வலம் இடம்- கடிதங்கள்

 

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

உங்கள் கதைகளில் சில கதைகளில் அவிழ்க்கமுடியாத மர்மம் ஒன்று கடைசியில் வரும். கடைசி முகம் அப்படிப்பட்ட ஒரு கதை. அந்தக்கதையின் இறுதியில் வரும் புதிருக்கு அக்கதையை வைத்து விடை கண்டுபிடிக்க முடியாது. அந்தக் கதைநாயகனின் இடத்தில் நம்மை வைத்துக்கொண்டால் நாம் என்ன முடிவெடுப்போமோ, எதைக் காண்போமோ அதுதான் அந்தப்புதிருக்கு விடை. அது வாசகருக்கு ஏற்ப மாறுபடும்.

அதேபோன்ற கதைதான் வலம் இடம் . “இது ரெண்டுலே ஒண்ணு எடது, ஒண்ணு வலது. வலது எருமை வேணுமா எடது எருமை வேணுமா?” இந்தக் கேள்வி மிக அடிப்படையானது. அங்கே ஏற்கனவே இரண்டு எருமை இருந்தது. ஒன்று கண்கூடான எருமை. இன்னொன்று அதன் extension அல்லது other side ஆன இன்னொரு எருமை. இரண்டும் மறைந்துவிட்டன. இப்போது வந்திருப்பது அதேபோல இரண்டு எருமைகள். இரண்டு எருமைகளில் நிஜத்தையா கருத்தையா நீ தேர்வுசெய்வாய்? நீ என்ன தேர்வுசெய்வாய் என நான் நினைக்கிறேனோ அதை நீ தேர்வுசெய்தால் எருமை உனக்கு என்கிறார் பெரியவர். அவன் சரியாக தேர்வுசெய்கிறான். எருமை வந்துவிடுகிறது.

இதில் நான் எதை தேர்வுசெய்வேன்? கற்பனை எருமையைத்தான். அது இருந்தால் நிஜ எருமை வந்துதான் ஆகவேண்டும். Idea  வந்தால்போதும் matter தொடர்ந்து வந்தாகவேண்டும். matter வந்தால் idea வராமலும் இருக்கலாம். இது என்னுடைய தேர்வு.

ஸ்ரீனிவாஸ்

 

அன்புள்ள ஜெ

வலம் இடம் ஒரு விசித்திரமான கதை. எருமை என்பது ஒரு நிழல்வடிவம். அதன் நிஜவடிவம் கண்ணுக்கு தெரியாமல் உள்ளது என்பதுதான் அடிப்படையான உருவகம் என நினைக்கிறேன். அந்த இன்னொரு எருமையை அவன் படிப்படியாக கண்டுபிடிப்பது ஒருவகையான மனச்சிதைவாகவும் பிரமையாகவும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அங்கிருந்து சென்றுவிட முடிவெடுப்பது அந்த இன்னொரு எருமையா, இங்கே இருக்கும் எருமையா என்ற கேள்வி கதையில் உள்ளது.

திரும்பி வருவது அந்த எருமைகளில் எது? ஒரு புதிர்வழியாக சாவு- வாழ்வு இரண்டையும் வைத்து விளையாடுகிறது கதை. ஒன்று சாவு இன்னொன்று வாழ்வு. ஒன்று தற்காலிகமானது. இன்னொன்று என்றைக்கும் உள்ளது. எது உனக்கு வேண்டும்? எதை தேர்வுசெய்தால் நீ சரியானதைத் தேர்வுசெய்வாய்? அந்தக்கேள்விதான் கதை என நினைக்கிறேன்

ராஜசேகர்

 

அன்புள்ள ஜெ

வலம் இடம் அந்தக்கதைக்குள் ஒரு புதிராக முன்வைக்கப்படும் அடிப்படையான கேள்வியை தவிர்த்தால்கூட ஓர் உணர்ச்சிகரமான கதை. குடும்பத்தில் ஒருவராக இருக்கும் எருமையின் சாவு. அது அளிக்கும் உணர்ச்சிக்கொந்தளிப்புகள். அந்த மனச்சிக்கல்கள் எல்லாம்கூட அந்தச் சாவை சப்கான்ஷியஸாக முன்னாடியே ஊகித்துவிடுவதனால் வருவதுதான் என்று நினைக்கிறேன். அதை பெண் கொஞ்சம் தைரியமாக எதிர்கொள்கிறாள். எந்தச் சாவும் பிறப்பால் ஈடுசெய்யப்படுகிறது. இன்னொரு குட்டி எருமை அந்த இடத்துக்கு வந்துசேர்ந்து அந்த பெரிய இடைவெளியை முழுக்கவே நிரப்பிவிடுகிறது.

ஆர்.சிவக்குமார்

 

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதையின் எருமை பற்றிய வர்ணனைகள் மனதைக் கவர்ந்தன. எனக்கு எருமைகளைப் பிடிக்கும். அவற்றின் கண்கள் அழகானவை. குட்டி எருமையை சில்லுக்கருப்பட்டி போன்ற எருமை என்கிறார். குட்டிஎருமை கொஞ்சம் வைக்கோல் நிறமாக இருக்கும். நல்ல கறுப்பாக இருக்காது. சில்லுக்கருப்பட்டிக்கும் அந்த நிறம்தான். இன்னொரு இடத்தில் எருமைக்குட்டி நல்லா புளியமுத்து கணக்கா இருக்கிறது என்று வருகிறது. எருமைக்குட்டியை பார்க்கும்போதெல்லாம் கொஞ்சவேண்டும் என்று தோன்றும்

 

ராஜலட்சுமி செல்வி

முந்தைய கட்டுரைஅன்றாடத்திலிருந்து திரள்வது
அடுத்த கட்டுரைகொதி- கடிதங்கள் 2