உங்கள் தளம் வழியாக அறிமுகமான எழுத்தாளர்கள் பலர் இன்று அடுத்தடுத்த சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டு வேகமாக முன்சென்றுகொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் வேகமான காலகட்டம் இது என்று சொல்லலாம். இதன் உள்ளடக்கம் சார்ந்து என்னென்ன சிறப்புகள் உள்ளன, எழுத்துக்களின் கலைப்பெறுமதி என்ன என்பதெல்லாம் விரிவாக விமர்சித்தும் வாசித்தும் அறியப்படவேண்டியவை. ஆனால் இத்தனை எழுதப்படுவதும் வாசிக்கப்படுவதும் நிறைவளிக்கிறது.
போகன் சங்கர் இன்று நிலைபெற்றுவிட்ட மூத்த எழுத்தாளர் என கருதப்படுகிறார். ஆனால் அவரை நான் உங்கள் தளத்தில் வெளிவந்த பூ என்னும் கதைவழியாகவே அறிந்துகொண்டேன். அவருடைய ஆரம்பகாலக் கதை அது என நினைக்கிறேன். அவருடைய இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. குறுங்கதைகள், கவிதைகள்\
சுனீல் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை விருதுபெற்ற தொகுப்பு. இப்போது விஷக்கிணறு என்னும் தொகுதி வெளிவந்துள்ளது. இதிலுள்ள விஷக்கிணறு என்னும் கதையை வாசித்திருக்கிறேன். உங்கள் தளத்தில் விமர்சனமும் கண்டேன். முக்கியமான நீள்கதை
நாயகிகள் நாயகர்கள் தொகுதிக்குப்பின் சுரேஷ் பிரதீப்பின் ‘உடனிருப்பவன்; என்ற தொகுதி வெளிவந்துள்ளது. சுரேஷ் பிரதீப்பின் கதைகளின் சொல்முறை எனக்குப் பிடித்திருந்தாலும் அவருடைய பார்வைமேல் விமர்சனம் உண்டு. எதிர்மறையான பார்வை. காஃப்காத்தனமான கதைகள்.
இத்தொகுதிகள் எல்லாம் பரவலாக வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படவேண்டுமென விரும்புகிறேன்.இன்றைக்கு ஏராளமான படைப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. படைப்புக்களை தேடி வாசித்தாலொழிய என்ன நடந்துகொண்டிருக்கிறதென்றே தெரியாமல்போய்விட வாய்ப்பு மிகுதி
சிவக்குமார் எம்
அன்புள்ள சிவக்குமார்,
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி 1992ல் வெளிவந்தது- திசைகளின் நடுவே. அன்னம் வெளியீடு. 1994ல் அடுத்த தொகுதி மண் வெளிவந்தது. ஸ்னேகா பிரசுரம். சுந்தர ராமசாமி பிரமித்துப்போய் ‘ரெண்டு வருசத்துக்குள்ள அடுத்த தொகுப்பா?”என்றார்.
சுந்தர ராமசாமியின் முதல் தொகுதி 1959ல் அவருடைய 28 ஆவது வயதில் வெளிவந்த ‘அக்கரைச் சீமையில்’. தொ.மு.சி.ரகுநாதனின் முன்னுரை[இப்போது மறுபதிப்பாக வெளிவந்துள்ளது] ஐந்தாண்டுகள் கழித்து அடுத்த சிறுகதை தொகுதியான ‘பிரசாதம்’ வெளிவந்தது. [அதுவும் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. க.நா.சு முகப்புரையுடன்] அதற்கடுத்த தொகுதி ’பல்லக்குத்தூக்கிகள்’ பத்தாதாண்டுகள் கழிந்து வெளிவந்தது.
நான் 2003ல் மொத்தமாக ஏழு நூல்களை ஒரே விழாவில் வெளியிட்டேன். ஜெயகாந்தன் வெளியீட்டுரை ஆற்றினார். அடுத்த ஆண்டு பத்துநூல்களை ஒரே நாளில் வெளியிட்டேன். அன்று அப்படி நிகழ்வது அதுவே முதல்முறை. அக்காலத்தில் அது ஒரு பெரிய கலாச்சார அதிர்ச்சி. அசோகமித்திரன் அப்படி நூல்களை வெளியிடக்கூடாது என ஒரு பேட்டியில் சொன்னார். ஆனால் இன்று வழக்கமாக ஆகிவிட்டது.
இது அச்சுத்தொழில் முன்னேற்றம், செய்தித்தொடர்பு முன்னேற்றத்தின் விளைவாக உருவாகும் பெருக்கம். இதற்கிணையாகவே வாசிப்பும் வளர்ந்துள்ளது. புத்தகக் கண்காட்சிகள் வழியாகவும், இணையம் வழியாகவும். கூடவே புத்தகங்கள் பற்றிய பேச்சும் பெருகவேண்டும்
ஜெ