விமர்சனங்களும், ரசனையும்

விவாதங்கள் நடுவே-கடிதங்கள்

விவாதமொழி- கடிதம்

இந்துவும் இந்துத்துவரும் – கடிதம்

விவாதம், மொழி எல்லைகள்

அன்புள்ள ஜெ

’எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச்சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவர். அவர் எனக்கு அணுக்கமானவர்தான்’ என்ற வரி ஆச்சரியமளித்தது. இது இலக்கிய மதிப்பீடுகளுக்கே எதிரானது அல்லவா? நீங்கள் இதுவரைச் சொல்லிக்கொண்டிருந்தவற்றுக்கு முற்றிலும் மாறானது. இளமையில் இப்படிச் சொல்லியிருப்பீர்களா? இப்போது திரும்ப எடுத்துக்கொள்கிறீர்களா?

அருண்.ஆர்

அன்புள்ள அருண்,

அந்த எண்ணம் இளமையில் இருந்தது இல்லை என ஒப்புக்கொள்கிறேன். அன்றெல்லாம் இலக்கிய அழகியல் சார்ந்த அளவுகோல்களை மதவெறிபோல பற்றிக்கொண்டிருந்தேன். இன்று என் பார்வை மிக விரிந்திருக்கிறது.

ஒருவர் ஒரு கவிதையை எழுதுகிறார் என்றால், ஒரு நூலை வாசிக்கிறார் என்றால், அதனாலேயே அவர் தமிழ்ச் சமூகச்சூழலில் பல்லாயிரத்தில் ஒருவர். அது எந்த தரமான கவிதையாக இருந்தாலும் சரி. அவருடையது எந்தக் கருத்தாக இருந்தாலும் சரி. அவர் ஓர் அறிவுஜீவி, அவர் ஓர் இலக்கியவாதி. அவர் என்னுடைய ‘குலம்’. இங்கே வாழும் எவரைவிடவும் எனக்கு அணுக்கமானவர் அவர்.

அவர் எழுதும் கவிதையோ அவர் சொல்லும் கருத்தோ எனக்கு உடன்பாடாக இல்லாமலிருக்கலாம். இலக்கியச்சூழலில் அப்படி பல தரப்புகள், பல போக்குகள் இருக்கலாம். என்னுடைய அழகியல்பார்வை அதிலொன்று. அதுவே அறுதியானதும் முழுமையானதும் அல்ல. அவர் இன்னொரு தரப்பைச் சேர்ந்தவர், அவ்வளவுதான்

நான் விழாக்களில் கலந்துகொள்ளும்போது எனக்கு நூல்களை பரிசளிப்பார்கள். பெரும்பாலும் இளம்கவிஞர்கள், இளம் எழுத்தாளர்கள். அவை பெரும்பாலும் முதிரா எழுத்தாக இருக்கும். நான் பெரும்பாலும் எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன் என்றால் நம்ப மாட்டீர்கள். அவற்றில் பெரும்பாலும் எல்லா நூல்களிலும் ஏதேனும் ஒருசில படைப்புக்கள் எனக்கு  சுவாரசியமானவையாகவும் இருக்கின்றன என்றால் இன்னும் நம்ப மாட்டீர்கள்.

என் நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு, “வர வர எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சிட்டீங்க” என்று ஈரோடு கிருஷ்ணன் அடிக்கடிச் சொல்வார். உண்மைதான், கதை, கவிதை ஆகியவை தன்னளவிலேயே ரசிப்புக்குரியவைதானே? அதெப்படி ஒரு கதை கொஞ்சம்கூட நன்றாக இல்லாமல் ஆகமுடியும்?

அது நித்யா முன்பு எப்போதோ சொன்ன ஒர் அறிவுரை. அன்று அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டியில் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது இசைகற்ற ஒரு நண்பர் ஒரு பாட்டைப்பற்றிச் சொன்னபோது “அதை கேட்டாலே வாந்தி வரும்” என்றார்.

நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பாடல் எதுவாக இருந்தாலும் கேட்கப்பிடிக்கும். அதெப்படி பாட்டு வாந்திவருவதாக இருக்கமுடியும்? பாட்டு என்பதே ஓர் அரிய, இனிய நிகழ்வுதானே? நித்யா சொன்னது அப்போது புரிந்தது

அவரிடம் நான் சொன்னேன். “பாட்டு என்பது நம் மரபில் சரஸ்வதி. சரஸ்வதி எப்படி குமட்டல் அளிக்க முடியும்? இன்னும் நன்றாக இருந்திருக்கலாம், இன்னும் போக இடமிருக்கிறது என்று தோன்றலாம். அதற்கு முடிவே இல்லை. ஆனால் எப்படி அது அருவருப்பானதாக ஆகும்?”

கலையை ஒருபோதும் பழிக்கலாகாது என்று அவரிடம் சொன்னேன். அது நானே எனக்குச் சொல்லிக்கொண்டது. கலை இனியது. இலக்கியம் உயர்வானது. கலைஞர்களும் இலக்கியவாதிகளும் எவரானாலும் கலைமகள் அருள்கொண்டவர்களே.

நன்றாக இல்லை என்று சொல்லாமல் இலக்கியவிமர்சனம் இல்லை. ஆனால் ஏன் நன்றாக இல்லை என்பதற்கான காரணங்களாகவே அது அமையவேண்டும். அது ஒரு விவாதத் தரப்புதான்

எனக்கு ஓர் அழகியல்பார்வை உள்ளது. அந்தப்பார்வையுடன் நான் உள்ளே வந்து இலக்கியப்படைப்புக்களை ஆராயவில்லை. மாறாக இலக்கிய முன்னோடிகளிடமிருந்து அதை உருவாக்கிக்கொண்டேன். வாசிக்க வாசிக்க வளர்த்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பேசி நிறுவமுயல்கிறேன்.

நான் இலக்கியக்கருத்துக்களைச் சொல்வது அந்த அளவுகோலின்படி. ஆனால் அதற்கு வெளியே உள்ளதெல்லாம் பிழை என்றோ குறைவானது என்றோ இன்று நான் நினைக்கவில்லை. என் கருத்துக்களை ஒருவர் மறுத்தார் என்றால் அதில் மேலதிகமாக நான் தெளிவுபடுத்த ஏதேனும் இருந்தால் மட்டுமே மீண்டும் எழுதுகிறேன். இல்லையேல் அது அவருடைய கருத்து என்று விட்டுவிடுகிறேன்.

என்னுடையது ஒரு தரப்பு. அறுதியானது அல்ல, ஒரு குரல்தான். நான் சொல்வது தீர்ப்பு அல்ல, ஒரு பார்வைதான். இலக்கியச்சூழலில் இப்படி பல தரப்புகள் இருக்கலாம். அவை முரண்பட்டு மோதி முன்னகரும் முரணியக்கமே கருத்துச்செயல்பாட்டில் இயல்பாக நிகழ்வது.

ஆனால் இப்போது கொஞ்சம்கொஞ்சமாக அந்த அழகியல்நோக்கை முன்வைப்பதிலும் ஆர்வமிழந்துவிட்டேன். அது தமிழில் புதுமைப்பித்தன் க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. ஒற்றைத்தரப்பாக அல்ல, ஒர் அறிவுத்தளமாக. உள்விவாதங்களுடனும் முரண்பாடுகளுடனும் வளர்ந்தது. அதை ஏறத்தாழ முழுமையாகவே நான் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசாம்பனின் பாடல், மூங்கில்…
அடுத்த கட்டுரைநாகர்கோயிலில் பேசுகிறேன்