தேவியின் தேசம்

[’அகதி’ என்னும் முதல் சிறுகதைத் தொகுதிக்குப்பின் சா.ராம்குமார் எழுதிய இரண்டாவது நூல் தேவியின் தேசம். அமெரிக்கப் பயண அனுபவங்கள். வழக்கமான பயணியாக அல்லாமல் இந்திய நிர்வாகத்துறையில் இருப்பவராகச் சென்றமையால் அவருடைய பார்வை தனித்துவம் கொண்டதாக உள்ளது]

தேவியின் தேசம் முன்னுரை. சா.ராம்குமார்

எல்லா மனிதர்களைப் போலவும் பயணங்களில் பெரிய ஈர்ப்புடையவன் நான். கல்லூரி காலங்கள் முதலே தனியாக பயணம் செய்வதில் கூடுதல் உற்சாகம்; தனியாக பயணம் செய்யும்போது நாம் கண்டவற்றை அங்கே எவருடனும் பகிராமல் நம்முள் அந்த அனுபவங்களைச் சேர்த்து மொத்தமாக அது ஒரு தனி அனுபவமாகத் திகழும். அந்த அனுபவும் தன்னளவில் மிக மிக ஆழமானது. நண்பர்களுடன் பயணம் செல்லும்போது உற்சாக மனநிலையில் மட்டுமே இருந்திருக்கின்றேன். அந்தச் சமயத்தில் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதில் எனக்குச் சிக்கல் இருந்ததுண்டு. ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சி காலத்தில் இருக்கும்போது இந்தியாவில் உள்ள இருபது மாநிலங்களுக்கு மேல் பயணித்திருப்பேன். பொதுவாக நாம் ஏற்கனவே பயணித்த திசையில் அனுப்பாமல் புதிய திசையில் அனுப்புவார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான நிலக்காட்சிகளை அந்தப் பயணத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் கண்டிருக்கின்றேன். இன்று நிலக்காட்சிகள் என்னை அப்படி வசீகரிப்பதில்லை. அருவிகள் மட்டும் விதிவிலக்கு. மனிதர்களும் அந்தச் சமூகத்தின் பரிணாமத்தையும் அறிந்துகொள்வது ஆர்வமூட்டுகின்றது.

அமெரிக்காவைப் பற்றி முதன் முதலில் ஐந்து வயதுக்குள்ளாகவே கேள்விப்பட்டுவிட்டிருக்கின்றேன். அப்போது மும்பை நகரும் இந்தியாவிற்கு வெளியில் இருந்ததாக நினைவு. பள்ளிக்காலங்களில் என் பொதுஅறிவு வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தது என் ஆசிரியை திருமதி ஜெயந்தி. புதிய தகவல்களை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் சோவியத் ருஷ்யா ஒரு பெரிய தேசமாக இருந்தததையும் பின்னர் அது பிளவுண்டதையும் அறிந்தேன். அதன் பின் நான் பார்த்த ஆங்கில திரைப்படங்கள் அனைத்திலும் சோவியத் வில்லன்கள்தான் வருவர். கலை இசையில் என் தலைமுறைக்கு முன்னர் இருந்தவர்களுக்கு சோவியத் ருஷ்யாதான் முக்கிய அறிமுகமாக இருந்தது. ஆனால் என் தலைமுறைக்கு, அதாவது 1990களில் பொருளாதாரக் கொள்கைகள் தளர்வாக்கப்பட்டபின் இருந்த தலைமுறைக்கு அமெரிக்காதான் முக்கிய அறிமுகம். இசை, சினிமா, பொருட்கள் என்று எல்லாவற்றிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் மட்டுமே. அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில்தான் முன் நகர்ந்தது.

அமெரிக்கா என்ற தேசத்தைப் பார்க்க விரும்பாத பிற தேசத்தவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. எப்படியாவது அங்கு சென்று வாழ்க்கையைத் தொடங்கிவிட வேண்டும் என்று ஏங்கும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறேன். ‘அமெரிக்க ஏகாதிபத்தியம்’, ‘அமெரிக்காவில் இருக்கும் நாசாவில்’, ‘அமெரிக்காவிலேயே இப்படியாக நடக்குது’, ‘அமெரிக்கா என்ன அமெரிக்கா’ என்று அவரவர் அறிந்த அளவில் ஒரு குறைந்தபட்ச சித்திரத்தை  மனதிற்குள் நிர்ணயிப்பதைப் பார்த்திருக்கிறேன். 1980-90களில் பிறந்து இன்று வாழ்பவர்களுக்கு அமெரிக்கா, காட்சி ஊடகமாக மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தொலைக்காட்சித் தொடர்கள், ஹாலிவுட் செட்டுக்கு வெளியே எடுக்கப்பட்டுள்ள படங்கள், பாப் இசை, யூட்யூப் காணொளி வழியாக புகழ்பெற்றிருக்கும் நட்சத்திரங்கள் என்று இவை எல்லாம் அமெரிக்காவை சற்றே அருகே கொண்டுவந்திருக்கின்றன.

அமெரிக்கா என்ற தேசத்தின் மீது ‘சேகுவேரா’, ‘வினவு’, ‘பல இரகசிய சதி ஆவணப்படங்கள்’ மூலம் என்னுள் ஒரு படிமம் இருந்தது. ஒட்டுமொத்த முதலாளித்துவத்துவ சித்தாந்தத்தின் வடிவமாகவும் எளிய பொதுவுடைமைக்கு எதிரான வில்லனாகவும் என் மனதில் ஒரு பிம்பம் பதிவாகி இருந்தது.

ஐ.ஏ.எஸ். தேர்விற்குப் படிக்கும்போதும் பின்னர் அரசுப்பணியில் சேர்ந்தபிறகும்தான் ஒரு தேசத்தை நிர்வகிப்பது எத்தனை சிக்கலானது என்று புரிந்தது. அமெரிக்கா மீது ஒரு பெரும் மரியாதை வருவதற்கும் அதுவே காரணமாக இருந்தது. ஒரு பயணியாக, அதைவிட அரசு ஊழியனாக, பலமுறை அரசில் எடுக்கப்படும் முடிவுகள், நிகழ்வுகள் அமெரிக்காவில் எப்படி நடக்கின்றன என்பதை அறியும் ஆர்வம் இருந்தது. எடுத்துக்காட்டாக எப்படி நிலத்தைப் பகுத்து வைத்திருக்கிறார்கள், எப்படி நீர் மேலாண்மை செய்கிறார்கள் என்பது தொடங்கி ஹாலிவுட் சினிமாக்களில் அடி வாங்கும் காவல் வாகனங்களை எப்படிப் பழுது பார்க்கிறார்கள் என்பதுவரை.

மக்களாட்சியை கிட்டத்தட்ட அனைத்து அடுக்குகளிலும் எடுத்துச்சென்றுள்ள தேசம் என்றால் அதுவும் அமெரிக்காதான். மிக மிக எளிய பதவிகளுக்கு எல்லாம் தேர்தல் வழக்கம் கொண்ட தேசம்; அதிபர் முதல் மாவட்டத்தில் பிணக்கிடங்கு அதிகாரியாக பணிசெய்பவர்வரை எல்லாமே தேர்வுமுறைதான். இது ஒருபுறம் இருக்க உலகில் இருக்கும் சிறந்த திறமை கொண்டவர்கள் எல்லாம் அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்பை நோக்கி இன்றும் நகர்ந்துகொண்டே இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்து இது நடைபெற்றுவருகிறது. இன்றும் உலகில் பதியப்படும் காப்புரிமைகள் பெரும்பாலும் அமெரிக்காவில் தான் பதியப்படுகின்றன. உலகின் முதல் மக்களாட்சிக்குச் செல்வதில் எனக்கு உற்சாகம் இருந்தது.

என் சகோதரர் திரு.நந்தகுமாரும் அண்ணி திருமதி சந்தியாதேவி அவர்களும் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. அவர்களுக்கு என் நன்றிகள். என் அண்ணனின் அன்பு மகள் இஷா அமெரிக்காவில் என் பயணத்தை மேலும் இன்பமாக்கினாள். அமெரிக்காவின் நியூஜெர்சியில் வாழும் நண்பர் பழநிக்கும் என் நன்றிகள். புத்தகத்தை சரிபார்க்க உதவி செய்து தன் கருத்துகளைப் பகிர்ந்த நண்பர் திரு.ஜா.ராஜகோபாலுக்கு என் நன்றிகள். மிகச்சிறிய ஒரு தொலைபேசி உரையாடலிலேயே இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுத ஒப்புதல் தெரிவித்த திரு.த.உதயச்சந்திரன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். ‘ஒற்றன்’ நாவல் மூலம் என்னைக் கவர்ந்து எழுததூண்டியத் திரு.அசோகமித்ரன் அவர்களுக்கும் என் மரியாதை.

இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய வசந்தகுமார் அண்ணாச்சிக்கும் என் நன்றிகள்.

சா.ராம்குமார்

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
தமிழகப் பொருளியல்- ராம்குமார்

முந்தைய கட்டுரைதுள்ளுதல் என்பது…
அடுத்த கட்டுரைசாம்பனின் பாடல், மூங்கில்…