எங்கள் நண்பர் குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் இன்னொரு சிறுகதைத் தொகுதி கா.சிவா எழுதிய விரிசல். வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு சிறந்த இலக்கிய நண்பர்கூட்டத்தில் இருந்து எழும் படைப்புக்கள் அழகியல்ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பே இல்லாமலிருக்கும் என்பது என் நம்பிக்கை. அவ்வகையில் நிறைவளித்த ஒன்று கா.சிவாவின் இத்தொகுதி.
இதிலுள்ள கதைகள் சிற்றிதழ்களில் வெளியாகும் கதைகளுக்குரிய சிக்கலான மொழியோ பூடகத்தன்மையோ கொண்டவை அல்ல. உருவகங்களாலோ படிமங்களாலோ ஆனவையும் அல்ல. மிக நேரடியானவை. அவ்வகையில் தமிழின் பொதுப்போக்கான பேரிதழ்ச் சிறுகதைகளின் பாணிக்கு அணுக்கமானவை. இவற்றை கலைக்கு அருகே கொண்டுவருவது இவற்றிலுள்ள உண்மைத்தன்மை. அன்றாடவாழ்க்கையின் சிறு தருணங்களிலிருந்து நாம் உணரும் சில சஞ்சலங்களை, கேள்விகளை, கண்டடைதல்களைச் சென்று சேர்கின்றன இவை.
முதன்மைக் கதையாகிய ‘விரிசல்’ அதற்குச் சரியான உதாரணம். ஒரு சமையற்காரரின் அன்றாடத்தின் ஒரு தருணம். அவருடைய சமையல்முறை பற்றிய துல்லியமான சித்திரம். அவருடையது ஒரு நம்பிக்கை, தன்னுடையது தொழில் மட்டும் அல்ல. உணவிடுதல் என்னும் கொடையும் அதில் உள்ளது. உண்டுநிறைந்தவன் அதை வணிகமாக அணுகமாட்டான் என்ற நம்பிக்கை. அதில் விழும் விரிசல் அக்கதை. ஆனால் அதை கலையென ஆக்குவது அந்த வணிகம்பேசும் நபர் வந்து முன்பணம் தரும்போதே அவருக்கு அது தெரியும் என்பது.
குலதெய்வக் கோயிலில் பூசாரி பேசிச்சிரித்துக்கொண்டே இருப்பவர் தெய்வமிறங்கியதும் வேறொருவராக ஆகிவிடுவதுபோல சமைக்கையில் அவர் உருமாறுகிறார். தெய்வங்களின் அருளும் வணிகமாகும் ஒரு தருணத்தை அவர் உணர்கிறார் என்கிறது கதை.
கா.சிவாவின் கதைகளில் சிங்கப்பூரில் உடலுழைப்பு தொழிலாளராக வாழ்ந்து நாடு திரும்பும் மக்களின் சித்திரங்கள் பல உள்ளன. அவருடைய மாயன் என்ற கதையில் [ஆனால் அக்கதையின் மைய உணர்வுக்கு பொருந்தாமல்] மாயன் வெல்டிங் பற்றிச்சொல்லும் ஒரு வரி முக்கியமானது. அதை குறித்து வைத்திருந்தேன். ”இது மாதிரி அதிக சூட்டுல உருக்கி ஒட்ட வக்கிறத என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. இது பெரிய இக்கட்டுல ஒருத்தன தள்ளி, அவனுக்கு புடிக்காத ஒன்ன ஏத்துக்க வைக்கிற மாதிரி தோணுது. அதனாலதான் பத்தவச்சுக்கிட்டு இருக்கப்பவே மனசு அதுலேந்து வெலகிடுது”
ஒருவகையான லௌகீக விவேகம் திகழும் கதைகள் இவை. இத்தனை தூரம் கதைகள் எழுதப்பட்டபின்னரும் இக்கதைகளுக்கு ஓர் இடம் இருப்பது அதனால்தான். இந்த லௌகீகவிவேகம் மிக அரிதாகவே இங்கே கதைகளில் வெளிப்படுகிறது. எழுதப்பட்டவற்றில் இருந்து எழுதும்போதோ, பொதுவான பேசுதளத்திலிருந்தே கருக்களை எடுக்கும்போதோ அது அமைவதில்லை. அதை நேரடியாக வாழ்க்கையிலிருந்தே எடுக்கவேண்டும். அதுவே இத்தொகுதியின் பலகதைகளை கவனத்திற்குரியனவாக ஆக்குகிறது
உதாரணம் இருமை. சிங்கப்பூரில் உழைத்துப் பொருள் சேர்த்து குடும்பத்தையே வறுமையிலிருந்து மீட்பவரின் மிக எளிமையான ஒரு கோரிக்கையை, ஒரு காதலை, வெறும் ஆணவத்தாலும் முரட்டுத்தனத்தாலும் சிதறடிக்கிறது அவருடைய குடும்பம். அவரால் அதை மன்னிக்கவே முடியவில்லை. பழிவாங்குபவர்போல தன்னை அழித்துக்கொண்டு சிதறுண்டு போகிறார். ஊசல் ஆடினால் பின்னுக்கும் வரவேண்டும், ஒரேயடியாக முன்னால் சென்றுவிடலாகாது என கதைசொல்லி உணரும் ஒருவகை அன்றாடவிவேகமே இதை நினைவில் நிற்கும் கதையாக ஆக்குகிறது. இக்கதைகள் அனைத்திலும் ஓடும் பொதுவான இலக்கியக்கூறு என்பதும் அதுவே