கொதி -கடிதங்கள்-1

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

கொதி சிறுகதை இந்த சிறுகதை வரிசையில் முதலாவதாக வந்து இந்த கதைகளின் ‘மூட்’ என்னவாக இருக்கப்போகிறதென்பதைக் காட்டியது. ஒரு வாசிப்புக்காலம் வரவிருக்கிறது. ஆனால் புனைவுக்களியாட்டுக் கதைகளில் இருக்கும் சிரிப்பும் கொண்டாட்டமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால்  வாழ்க்கை பற்றிய ஒளிமிக்க பார்வை இருக்கும் என்று தோன்றுகிறது.

கதையை மிக இயல்பாக தொட்டு எடுத்து உரையாடல்கள், காட்சிச் சித்திரங்கள் வழியாக மேலே கொண்டுசெல்லும் உங்கள் திறன் வியக்கவைக்கிறது. நான் உலகின் பெரிய மாஸ்டர்களிலேயே இந்த பிரயத்தனமே இல்லாத சரளத்தை அபூர்வமாகவே பார்க்கிறேன். எழுதி எழுதி உருவாக்கிக்கொண்ட சரளம் இது.

ஃபாதர் ஞானையாவின் கதாபாத்திரத்தை அற்புதமாக நிறுவியிருக்கிறீர்கள். ஆத்மாவிலும் பசி கொண்டவர். உடலில் எழுந்த பசியை ஆத்மாவின் பசியாக ஆக்கிக்கொண்டவர். கிறிஸ்துவின் தூயரத்தத்தால் மட்டுமே  ‘கொதி’ அடங்குபவர்.

கிறிஸ்தவ உருவகங்கள் வழியாக அழியாத ஆற்றல்கொண்ட சில கதைகளை எழுதியிருக்கிறீர்கள். தமிழில் அவ்வப்போது கிறிஸ்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்துச் சில கதைகளை சிலர் எழுதியதுண்டு. கிறிஸ்தவ இறையியலில் இருந்து கவித்துவமாக விரியும் கதைகளை வேறு எவருமே எழுதியதில்லை.

ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஜெ

இரண்டு உருவகங்கள் அற்புதமாகச் சந்திக்கின்றன. ஒன்று ஒரு ஃபோக் உருவகம். இன்னொன்று கிறிஸ்தவ கிளாசிக் உருவகம்.

இன்னொருவரால் கொதி போடப்பட்டவரின் கொதியை உறிஞ்சி எடுக்கும் அந்த செம்பு ஒரு உருவகம். அது எதை உறிஞ்சுகிறது? அந்த அனல் என்ன? அந்த சடங்கையே கண்ணால் பார்க்கமுடிகிறது. அது உறிஞ்சுவது ஒரு பசித்த உயிரின் ஆசையை. அல்லது தவிப்பை.

ஏசுவின் தூயரத்தம் சகலபாவங்களையும் நீக்குவது. தேவாலயங்களில் ஹோலி கிரெயிலில் இன்றைக்கும் அருந்துகிறார்கள். ஃபாதர் ஞானையாவின் கொதியை அந்த ரத்தமே கடைசியாக நிறைக்கிறது.

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே– (1பேதுரு 1: 18-19) என்ற பைபிள் வசனம் உள்ளது. ஞானையாவின் இறுதிப்பசி அதுதான்

ராஜ்குமார்

 

அன்புள்ள ஜெ

கொதி என்றால் மலையாளத்தில் உணவுக்கான வெறி. கொதியன் என்று என்னையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கதையை கொதிப்பு என்ற பொருளிலும் வாசிக்கலாம்

உங்கள் கதைகளில் பசியைப்பற்றி வாசிக்க வாசிக்க நெஞ்சம் நெகிழ்கிறது. நம் நாடு எத்தனைபெரிய பசிக்காலகட்டம் வழியாக தாண்டி வந்திருக்கிறது. ‘அனைவரும் குற்றவுணர்ச்சி இல்லாமல் சாப்பிடும் காலம் வரும்’ என்று ஞானையா சொல்லக்கேட்கையில் கண்ணீர்விட்டேன்

செல்வின் குமார்

முந்தைய கட்டுரைகொத்துகொத்தாக நூல்கள்
அடுத்த கட்டுரைநாகர்கோயிலும் நானும்