குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

உங்கள் சமீபத்திய கதைகளிலேயே மிகவும் சோர்வூட்டக்கூடியதாக “குமிழிகள்” இருந்தது. வெண்முரசுக்கு பின் வெளிவந்த கதைகளில் உள்ள “ நம்பிக்கை” இக்கதையில் காணாமல் போனது சற்று வருத்தமளிக்கிறது.

லிலியின் அனைத்து விவாதமும் மிகவும் நேர்த்தியானபுத்திசாலித்தனமான கட்டமைக்கப்பட்டிருந்தது.உலகெங்கிலும் இருக்கும் போலி பிம்பங்களின் முகமாக லிலி தெரிகிறாள். லிலியின் மூலமாக இப்பொழுது சமூகத்தில் போலிபிம்பங்களின் அர்த்தம் தான் என்ன என்ற வினாவே எழுகிறது.இத்தனை போலி பாவவைகள் மூலமாக மனிதன் என்னத்தான் அடைகிறான்,பின் அனைத்துக்கும் அப்பால் அவன் தன்னை என்னவாக உணர்கிறான் என்று கேள்விகள் முட்டி மோதுகின்றன.

மனிதன் தன்னை எப்பொழுதும் மாற்று பாவனைகள் மூலமே  தன்னை முன் நிருத்துகிறான்,ஆனால் இப்பொழுதுள்ள ஊடகமும், இணையமும் அவனை கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.லலிதா லிலி ஆகவும் சாமிநாதன் ஸாம் ஆகவும் ஆகி எதை அடைந்து விட்டார்கள்.அம்பாளின் அபிதகுசலாம்பாளின் பெயரையும் லிலிக்கு எதிர்மறையாகவேஅர்த்தம் தருகிறது, இருட்டிற்கு செல்லும் தோறும் கைகளால் தொடமுடியாதவளாகவேஆகிறாள்

இக்கேள்விகள் ’குமிழிகள்’ என்னும்   இச்சிறுகதை வாசித்து முடித்தவுடன் “வெறும் குமிழிகளாக” ஆகிவிடுகின்றன.

அன்புடன்

அனங்கன்

 

அன்புள்ள ஜெ

குமிழிகள் சோர்வூட்டும் ஒரு கதை. உங்கள் நூறு கதைகளிலும் அவ்வப்போது அப்படி ஒரு கதை வந்துவிடுகிறது. குமிழிகள் என்று சொல்வது மார்பகங்களை மட்டுமல்ல, அந்த நவீன மனிதர்களையும் அவர்களின் கருத்துக்களையும்தான் இல்லையா?

மனிதர்கள் இனிமேல் உண்மையாக இருக்கவேண்டியதில்லை, உண்மை என்று ஒன்று இல்லை, பிரசண்டேஷன் மட்டும்தான் உள்ளது, அதை தொழில்நுட்பத்துடன் செய்துகொள்ளலாம் என்று லிலி சொல்கிறாள். அதை மிகநேர்த்தியாக முன்வைக்கிறாள்.

உண்மையில் கதையில் உள்ள கேள்வி மனிதர்கள் எப்படி உறவுகொள்வது என்றுதான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உண்மையுருவத்துடன் உறவுகொள்வதா, அவனுடைய பிரசண்டேஷனுடன் உறவுகொள்வதா? பிரசண்டேஷன் உண்மையாக மாறுவதையும் அவன் உணர்ந்திருக்கிறான்

இன்றைக்கு உள்ள உறவுகள் அப்படித்தான் இருக்கின்றன. ஆபீஸ், தொழில், நட்புவட்டம், சோஷியல்மீடியா எல்லா இடங்களிலும் பிரசண்டேஷன்தான் உள்ளது. அதைத்தான் நாம் பெர்சனாலிட்டிகளாக ஏற்றுக்கொள்கிறோம். அதனுடன்தான் நம்முடைய உறவு இருந்துகொண்டிருக்கிறது. அந்த வாழ்க்கைக்குப் பழகிவிட்டிருக்கிறோம்

இது ‘போஸ்ட் ட்ருத்’ காலகட்டம் என்பார்கள். உண்மைகடந்த காலகட்டம். நம் உறவுகளில் கூட அப்படித்தான். நான் என் முன்னாள் அதிகாரியை ஒருமுறை பார்த்தேன். அலுவலகம் வந்துகொண்டிருந்ததுவரை ரூஜ், மை, செயற்கை இமைகள் எல்லாம் வைத்து வேறுமாதிரி இருந்தார். நேரில் வீட்டில் பார்த்தபோது வேறொருவராக இருந்தார். அப்படியென்றால் நான் அதுவரை அறிந்திருந்தது அவரே அல்ல. அவருடைய ஒரு தோற்றம்தான். அதை இந்தக்கதையை வாசித்தபோது கூர்மையாக உணர்ந்தேன்

எஸ்.சந்திரகுமார்

 

அன்புள்ள ஜெ,

குமிழிகள் கொஞ்சம் நிலைகுலைவையும் ஒவ்வாமையையும் உருவாக்கிய கதை. முதலில் அந்த ஒவ்வாமை ஏன் என்று யோசித்தேன். அறுபதுகளில் பெண்கள் உள்பாடி போடுவதற்கு எதிராக பெரிய எதிர்ப்பு இருந்திருக்கிறது. எழுபதுகளில் ‘எலாஸ்டிக் பாடி’ என்ற பிரா வந்தபோது பெரிய எதிர்ப்பும் கிண்டலும் இருந்திருக்கிறது. எழுபதுகளின் குமுதத்தில் நிறைய பிரா ஜோக்குகள் இருக்கும். நாயிடுஹால் என்று சொல்வார்கள்.உட்டாலங்கடி செவத்த தோலுதான், உள்ளே தெரியும் நாயுடு ஹாலுதான் என்று ஒரு சினிமாப்பாட்டுக்கூட உண்டு.

இது ஏன்? பெண்கள் தங்களை முன்வைப்பதுக்கு எதிரான ஒரு எதிர்ப்புதான். கொஞ்சநாள் கழித்து அதுவே இயல்பானதாக ஆகிவிடுகிறது. பௌடர்போடுவது, லிப்ஸ்டிக் போடுவது, புருவம் திருத்திக்கொள்வது எல்லாமே இப்படித்தான் வந்திருக்கிறது. உண்மை பொய் என்ற கேள்வியே இங்கே இல்லை. ஒருபெண் தன்னை தான் விரும்பும்படி முன்வைக்கலாமா கூடாதா என்பதுதான் பிரச்சினை. அப்படி யோசித்தால் தன்னை முன்வைப்பது ஒரு பிறப்புரிமை. அதை ஏற்றுக்கொண்டால் எப்படி முன்வைக்கவேண்டும் என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்

ஆர்.வருண்

முந்தைய கட்டுரைவெளியேற்றம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொதி, வலம் இடம்- கடிதங்கள்