அன்பு நிறை ஜெ,
தாங்களும் , வீட்டிலும் நலமா. யூ கேவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்துவிட்டது. இவ்வருடத்திலும் கணிசமான மாதங்களை தின்றுவிட்டுதான் அடங்கும் என நினைக்கிறேன்.
நண்பர் சுனில் கிருஷ்ணனின் பெரு முயற்சியால் எனது முதல் சிறுகதை தொகுப்பை பதாகையும் யாவரும் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
தொகுப்பிற்கு பெயர் சாம்பனின் பாடல்.
தொகுப்பில் நீங்கள் அரூவில் முதல் பத்து கதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்த அவனும், சாரு பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னியும் இடம் பெற்றிருக்கிறது.ஜீவ கரிகாலனிடம் உங்களுக்கு ஒரு காப்பி அனுப்ப சொல்லி இருக்கிறேன்.
எதையாவது எழுதுங்கள் என்ற உங்கள் சொல் இன்று ஒரு தொகுப்பு வெளியிடும் அளவிற்கு இட்டு வந்திருக்கிறது.அனைத்திற்கும் நன்றி ஜெ.
சூழல் சீரானவுடன் இந்தியா வரும் போது உங்களிடம் கேட்டு கொண்டு நேரில் வந்து சந்திக்கிறேன்.
நன்றி,
தன்ராஜ் மணி
அன்புள்ள தன்ராஜ் மணி,
நண்பர்கள் அனைவருமே புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ”விஷ்ணுபுரம் அமைப்பில் எல்லாருமே எழுத்தாளர்களாக ஆகிவிட்டார்கள், நான் எழுதவில்லை. கடைசியில் நான் மட்டுமே எல்லாரையும் வாசிக்கவேண்டும் போலிருக்கிறது” என்று ஈரோடு கிருஷ்ணன் சலித்துக்கொண்டார்.
[நூல் அவர் பார்வைக்கும் போகவேண்டும். நான்கு வார்த்தை எதிர்மறையாகச் சொல்லிவிட்டார் என்றால் உங்களுக்கு அமோக எதிர்காலம் என்பது தொன்மம்]
நண்பர் சுஷீல்குமாரின் மூங்கில் என்னும் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. யாவரும் பதிப்பக வெளியீடு. இந்நூல்களை அறிமுகம் செய்து ஒரு விழா ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றுகிறது. வெறும் விழாவாக இல்லாமல் தனித்தனி அமர்வுகளாக விவாதிக்கும்படியாக. சென்ற ஆண்டு வெளிவந்த 10 நூல்களுக்கு அப்படி விழா திட்டமிடப்பட்டது- கொரோனாவால் நின்றுவிட்டது
ஜெ