நீர்வழிப்படுவன

அன்புள்ள ஜெ,

சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வருகிறேன். எழுத்தாளர்களை தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். ஆனால் எவரையும் சந்திக்கவில்லை. நீங்கள் வந்திருந்தால் சந்தித்திருப்பேன். எழுத்தாளர்கள் முகநூலில் காட்டும் செயற்கை முகம் மீது எனக்குச் சலிப்பு. அதோடு புத்தகப்பிரமோ என்று அச்சுபிச்சு ஜோக்குகளாகப் போட்டுக் கொல்கிறார்கள். நீங்கள் எழுதியதை வைத்து நான் நாஞ்சில்நாடனை அறிமுகம் செய்துகொண்டேன்.அது ஒரு இனிய நினைவு. போகன் சங்கர், லக்ஷ்மி மணிவண்ணனை அறிமுகம் செய்ய ஆசை உண்டு.

இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு நீங்கள் பரிந்துரைசெய்யும் ஒரே நூல் என்றால் எதுவாக இருக்கும்? வாங்க விட்டிருக்கலாம். அதனால் கேட்கிறேன்

எம்.ரங்கநாத்

அன்புள்ள ரங்கநாத்,

தக்கலையில் ஒரு ஷோரூமில் கண்ணாடிக்குப்பின் எப்போதுமே மலிவான தோற்றம்கொண்ட புடவைகளையும் துணிகளையும் ’டிஸ்ப்ளே’ செய்திருப்பார்கள். நான் ஒருமுறை அந்த உரிமையாளரிடம் அதைப்பற்றி கேட்டேன். “நல்ல துணிகளா தொங்கவிடலாம்ல?”என்றேன்

“சார், நம்முது சின்ன கடை. இங்க வாறவங்க மலிவு துணி எடுக்க வாறவங்கதான். நல்ல துணி எடுக்கணுமானா பெரிய கடைகள் இருக்கு. இங்க மலிவான, சாதாரண துணிகள் கிடைக்கும்னு சொல்லத்தான் அப்டி டிஸ்ப்ளே பண்ணியிருக்கேன்” என்றார். விளம்பரங்கள் அவற்றுக்கான இலக்குகள் கொண்டவை. நமக்கு உகக்காத விளம்பரம் நமக்குரியது அல்ல.

நான் வாசித்த நூல்களைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறேன். ஆண்டு முழுக்க. இளம்படைப்பாளிகள், மூத்தபடைப்பாளிகள். மறக்கப்பட்ட கிளாசிக்குகள். எல்லாமே என் பரிந்துரைதான். ஆனால் ‘ஒரே நூல்’ பரிந்துரை என்றால் செய்யமாட்டேன்

[நான் பரிந்துரை செய்த எல்லா நூல்களையும் என் தளத்தில் நூலறிமுகம் என்னும் பிரிவின்கீழ் பார்க்கலாம். பார்க்க நூலறிமுகம் ]

எனக்கே ஒரு ஏழெட்டு நண்பர்கள்தான் புத்தகப்பரிந்துரை செய்வார்கள். அவர்களில் ஒருவர் அந்தியூர் மணி. அவரும் ஈரோடு கிருஷ்ணனும் இன்னும் சிலரும் மிக வலுவாகப் பரிந்துரை செய்த நூல் தேவிபாரதியின் நீர்வழிப்படூம். 

நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பது புறநாநூற்று வரி. நீரில் ஒழுகிச்செல்லும் தெப்பம்போல் வாழ்க்கை அதன் வகுக்கப்பட்ட பாதையில் செல்கிறது என்று பொருள். ஒரு கிராமத்து நாவிதரின் வாழ்க்கையைச் சொல்லும் இந்நாவல் இருத்தலியல் நோக்கிலும் ஆழமாக வாசிக்கத்தக்கது என்றார்கள்.

தேவிபாரதியின் நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ் ஆகியநாவல்கள் முன்னரே வெளிவந்துள்ளன.

ஜெ

முந்தைய கட்டுரைபிரேமையின் ஆடல் –ரா.கிரிதரன்
அடுத்த கட்டுரைகொத்துகொத்தாக நூல்கள்