ஆமென்பது… [சிறுகதை]

”எண்ணங்களுக்கு வானம் அளவுக்கு சுதந்திரம் உண்டு, சொல்லுக்கு கையளவுக்குச் சுதந்திரம்தான்” பிரபானந்தர் சொன்னார். “சொல்லுக்கு இருக்கும் சுதந்திரம்கூட எழுத்துக்கு இல்லை. ஆகவே நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாது. சொன்னதை எல்லாம் எழுதிவிடக்கூடாது. எண்ணங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். அவை பறக்கும் தேவதைகள் போல. பின்னால் துரத்திச்செல்லக் கூடாது. சில தேவதைகள் திரும்பிப் பார்க்கும் கணமே பேய்களும் ஆகிவிடும்”

நான்கு நாட்களுக்கு முன்புதான் நாங்கள் ஹைதராபாதுக்கு வந்தோம். அது முதலே அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் அதேபோல எதிலும் பட்டுக்கொள்ளாமல் வேறெதையோ பேசிக்கொண்டிருந்தார். நான் கவிஞர் கே.வி.ரமாவை பார்த்தேன். அவர் கைகளை மடியில் ஊன்றி முதுகை குவித்து தலைகுனிந்து மண்ணை நோக்கி அமர்ந்திருந்தார். நான் தூணில் சாய்ந்து நின்றிருந்தேன்.

அது போதானந்த மடத்திற்குச் சொந்தமான விருந்தினர் விடுதி. ஆனால் காவி உடையுடன் பிரபானந்தர் அங்கே பொருந்தாமல் தெரிந்தார். “வானத்தில் கோடானுகோடி தெய்வங்கள், தேவர்கள், தேவதைகள், பேய்கள், ஆவிகள் நிறைந்திருக்கின்றன. உண்மையில் அதெல்லாம் சொற்கள், நான் அச்சொற்களால் உத்தேசிக்கப்படும் ஒன்றைச் சொல்கிறேன். அவை நம்மை ஒவ்வொரு கணமும் கடந்துசெல்கின்றன. நம்மிலெழும் ஒவ்வொரு எண்ணமும் அவ்வாறு ஒன்று நம்மைக் கடந்துசெல்வதனால் உருவாவது. அவற்றை அப்படியே விட்டுவிடவேண்டும். மலைகளின்மேல் காற்றுபோல அவை சென்றுவிடவேண்டும்” என்றார்.

பித்தர்களுக்குரிய இடம்பொருள் தொடாத ஒரு பாவனை அவரிடமிருந்தது. ”உண்மைதான், காற்று தடம்பதிக்காமல் செல்வதில்லை. மலைகளின் முகங்கள் காற்றால் செதுக்கப்பட்டவை. ஆனால் மலை காற்றை அள்ளிப்பற்ற முயல்வதில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் தெய்வங்களையும் பேய்களையும் அப்படியே விட்டுவிடவேண்டும்” என்று அவர் தொடர்ந்தார். “சில தெய்வங்கள் நம்மில் ஒருகணம், கணத்தில் ஆயிரத்திலொரு துளிநேரம் நிலைகொள்கின்றன. சில தெய்வங்கள் சில நிமிடங்கள். சில தெய்வங்கள் மணிக்கணக்கில் நாட்கணக்கில் வாரக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நிலைகொள்கின்றன. சில தெய்வங்கள் சிலரை வாழ்க்கை முழுக்க கவ்விக்கொள்கின்றன.”

”அதை நாம் தீர்மானிக்கமுடியாது. அது விதி. அதை அவை தீர்மானிக்கின்றன. அவை இங்கே தங்களை ஊன்றிக்கொள்ள முயல்கின்றன. அவ்வாறுதான் இத்தனை தெய்வங்கள் இங்கே” என்றார் பிரபானந்தர் “பூமியில்தான் எத்தனை கோடி தெய்வங்கள். கொடியும் கோட்டையும் கொண்டு படுத்துக் கிடக்கும் அனந்தபத்மநாப சாமி முதல் வயல் வரப்பில் ஒற்றைக்கல்லாக அமர்ந்திருக்கும் காட்டு மறுதா வரை…அவையெல்லாம் ஒவ்வொரு கணத்தில் மானுட மனத்தை தொட்டவைதான். ஏதோ காரணத்தால் அவற்றை அறிந்தவர்கள் அவற்றை பிடித்து நிறுத்திக்கொண்டார்கள்.”

“ஒரு கல்லில் அவற்றை இங்கே நிறுத்திவிடலாம். ஆனால் நிலைகொண்டுவிட்ட தெய்வம் பலி கேட்கிறது. வழிபாடுகளை பூசைகளைக் கோருகிறது. அதற்கு துதியும் தோத்திரமும் தேவைப்படுகிறது. அது ஒருபோதும் நம்மை அதை மறக்கும்படி அனுமதிப்பதில்லை….” கைகளை விரித்து பிரபானந்தர் சொன்னார் “ஆகவேதான் நான் சொல்கிறேன், இருக்கும் தெய்வங்கள் போதும் நமக்கு. தெய்வங்களை அதன் போக்கில் விட்டுவிடுங்கள்… எதையும் பிடித்து நிறுவ முயலாதீர்கள். பிரதிஷ்டிக்காதீர்கள். ஆமாம், பிரதிஷ்டிக்கவே செய்யாதீர்கள். நான் சொல்லும் ஒரே உபதேசம் அதுதான்.”

அவர் ஒரு வகையான ’எக்ஸெண்டிரிக்’ என்று முன்னரே சொல்லியிருந்தார்கள். சூடன்சாமி என்றுதான் அவரைப்பற்றி மடத்திலும் சொன்னார்கள். “… ஆனால் பிரச்சினையற்றவர், அவர் சொல்வதை காதுகொடுத்துக் கேட்காமலிருந்தால் மட்டும் போதும்” என்று திருவனந்தபுரம் தலைமை மடத்தில் சாது சங்கரதாஸ் நாங்கள் கிளம்பும்போது சொன்னார்.

“நேற்று என்னிடம் கௌமுதியிலிருந்து கே.வி.ஜயானனைப்பற்றி கேட்டார்கள். நான் எதையும் வாசித்ததில்லை என்று சொன்னேன். எழுத்தாளர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். தாங்கள் அறியாத தெய்வங்களை பிடித்து நிறுவிவிடும் துரதிர்ஷ்டம் கொண்டவர்கள் என்று சொன்னேன். அவன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. நான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்காது” என்றார் பிரபானந்தர்.

உள்ளிருந்து அர்ஜுனன் நாயர் வெளியே வந்தார். வாயில் போட்டிருந்த வெற்றிலையை சுவர் மடிப்பில் துப்பிவிட்டு நாவால் பற்களை துழாவியபடி படியேறிவந்தார். வேட்டி நுனியை தூக்கி வாயின் ஓரங்களை துடைத்துக்கொண்டு சுவர் ஓரமாக திண்ணை விளிம்பில் அமர்ந்தார்.

“என்ன ஆயிற்று?” என்று நான் கேட்டேன்.

“இன்னும் திரும்பி வரவில்லை… வந்தால் உடனே சொல்வதாக வீட்டு உரிமையாளர் பெண்மணி சொன்னார்… அதைத்தான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்”

நான் கவிஞர் கே.வி.ரமாவை பார்த்தேன். அவர் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை.

“அவன் எங்கே போனான் என்று எவருக்குமே தெரியாதா? ஆச்சரியம்தான்”என்று பிரபானந்தர் சொன்னார்.

“அமெரிக்கா அப்படித்தான். தேவையென்றாலும் இல்லாவிட்டாலும் இன்னொருவரைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இன்னொருவரைப் பற்றி அக்கறையே காட்டமாட்டார்கள். எங்கு போகிறீர்கள் என்று கேட்பது இருக்கட்டும், உடம்பு சரியில்லையா என்று கேட்பதெல்லாம்கூட பெரிய உரிமைமீறலாக நினைப்பார்கள்.”

“இவன் ஏதோ விளம்பர நிறுவனத்தில்தானே வேலைசெய்கிறான்?” என்றார் பிரபானந்தர்.

“ஆமாம், புகைப்படம் எடுப்பான் என்கிறார்கள்” என்றார் அர்ஜுனன் நாயர் “வயது முப்பத்தாறு ஆகிறது. திருமணம் செய்து விவாகரத்து ஆகிவிட்டது. நல்ல திறமையான ஆள் என்கிறார்கள்… இந்தியாவுக்கு வந்து நாலைந்து ஆண்டுகள் இருக்கும்.”

நான் அதில் ஏதும் தலையிட விரும்பவில்லை, வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

“அவர்கள் அங்கே எப்படித்தான் வாழ்கிறார்கள் என்று சிந்திக்கக்கூட முடியவில்லை. சாதனா இல்லாத தனிமை என்பது ஒருவகை நோய்” என்றார் பிரபானந்தர். “எங்கே போயிருப்பான் அப்படி?”

“ஏதாவது பெண்ணுடன் போயிருப்பான். அவர்களுக்குத்தான் அங்கே காம்பிங், டிரெக்கிங் என்று என்னென்னவோ உண்டே” என்றார் அர்ஜுனன் நாயர்.

பிரபானந்தர் சலிப்புடன் “இங்கே இப்படி காத்திருப்பதில் அர்த்தமில்லை. இப்போதே இரண்டு நாட்களாகிவிட்டது. செய்தி அறிந்து கிளம்பி வருவதாக இருந்தாலும் டிக்கெட் கிடைத்து, விமானம் ஏறி, நடுவே ஊர்மாறி வந்துசேர ஒருவாரமாகும்… வாழ்க்கையே சாவுக்கான காத்திருப்பு. செத்தபிறகும் காத்திருப்பதென்றால் பெரிய அபத்தம்” என்றார்.

“ஆனால் அவர் தனக்கு முறையாக இறுதிச்சடங்குகள் செய்யப்படவேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் மகனே செய்யவேண்டுமென்று விரும்பினார். உயில்கூட எழுதியிருக்கிறார்” என்று நான் சொன்னேன்.

“அதெல்லாம் வெறும் செண்டிமெண்டுகள்” என்றார் பிரபானந்தர் “ஒரு வேதாந்திக்கு சடங்குகள் எல்லாம் குறியீடுகள் மட்டுமே என்று தெரியும். பஞ்சபூதங்களாலானது உடல். மிருண்மய மனோஞ்யம். ஆத்மா அந்த ரதத்தில் ரதன். அவனுடைய வழி வேறு. ரதம் உடைந்தபின் அக்கணமே ரதன் தாவிவிடுகிறான்…” அவர் கைகளை நீட்டி சோம்பல் முறித்தபின் “சடங்கு வேண்டும் என்றால் அதற்குரிய மறுவழிகளைப் பார்க்கலாம். சாஸ்திரப்படி மகனாக எவர் வேண்டுமென்றாலும் நின்று சடங்குகளைச் செய்யலாம்.”

”ஆனால் அவர் ஆசைப்பட்டார்…”

”மகன்தான் சடங்குகள் செய்யவேண்டுமென்று சொன்னாரா?”என்று பிரபானந்தர் கேட்டார்.

”நான் சொன்னேனே, பலமுறை சொல்லியிருக்கிறார். கடைசியாக எழுதியும் வைத்திருக்கிறார்.”

“அதைத்தான் சொன்னேன், வெறும் செண்டிமெண்ட்” என்று பிரபானந்தர் எழுந்துகொண்டார். “சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் கவிதை உண்டே. பஞ்சபூதங்களென் காத்ரம்… நல்ல வரிகள்” கொட்டாவி விட்டு “நான் கொஞ்சம் படுக்கவேண்டும்.”

காவிமேலாடையை சுழற்றி சுற்றியபடி அவர் உள்ளே செல்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்.

“சாமியார்கள் பிறப்பு, சாவு, கல்யாணம் எல்லா சடங்குகளிலும் அபத்தமாக தெரிகிறார்கள்” என்றார் அர்ஜுனன் நாயர்.

“அவன் வந்து இறுதிச்சடங்குகள் செய்யவில்லை என்றால் அவர் ஏமாந்துதான் போவார்.”

“அவர்தான் போய்விட்டாரே.”

“போகவில்லை என்பதுதானே நம் நம்பிக்கை? நமக்கு என்ன தெரியும்?”

“இங்கே அலைகிறாரா என்ன?”

“அந்த உடலருகே இருப்பார் என்று சொல்வார்கள்.”

“சரிதான்” என்றார் அர்ஜுனன் நாயர் “கடைசிக்காலத்தில் அவர் எழுதிய கதைகள் எல்லாமே இந்தவகையான நம்பிக்கைகள் கொண்டவை. எஸ்.வினோதகிருஷ்ணன் அவற்றை மெட்டஃபிசிக்கல் ரியலிசம் என எழுதியிருக்கிறார். ஆனால் அவை அவருக்கு புனைவுகள் அல்ல, அனுபவ உண்மைகள்…”

நான் புன்னகை செய்தேன்.

“ஆனால் ஒருகணக்கில் அவர் சொல்வது சரிதான். இது ஒரு சாதாரண மனிதன் என்றால் எத்தனை நாள் வேண்டுமென்றாலும் காத்திருக்கலாம். பிரச்சினை இல்லை. இப்போது மொத்த கேரளமும் காத்திருக்கிறது. நான்குநாட்களாக ஊடகங்களில் பெரிய செய்தியே இதுதான். மறைந்தவர் கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர். நாடறிந்த கார்ட்டூனிஸ்ட். அத்தனை பேரின் காத்திருப்பும் ஒன்றாகச் சேரும்போது மலைபோல எடைமிக்கதாக ஆகிவிடுகிறது” என்று அர்ஜுனன் நாயர் சொன்னார்.

“அதற்கென்ன செய்வது? நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும். அவருடைய ஆசை என்ன என்று இப்போது ஊருக்கே தெரியும்.”

“ஆமாம், பார்ப்போம். எப்படியும் இன்று வந்துவிடுவான்.”

“மகனுடன் அவருக்கு தொடர்பே இல்லையா?” என்றேன்.

அர்ஜுனன் நாயர் திரும்பி கே.வி.ரமாவைப் பார்த்துவிட்டு குரல் தழைய, “பெரிதாக தொடர்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். போனில் பேசியதாக தெரியவில்லை. கடிதங்களும் போடுவதில்லை. ஒருமுறை அவருக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக ஆனபோது ஃபோனில் அழைத்தோம். பதில் இல்லை….”

கே.வி.ஜயானன் கடைசி ஆறாண்டுகளை போதானந்த மடத்தில்தான் கழித்தார். அவருக்கு என ஒரு குடில் இருந்தது. அதில் தன் பூனையுடன் தனியாக இருந்தார். அவருக்கு பார்க்கின்சன் நோய் இருந்தது. ஆகவே கூடவே ஒரு வேலையாளும் துணையிருந்தார். அறுபது வயதான குஞ்ஞப்பன். ஆனால் குஞ்ஞப்பனுக்கு அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாது.

”நல்ல ராயல்டி வருமானம் உண்டு. அதையெல்லாம் சட்டப்படி மகனுக்குத்தான் எழுதிவைத்திருக்கிறார்” என்று அர்ஜுனன் நாயர் சொன்னார்.

சற்றுநேரம் மீண்டும் அமைதி நிலவியது. இப்படி அவ்வப்போது உருவாகும் அமைதிகள்தான் பெரிய எடைகொண்டவை. அவற்றை வெல்லத்தான் பேசிக்கொண்டிருந்தோம். அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தாலும் பிரபானந்தர் இருந்தவரை நன்றாகத்தான் இருந்தது என்று தோன்றியது.

வாசற்கதவருகே ஓர் அசைவை கண்டதும் உண்மையில் ஆறுதல்தான் தோன்றியது. தோளில் காமிராவுடன் வந்தவன் பத்திரிகையாளன் என்று தெரிந்தது. பத்திரிகைக்கரானா என்ற எண்ணம் வந்ததுமே நல்லவேளை டிவிக்காரன் இல்லை என்ற நிம்மதியும் உருவாகியது.

கருப்பான, குள்ளமான இளைஞன். அருகே வந்து வெளியே தயங்கி நின்றான். அர்ஜுனன் நாயர் “ம்?” என்றார்.

“நான் ஜன்மபூமி இதழின் நிருபர் திவாகரன். ஒரு சின்ன பேட்டிக்காக வந்தேன்.”

“யாரிடம்?”

”அப்படி இல்லை… பொதுவாக” என அவன் தயங்கி என்னை பார்த்தான்.

“இங்கே நடப்பதைத்தான் டிவியில் காட்டிக்கொண்டே இருக்கிறார்களே”

“ஆமாம். அதனால்தான் கொஞ்சம் ஆழமாக ஒரு ஃபீச்சர் மாதிரி ஏதாவது எடுத்துத் தரச்சொன்னார்கள். நான் அரசியல் நிருபர். இலக்கியம் எல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு வேறுவழியில்லை”என்றான்.

“பேட்டி கொடுக்கும் சூழல் இல்லை… நாளைக்குப் பார்க்கலாம்”என்றார் அர்ஜுனன் நாயர்.

“அது கவிஞர் கே.வி.ரமா தானே? மறைந்த எழுத்தாளர் கே.வி.ஜயானனின் தங்கைதானே? நான் ஃபோட்டோக்களில் பார்த்திருக்கிறேன்” என்றான். “ஹலோ மேடம் என் பெயர் திவாகரன். ஜன்மபூமி நிருபர். எனக்கு ஒரு ஐந்துநிமிடம் பேட்டி வேண்டும்… ஐந்தே நிமிடம்போதும்.”

கே.வி.ரமா கோபமாக ஏதோ சொல்லப்போகிறார் என நான் நினைத்த கணம் அவர் அசைவுகொண்டு கையசைத்து அவனை அருகே அழைத்தார். அவன் அருகே வந்தான்.

“என்ன?” என்றார்.

“ஒரு சின்ன பேட்டி… நாலே நாலு கேள்விகள்.”

“கேள்.”

“டீச்சர் இப்போது கொஞ்சம் களைப்பாக இருக்கிறார்…” என்று நான் ஊடே புக அவர் பரவாயில்லை என்று கைகாட்டினார். பேசவிரும்புகிறார் என்று தெரிந்தது. அவர் பேசிக்கேட்டே நீண்டநேரம் ஆகிறதென்று எண்ணிக்கொண்டேன்.

“மேடம், நான் இலக்கியத்துக்கு புதியவன். நான் சேகரித்த தகவல்களில் இருந்து கேட்கிறேன். ஒரு தங்கையாக நீங்கள் கே.வி.ஜயானன் அவர்களிடம் நெருக்கமாக இருந்தீர்கள். உங்களுக்கும் இலக்கிய ஆர்வம் இருந்தது. அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

தடித்த மூக்குக் கண்ணாடியை சுட்டுவிரலால் தூக்கிவிட்டுக்கொண்டு கே.வி.ரமா சொன்னார், “தாயில்லாக் குழந்தை… ஒருவகையான அனாதை. உணர்வுரீதியாக அலைபாய்ந்து கொண்டே இருந்தார். அவருக்கு அடைக்கலம் தேவைப்பட்டது. எங்காவது ஒண்டிக்கொள்ளவும், எதையாவது பிடித்துக்கொள்ளவும் தவித்துக்கொண்டே இருந்தார்.”

“ஓ” என்றான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்று தெரிந்தது. இவன் எதையும் உருப்படியாக எழுதமாட்டான் என்று புரிந்துகொண்டேன். அது நல்லதுதான். எதைப்பற்றியும் எச்சரிக்கை அடையவேண்டியதில்லை. எனக்குப் புன்னகை வந்தது.

“அவரை நீங்கள்தான் போதானந்தர் மடத்துக்குக் கொண்டுவந்தீர்கள் இல்லையா? நீங்கள் முதலிலேயே இங்கே வந்துவீட்டீர்கள்தானே?” என்றான் திவாகரன்.

“ஆமாம், அவருக்கு தேவை ஒரு தந்தை. போதானந்தரை அவருக்கு தந்தையாகத்தான் அறிமுகம் செய்தேன். அவருக்கு குருவும் தெய்வமும் தேவையில்லை. அவர் தேடியதெல்லாம் தந்தையை மட்டும்தான்.”

அவன் முற்றாகவே குழம்பிப்போய் என்னைப் பார்த்தான். ஆனால் கே.வி.ரமா தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

“எங்கள் அப்பா மலபார் ஸ்பெஷல் போலீஸில் உயரதிகாரி. கம்பீரமானவர், கண்டிப்பானவர். கிழக்குவாதுக்கல் அச்சுதன் வைத்தியன் வேலாயுதன் என்றால் அந்தக்கால பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அனைவருக்கும் தெரியும். பல முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகளை பிடித்தவர். ஆகவே நிர்வாகச் சிக்கல்கள் கொண்ட இடங்களுக்கு அவரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணம் என்றால் மலபார் முதல் விசாகப்பட்டினம் வரை. அப்பா பெரும்பாலும் தமிழ்நாட்டிலும் பாலக்காட்டிலும்தான் வேலைபார்த்தார்.”

“நாங்கள் இளமையில் பதிமூன்று ஆண்டுகள் பாலக்காட்டில்தான் வாழ்ந்தோம். பாலக்காடு அருகே ஒரு சிறிய ஊர், விஜயசிருங்கநல்லூர். எங்கள் வீட்டைச்சுற்றி மலையடுக்குகள் சூழ்ந்து நின்றிருக்கும். அமைதியான மலைகள். எதற்காகவோ முடிவில்லாமல் காத்திருப்பவை போன்ற மலைகள். அந்த மலைகள் எங்கள் வாழ்க்கையில் மிகமிக ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. அண்ணா அந்த மலைகளை கனவில் பார்த்தபடியே இருந்தார். கடைசிநாட்களில் அவர் வரைந்த எல்லா ஓவியங்களிலும் அலையலையாக மலைகள்தான் இருந்தன”

கே.வி.ரமா கண்களைத் தாழ்த்தி நிலத்தைப் பார்த்தபடி சொல்லிக்கொண்டே சென்றார். திவாகரன் தன் ரெக்கார்டரை இயக்கிவிட்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். கே.வி.ரமாவே ஓர் ஒலிக் கருவியாக ஆகிவிட்டதுபோல குரல் சீராக எழுந்தது.

அப்பா எங்களை தொட்டு கொஞ்சி பேசிய நினைவே இல்லை. அவர் வீட்டுக்கே வருவதில்லை. பெரும்பாலும் பயணங்கள். பாலக்காட்டின் மலைப்பகுதிகளில் அன்றைக்கு நாடோடித் திருடர்கள் மிகுதி. கொங்குநாட்டிலிருந்து கணவாய் வழியாக வரும் சரக்குவண்டிகளில் கொள்ளையடிப்பவர்கள். அன்று கொங்குநாட்டில்தான் எல்லா மில்களும் இருந்தன. துணி முழுக்கமுழுக்க அங்கிருந்துதான் வரவேண்டும். கொள்ளைக்காரர்களைப் பிடிக்கச்சென்று ஆங்காங்கே காம்ப் அமைப்பார். அம்மாவும் நாங்களும் உறவினர்களுடனும் வேலைக்காரர்களுடன் தனியாக இருந்தோம். அம்மா இறந்தபின் அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். என்னைவிட எட்டுவயது மூத்தவர் எங்கள் சித்தி. சித்தியும் பெரும்பாலும் அப்பாவுடன் காம்புகளுக்குச் செல்வார்.

அண்ணா குறைப்பிறவியாகப் பிறந்தார். ஏழுமாதத்தில். அவர் ஒரு உள்ளங்கைக்குள் வைக்கும் அளவே இருந்தார் என்பார்கள். அவரை கோயம்புத்தூரில் ஒரு வெள்ளைக்கார டாக்டர்தான் காப்பாற்றினார். ஆனால் அவருடைய நரம்புகள் சரியாக அமையவில்லை. உடம்பின் அசைவுகளில் ஒருமை கூடவே இல்லை. இளமைக்காலம் முழுக்கவே அவர் நோயுற்றிருந்தார். மூட்டுகளின் வீக்கமும் வலியும் உண்டு. அடிக்கடி வலிப்பு வந்து விழுந்து விடுவார். அவரை பதினான்கு வயதுவரை பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அவருக்கு வீட்டிலேயே ஆங்கிலமும் பொதுப்பாடமும் சொல்லிக்கொடுத்தார்கள். பதினைந்து வயதில் இ.எஸ்.எஸ்.எல்.சி எழுதி பள்ளிக்குச் சென்றார். அவர் பள்ளியில் மிகச்சிறந்த மாணவர். அவர் அக்காலத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ இலக்கியத்தில் தங்கப்பதக்கம் வாங்கினார்.

ஆனால் அவர் எப்போதும் பதறிக்கொண்டே இருந்தார். எப்போதாவது அவர் கைகளை தொட்டால் அவர் நடுங்கிக்கொண்டே இருப்பது தெரியும். அவருடைய உள்ளங்கைகள் ஈரமாகவே இருக்கும். உதடுகள் வெளுத்திருக்கும். சிறுவயதிலேயே தடிமனான கண்ணாடி போட்டுவிட்டார். கண்கள் நீருக்குள் மிதந்து அலைவதுபோல தெரியும். உரக்க ஓசை எழுந்தால் அண்ணாவின் உடல் துள்ளிவிழும். எதிர்பாராமல் எதையாவது அவரிடம் சொன்னாலோ, அவர் சொல்லமுயன்றாலோ, வலிப்பு வந்துவிடும். அவரை அவர் பார்க்காதபோது நாம் தொடவே கூடாது. உணர்ச்சிகரமாக ஏதாவது பேசினால் வாய் கோணலாகி, கழுத்து இழுபட்டு திக்கல் வரும். அண்ணா அணைந்து அணைந்து எரியும் ஒரு தீச்சுடர் போலத்தான் எப்போதும் எனக்குத் தோன்றினார்.

ஆனால் அவர் வாசித்துக்கொண்டே இருந்தார். ஒருநாளில் பத்துப்பன்னிரண்டு மணிநேரம் வாசித்தார். இலக்கியம், தத்துவம், கலை, அரசியல், வரலாறு. கணிதமும் அறிவியலும் அவருக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அல்லது அவருக்கு அவை பிடிபடவே இல்லை. பெரும்பாலான நேரம் படித்துக் கொண்டிருப்பார். அப்போது அவருடைய கண்கள் கண்ணாடி வழியாக தனியாகப் பிரிந்து வந்து நிற்கும். மேஜைவிளக்கு மட்டும் எரிய இரவில் அவர் படித்துக்கொண்டிருக்கையில் அவர் மறைய, அவருடைய கண்கள் மட்டும் சுடர்கொண்டிருப்பதுபோல தோன்றும். அவர் தூங்கும்போது அவர் மேஜைமேல் புத்தகங்களுக்கு மீதாக அவருடைய தடித்த கண்ணாடியின் சில்லுகளில் அவருடைய விழிமணிகள் இருக்கும். அவை அப்போதும் வாசித்துக்கொண்டிருக்கும். அல்லது திகைத்து விழித்துக்கொண்டிருக்கும். இரவின் இருளில் அவை அவருடைய மேஜைமேல் தூங்காமல் மின்னிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அவர் பேசுவதில்லை. அவருக்கு அன்றாடப்பேச்சுக்களில் ஆர்வமே இல்லை. பேச ஆரம்பித்தால் வெறிகொண்டு பேசுவார். பேசிப்பேசி இருமல் வந்து, மூச்சிளைப்புடன் படுப்பதுவரை பேசித்தள்ளுவார். ஆனால் பேச்சு உளறல் அல்ல. அண்ணாவின் மகத்தான பல நூல்கள் அப்படி பேச்சாக காற்றில் கரைந்துவிட்டன என்று எனக்குத் தோன்றியதுண்டு. அண்ணா அப்போது எங்கோ பிறந்துவிட்டிருந்த அவருடைய எதிர்கால வாசகர்களுக்காகப் பேசிக்கொண்டிருந்தார் என்று இப்போது தோன்றுகிறது.

வெள்ளையனே வெளியேறு போராட்டம் அறைகூவப்பட்டபோது அண்ணாவுக்கு பதிமூன்று வயது. அண்ணா அரசியலை ஆவேசமாகத் தழுவிக்கொண்டது அப்போதுதான். ஒவ்வொருநாளும் வானொலியிலும் நாளிதழ்களிலும் செய்திகளுக்காக அவர் தவித்தார். செய்திகளுடன் சேர்ந்து அவரும் எரிந்தார். உடல் துள்ளிவிழ, திக்கித்திக்கி “சுதந்திரம், சுதந்திரம், சுதந்திரம்” என்று அவர் சொன்னதை நினைவுகூர்கிறேன். அவர் சொன்னது எந்த சுதந்திரம் என்று இன்றுவரை பிடிகிடைக்கவில்லை.

அண்ணா பள்ளிக்கூடம் சென்ற நாட்களில் நாடே எரிந்துகொண்டிருந்தது. பள்ளியில் பெரும்பாலும் போராட்டமும் அடைப்பும்தான். மாணவர்கள் சாலைகளில் இறங்கி சிறிய அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர். அண்ணா பாதுகாப்பாக ஒரு கான்ஸ்டபிளுடன் பள்ளிக்கு காரில் சென்று திரும்ப கொண்டுவரப்படுபவர். அவரால் எங்கும் செல்லமுடியாது. அவரால் பள்ளிக்குச் சென்ற சில ஆண்டுகளில் சகமாணவர்களுடன் நெருங்கமுடியவில்லை. அவர் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை. அவர்களின் முரட்டுத்தனமான சுதந்திரம் அவரை அச்சுறுத்தியது.

அவர் பள்ளியில் ஓர் அன்னியராக, ஏளனப்பொருளாகவே இருந்தார். பள்ளியில் அவருக்கு ஆந்தை என்று பட்டப்பெயர் இருந்தது. பகலில் வந்த ஆந்தைபோல வகுப்பில் அமர்ந்திருப்பார். பின்னாளில் அவர் ஆந்தை என்றபெயரில் எழுதியிருக்கிறார். அவருடைய கதைகளிலும் ஆந்தை வந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர் அவர்களுடைய போராட்டங்களிலும் களியாட்டங்களிலும் மானசீகமாக உடனிருந்தார். பள்ளியில்தான் அவர் தன்னுடைய அறிவே தன் வலிமை என்று உணர்ந்திருக்கவேண்டும். அவருடைய சகமாணவர்களை விட அவர் மிகமிக மேலே இருந்தார்.

அண்ணா கல்லூரிக்குச் சென்றதும் சட்டென்று மாறினார். மெட்ரிக்குலேஷனில் அவர் பெற்ற தங்கப்பதக்கம்தான் அவரை மாற்றியது. அவர் ஒரு மாணவர் தலைவராக ஆனார். ஆனால் அப்போது சுதந்திரம் கிடைத்துவிட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி புதிதாக வந்த முதலாளிகளாலும் நிலக்கிழார்களாலும் நிரம்பியது. அவர்கள் அதன் முகங்களாக தோன்றலாயினர். அத்தனை அதிகாரப்பதவிகளிலும் அவர்களே அமர்ந்தனர். இளைஞர்களிடம் அவநம்பிக்கை உருவானது. வடக்கே நிகழ்ந்த மதக்கலவரங்கள் அவர்களை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பயனற்றவை என்று எண்ணச்செய்தன.

அன்று உருவான நாளிதழ்களின் பெருக்கம் அனைவரையும் வாசிக்கச் செய்து கம்யூனிஸ்டுக் கொள்கைகளை நோக்கி தள்ளியது. அண்ணா நீண்ட தடித்த ஜிப்பா அணிய ஆரம்பித்தார். சுருண்ட அடர்ந்த தலைமுடியும் மென்மையான மீசையும் அவருடைய முகமாக ஆயின. கடைசிவரை அவரிடமிருந்த அந்த தோற்றம் அப்போது உருவாயிற்று. அந்த தோற்றத்தில் ரவீந்திரநாத் டாகூரின் செல்வாக்கு உண்டு. அண்ணா மேடையேறி கைசுருட்டி உயர்த்தி அழுத்தமாகப் பேசுவதை நான் கேட்டேன். அது அவர்தானா என்ற பிரமிப்பை அடைந்தேன். அவரால் ஆவேசமாகப் பேசமுடியாது. ஆனால் நையாண்டியாகப் பேசமுடியும். மிகச்சரியான சொற்கள் வழியாக மனங்களை ஊடுருவ முடியும். அண்ணா மிகப்புகழ்பெற்ற பேச்சாளராக இருந்தார் என்று சொன்னால் அவருடைய தீவிர ரசிகர்கள்கூட இன்று நம்பமாட்டார்கள்.

அண்ணாவின் மெலிந்த தோற்றமே அவருக்கு கம்யூனிசச் சூழலில் ஏற்பை உருவாக்கியது. அவர் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னையிலேயே ஒரு கல்லூரியில் உடனடியாக ஆசிரியராக பணியாற்றலானார். அது வரை அவருடைய கம்யூனிச ஈடுபாடு அப்பாவுக்கு தெரியாது. வேலைக்குச் சென்றபின் அண்ணா அப்பாவை முற்றாகவே நிராகரித்தார். தொடர்பையே துண்டித்துக்கொண்டார். அவருடன் தொடர்பிலிருந்தது நான் மட்டுமே. நான் அப்போது கல்லூரி மாணவி.

அப்பாவுக்கு அண்ணாவைப் பிடிக்காது. மகனை அவர் ஒரு பொருட்டாக காட்டிக்கொண்டதே இல்லை. நோயுற்ற மகன்கள் அப்பாவுக்கு இரண்டு எதிர் உச்சங்களை அளிக்கிறார்கள். ஒன்று, அவர்கள் மகன்கள்மேல் பெரும் பித்துகொண்டு இரவுபகலாக பேணுகிறார்கள். அல்லது வெறுத்து ஒதுக்குகிறார்கள். அப்பா ஆணவமும் நிமிர்வும்கொண்டவர். அவருடைய மகன் அப்படி இருப்பது அவரை எவரோ கேலி செய்வதுபோல. அப்பா அண்ணாவைக் கண்டாலே முகம் சுளிப்பார். சுளிப்பதல்ல அது, அறியாமலேயே அந்தச் சுளிப்பு வந்துவிடும். அப்பா அண்ணாவை தொட்டதே இல்லை, ஒரு சொல் அன்பாகப் பேசியதில்லை.

அண்ணா ஆரம்பத்திலெல்லாம் அப்பாவுக்காக ஏங்கினார். அப்பா வீட்டுக்கு வரும் நாட்களை எண்ணி எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அப்பா வீட்டுக்கு வந்தால் மறுநாளே அவர் போனால் போதுமென்று ஆகிவிடும். அப்பா வீட்டை அப்படியே முழுமையாகக் கையில் எடுத்துக்கொள்வார். அவருடைய நெடி வீடெங்கும் நிறைந்திருக்கும். அப்பா பேசுபவர் அல்ல, அதிலும் வீட்டில் அவர் ஓசையே இடுவதில்லை. ஆனால் அவரை நம்மால் எங்கிருந்தாலும் கேட்கமுடியும்.

சிறுவயதில் அண்ணா அப்பாவை வதைப்பதனூடாக மட்டுமே அவரிடம் தொடர்பு கொண்டிருந்தார். அப்பா வரும்போதெல்லாம் அண்ணாவுக்கு வலிப்பு வரும். வாயோரம் நுரை எழ விழுந்து துடிப்பார். போர்வையில் இட்டு தூக்கி காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வோம். ஆனால் அப்பா அருகே வந்து அண்ணாவை தொட்டுப் பார்ப்பதுகூட இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கூட வரமாட்டார். இப்போது ஞாபகம் வருகிறது, அப்பாவைச் சந்திக்க எவராவது முக்கியமானவர் வீட்டுக்கு வந்தால், சின்னம்மாவும் அப்பாவும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தால் அண்ணாவுக்கு வலிப்பு வரும்.

வளர்ந்தபின் அண்ணா அப்பாவை முழுமையாக நிராகரிக்கவும் மறக்கவும் கற்றுக்கொண்டார். ஊரைவிட்டுச் சென்றபின் அவர் அப்பாவுக்கு ஒரு கடிதம்கூட போட்டதில்லை. உண்மையிலேயே ஒரே ஒரு கடிதம், ஒருவரி குறிப்புகூட எழுதியதில்லை. அண்ணா ஊரில் அப்பா இருப்பதையே அறியாமல் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அது அவர் அப்பாவை வதைக்க கண்டறிந்த வழி. அது நன்றாகவே வேலைசெய்தது.

அண்ணாவால் புறக்கணிக்கப்பட்ட அப்பா அண்ணா நினைவாகவே இருந்தார். ஆனால் அண்ணாவைப் பற்றி ஒரு சொல் கேட்கவில்லை. அதனாலேயே அண்ணா அவருக்குள் கான்சர் போல வளர்ந்தார். உண்மை. அப்பாவுக்குள் வளர்ந்த  அண்ணா என்ற நோய்தான் அவரைக் கொன்றது. கடைசிக்காலத்தில் தன்னந்தனிமையில் முற்றிலும் சொல்லின்றி அவர் வாழ்ந்தார். வெற்றிலை அவருடைய வாயை பூட்டியிருந்தது. அவருடைய உள்ளத்தின்மேல் புகையிலைப் போதையின் புகை படர்ந்திருந்தது.

1948-ல் ரணதிவே தீஸிஸின் போதும், முதல் கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியின்போதும் அண்ணா முழுமூச்சாக கம்யூனிஸ்டுக் கட்சியில் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை கட்சி மேடையில் பேச்சின் நடுவிலேயே வலிப்பு வந்து விழுந்துவிட்டார். அந்நாட்களில் அவருடைய உடல் நலிவுற்றிருந்தது. அவரால் அந்தக் காலகட்டத்தின் வேகத்தை தாங்கவே முடியவில்லை. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தது அந்தக் காலகட்டத்தில்தான் என நினைக்கிறேன். அவரை கைதுசெய்ய சென்னை மாகாண அரசில் வாரண்ட் வந்தது. அப்பா தந்திரமாக அவரை மலபாருக்கு கொண்டுவந்து தப்பவைத்தார்.

அப்பாவின் தயவால்தான் சிறைசெல்லாமல் தப்பினோம் என்பது அண்ணாவுக்கு தெரியும். ஆனால் தெரியாதவர் போலவே கடைசிவரை காட்டிக்கொண்டார். சிறை சென்றிருந்தால் அவர் செத்திருப்பார். அப்போது அவருக்கு அனேகமாக தினமும் வலிப்பு வந்துகொண்டிருந்தது. ஆனால் வலிப்புதான் அவருடைய படைப்புத்தன்மைக்கு அடிப்படை என்று அவர் சொல்லுவதுண்டு. அவருக்குள் இருந்த சிறுவனை அழியாமல் பாதுகாத்தது அந்த நோய்தான். “தஸ்தயேவ்ஸ்கிக்கும் வலிப்புநோய் உண்டு. வலிப்பு நோய் என்பது மூளையை நாம் சவுக்காலடித்து சுண்டிவிடுவது. அம்மிக்கல்லால் மாமரத்தை அடித்து சருகுகளையும் வாடிய மாம்பிஞ்சுகளையும் உதிரவைப்பது போன்றது. ஒவ்வொரு வலிப்புக்குப் பின்னரும் நாம் புதிதாகப் பிறக்கிறோம்…” என்று அண்ணா சொல்வார்.

கட்சி ஆயுதப்போராட்டத்தை கைவிட்டபோது அண்ணா ஏமாற்றமடைந்தார். சென்னையில் இன்னொரு கல்லூரியில் ஆசிரியரானார். அக்காலத்தில் ஓர் ஆசிரியராக அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். அவருக்கு இலக்கியம் கற்பிப்பது பிடித்திருந்தது. அவர் ஐரோப்பிய இலக்கியவாதிகளை ஆழ்ந்து பயின்ற நாட்கள் அவை. அவர் மாப்பசானின், அலக்ஸாண்டர் குப்ரினின், வில்லியம் சரோயனின் ரசிகர். ஆனால் பலருக்கு தெரியாத ஒன்றுண்டு, அவருக்கு அமெரிக்க சாகச நாவல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக போர்சாகசங்கள். அலிஸ்டெர் மக்லீன் போன்ற புகழ்பெற்றவர்கள் மட்டுமல்ல, கார்னிலியஸ் ரயான் போன்ற யாரென்றே தெரியாதவர்களையெல்லாம் தேடித்தேடி வாசிப்பார்.

1956-ல் கம்யூனிஸ்டுக் கட்சி கேரளத்தில் ஆட்சிக்கு வந்தபோது அண்ணா மீண்டும் பெரும் கிளர்ச்சியை அடைந்தார். கம்யூனிச கேரளத்தைப் பார்ப்பதற்காக ரயிலில் மலபாருக்கு வந்ததையும், பாலக்காட்டு எல்லையில் முதல் செங்கொடியைக் கண்டு கண்ணீர் மல்கியதையும் அவர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்  எழுதியிருக்கிறார்.

’ஒரு குருதித்துளியின் நினைவு’ என்ற அந்த கட்டுரையை அவர் கண்ணீர் சிந்தியபடித்தான் எழுதியிருப்பார். ஏனென்றால் அப்போது சோவியத் ருஷ்யா உடைந்துகொண்டிருந்தது. 1988-ல் கிளாஸ்நோஸ்டும் பெரிஸ்ட்ராய்க்காவும் உச்சத்திலிருந்தன. அண்ணா சோவியத் ருஷ்யா உடையும் என்பதை கணித்துவிட்டிருந்தார். அரசியல்நோக்கராக எழுதிக்கொண்டிருந்த அவருக்கு சர்வதேச இதழாளர்களுடனும் டெல்லியின் உயர்வட்ட அதிகாரிகளுடனும் நல்ல தொடர்பு இருந்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிசக் கனவு அண்ணாவிலிருந்து விலகி முப்பதாண்டுகளாகியிருந்தன. அப்போது அவர் கம்யூனிச எதிர்ப்பாளர் என்றே அறியப்பட்டிருந்தார். ஆனாலும் சோவியத் ருஷ்யாவின் உடைவு அவரை நோயுறச் செய்தது. அவர் வலிப்புவந்து விழுந்து நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர் நீண்டகாலம் சிகிச்சையில் இருந்தது அப்போதுதான். அவருடைய இயல்பான உடலியக்கம் பெரும்பாலும் இல்லாமலாயிற்று. குச்சி இல்லாமல் நடக்க முடியாது. பேனாவால் எழுத முடியாது. சுட்டுவிரலால் தட்டித்தட்டி டைப் செய்வார். ஆனால் பிரஷ் எடுத்தால் வரைய முடியும். அது எப்படி என்று தெரியவில்லை.

அண்ணா கம்யூனிசத்திலிருந்து வெளியேறியபின் உண்மையில் எப்போதாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாரா? கேரளத்தில் இ.எம்.எஸ் முதல் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த விதமும், அது விமோசன சமரம் என்ற பேரில் பிற்போக்காளர்களால் வீழ்த்தப்பட்டதும், அதைத் தொடர்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியின் உட்பூசல்களும் அண்ணாவை ஏமாற்றமடையச் செய்தன. 1964-ல் கட்சி உடைந்தபோது அண்ணா ஏற்கனவே கம்யூனிசத்திலிருந்து விலகிச் சென்றிருந்தார். ஏனென்றால் அவர் சோவியத் ருஷ்யாவில் நடந்த ஒடுக்குமுறைகளைப் பற்றியும், சோவியத் ருஷ்யாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப்போர் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். அவருடைய பிரச்சினையே அவருக்கு கொஞ்சம் கூடுதலாக எல்லாம் தெரியும் என்பதுதான். ஆகவே அவரால் எதையும் நம்பி ஏற்கமுடியவில்லை.

1965-ல் அண்ணா சென்னையின் கல்லூரி ஆசிரியர் வேலையை உதறிவிட்டு டெல்லி சென்றார். அங்கே இதழாளராக ஆனார். அவருடைய ஆங்கிலநடை அங்கே பெரிதும் விரும்பப்பட்டது. அவர் மீண்டும் வெறிகொண்ட வாசிப்புக்குள் புகுந்தார். கம்யூனிசத்தில் நம்பிக்கை இழந்து, அதன் இருண்டபக்கங்களை எழுதிய ஆர்தர் கோஸ்லர் போன்றவர்களை வாசித்தார். அப்படியே இருத்தலியம் சார்ந்து வாசிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் முழுக்க முழுக்க இருத்தலியத்திற்குள் மூழ்கினார். ஹைடெக்கரை அவரே கைப்பட மொழியாக்கம் செய்து வைத்திருந்தார். பிறகு அவருடைய வாழ்க்கை முழுக்கவே இருத்தலியக் காலகட்டம்தான். கடைசி ஐந்து ஆண்டுகளைத் தவிர.

அண்ணாவை இரண்டு தந்தைகள் கைவிட்டனர். பிறப்பின் தந்தை, கம்யூனிசமெனும் தந்தை. “இரண்டு ஸ்டாலின்களிடமிருந்து தப்பியவன் நான்” என்று அவர் எழுதியிருக்கிறார். அப்பா இறந்தபோது அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் அல்பேர் காம்யூவின் அந்நியன் நாவலின் முதல்வரியை பகடி செய்து ‘அப்பா இறந்தது நேற்றா சென்ற பிறவியிலா?’ என்று எழுதியிருந்தார். இருத்தலியக் காலகட்டத்தில் அவருடைய இயல்புக்கு முற்றிலும் மாறான ஒரு நையாண்டி அவரிடம் குடியேறியது. அவர் முழுநேரக் கேலிச்சித்திரக்காரராக ஆனார். அவருடைய எழுத்து பேச்சு எல்லாவற்றிலும் நையாண்டியும் கசப்பும் நிறைந்திருந்தது.

ஆச்சரியமாக இருக்கிறது, அவருடைய மெலிந்த உடலும் தோற்றமும் அந்தந்தக் காலகட்டத்து இயல்புக்கு ஏற்ப தங்களை நடித்து முன்வைத்தன. இளமையில் மெலிந்த உடல்கொண்ட நோயுற்ற இளைஞராக இருந்தார். பிறகு கொந்தளிக்கும் புரட்சியாளனின் மெலிந்த உடலாக மாறினார். அதன்பின் நையாண்டிக்காரனின் விசித்திரமான மெலிந்த கூன்கொண்ட உடலாக ஆனார். டெல்லி வாழ்க்கையில் பகடிக்காக பல உடல்மொழிகளை அவர் உருவாக்கிக் கொண்டார். அஞ்சுவதுபோல உடலை ஒடுக்கிக்கொள்வார். ஒருபக்கமாக கோணலாக உடலை வளைப்பார். ஒரு சரியான ’காமெடி’யனாகவே ஆனார்.

அவருடைய எரியும் பகடியே அவரை முக்கியமான கார்ட்டூனிஸ்டாக ஆக்கியது. அப்படியே அதே பகடியுடன் அவர் மலையாளத்தில் புனைகதை எழுதவந்தார். அவருடைய எல்லா கதாபாத்திரங்களும் கார்ட்டூன்கள்தான். அவரால் இயல்பான மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கவே முடிந்ததில்லை. அவருடைய மொழி தகழி சிவசங்கரப்பிள்ளை போல புறவுலகை பற்றின்றி சித்தரிக்கும் யதார்த்தவாதம் அல்ல. எம்.டி.வாசுதேவன்நாயர் போல உணர்ச்சிகரமான கற்பனாவாதமும் அல்ல. அவர் வைக்கம் முகம்மது பஷீரின் வாரிசு.

பஷீரின் எல்லா கதாபாத்திரங்களும் கார்ட்டூன்கள்தான். அண்ணா ஆங்கிலத்தில் சிந்தித்து மலையாளத்தில் எழுதிய அடுத்த தலைமுறை பஷீர். பஷீரிலிருந்த நாட்டுப்புறத்தன்மையும் வெடிப்புறப்பேசும் இயல்பும் இல்லாதவர் அண்ணா. ஆகவேதான் அவருக்கு கேரள இலக்கியத்தில் முன்னோடித் தொடர்ச்சியும் இருந்தது, அதேசமயம் அவர் புத்தம்புதியவராகவும் இருந்தார். அவருடைய ஈர்ப்பு தலைமுறைகளாக வாசகர்களிடம் தொடர்கிறது. இன்றைய உரைநடையில் அண்ணாவின் செல்வாக்கில்லாத நல்ல எழுத்தாளர்களே இல்லை.

பஷீரிடமிருந்த கேலியும் கிண்டலும் மட்டுமல்ல, ஆன்மிகமான தேடலும் கவித்துவமும்கூட அண்ணாவிடமிருந்தது. அவருடைய ஆரம்பகாலப் படைப்புகளில் அந்த கவித்துவம் ஒருவகை கள்ளமின்மையாக, ஒருவகை குழந்தைத்தனமாக வெளிப்பட்டது. அவருடைய ஆன்மிகம் மனிதர்கள்மேல் அவர் கொண்ட பிரியமாகவும், காலம் வெளி ஆகியவற்றைப் பற்றி அவருடைய குழந்தை உள்ளம் கொண்ட பிரமிப்பாகவும் உருக்கொண்டது. அவை மிகச்சிறப்பாக வெளிப்பட்டது அவருடைய முதல்நாவலான ’இசஹாக்கின் புராணத்’தில்தான்.

செமிட்டிக் கதைகளின்படி இசஹாக் ஆபிரகாமுக்கு சாராவில் பிறந்த மகன். அந்த ஹீப்ரு மொழிப் பெயரின் அர்த்தம் ’சிரிப்பவன்’. யூதர்களின் மூதாதையர்களான  பழைய கேனனைட்களின் கதைகளில் ஒரு சிரிக்கும் தெய்வம் உண்டு, எல் என்று பெயர். அந்த தெய்வம்தான் இசஹாக் ஆக யூதர்களின் மதத்தில் இடம்பெற்று பிறகு கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் ஒரு தந்தைவடிவமாக மாறியது. அண்ணா இசஹாக்கின் ஐதீகக் கதையை பலவகையில் திரித்தும் விரித்தும் அந்நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.

அந்நாவலில் அண்ணா அற்புதமான ஒளிகொண்ட ஒரு கதைசொல்லியாக திகழ்கிறார். அவரே உருவாக்கிய அத்தனை கதாபாத்திரங்களையும் அவர் ஒரு பிரஜாபதி போல நேசிப்பதைக் காணமுடிகிறது. அவர்களின் தீமைகள், அற்பத்தனங்கள், அச்சங்கள் அனைத்தையும் அவர் மன்னிக்கிறார். அவர்களுடன் விளையாடுகிறார். அந்நாவலில் அவர்தான் இசஹாக். சிரிக்கும் பிரஜாபதி. அந்நாவல்தான் அவருடைய உச்சம். அதன்பின் அவர் அந்த உயரத்தை அடையவே முடியவில்லை.

ஆனால் தொடர்ச்சியாக அவர் அதற்கு முயன்றார். அந்த எல்லா முயற்சிகளும் பிரக்ஞைபூர்வமானவை. அவற்றில் அவருடைய சொந்தக்குரல் ஒலிக்கிறது. ஒரு படைப்பில் ஆசிரியனின் சொந்தக்குரல் ஒலித்தால் அதற்கு மதிப்பில்லை. அவன் தன்னை விட்டு எழுந்து இன்னொன்றாக ஆகி பேசினாலொழிய அது புனைவே அல்ல. அந்த சொந்தக்குரலை நேரடியாக தானே கேட்க அஞ்சி அவர் அவற்றை மெட்டஃபிசிக்கல் உருவகங்களாக ஆக்கிக்கொண்டார். அவருடைய அழகான கதைகளில் மெட்டஃபர்கள் இல்லை, இமேஜ்கள்தான் இருந்தன. இமேஜ்கள் மலர்கள். மெட்டஃபர்கள் காகிதமலர்கள்.

சாராவின் மகன் இசஹாக் கடைசிக்காலத்தில் குருடானான். அண்ணா அதை ஒருமுறை சொன்னார். கண்ணாடியை கழற்றிவிட்டால் அவர் குருடுதான். கண்ணாடியை தேடி கைகளால் துழாவும்போது “இசஹாக்கின் கண்கள் சிரித்துச் சிரித்து அவனை ஏளனம் செய்கின்றன” என்று ஆங்கிலத்தில் சொன்னார். ஆசிரமத்துக்கு வந்தபின் அவர் தியானம் செய்யும்போது கண்ணாடியை கழற்றி வைத்துவிடுவார். அப்போது புகைப்படங்கள் வழியாக உலகம் நன்கறிந்த அந்த முகம் அவரிடமிருந்து விலகிவிடும். அவர் வேறொருவராக அங்கிருப்பார். குருட்டு இசஹாக்.

அந்த தடிமனான மூக்குக்கண்ணாடியில் அவருடைய பார்வை எஞ்சியிருக்கும். அது மேஜை மேல் இருக்கும். அதுதான் அத்தனை கதைகளையும் எழுதியது. கார்ட்டூன்கள் வழியாக எள்ளி நகையாடியது. அது அங்கே தனித்து அமர்ந்திருக்கும். இப்போது அண்ணா போய்விட்டார். ஆனால் அந்தக் கண்ணாடி வழியாக அவருடைய பார்வையை நாம் ஒரு மியூசியத்தில் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும்.

கே.வி.ரமா நிறுத்திக்கொண்டபோது திவாகரன் அந்த பதிவுக்கருவியை எடுத்துப் பார்த்தான். அதில் பதிவாகியிருக்கிறதா என்று உறுதிசெய்துகொண்டான்.

“மேடம், அவருடைய திருமணம் ஒரு தோல்வி என்கிறார்களே?” என்றான்.

அவன் கே.வி.ரமா சொன்ன எதையுமே புரிந்துகொள்ளவில்லை என்று தெரிந்தது. கே.வி.ரமா கூட சற்றே திடுக்கிட்டார். பின்பு புன்னகைத்து “ஒன்றுமே நிகழாத திருமணங்கள்தான் வெற்றி என்கிறீர்களா?” என்றார்.

திவாகரன் குழப்பமாக என்னை பார்த்தபின் “அவர்கள் விவாகரத்து செய்துகொண்டார்கள் அல்லவா?” என்றான்.

”ஆமாம், ஆனால் அவர்கள் திருமணத்திற்கு முன்னதாகவே அந்த முடிவை எடுத்திருந்தார்கள்.”

அவன் என்னையும் அர்ஜுனன் நாயரையும் மாறிமாறிப் பார்த்தபின் அசட்டுத்தனமாகச் சிரித்து “அப்படியா?” என்றான்.

கே.வி.ரமா என்னைப் பார்த்து சொன்னார் “மரியா அமெரிக்க அம்மாவுக்கு இந்தியாவில் பிறந்தவர். அவரை அண்ணா சந்தித்ததும் திருமணத்துக்கு முடிவெடுத்ததும் எல்லாம் 1970-ல் ஜனவரி மாதத்தில் வெறும் பதினேழு நாட்களுக்குள் நடந்தது. மரியா அப்போது ஓர் ஆராய்ச்சிக்காக டெல்லி வந்திருந்தார். இருவரும் சேர்ந்து காசிவரை ஒரு பயணம் செய்தார்கள். அண்ணாவால் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்த முடியாது. காசியில் அவர் முதல்முதலாக கஞ்சா இழுத்தார். அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை. ஏனென்றால் அவர் இளமை முதலே வலிப்புக்கான மாத்திரைகளை ஏராளமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தவர். மரியாதான் சிரித்துக்கொண்டே இருந்தார். திரும்ப வரும்போது திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தார்கள்”

கே.வி.ரமா சொன்னார். அண்ணா டெல்லி திரும்பியபின் என்னை சுரி என்ற ஈரானி ஓட்டலில் ஒரு டீப்பார்ட்டிக்கு அழைத்திருந்தார். நான் சென்றபோது அங்கே மரியா இருந்தார். மரியாவை நான் அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். ஏதோ வெள்ளைக்கார இதழாளர் என்று நினைத்தேன். அண்ணா இயல்பாக “ரமா, நான் இந்த மரியாவை திருமணம் செய்துகொண்டேன்” என்றார்.

“எப்போது?” என்றேன், முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை.

”நேற்று” என்று அண்ணா சொன்னார்.

நான் திகைத்து அமர்ந்திருந்தபின் “வாழ்த்துக்கள்” என்று மரியாவிடம் சொன்னேன். அண்ணாவிடம் “முன்னரே சொல்லியிருந்தால் ஏதாவது பரிசு வாங்கிவந்திருப்பேனே” என்றேன்.

“அதெல்லாம் வேண்டாம் என்றுதான் இந்த முடிவு” என்று அண்ணா சொன்னார். “இது ஒரு ஒப்பந்தம். இரண்டு மனிதர்கள் சேர்ந்து வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆகவே ஒரு சட்டபூர்வ ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். அதுதான் திருமணம். எந்த மெல்லுணர்ச்சிகளும் இல்லை. எந்த கற்பனாவாதமும் இல்லை… இதோபார்…”

அண்ணா ஒரு தாளை எடுத்துக்காட்டினார். அதில் அவர்கள் இருவரும் கையெழுத்திட்டிருந்தனர். அதிலுள்ள ஷரத்துக்களை அண்ணா வாசித்தார். நக்கலும் நையாண்டியுமாகவே அதை எழுதியிருந்தார். யார் சமைப்பது, யார் துணி துவைப்பது, யார் வீட்டை கூட்டித்துடைப்பது, செலவுகளை எப்படி எப்படி பங்கிட்டுக் கொள்வது எல்லாம் எழுதப்பட்டிருந்தது. வாரம் குறைந்தபட்சம் எத்தனைமுறை செக்ஸ் வைத்துக்கொள்வது என்பது வரை.

“இதோபார், ஷரத்து பதிமூன்று பார் பி. இதன்படி இரண்டுபேரில் யாருக்கு எப்போது பிரிந்து போகவேண்டும் என்று தோன்றினாலும் உடனே பிரிந்துவிடவேண்டும். இன்னொருவர் மறுப்பே சொல்லக்கூடாது. எந்த செண்டிமெண்டும் இருக்கக் கூடாது” என்றார் அண்ணா.

”இது எதற்கு இப்போது?” என்று நான் கேட்டேன்.

“நீ பார்ட்னர்ஷிப் டீட்களைப் பார்த்ததில்லையா? அதன் கடைசி ஷரத்து என்பது எப்படி அதை முறித்துக்கொள்வது என்றுதான். கம்பெனி சார்ட்டரிலும் லிக்விடேஷன் மிகவும் முக்கியம்.”

“இதென்ன பேச்சு?” என்றேன்.

“என்ன?” என்று அண்ணா கேட்டார்.

“ஒன்றை நினைத்தால் அது நடந்துவிடும். பிரியவேகூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டால்கூட உறவுகளில் பிரிவு வருகிறது. பிரிவதைப்பற்றி எண்ணிக்கொண்டே உறவுகளை தொடங்கினால் பிரிவு வந்தே தீரும்…” என்றேன் “சொன்னால் கேள், அதை கிழித்துப்போடு… வேண்டாம்.”

“இதோபார், இங்கே உறவுகள் இத்தனை வன்முறையும் துக்கமுமாக ஆவதற்குக் காரணம் வெளியேற வழியே இல்லை என்பதுதான். எப்படியும் இதுதான் வாழ்க்கை, இவர்தான் ஒரே கதி என்று நினைக்கும்போதுதான் நாம் நம் துணையை நம் விருப்பப்படி மாற்றியமைக்க முயல்கிறோம். ஒரு வளர்ந்த மனிதரை நாம் அப்படி மாற்றிவிட முடியாது என்று உணரும்போது ஏமாற்றமடைகிறோம். அது சலிப்பாகவும் கசப்பாகவும் ஆகிறது. அதுதான் வன்முறையாக மாறுகிறது. இந்த பத்து பார் சி ஷரத்தை பார்த்தாயா? ஒருவரை இன்னொருவர் தன் விருப்பப்படி மாற்றியமைக்க எந்தவகையிலும் முயலக்கூடாது!”

“அது சரிதான்” என்றேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“நெகிழ்வான உறவுகள்தான் நீடிக்கும். தண்டவாளங்களை அரை இஞ்ச் இடைவெளி விட்டு தளர்வாகத்தான் இணைத்திருப்பார்கள். இறுக்கி இணைத்தால் அவை வெப்பத்தில் விரியும்போது வளைந்து உடைந்துவிடும்.”

“அண்ணா, இதோ நான் இருக்கிறேன். நான் உன் தங்கை. என் உறவை உன்னால் ரத்துசெய்ய முடியுமா? நீ என்ன செய்தாலும் நான் உன் தங்கையாகவே நீடிப்பேன் அல்லவா?” என்று நான் கேட்டேன்.

அண்ணா திகைத்துவிட்டார்.

“அப்படித்தான் திருமண உறவையும் நம் முன்னோர் நினைத்தார்கள்” என்றேன்.

“நம்மை இணைப்பது ரத்தம்…”

“ஆமாம், மரியா உன் குழந்தையைப் பெற்றால் அதுவும் ரத்த உறவுதான்.”

”நீ செண்டிமெண்ட் பேசுகிறாய்” என்றார் அண்ணா.

“சென்டிமென்ட் என்றால் ஏதோ கெட்டவார்த்தைபோல சொல்ல பழகிவிட்டிருக்கிறீர்கள். அறிவுஜீவிகளின் அறியாமை இது.  ஒவ்வொரு செண்டிமெண்டுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு தொன்மை இருக்கிறது. நீ பேசும் இருத்தலியலுக்கு ஐம்பதாண்டு வரலாறுகூட இல்லை” என்றேன். எனக்கு மூச்சுத்திணறியது. “உலகமே செண்டிமெண்டுகளால்தான் இயங்குகிறது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அசட்டு கருத்துக்களால் அல்ல. அதெல்லாம் சும்மா வாசித்து சுருட்டி பழையபேப்பர் வியாபாரிக்குப் போடும் குப்பைகள்.”

“நீ எழுதும் கவிதைகள் போலிருக்கிறது உன் பேச்சு.”

“ஆமாம், நான் செண்டிமெண்டுகளைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லாம் வெள்ளைக்காரன் உருவாக்கிய அழகியலை ஏதோ தெய்வ ஆணை என்று ஏற்றுக்கொண்ட அசடுகள். அவனுக்கு பொது இடங்களில் உணர்ச்சிகளைக் காட்டக்கூடாது என்று ஒரு ‘மேனர்ஸ்’ இருக்கிறது. அவன் இலக்கியத்தையும் ஒருவகை பொது இடமாகப் பார்க்கிறான். ஆகவே மேனர்ஸ் எதிர்பார்க்கிறான். நீங்கள் துரைக்கு பிடித்ததுபோல உங்கள் மேனர்ஸை மாற்றிக்கொள்ளும் அடிமைகள்“ என்று நான் கத்தினேன் “உங்களுக்கு செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ளும் வரலாற்று அறிவும் பண்பாட்டு அறிவும் இல்லை என்றால் செண்டிமெண்டுக்கு பொருள் இல்லை என்று ஆவதில்லை.”

அண்ணா “நாம் இப்போது இதைப்பற்றி விவாதிக்கவேண்டாம்” என்றார். அவர் அமைதியிழந்துவிட்டார்.

“நீங்கள் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று மரியா கேட்டார்.

அப்போதுதான் நாங்கள் மலையாளத்தில் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தோம். “ஒன்றுமில்லை, அப்பாவிடம் சொல்லவில்லையா என்று கேட்டேன்” என்றேன்.

“ஆமாம், நான் சொன்னேன். அதை தங்கை சொல்லிக்கொள்வாள். எனக்கு அப்பாவிடம் தொடர்பில்லை என்று சொன்னார்” என்றார் மரியா.

“நீயே ஒரு கடிதம் எழுதுவது முறை அண்ணா” என்றேன்.

“தகவல் தெரிவிப்பதுதானே? யார் சொன்னால் என்ன?” என்றார் அண்ணா. “உனக்கு வெஜிட்டேரியன் க்ளியர்சூப் தானே?”

நான் கடைசியாக “அண்ணா, மங்கல காரியங்களைச் செய்யும்போது மங்கலம் மட்டுமே நினைக்கவேண்டும். மங்கலத்தை மட்டுமே சொல்லவேண்டும் என்பார்கள்” என்றேன்.

“ஏன்?”

“நாம் சொல்வதையும் நினைப்பதையும் அறியும் ஒரு தேவதை நம்மருகே உள்ளது. பிரதிக்கிரகை என்று அவளுக்குப் பெயர். நாம் சொல்பவை நினைப்பவை எல்லாவற்றையும் அவள் ததாஸ்து என்று சொல்லி ஆமோதித்துவிடுகிறாள் என்று அத்தை சொன்னதுண்டு” என்றேன்.

”வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என்ற அண்ணா. திடுக்கிடுவதுபோல நடித்து,  “ஆ, அதே குரல். ஆமாம் என்கிறது” என்றார். கொஞ்சம் உரக்க “வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு” என்று சொல்லி கையை செவியில் வைத்து  “ஆ, இதையும் ஆமாம் என்கிறது” என்றார். “என் செல்லக்குட்டி ரமா, அதன் பெயர் பிரதிக்கிரகை அல்ல பிரதித்வனி. எதிரொலி…”

நான் சலிப்புடன் தலையை அசைத்தேன்.

அண்ணாவும் மரியாவும் தனி அப்பார்மெண்ட் எடுத்து குடியேறினார்கள். அவர்கள் நிறைய பயணம் செய்தார்கள். ரவி பிறந்தான். அவனுக்கு மூன்றுவதாக இருக்கையில் அவர்கள் பிரிந்தார்கள். அவர்கள் பிரிந்த செய்தியே எனக்கு தெரியாது. நான் அப்போது லண்டனில் இருந்தேன். திரும்பவந்து அண்ணாவைச் சந்திக்கச் சென்றேன். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன். அண்ணா ஷேக் அப்துல்லாவை ஒரு பேட்டி எடுக்கப் போவதாகச் சொன்னார்.

மரியா எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். சாதாரணமாக “அவள் இப்போது என்னுடன் இல்லை” என்றார்.

”எங்கே போனார்?” என்றேன் குழப்பத்துடன்.

“பிரிந்துவிட்டோம். இருவரும் சம்மதித்து விவாகரத்து செய்துகொண்டோம். அவள் ஹைதராபாத் சென்றுவிட்டாள்.”

“எப்போது?” என்றேன்.

“சென்ற டிசம்பரில்…. அப்படியென்றால் ஒன்பது மாதமாகிறது”

“ரவி?”

”அவனை கொண்டுசென்றுவிட்டாள். ஏதோ போர்டிங்கில் சேர்த்துவிட்டதாகச் சொன்னார்கள்.”

“நீங்கள் தொடர்புகொள்ளவில்லையா? மறுபடியும் பேசவே இல்லையா?” எனக்குப் பதற்றமாக இருந்தது.

“இல்லை. செண்டிமெண்ட் வேண்டாம் என்று முடிவுசெய்திருந்தோம். அவள் ஒருநாள் என்னிடம் பிரியவேண்டும் என்றாள். நான் உடனே சரி என்றேன். ஏன் என்று நான் கேட்கவில்லை. அவள் சொல்லவுமில்லை. மறுநாளே இருவரும் சேர்ந்துபோய் வக்கீலைப் பார்த்தோம். ஒரே வாரத்தில் பிரிந்துவிட்டோம்.”

அண்ணா “ஸோ ஸ்மூத்” என்று சொல்லி புன்னகை செய்தார். என்னால் அவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த கண்ணாடிக்குமிழ் கண்கள்தான் மிதந்து தெரிந்தன.

“பிரிவதுவரை ஒரே வீட்டில்தான் இருந்தோம். எதுவுமே மாறவில்லை. நான் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தேன். செய்திகளை பார்த்துச் சிரித்தோம். நான் ரவியுடன் விளையாடினேன். அவனுக்குக் கதை சொன்னேன். நீதிமன்ற ஆணை கிடைத்த மறுநாள் அவளுடைய துணிகளை பெட்டியில் அடுக்க நான் உதவிசெய்தேன். டாக்ஸியும் நானே அழைத்தேன். அவள் ஏற்கனவே விமான டிக்கெட் எடுத்திருந்தாள். ரவிக்கு ஒன்றும் தெரியாது. அவன் எனக்கு டாட்டா காட்டி சிரித்துக்கொண்டே டாக்ஸியில் ஏறிக்கொண்டான். அவனுக்கு கார் என்றாலே சந்தோஷம்தான். மரியா என்னை மெல்ல அணைத்து என் கன்னத்தில் முத்தமிட்டு பை சொன்னாள். காரில் ஏறி சென்றுவிட்டாள். நான் நாலைந்து கார்ட்டூன் வரையவேண்டியிருந்தது. வரைய ஆரம்பித்தேன்… அவ்வளவுதான்.”

அது 1974. சொன்னேனே, ரவிக்கு மூன்று வயது அப்போது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் முழுப்புரட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அண்ணா அவரையும் வினோபாவையும் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்துகொண்டிருந்தார். அவருக்கு இந்திரா காந்தி, பி.சி.ஜோஷி, இ.எம்.எஸ், மொரார்ஜி தேசாய், மாவோ சே துங் எல்லாருமே கேலிக்குரிய கோமாளிகளாகத் தெரிந்தனர். எஸ்.ஆர்.டாங்கே, நிக்சன் போன்றவர்கள் அதற்கேற்ப அவர்களே கோமாளிகளாக வெளிப்பட்டனர்.

ஆனால் அந்தப் பிரிவு அண்ணாவை மிகமிக ஆழமாக உலுக்கியது. அது அப்போது தெரியவில்லை. ஒரு சில மாதங்களிலேயே அவருடைய மொத்த குணமும் மாறியது. அவரிடமிருந்த கேலியும் நையாண்டியும் மறைந்து கட்டற்ற ஆவேசம் உருவாகியது. அவர் மெல்ல மெல்ல ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஆதரிக்க ஆரம்பித்தார். இந்திராகாந்தியை உச்சகட்டமாக வெறுத்து வரைந்தும் எழுதியும் குவித்தார். அதெல்லாம் கார்ட்டூன்களே அல்ல, நஞ்சில் முக்கிய வசைகள். இந்திராகாந்தி ஆயுதத்தால் கொல்லப்படுவார் என்றுகூட அவர் எழுதியிருக்கிறார். சாபம்தான் அது. 1975-ல் இந்திராகாந்தி அவசரநிலையை அறிவித்தார். அண்ணா தற்கொலைத்தனமான வெறியுடன் அதை எதிர்த்தார். நாளிதழிலிருந்துகூட விலகநேரிட்டது. ஆனால் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்.

ஐம்பதுகளில் இருந்த அண்ணா திரும்பி வந்துவிட்டார். அவருடைய இருத்தலிய நம்பிக்கை மறைந்தது. அவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்வைத்த ஜனநாயகம் என்னும் கருத்தை நம்பலானார். அதற்காக உணர்ச்சிகரமாக குரல்கொடுத்தார். அவருள் இருந்து வேறுபாடில்லாமல் அனைத்தையும் கேலியும் கிண்டலும் செய்த அராஜகவாதி இல்லாமலானார். பதற்றமும் பரபரப்பும் கொண்டவராக ஆனார். ‘நோயுற்ற குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வெளியே நின்றிருக்கும் தந்தையாக உணர்கிறேன்’ என்று அக்காலத்தில் அவர் எனக்கு எழுதினார்.

அவசரநிலை அண்ணாவுக்கு பிடிக்கக் கிடைத்த ஒரு தூண். அந்த நெருக்கடியும், கடும் உழைப்பும் இல்லாவிட்டால் அவர் தனிமையால் பைத்தியமாக ஆகிவிட்டிருப்பார். அது முடிந்தபின்பும் அவர் அந்த மனநிலையை தக்கவைத்துக்கொண்டார். மேலும் மூன்றாண்டுகள் எழுதிக்கொண்டிருந்தார். ஒரு நாவல் எழுதினார். வராகபுராணம். நெருக்கடிகாலம் பற்றிய கசப்பு கலந்த பகடி அது. அதிகாரத்தின் மலத்தை உயர்வர்க்கம் பன்றிக்கூட்டம்போல உண்பது பற்றிய கதை. ஆனால் மக்கள் நெருக்கடிநிலைக் காலத்தை மறக்க விரும்பினார்கள். ஆகவே வராகபுராணத்தையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அண்ணா அதன்பின் ஒரு நாவல் எழுதினார். ’ஏகதா ஞானம்’. அதில் தனிமையில் உழலும் இதழாளன் ஒரு பெண்ணை மணக்கிறான், அவள் பெற்ற குழந்தை தன்னுடையதல்ல என்று தெரிந்தும் அவனை மகனாக ஏற்றுக்கொள்கிறான். அண்ணாவின் தவிப்பு அந்நாவலில் இருந்தது.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வெறுமை. அப்போதுதான் அப்பா இறந்தார். அது அண்ணாவை மீண்டும் கட்டற்றவராக ஆக்கியது. இடதுசாரிகளை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். அது இங்கே கேரளத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கியது. அவர்கள் அவரை திருப்பி வசைபாடினர். அவருக்கு அது ஒருவகை ஆறுதலை அளித்தது. அது ஒரு பிடிமானம். அந்த வசைகள் அவரை இந்த உலகில் நிலைநிறுத்தின. அவர் அதை வைத்துக்கொண்டு மீண்டும் சில ஆண்டுகளைக் கடந்தார். அதற்குள் 1989-ல் சீனாவில் டியானன்மைன் ஸ்குயர் நிகழ்ச்சி. சோவியத் ருஷ்யாவில் கோர்ப்பச்சேவ் பதவிக்கு வந்தார். பெரிஸ்ட்ராய்க்கா கிளாஸ்நாஸ்த் தொடங்கியது. அண்ணா அதை ஆதரித்து எழுதினார். அவருடைய ‘பனியுருகல்’ வரிசைக் கட்டுரைகள் மிகப்பிரபலமானவை.

ஆனால் 1992-ல் சோவியத் ருஷ்யா உடைந்தபின் அண்ணாவின் வாழ்க்கையில் புறவுலகமே முடிவுக்கு வந்தது. அவருக்கு ஒன்றுமே மிஞ்சவில்லை. நான் அவரை 1995-ல் சந்தித்தபோது முற்றிலும் வெறுமையில், ஒன்றுமே செய்யாமல் இருந்தார். மனச்சோர்வின் விளைவான மௌனமும் தனிமையும் அவரிடமிருந்தது. ஒரு நாவல் எழுதப்போவதாகச் சொன்னார். ஆனால் அது அவரே அவரை ஏமாற்றிக்கொண்டது. அவரால் எழுதமுடியவில்லை. அவர் நம்பி ஏற்கவோ மூர்க்கமாக எதிர்க்கவோ ஏதுமில்லை.

இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட்டின் மறைவு அண்ணாவிற்கு கடைசி மணல்மேடும் காலடியில் கரைந்த அனுபவம். அவருடைய தந்தை வடிவங்களில் எஞ்சியிருந்ததும் மறைந்தது. இ.எம்.எஸ் பற்றி மட்டும் அண்ணா இருநூற்றி எழுபத்தாறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அவற்றில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் அவரை மிகமிகக் கடுமையாக விமர்சனம் செய்து நிராகரிப்பவை. கடுமையான வசைகளே அறுபது எழுபது இருக்கும். இ.எம்.எஸ்ஸின் சாவுக்குப் பிறகாவது கேரளத்தில் உண்மையான கம்யூனிசம் வருமா என்று பார்ப்பதாகக்கூட எழுதியிருக்கிறார். முந்நூற்றி எண்பத்தெட்டு கார்ட்டூன்கள் இ.எம்.எஸ் பற்றி. எல்லாமே கூர்மையான கேலிகள்.

ஆனால் இன்னொரு கட்டுரையில் துரோணரின் நெஞ்சைநோக்கி அம்புவிடும் அர்ஜுனன் போலத்தான் இ.எம்.எஸ் பற்றி அவர் எழுதுவதாகச் சொல்கிறார். இ.எம்.எஸ் இறந்தபோது மீண்டும் நோயுற்று ஏழுநாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். இ.எம்.எஸுக்கு அவர் அஞ்சலிக்கட்டுரை எழுதவில்லை. இ.எம்.எஸ் பற்றி அவருடைய சாவுக்குப்பின் ஒரு வரிகூட எழுதவில்லை. அந்தப்பெயரையே மீண்டும் உச்சரிக்கவில்லை. அப்படியே மறந்துவிட்டவர் போலிருந்தார். ஆச்சரியமான ஒன்று அந்த மறதி.

அண்ணாவுக்கு தேவை ஒரு தந்தை என்று நான் கண்டுகொண்டேன். அதுவும் தற்செயலாக. அவர் காந்தியை ஓர் ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். அந்த காந்தி வட்டிகனில் இருக்கும் புனிதத் தந்தையரின் சிலைகளைப் போல கட்டுமஸ்தான உடலுடன், மிகப்பெரிய தோள்களுடன் இருந்தார். அப்போதுதான் எனக்கு அண்ணா எதற்காகத் தவிக்கிறார் என்று புரிந்தது.

அண்ணாவுக்கு 1993 வாக்கில் நித்ய சைதன்ய யதியுடன் தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து நித்யசைதன்ய யதிக்கு கடிதங்கள் எழுதினார். ஆனால் நித்ய சைதன்ய யதியின் நட்பார்ந்த பாவனை அவருக்கு போதவில்லை. அவரை கண்டித்து, அதட்டி ஆட்கொள்ளும் தந்தை அவருக்கு தேவைப்பட்டது. “எனக்குத் தேவை ஓர் ஆன்மிக ஸ்டாலின்” என்று அண்ணா ஒருமுறை சொன்னார்.  போதானந்தரை அவர் அறிமுகம் செய்துகொண்டதும் அவரை இறுகப்பற்றிக்கொண்டார். அவர் அமைதியை கண்டது போதானந்தரிடம்தான்.

அண்ணா தியானம் செய்தார். நாள்முழுக்க தியானத்தில் இருந்தார். ஆனால் அவருக்குள் ஏதாவது நிகழ்ந்ததா? தியானம் நமக்குள் உண்மையில் என்ன இருக்கிறதோ அதை வளர்க்கிறது. அச்சமிருந்தால் அச்சம் பெருகும். விலக்கம் இருந்தால் விலக்கம் வளரும். அண்ணாவிடமிருந்தது ஒரு பெருந்தவிப்பு. அண்ணாவால் கடைசிக்காலத்தில் பேச முடியவில்லை. கேள்விகளுக்கு எழுதிக்காட்டுவார். சிலசமயம் வரைந்து காட்டுவார்.

நான் அவரிடம் ஒருநாள் கேட்டேன்  “அண்ணா நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?”

“இல்லை” என்று அண்ணா சொன்னார். அதற்கு அவர் ஒரு பெருக்கல்குறியை போட்டார்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

அவர் தாளில் ஒரு குழந்தை முகத்தை வரைந்தார்.

“உங்கள் மகனை தேடுகிறீர்களா? அவன் வேண்டுமா?”

அண்ணா ஆம் என்பதற்கு அடையாளமாக ஆங்கில எஸ் என்னும் எழுத்தை எழுதினார்.

நான் என்ன பேசுவதென்று அறியாமல் சற்றுநேரம் அமர்ந்திருந்தேன். அதன்பின் “ஏதாவது எழுதவேண்டும் என்று திட்டமிருக்கிறதா?” என்றேன்.

அண்ணா ஆமாம் என்றார்.

”எதைப்பற்றி?”

அண்ணா மீண்டும் அந்த குழந்தை முகத்தை வரைந்தார். சுருக்கமான கார்ட்டூன் கோடுகள். ஆனால் அக்குழந்தையின் அழகான சிரிப்பு கண்முன் எழுந்தது. அதன்பின் நான் ஒன்றும் கேட்கவில்லை.

மீண்டும் கே.வி.ரமா அமைதியடைந்தார். நான் “இந்த அளவுக்கு நீங்கள் பேசியதே இல்லை” என்றேன்.

“ஆமாம், பேசிவிடவேண்டும் என்று தோன்றியது…” என்றபின் இதழாளரிடம் “இது பதிவாகியிருக்கிறதா?” என்றார்

“ஆமாம், ஆனால் எங்களுக்கு இந்த அளவுக்குச் செய்திகள் தேவையில்லை. நாற்பது புகைப்படங்கள் இருக்கின்றன. ஊடே கொடுக்க ஆயிரம் வார்த்தை போதும்”

”அதை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்” என்றேன்.

“இந்தப் பதிவின் ஒரு பிரதி எனக்கு வேண்டும். என்னால் இப்படி இனிமேல் நினைவுகூரமுடியும் என்று தோன்றவில்லை” என்றார் கே.வி.ரமா.

அவன் “கண்டிப்பாக. நான் போனதுமே நகல் எடுத்து கொண்டுவந்து தந்துவிடுகிறேன்… நான் சில படங்கள் எடுத்துக்கொள்ளலாமா?”

“ம்” என்று கே.வி.ரமா சொன்னார்.

அவன் எங்களை படம் எடுத்தான்.

“வேறென்ன படம் எடுத்தீர்கள்?” என்றேன்.

“ஆஸ்பத்திரிக்குப் போய் ஃப்ரீசரில் இருக்கும் கே.வி.ஜயானன் உடலை ஒரு படம் எடுத்தேன்” என்றான் திவாகரன்.

அதை நான் நினைவுகூர்ந்தேன். கே.வி.ஜயானன் பொறுமையிழந்து காத்திருப்பதுபோல ஒரு முகபாவனை கொண்டிருந்தார். எரிச்சலுடன் சட்டென்று எழுந்துவிடுபவர் போல. உறைந்து சிலைபோல ஆகிவிட்டிருந்த பொறுமையின்மை. அப்படியே அது ஆயிரமாண்டுகள்கூட இருக்கும்.

“ஆனால் அந்தக் கண்ணாடி இல்லாமல் அவர் வேறெவரோ போல இருந்தார்” என்று அவன் சொன்னான்.

“ஆமாம், அவர் வேறு” என்று நான் சொன்னேன்.

“நான் வருகிறேன்… டீச்சர், மிகவும் நன்றி”

அவன் சென்றபின் மீண்டும் அமர்ந்திருந்தோம். பொழுது ஓடிக்கொண்டிருந்தது. நான் அந்தப்பொழுது வீணே செல்லவில்லை என அறிந்திருந்தேன். அது ஒரு சுருள்வில் முறுகுவதுபோல விசையுடன் சுழன்று சுழன்று இறுகிக்கொண்டிருந்தது. அதன் இறுதியில் அப்பாலிருந்து சுகுணன் வந்து அர்ஜுனன் நாயரை கைவீசி அழைத்தான்.

அவர் சென்று அவனிடம் பேசினார். அதன்பின் அவனுடன் ஓடி உள்ளே சென்றார்.

அவர் திரும்பி வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம். அல்லது நான் காத்திருந்தேன். கே.வி.ரமா மீண்டும் தன் மௌனத்தின் ஆழத்திற்குள் சென்றுவிட்டிருந்தார்.

அர்ஜுனன் நாயர் திரும்பி வந்தார். நடையிலேயே எனக்கு புரிந்தது. வேறு முடிவுக்கே வாய்ப்பில்லை. இந்தக் கதையில் திருப்பமே இருக்கமுடியாது.

அர்ஜுனன் நாயர் அருகே வந்து “அந்த ஆமோதிக்கும் தெய்வம், அதன் பெயர் என்ன?’ என்றார்.

”பிரதிகிரகை” என்றேன்.

”ஆமாம், அவள் எப்போதோ ததாஸ்து என்று மும்முறை சொல்லியிருக்கிறாள்.”

நான் ஒன்றும் சொல்லவில்லை. கே.வி.ரமா ஏறிட்டுப்பார்த்தார்.

“அவன் ஃபோனில் அழைத்திருக்கிறான். அவனிடமிருந்து ஒரு டெலெக்சும். வந்திருக்கிறது. அவனுக்கு இந்தச் சடங்குகளில் ஆர்வமில்லை. வரமுடியாதாம். வேண்டியதை இங்கேயே செய்துவிடும்படி சொல்லியிருக்கிறான்.”

நான் பெருமூச்சுடன் தளர்ந்தேன். கே.வி.ரமா நிலத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தபின் எழுந்து “அதைச் செய்யவேண்டியதுதான்” என்றபின் உள்ளே சென்றார்.

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகுமிழிகள், கூர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுமிழிகள், கூர்- கடிதங்கள்