துள்ளுதல் என்பது…

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா? நாங்களும் நலமே.

இக்கடிதத்தோடு என்னுடைய கவிதைத் தொகுப்பின் கோப்பை இணைத்துள்ளேன்.

தோன்றியதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன், அதுவும் கவிதைகளாக  2019-லிருந்து  தான்.  வலைதளம் ஆரம்பித்தது 2020-ல், கொரோனா காலகட்டத்தில். ‘வெண்முரசில் நாகர்கள்’ கட்டுரை உங்கள் தளத்தில் வந்த போது, என் தளமும் பரவலான கவனத்தைப் பெற்றது.

அப்போது தான் பிரபு மயிலாடுதுறை என்னோடு என் கவிதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் தந்த ஊக்கம் தான் என்னை மென்மேலும் எழுதத் தூண்டியது. பெரும்பாலான கவிதைகளுக்கு அவர் எதிர்வினையாற்றியிருக்கிறார். அவரின் எதிர்வினை வரவில்லையென்றால் அன்றைய கவிதையை big time சொதப்பியிருக்கிறேன் என்று அர்த்தம்:))

கண்திறக்காத நாய்க்குட்டியைப் போல எனக்கே என் மொழி பிடி படாத நேரமது. ஒன்றைக் காண்பித்து, ‘இது உங்கள் மொழி’ என்று அவர் சொல்லும்போது, மற்றதும் என் மொழி தானே என்று எனக்குத் தோன்றும்.  இப்போது கொஞ்சம் கொஞ்சம் பிடி பட ஆரம்பித்திருக்கிறது. நேர்மையைத் தவிர வேறெதையும் கைக்கொள்ளத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

இரண்டு format-களில் கோப்பை இணைத்துள்ளேன். திறக்க முடியும் என்று நம்புகிறேன். ஒரு ஆசிரியர் மாணவியை வழி நடத்துவது போல எனக்கும் சில வார்த்தைகளைக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பற்றுக் கோடாக வைத்துக்கொள்வேன். தொகுப்பில் ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.

நண்பர் ரமேஷ் சுப்ரமணியன் அட்டைப்படம் வரைந்தளித்திருக்கிறார். ‘இம்’மென்று அமைந்திருக்கும் ஆழ்கடல்’ என்று தலைப்பிடலாம் என்று நினைத்திருக்கிறேன். கிண்டிலின் pentopublish திட்டத்தில் வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.  மார்ச் 10 அதற்கான கடைசி தேதி.

ஜெயகாந்த் முழுக்க முழுக்க எனக்கு பக்க பலமாக இருக்கிறார். Loose words-ஐ உடனுக்குடன் சுட்டிக் காட்டுவார். சிலவற்றை நான் ஏற்றுக் கொள்வதும் உண்டு:)) ஜெயகாந்த், பிரபு இருவருமே தங்கள் suggestions-ஐ சொல்லி விட்டு, final decision-ஐ என்னிடம் விட்டு விடுகிறார்கள்.  ஒவ்வொரு கவிதையையும் மகள்களுக்கும் வாசித்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்:)

உங்கள் விமர்சனம் எதுவானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று கூறிக் கொள்கிறேன்.

நன்றி,

கல்பனா ஜெயகாந்த்.

‘இம்’மென்று அமைந்திருக்கும் ஆழ்கடல்

அன்புள்ள கல்பனா

உங்கள் கடிதத்தைப் படிக்காமலேயே கவிதைக்குள் சென்றேன். முதலில் உருவானது ஆச்சரியம். கவிதையில் இன்று நான் எதிர்பார்ப்பது இரண்டு அடிப்படைத் தகுதிகளை. பொதுவான கவிதைச்சூழலின் எல்லை கடத்தல், தனியான கவிமொழி கொண்டிருத்தல்

இன்றைய நவீனக்கவிதை கூறுமுறை, பேசுபொருள் ஆகிய இரண்டிலும் ஒரு பொதுத்தன்மையை அடைந்துள்ளது. அதிலிருந்து எந்த அளவுக்கு ஒரு கவிதை தனித்து மேலெழுந்துள்ளது என்பதே என் முதன்மையான கேள்வி. அந்த வேறுபாட்டையே முதன்மையாகக் கருதுகிறேன்.

இங்குள்ள கவிதையில் உலகியல் சார்ந்த சில கசப்புகள், சிலவகை கோபங்கள், தனிமையின் சோர்வுகள் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்றன. சிலவகை மீறல்கள் எழுதப்படுகின்றன. இவை ஒருவரின் தனியாளுமையின் வெளிப்பாடாக இல்லாமல் ஒரு காலகட்டத்தில் எழுதும் அனைவருக்கும் பொதுவான குரலாக அமைகையில் தேய்வழக்குகளாகின்றன. எல்லா கவிதையும் ஒரே குரல் என ஒலிக்கிறது.

இரண்டாவதாக, மொழிநடை. பயிற்சியற்ற முகநூல்நடையிலேயே இன்று பெரும்பாலானவர்கள் கவிதைகளையும் எழுதுகிறார்கள். கவிதைமொழிக்கு உள்ளிசை இன்றியமையாதது. முழுக்கமுழுக்க முகநூலிலேயே எழுதினாலும் கவிஞனின் கவிமொழிக்கு இசைமை இருக்கும் என்பதற்கு போகனின் கவிதைகள் உதாரணம். நான் கவிதையில் எதிர்பார்ப்பது மொழியின் வீச்சை. இனிமையாக,கூர்மையாக, தெளிவாக, மயக்கமாக.

இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது. கவிஞர்தான் நீங்கள்.

‘துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை’ ‘உச்சிக்கூடுகட்டி உயிர்புரப்பாய்’ என்பதுபோன்ற வரிகளே கவிதையில் என்னைப்போன்ற ஒருவன் எதிர்பார்ப்பது. ஒரு நாளுக்கு இருநூறு பக்கங்களுக்குக் குறையாமல் வாசிப்பவன், தத்துவம் இலக்கியம் ஆன்மிகமென்று தேடிக்கொண்டிருப்பவன், ஒருநாளுக்கு ஆறுமணிநேரம் எழுதுபவன், அதற்கப்பால் அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் இருப்பது கவிஞரின் இத்தகைய சொற்சேற்கைகளில்தானே ஒழிய எளிமையான கருத்துக்களிலோ உணர்வுகளிலோ அல்ல.

வாழ்த்துக்கள். இத்தொகுதியில் எனக்கு உகக்காத ஒரு கவிதைகூட இல்லை என்பது உண்மையிலேயே திகைப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைசொல்வளர்காடு
அடுத்த கட்டுரைதேவியின் தேசம்