண்ணுவாள். நிரந்தரத்துவமாக இருக்க எண்ணி நிரந்தரமின்மைக்கு செல்லும் குமிழி. அவள் நிழலோடு நிழலாக இருப்பவள். மேலும் அவள் நிழலில் உருவான நிரந்தரமின்மையின் குமிழிக்கண்ணி எனவே குமிழி எனும் பெயர் மிகவும் பொருத்தமானது.

பலபல படிநிலைகளில் பலகூறுகளில் பல உள்ளார்ந்த விஷயங்களில் அனைத்துவிதத்திலும் நுணுகி ஆராய்ந்து விமர்சனப்பூர்வமாக ஆராய்வதற்கேற்ற மிக மிக முக்கியமான சிறுகதை குமிழி. உளவியல், உடற்கூறியியல், அறிவியல், இனவரையியல், மேலாண்மை, பெண்ணியம் எனப் பலத்துறைகளைப் பேசுபொருளாக கொண்ட குறிப்பிடத்தக்க சிறுகதை. பலரால் பெரிதும் கவனத்திற்குள்ளாக்கப்பட வேண்டியது. நம்காலத்தில் வெளிவந்துள்ள ஆகச்சிறந்த கதைகளுள் ஒன்று.

அன்புடன்

ரா. பாலசுந்தர்

அன்புள்ள ஜெ

குமிழிகள் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு கதை. இந்தக்கதையின் ஒரு சிறு அம்சமாவது இன்றைக்கு எல்லா சமூகங்களிலும் உண்டு. என் மனைவி வேலைக்குச் செல்லும்போது லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வாள். அவள் வேலைக்கு அது தேவை.

ஆனால் என் அப்பா அம்மாவுக்கு அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதை அவர்கள் ஒரு டிஸ்ப்ளே என்று நினைக்கிறார்கள். உதட்டுச்சாயம் என்பது வெளிப்படையாகவே காமத்துக்கான அழைப்பு என நினைக்கிறார்கள்.

என் மகள் குட்டைப்பாவாடை அணிவாள். அதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவள் டென்னிஸ் விளையாடுபவள். ஆனால் என் மனைவி அதை தொடையைக் காட்டுதல் என்றுதான் புரிந்துகொள்கிறாள்.

இந்தப் பூசலின் அடிப்படையான விஷயம் என்பது ஒருவரின் உடல் அவருக்குச் சொந்தமா சமூகத்துக்குச் சொந்தமா என்பதுதான். ஆணுக்கு இந்தப்பிரச்சினை இன்றுபெரிதாக இல்லை. பெண் உடலில்தான் எல்லா கட்டுப்பாடுகளும் இருக்கின்றன

தன் உடலை தன் ஆளுமையின் ஒரு பகுதி, அதை அழகாகவும் சிறப்பாகவும் காட்டுவது தன்னுடைய வெளிப்பாடு என்று பெண் நினைக்கிறாள். ஆனால் அவள் உடல் என்பது ஒரு காமப்பொருள், ஒரு டிஸ்ப்ளே என்று ஆணும் சமூகமும் நினைக்கிறது. ஆகவே அவள் அத்துமீறக்கூடாது என்று கண்டிக்கிறது. இதுதான் பிரச்சினையே

ஜி.எஸ்

குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள்,கடிதங்கள்

குமிழிகள்- கடிதங்கள்

 

 

முந்தைய கட்டுரைகந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவானோக்கிய வாசல்