கொதி,வலம் இடம்- கடிதங்கள்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

மீண்டும்  தங்கப்பனும் போற்றியும் பிறருமாக 100 கதைகளின் மாந்தர்களும்  கதைகளில் வருவது பெரும் சந்தோஷத்தை கொடுக்கின்றது. அவர்கெளெல்லாருமாய் இருக்கும் ஓருலகில் நானும் 100 நாட்கள் இருந்தேன் என்பதால்.  பலநாட்கள் கழித்து வேண்டியவர்களை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியுடன் இன்றைய வலம் இடம் வாசித்தேன்.

வழக்கம்போல உங்கள் தளத்தை  விழித்தெழுந்தவுடன் தெளிவான மனநிலையில் வாசிக்கமுடியாதபடிக்கு இன்று நிறைந்த நாளாக இருந்ததால், வழக்கத்தை விட கல்லூரிக்கு சீக்கிரமே சென்றேன். அங்கும் தொடர் வகுப்புக்கள், தேர்தல் வருவதால் சீக்கிரமாக பாடங்களை முடிக்கவேண்டிய அவசரம் என்று பரபரப்பான நாளில் வலம் இடம் கதையை கிடைத்த இடைவெளிகளில் வாசித்து முடித்தென்.

பாதி வாசித்து பின்னர் வகுப்புக்கு சென்று  பாடத்தை போர்டில் எழுதத்துவங்கி விட்டாலும் மனம் குமரேசனின் தொழுவத்திலேயெ சுற்றிக்கொண்டிருந்தது, எருமை சினையாக இறந்ததும் செல்லம்மையின் அழுகையுமாக  நெஞ்சு கனத்து ஈரக்கண்களுடன்தான்  வகுப்பெடுத்துக்கொண்டிருந்தேன். அதுவும் செல்லம்மை ’’எனக்க ராத்திரியே’’ என்றது எத்தனை பொயடிக் வெளிப்பாடு என்று யோசித்துக்கொண்டெ இருந்தேன்.  குமரேசனுக்கு எருமைக்கன்று கனவில் கிடைத்ததை  வாசிக்கையில் என்னையறியாமல் உடல் மெய்ப்புக்கண்டது. அது கதையென்று என்னால் இன்னுமே  நினனைக்கவே முடியவில்லை

வலம் இடமென்று சொல்லி இருப்பதில் ஏதேனும் மறைபொருள் இருக்குமா என்றெல்லாம்  எனக்கு புரியவில்லை மிக நேரடியாக இக்கதையை நான் மனதுக்கு நெருக்கமாக புரிந்துகொண்டேன். அதுவே எனக்கு தாங்க முடியாமலிருக்கிறது.

இக்கதையில் எருமை இறந்த பின்னர் தொழுவத்தில் இருக்கும் அந்த வெறுமையை சொல்லும் வெளிச்சத்தையும் என்னால் குமரேசனாகவெ இருந்து உணரமுடிந்தது

2015ல் வீட்டில் வளர்ந்திருந்த வாகை, மரமல்லிகை, பென்சில் என மூன்று பெரு மரங்களை ஒரு காவலுயரதிகாரி வம்படியாக என்னை மிரட்டி மகன்களை பிடித்துக்கொண்டு நிராதரவாக நின்ற என் கண் முன்னேயே மின் ரம்பத்தில் ஆட்களை வைத்து அறுத்து வேனில் ஏற்றிக்கொண்டு போனார். பின்னர் அவற்றை  9000 ரூபாய்களுக்கு விற்றார் என தகவலறிந்தேன். என் மகன்களைப்போலவே வளர்ந்த,  அப்போது தன் மலரத்துவங்கி இருந்த அவை இருந்த. அந்த இடங்களின்  வெறுமை நிறைந்த வெளிச்சம் இன்று எத்தனையோ மரங்கள் வளர்ந்தும் நீக்க முடியாததாகவே இருக்கிறது. உண்மையில் அந்த வெறுமை என் மனசில் அந்த மூன்று மரங்களும் வீட்டைவிட்டு போகும் போது உண்டானது அது அப்படியெதான் இருக்கும்.

இங்கு என் கிராமத்தில் புஷ்பா என்று ஒரு பெண் தினமும் வீட்டருகே மாடுகளை மேய்ப்பாள் நான் வீடுதிரும்புகையில் அவளும் அவற்றை ஒட்டிக்கொண்டு வீடுசெள்லுவாள். பலசமயங்களில் அவள் மாடுகளுடன் குமரேசனைப்போலவெ பேசிக்கொண்டு நடப்பதை கவனித்திருக்கிறேன். ’’ஒழுங்கா வரியா இல்லையா என்ன கொழுப்பு உனக்குன்னு கேட்கறேன், மழைன்னு சொல்லறேன் காதில் விழுகுதா’’ இப்படி. அப்போதெல்லாம் எனக்கு அவள் மீது  பொறாமையாக இருக்கும் எத்தனை அழகிய அன்பு நிறைந்த உலகில் இருக்கிறாள்  என்று.

இந்தகதை இப்படி பலவற்றை நினைவு படுத்திவிட்டது. திரும்ப வந்த அந்த குட்டி வாயில் செம்பருத்தி குச்சியை வைத்துக்கொண்டிருந்த சித்திரத்தை நான் குமரேசன் சூச்சும எருமையை கண்ணால் பார்த்ததுபோல பார்த்தேனெனென்று தான் சொல்லனும். உடலும் உள்ளமும் அப்படியே பொங்கிவிட்டது வாசிக்கையில்.

’’போனா வரும்’’ என்று தங்கையா டீக்கனார் சொன்னதும் பெரும் ஆறுதலைதந்தது.

எருமையைகுறித்த எத்தனை நுண்மையான விவரங்களை சொல்லியிருக்கிறீர்கள் என்றும் ஆச்சரயப்பட்டேன். அதன் பனையோலை மூக்கணாங்கயிறு குறித்தெல்லாம் எத்தனை எத்தனை தகவல்கள். வாசித்ததும் காட்சன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன்.

கைகூப்பி ’’எனக்க அம்மையில்லா’’ என்று குமரேசன் அழுதது அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது..  மதியம் உணவு இடைவெளையில் உங்களுக்கு வலம் இடம் குறித்து எழுத நினைத்தும் துடைத்துவிட்டதுபோல மனம் காலியாக இருந்தது. ஒருவரிகூட எழுதவே முடியவில்லை.

வீடுவந்து இரவானதும் தான் கொந்தளிப்பு அடங்கி எழுதுகிறேன் என்ன எழுதினாலும் இந்தகதை என்னை என்ன செய்தது என்று எழுத முடியாது..

வீடு திரும்புகையில் வழியில் ஏதேனும் எருமையோ அல்லது குமரேசனென்று யாராவதோ எதிர்பட்டிருந்தால் பாய்ந்து கட்டிக்கொண்டிருப்பேன். முழு உலகின் மீதும்  அப்படியொரு பெரும் பிரியமேற்பட்டுவிட்டது .

அன்புடன்

லோகமாதேவி

 

கொதி[ சிறுகதை]

அன்பு ஜெ,

“கொதி சிறுகதை” எனப் பார்த்ததும் மகிழ்ந்தேன். ஏற்கனவே நெல்லையில் சிறுகதை மீண்டும் எழுதுவதைப் பற்றி சொல்லியிருந்தீர்கள்.  பணியிட மாறுதலால் இரண்டு நாட்கள் ஒரு இனம் புரியா மனச்சுமை அழுத்தியிருந்தது அதை உங்கள் சிறுகதைகளின் தொடக்கம் ஆற்றுப்படுத்தி அணைத்துக் கொண்டது.

எப்பொழுதும் உங்கள் கிறுத்தவ பின்புலம் கொண்ட கதைகள் என் பள்ளி வாழ்வை மீட்டச் செய்வன. பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கப் புலத்தைச் சேர்ந்தவை என்பதாலும் அது என் வாழ்வுக்கு அணுக்கமான ஒன்றைப் பற்றி பேசுவதாக உள்ளது. கொதி சிறுகதையைப் படித்துவிட்டு பசியையும் நிறைவையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு லூக்கா நற்செய்தியில் அதிகாரம் ஆறில் வரும் இந்த வரிகள் நினைவிற்கு வந்தது. “21:இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். 25: இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.” லூக்கா பசியையும் துன்பத்தையும், நிறைவையும் சிரிப்பையும் ஒப்பிடுவதைப் பற்றி சிந்தித்திருந்தேன். பசியைப் போல நிறைவு கொள்ளச் செய்யும் ஒன்று உலகில் இல்லை. ஃபாதர் ஞானையனுக்கு வயிற்றுப் பசியைப் போல சூசை மரியானுக்கு படிப்புப் பசியைப் போல ஏதோவொரு பசியைக் கைக் கொள்ளாவிடில் வாழ்வில் நிறைவென்பதில்லை என நினைத்தேன் ஜெ.

அதிகமாக சிரிக்கும் போது சிலர் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். பார்க்க வைத்து சாப்பிட்டால் வயிறு வலிக்குமே என பிட்டுக் கொடுத்து உண்பார்கள். இந்த அன்றாட நம்பிக்கைகளின் வழி கொதி சடங்கைப் பார்த்தேன். “இந்திரர் அமுதம் இயைவது ஆனாலும் இனிது எனத் தமியர் உண்டலும் இலர்” என்ற சங்க வரிகளிலிருந்து இங்கு பத்து பிள்ளை பெற்று ஒரு கைப்பிடி சோறு மட்டுமே வைத்திருக்கும் அம்மையைப் பார்க்கிறேன். பின்னும் ”தீனி இல்லைனா அப்பவே செத்திடும் எறும்பு போன்ற சனங்க” என்ற வரிகளின் வழி அந்த மக்களைப் பார்க்கிறேன். மலைக்கும் மடுவுக்குமான தூரமாக அது துயருறச் செய்கிறது. ஆனாலும் கொடுக்காமல் சாப்பிடும் ஒரு குற்ற உணர்வே கொதி இருப்பதாக, கூளிப்பேய் பிடித்திருப்பதாக நினைக்க வைக்கும்  நம்பிக்கையாக மாறியிருக்கும் ஒரு காலத்தினின்று அந்த மக்களை மீட்டெடுக்கும் கருவியாக ஃபாதர் பிரனெனும், ஞானையாவும் பயன்படுகிறார்கள். “கொதி இருப்பது வாயிலயோ வயித்துலயோ இல்ல. ஆத்மாவிலயாக்கும்” என்ற வரிகளில் இந்தத் திறப்பை அடைந்தேன்.

அங்கிருந்து கொதி ஓதுவது மறைந்து அப்பத்தை பிட்டு சாப்பிடும் காலத்தை எதிர்நோக்கியவராக ஞானையாவைப் பார்க்கிறேன். கொதி சடங்குகள் அந்த நிலையினின்று அவர்களை முன்னகர்த்தும் வெறும் ஆத்ம திருப்தி என்ற புரிதல் அவருக்கு இருந்திருக்கிறது. அதனாலே தான் தன் வாழ்நாள் தோறும் நிறைந்தொழுகாமல் பசியுடன் போக்கொதியை கொண்டு தத்தழியும் தன் மனதை போக்கொதி சடங்கின் மூலம் நிறைவடையச் செய்கிறார்.

நான் பன்னிரெண்டாவது படிக்கையில் எனக்கு அம்மை போட்டுவிட்டது. அதன் பிறகு ஒருமாதம் கழித்து வைரல் காய்ச்சல் வந்து இரண்டு மாதம் வாட்டிவிட்டது. எப்பொழுதும் தூங்கிக் கொண்டும் உப்பிக் கொண்டுமிருந்தேன். ஒரு இரவு என் தலைமை ஆசிரியர் என்னைக் கூட்டிக் கொண்டு போய் கான்வென்ட் சமையலறையில் நிறுத்தி விட்டு அங்கிருக்கும் ஒரு அக்காவிடம் உப்புக்கல் மற்றும் காய்ந்த மிளகாயைக் கொடுத்து சுற்றிப் போடச் சொன்னார்கள். அதை அவள் மூன்று முறை சுற்றி கொழுந்து விட்டெரியும் அடுக்களையில் விட்டெரிந்தாள். அதன் சத்தமே என்னிலிருந்து அனைத்தையும் முறிப்பது போலப் பட்டது. நான் வரும் வழியில் சிஸ்டரிடம் ”இதையெல்லாம் நம்பரீங்களா” என்று கேட்டேன். ”உனக்குத் தெரியாதுடி கழுத. நீ உங்க வீட்டிலேயே இந்து முறைப்படி வளர்ந்திருந்தா இத செய்திருப்பாங்க. இப்பலாம் கிளாஸ்லயும் தூங்கிக்கிட்டே இருக்கியாம். என்ன செய்யறதுனு தெரில. கண்ணேறா இருக்கலாம்னு உங்க டீச்சர் சொன்னாங்க. அதான். இத யார்க்கிட்டயும் உலரிட்டு இருக்காத… போ போய் படி ஒழுங்கா. ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கலனா தொலைச்சிடுவேன் சாத்தானே” என்று சொல்லிவிட்டு நெற்றியில் சிலுவையைப் போட்டு அனுப்பினார். ஆன்மாவின் சோர்வு நீங்கிவிட்டாலே ஒருவகையான புத்துணர்வு வலிந்து பிறந்து நம்மை உந்தித் தள்ளி நிறைவை நோக்கி பயணப்படச் செய்கிறது ஜெ. அப்படித்தான் நான் அந்த சோர்விலிருந்து விலகினேன் என்று நினைக்கிறேன். கண்ணேறுக்காக சூடத்தைக் கொளுத்திப் போடுவதும், தேங்காயை பூசணியை உடைப்பதுமென செய்யும் ஒவ்வொரு செயலின் போதும் உடைபடுவது ஆன்ம அழுத்தங்களே என  உணர்கிறேன் ஜெ.

எளியவர்களின் ஆத்மாவை  ஓர் எளிய கொதி சடங்கு செய்து நிறைவு செய்பவராக, பாவப்பட்ட சனங்களை மேய்ப்பவராக அன்றி அவர்களுக்குக் கொடுத்து நிறைவு செய்பவராக இருந்த ஞானையன் திருஇருதயமாகவே மனதில் நின்றுவிடுகிறார். நிறைவான கதை ஜெ. நன்றி.

அன்புடன்

இரம்யா.

வலம் இடம்- கடிதங்கள்

கொதி- கடிதங்கள் 2

கொதி -கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைதீற்றல் ,படையல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉன்னிகிருஷ்ணன் வீட்டு ராஜகுமாரி