கண்கூடான காந்தி

அஞ்சலி : டாக்டர் வி.ஜீவானந்தம்

டாக்டர் வி.ஜீவானந்தம் ஈரோட்டில் இன்று [2-3-2021] அன்று காலமானார். அவருக்கு அகவை 75. தமிழகச் சூழியல் செயல்பாடுகளின் முன்னோடி என்று அவரை என்றும் தமிழகம் நினைவுகூரவேண்டும்.

டாக்டர் ஜீவாவை நான் அறிமுகம் செய்துகொண்டது 1987ல், எனக்கு அப்போது இருபத்தைந்து வயது. அவருக்கு நாற்பத்தி ஒன்று வயது. நான் வீட்டைவிட்டு ஓடிப்போய் என்னென்னவோ ஆகி அலைந்து மீண்டு ஓர் இடைவெளிக்குப்பின் எழுத ஆரம்பித்திருந்தேன்.ஆனால் புனைவுகளை விட பிறவற்றில் ஆர்வமிருந்தது. காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியர்பணி. கூடவே தொழிற்சங்க ஆர்வம்

அன்று ஆளுமைகளைச் சந்திப்பதற்காக அலைந்துகொண்டே இருந்தேன். கண்ணனூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சூசிமுகி என்ற சூழியல் சிற்றிதழ் வழியாக சூழியலின் மேல் ஆர்வம் உருவாகியது. அவ்விதழ் ஒருங்கிணைத்த ஒரு விழாவுக்காக வந்திருந்த சுகதகுமாரியிடம் அறிமுகம் செய்துகொண்டேன். தொடர்ந்து அன்று நிகழ்ந்துகொண்டிருந்த சூழியல்செயல்பாடுகளில் எவ்வகையிலேனும் பங்கெடுக்க ஆரம்பித்தேன்.

அப்போது திருவாரூர் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதிகளை ஒரு சிறுபேட்டி எடுத்தேன். சுந்தர்லால் பகுகுணா அவர்களையும் ஒரு சிறுபேட்டி எடுத்தேன். அவை தினமணி போன்ற இதழ்களில் வெளியாயின.

திருவாரூரில் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனைச் சந்திக்கச் சென்றபோது டாக்டர் ஜீவா அறிமுகமானார். அவர் ஈரோட்டில் மருத்துவராக இருக்கிறார் என்றும் சூழியல் ஆர்வலர் என்றும் தெரிந்துகொண்டேன். நான் சந்தித்த அன்றே அவர் அமைதிப்பள்ளத்தாக்கைக் காக்க சுகதகுமாரி எடுத்த முயற்சிகளைப் பற்றிய ஒரு மலையாளக் கட்டுரையை மொழியாக்கம் செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்டார். நான் செய்துகொடுத்தேன். என் மொழிநடையை பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதன்பின் ஜீவா எனக்கு அவருடைய துண்டுப்பிரசுரங்களை அனுப்பிக்கொண்டிருந்தார். நான் அவருக்குக் கடிதங்கள் எழுதினேன். மலையாளத்தில் இருந்தும் ஆங்கிலத்திலிருந்தும்  மொழியாக்கம் செய்யவேண்டிய துண்டுப்பிரசுரங்களை அனுப்பி வைப்பார். மொழியாக்கநெடி இல்லாமல் மொழியாக்கம் செய்பவன் என்று என்னைப்பற்றி அவர் சொல்வதுண்டு. அன்று அவர் நொய்யல் மாசுபாடுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தார்.

1988ல் நான் தமிழகத்தில் பாலக்கோட்டுக்கு மாற்றலாகி வந்தேன்.அதன்பின் அடிக்கடி ஈரோடு சென்று ஜீவாவைச் சந்தித்தேன்.காந்தியம் எத்தகையச் செயலூக்கத்தை, நம்பிக்கையை அளிக்கும் என்பதற்கான சான்றாக அவர் திகழ்ந்தார்.

ஜீவாவின் தந்தை எஸ்.பி.வெங்கடாசலம் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்திலும், அதன்பின் கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திய கிளர்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். சிறைசென்றவர். அவருடைய அன்னையார் திராவிடர்கழக பின்னணி கொண்டவர். அவர்களின் திருமணத்தை நடத்திவைத்தவர் ஈ.வே.ரா அவர்கள். அன்று அது ஒரு புரட்சித்திருமணம், சீர்திருத்தத் திருமணமும்கூட. கம்யூனிஸ்டு இயக்கமும் திராவிட இயக்கமும் இணைந்த திருமணம் அது என்று அன்று பேசப்பட்டது.தோழர் ஜீவாவின் பெயர்தான் டாக்டர் ஜீவாவுக்கும் வைக்கப்பட்டது.

ஜீவா ஈவேரா அவர்களின் மடியில் வளர்ந்தவர் என்று சொல்லலாம். ஆனால் அவர் திராவிட இயக்கத்திலோ கம்யூனிச இயக்கத்திலோ ஆர்வம்கொள்ளவில்லை. அவரை இளவயதில் கவர்ந்தது மருத்துவம். திருச்சியிலும் சென்னையிலும் மருத்துவம் கற்று மயக்கவியல்நிபுணராக ஆனார். அவருடைய தம்பி குடிநோயால் உயிர்விட்டார். அதன்பின் போதையடிமைத்தனத்திலிருந்து மீட்புக்கான நலந்தா மருத்துவமனையை ஆரம்பித்தார்.

அறிவியலாளராகத்தான் டாக்டருக்குச் சூழியல் ஆர்வம் உருவாகியது. இந்தியவைலேயே சூழியல் குறித்த ஆர்வம் கொண்ட முன்னோடிச் சிந்தனையாளர்களில் அவரும் ஒருவர்.1972ல் முதல் உலகச்சந்திப்பு ரியோ டி ஜெனிரோவில் நடந்தபோதே டாக்டர் சூழியல் குறித்த ஆர்வத்தை அடைந்தார். 1979ல் அமைதிப்பள்ளத்தாக்கைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை என்.வி.கிருஷ்ணவாரியர் தலைமையில் கேரளம் முன்னெடுத்தபோதே தொடர்பு கொண்டிருந்தார்.

சூழியல் வழியாகவே டாக்டர் காந்தியிடம் வந்துசேர்ந்தார். வேறுவழியும் இருக்கவில்லை. காந்தியப்போராட்டம் ஒன்றே அவர் செய்யக்கூடுவதாக இருந்தது. எண்பதுகளின் தொடக்கத்தில் சூழியல் என்பது எவ்வகையிலும் மக்கள் ஏற்பில்லாத ஒரு கருத்து. ஊடகங்களின் கவனம் அதற்கு இல்லை. அமைப்புபலமும் இல்லை. டாக்டர் தன்னந்தனியாகவே தன் செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தார். துண்டுப்பிரசுரங்களைச் சொந்தச் செலவில் அச்சிட்டு முச்சந்திகளில் நின்று வழங்கியிருக்கிறார்.

எண்பதுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் போன்றவர்களின் உதவி அவருக்கு அமைந்தது. ஆனால் ஜீவா நிதியுதவிபெறும் அமைப்புக்களின் செயல்பாடுகளுடன் எச்சரிக்கைமிக்க விலக்கத்தையும் பேணிவந்தார். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளிலிருந்து நொய்யலைப் பாதுகாக்க அவர் மேற்கொண்ட இயக்கம் மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் இயற்கை அழிவு அப்போது மக்களை பாதிக்க ஆரம்பித்திருந்தது.

காந்தியவழிகளிலான போராட்டங்கள் வழியாக திருப்பூர் சாயப்பட்டறைகள் உருவாக்கும் சூழியலழிவு குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கவும், அதற்கு கட்டுப்பாடுகளை உருவாக்கும் கட்டாயத்தை அரசுக்கு உருவாக்கவும் அவரால் இயன்றது. காடுகளைப் பேணுதல், பழங்குடி நலன், இயற்கை வேளாண்மை ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று பிணைந்தவை என்ற எண்ணம் அவருக்கிருந்தது. வாழ்நாள் முழுக்க அவர் மேற்கொண்ட பணிகள் முதன்மையாக அத்தளத்திலேயே அமைந்திருந்தன.

காந்தியர்களுக்குரிய தெளிவும் தன்னடக்கமும் அவரிடமிருந்தது. அவர் எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரை ஈர்த்து தன் இயக்கம் ஒரு தொடர்செயல்பாடாக நிகழும்படிச் செய்தார். கூடவே, எதையும் மிகைப்படுத்திக்கொள்ளவோ எதிர்பார்ப்புகளை கட்டற்று வளர்த்துக்கொள்ளவோ இல்லை. குறிப்பான ஒரு செயல்திட்டத்துடன் முழு ஆற்றலையும் தொகுத்துக்கொண்டு போராடுவதே அவர் இயல்பு

உதாரணமாக, ஒரு சூழியல் போராட்டத்தை கையிலெடுத்தால் அதையே அவர் முன்னெடுத்தார். உடன்வருபவர்கள் தங்களுக்கு ஈடுபாடுள்ள அரசியல், சமூகப்பிரச்சினைகளை உடன்கொண்டுவந்து கலக்க முயன்றால் அந்த திசைதிருப்புதலுக்கு ஆளாக மறுத்தார். எப்போதுமே குவியம்கொண்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார். அதை காந்தியிடமிருந்தே கற்றுக்கொண்டிருந்தார்.

அவருடைய ஆர்வம் திகழ்ந்த இன்னொரு துறை கல்வி. ஈரோட்டின் அவருடைய குடும்பத்தவரால் தொடங்கப்பட்ட கல்விநிறுவனங்களில் ஆர்வத்துடன் செயலாற்றினார். 1980களில் அங்கேதான் அவருடைய சூழியல்கூடுகைகள் நடைபெற்றன. நான் தர்மபுரியிலிருந்து வந்து கலந்துகொண்டேன்.

அத்தனைக்கும் அப்பால் ஜீவா ஓர் இலக்கியவாசகர், பழந்தமிழிலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்.  இறுதிவரை தமிழ்பயின்றுகொண்டே இருந்தார்.அவருக்கு பாரதி மீது இருந்த பற்று நாள்தோறும் வளர்வது. அரிதான பாரதிவரிகளை தாளில் குறித்துவைத்து சாதாரணமாகப் பேசும்போதும் குறிப்பிடுவது அவருடைய வழக்கம்.

ஜீவா சூழியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நூல்களை மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தார். பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியிருக்கின்றன [டாக்டர் வி.ஜீவானந்தம் நூல்கள், 1டாக்ட வி.ஜீவானந்தம் நூல்கள் 2]

வாழ்நாளின் இறுதியில் ஜீவா மீண்டும் மருத்துவத்துறையில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். செலவுகுறைந்த மருத்துவமனை என்னும் கருத்தாக்கத்தை முன்னெடுத்தார். மருத்துவத்தை லாபம்தரும் தொழிலாக அன்றி குறைந்த லாபத்துடன் செயல்படும் சேவையாக காணும் மருத்துவமனைகள் அவை. ஈரோடு திருச்சி நகரங்களில் அவரும் நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிய மருத்துவமனைகள் அவ்வகையில் சிறப்பாகப் பணியாற்றின. நான் கடைசியாகச் சந்திக்கையில் அந்தியூரில் மலைக்குமேல் ஒரு மருத்துவமனை அமைப்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கு ஆரம்பம் முதலே வழிகாட்டியாக, நலம்பேணுபவராக ஜீவா திகழ்ந்தார். 1995ல் அவர் ஒருங்கிணைத்த சூழியல் உலா ஒன்று தமிழிலக்கியவாதிகளிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. விளைவுகளைப் பற்றிய கவலையே இன்று சலிக்காமல் பணியாற்றிக்கொண்டிருந்தவர்.

நான் ’இன்றைய காந்தி’ நூலை ஜீவாவுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் எனக்கு இன்றைய காந்தியாகவே தெரிந்தார்.

முந்தைய கட்டுரைகுமிழிகள் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஉயிரோவியம்