நாகர்கோயிலும் நானும்

அன்புள்ள ஜெ,

மார்ச் நான்காம் தேதி நாகர்கோயிலில் நீங்கள் பேசுவதை அறிந்தேன். நான் நாகர்கோயில் வந்து நீண்டநாட்களாகின்றது. நீங்கள் நாகர்கோயிலில் அனேகமாகப் பேசுவதே இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் பேச்சை நாகர்கோயிலில் கேட்க ஆர்வமாக இருக்கிறது. முடிந்தவரை வரப்பார்க்கிறேன்

ரவிச்சந்திரன்

***

அன்புள்ள ரவிச்சந்திரன்,

நான் நாகர்கோயிலில் பேசுவது மிக அரிது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எம்.எஸ், நாஞ்சில்நாடன், அ.கா.பெருமாள், வேதசகாயகுமார் ஆகியோருக்கு விழாக்களை நடத்தினேன். பேரா.ஜேசுதாசன் தொடங்கி அசோகமித்திரன் வரை சில அஞ்சலிக்கூட்டங்களை வேதசகாயகுமாருடனும் லக்ஷ்மி மணிவண்ணனுடனும் சேர்ந்து நடத்தினேன். குளச்சல் மு.யூசுப்புக்கு நடத்திய பாராட்டுவிழாதான் கடைசியாக. பொதுவாக இங்குள்ள இலக்கிய அமைப்புக்களுடன் தொடர்பில்லை.

இங்கே, குமரிமாவட்டத்தின் உளநிலை மிகச்சிக்கலானது. முதன்மையாக சாதி. வேளாளர்கள், நாடார்கள் என இரண்டு பிரிவு. ஒருவர் நடத்தும் விழாக்களுக்கு இன்னொரு சாரார் வரமாட்டார்கள் –அதற்கு கொள்கை கோட்பாடு என்றெல்லாம் ஏதாவது காரணம் சொல்வார்கள். அப்படி போகாமலிருப்பதே ஒரு பெருமை என்று நினைப்பார்கள்.

வேளாளர்கள் நடுவிலேயே முற்போக்காளர், மரபுவாதிகள் என்ற பிரிவினை உண்டு. நாடார்கள் நடுவே கிறிஸ்தவர், இந்து என்ற பிரிவினை. அதற்குள் சிறுசிறு குழுவினர் உண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தவர், கலையிலக்கியப் பெருமன்றத்தவர் வேறு எவர் நடத்தும் விழாக்களுக்கும் செல்லமாட்டார்கள். அவர்கள் ஒரு ரகசியக்குழு போல.

ஆகவே இங்கே இலக்கியக்கூட்டம் என்றாலே எட்டுபத்து பேர்தான். கோவையிலோ ஈரோட்டிலோ சென்னையிலோ நான் தங்கியிருக்கும் விடுதியின் அறைக்குள்ளேயே இருபதுபேருக்கு குறையாமல் எப்போதுமிருப்பார்கள். ஆகவே இது நடைமுறையில் ‘கூட்டம்’ அல்ல.

நான் சென்ற சில ஆண்டுகளாகவே பார்வதிபுரத்துடன் மட்டுமே என் வாழ்க்கையை நிறுத்திக்கொண்டவன். சென்ற 2019 ஜூனில் அந்த அடிவிழுந்த நிகழ்வுக்குப் பின் ஒரே நாளில் இந்த ஊருடனான பற்று அறுந்துவிட்டது.

அந்த அடிவிழுந்த நிகழ்வின்போது இங்குள்ளவர்களிடமிருந்து வந்த மதவெறுப்பும், கட்சிக்காழ்ப்புகளும் திகைப்பூட்டின. கிறிஸ்தவர்களும் இந்துத்துவர்களும் இணையான வெறுப்பை காட்டினர். பொய்களை திட்டமிட்டு பரப்பினர். இடதுசாரிகள் கொண்டாட்டமிட்டனர். இணையவெளியில் புனைபெயர்களில்  ஏளனம் செய்தனர். என் வாசகர்கள், நண்பர்கள் வெளியே இருந்து வந்து எனக்குத் துணைநின்றனர். இங்கே வாசகர் என எவருமில்லை. இனி என் நிலம் அல்ல இது.

ஒருவகையில் அது ஒரு விடுதலை. அந்த விலக்கம் வந்தபின்னரே நான் காசர்கோடு உட்பட வேறுநிலங்களைப் பற்றி எழுதத் தொடங்கினேன்.

ஆகவே இங்கே பேசுவதில் எந்த ஆர்வமும் இல்லை. லக்ஷ்மி மணிவண்ணன் என் இளவல், அவருக்காகவே பேசுகிறேன். நான் பேசுவதைக்கேட்க அந்த அரங்குக்கு வரப்போகிறவர்கள் பத்துபேர் என்றால் எட்டுபேர் குமரிமாவட்டத்திற்கு வெளியிலிருந்தே வருவார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் நன்று.

ஜெ

***

முந்தைய கட்டுரைகொதி -கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைகுமிழிகள் [சிறுகதை]