விவாதங்கள் நடுவே-கடிதங்கள்
விவாதமொழி- கடிதம்
இந்துவும் இந்துத்துவரும் – கடிதம்
அன்புள்ள ஜெ,
பேச்சு நாகரீகம் பற்றிய உங்கள் குறிப்பையும் அதற்கு வந்த கடிதத்தையும் பார்த்தேன். எச்சப்பொறுக்கி என்ற வசைதான் உங்களைப்பற்றி வந்த வசைகளில் உச்சம் என நினைக்கிறேன். இந்துத்துவ அமைப்பில் உயர்பொறுப்பில் இருப்பவர் ஒருவர் அப்படி வசைபாடிக்கொண்டிருக்கிறார் என்பதும் இங்கே பேசும் இந்துத்துவர்கள் அனைவரும் அவரை ஆதரிக்கிறார்கள் என்பதும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர்களின் நாகரீகம் அப்படி. ஒரு மார்க்ஸியர் உங்களை ஃபாஸிஸ்ட் என்று திட்டுவார். இவர்கள் இப்படி சாதியவசை தவிர என்ன சொல்லிவிடமுடியும்?
ஆனால் எனக்கு ஆச்சரியம் இடதுசாரி என்று சொல்லிக்கொண்டு ஒருவர் உங்கள் மீதான விமர்சனமாகத் தொகுக்கும் நூலில் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகளே இல்லை என்பதுதான். அதில் பலர் குட்டிக்குட்டி எழுத்தாளர்கள். இலக்கிய அங்கீகாரத்துக்கு ஏங்கி, அது கிடைக்காமல் மனம் குமைபவர்கள். பல்வேறு மொழி, இன, ஃபாஸிச குழுக்களைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளனர். இவர்களை இணைத்துக்கொண்டுதான் ஒரு விமர்சனத்தை உங்கள்மேல் உருவாக்கும் நிலையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பது.
அருண். ஆர்
அன்புள்ள அருண்,
இடதுசாரி அரசியல் இன்று வழிகாட்டுதல் இல்லாமல் நசிவுற்று ஒரு வசைவெளியாக உள்ளது. பழைய பெருந்தலைகள் களத்தில் இல்லை. வாசிப்பில்லாத, வாசித்தாலும் புரிந்துகொள்ளும் திராணியற்ற சில்லுண்டிகள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே எவர்மேலும் தங்கள் கோட்பாடு, தத்துவம் சார்ந்து அழுத்தமான விமர்சனங்களை முன்வைக்க அவர்களால் இன்று இயலாது. நையாண்டிகள், இடக்குகள், வசைகள் மட்டுமே இயலும்.
இந்த விமர்சகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் சொந்தக் காழ்ப்புகளுக்கு அரசியல்நிறம் பூசி முன்வைப்பவர்கள். உதாரணம், யமுனா ராஜேந்திரனேதான். மிகப்பெரும்பாலும் இந்த விமர்சனங்களெல்லாம் அந்தந்த காலகட்டத்து தனிநபர் காழ்ப்புகள். தாழ்வுணர்ச்சிச் சிக்கல்கள்.
ஓர் உதாரணம், ஓர் ஈழத்துப் பெண்மணி. ஏதோ நாவல் எழுதியிருந்தார். அப்படி எத்தனையோ பெண்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அந்நாவலைப் பற்றி ஒருவரிகூட சொன்னதில்லை. அவரைப்பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. ஆனால் அவரை நான் தீவிரமாக எதிர்க்கிறேன் என அவரே கற்பனை செய்துகொண்டார். கொதிப்படைந்து எழுதி பேசி வசைபாடி பத்தாண்டுகளை கடந்துவிட்டார். இன்றும் தகித்துக் கொண்டிருக்கிறார்.
என்னிடம் பலர் கேட்பார்கள் ”அந்தம்மாவை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?” என்று. “என் விமர்சனத்தை எங்கே படித்தீர்கள்?” என்று கேட்பேன். திகைப்பார்கள். ”நான் ஒரு சொல்கூட சொன்னதில்லை, சொல்லப்போவதுமில்லை” என்பேன். இந்தவகையான கற்பனைப் பயங்களை எவர் எதிர்கொள்ளமுடியும்?
ஒருவித நிழல்போர் இது. தன் படைப்பை நான் ஏற்கப்போவதில்லை என்று அவர்களே எண்ணிக்கொள்கிறார்கள். அந்த எண்ணத்தை சோர்வாகவும் கசப்பாகவும் ஆக்கிக்கொள்கிறார்கள். அதன்பின் கொப்பளிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் மிகப்பெரும்பாலானவர்களைப் பற்றி நான் ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. உண்மையில் பலருடைய பெயர்களையே நான் கேள்விப்பட்டதில்லை. அவர்களைப் பற்றி இனிமேலும் பேசப்போவதில்லை.
மிக அரிதாகச் சிலரைப்பற்றி ஓரிரு வரிகள் மென்கேலியாகச் சொல்லியிருப்பேன். அவர்கள் மீதான கனிவுடனேயே சொல்கிறேன். அவர்கள் எழுதியவற்றின் மேல் எனக்கு எந்த மதிப்பும் ஈடுபாடும் இல்லாமலிருக்கலாம், அவர்கள் என்னை வசைபாடுவதை நான் அறிந்துமிருக்கலாம். ஆனாலும் அந்த கனிவு உண்டு.
ஏனென்றால் எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச்சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவர். அவர் எனக்கு அணுக்கமானவர்தான்.
ஒருவரின் படைப்பிலக்கியச் செயல்பாட்டை நான் நிராகரிப்பதில்லை. ஓர் இலக்கியத்தோல்வியை கொண்டாடுவதுமில்லை. அரிதாக, சிலர் சிலவகை பாவனைகளை கொண்டு மேட்டிமை நடிக்கும்போது, அதனூடாக சில திரிபுகளை உருவாக்கும்போது மட்டும் கூர்மையாக அவர்களின் இடம் உண்மையில் எவ்வளவு என்று சுட்டுகிறேன். அதுவும் ஒன்றுக்கு இருமுறை யோசித்தபின்பு.
சூழலில் எழும் பெரும்பாலான காழ்ப்புகளின் அடியில் சாதி, மதம் ஆகியவை இருப்பதை அறிய அறிய சோர்வுறுகிறேன். அரசியல்நிலைபாடு என்று சொல்வார்கள், ஆனால் அது எந்தவகையான கொள்கையும் சார்ந்தது அல்ல. சாதி,மதம் சார்ந்த தன்னல நோக்கும் பிறன்வெறுப்பும் மட்டுமே அவர்களை இயக்குகிறது.
இந்த இணைய ஊடகம் இல்லாத காலகட்டத்தில் இதெல்லாம் பெரிதாக வெளியே தெரிந்ததில்லை. இன்று ஒவ்வொரு கருத்துக்கும் பின்னாலிருக்கும் உண்மையான ஆளுமை எது என எளிதில் காணமுடியும். ஈவேரா, அம்பேத்கர் அல்லது மார்க்ஸ் படம் வைத்துக்கொண்டு, இந்துவெறுப்பையும் இந்திய எதிர்ப்பையும் கக்குபவர் அதிதீவிர பெந்தேகோஸ்து கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமியர் என்று அறியும்போது அறிவியக்கம் மீதான நம்பிக்கை தளர்கிறது. இந்த போலி உணர்ச்சிகளுடன் எவரும் உரையாடமுடியாது. ஒவ்வொருவரையும் புலனறிவதும் வெட்டிவேலை.
காழ்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? எதிர்ப்பு என்பது கொள்கை சார்ந்தது, நிலைபாடு சார்ந்தது. அவ்வாறு எதிர்ப்பவர் எதிர்க்கப்படும் தரப்பை சரியாக தொகுத்துக்கொள்வார். எதிர்க்கப்படுபவரின் சொற்களையோ கருத்துக்களையோ மிகத்துல்லியமாக தொகுத்துக்கொள்வார். எதிர்க்கப்படுபவர் எதை முன்வைக்கிறாரோ அதற்கு மறுப்பை முன்வைப்பார்.
காழ்ப்பாளருக்கு கருத்து முக்கியமே அல்ல. அவருக்கு எதிரி மட்டும்தான் இருக்கிறார், எதிர்த்தரப்பு இல்லை. ஆகவே எதிரியை தனக்கு வசதிப்பட்டபடி புனைந்துகொள்கிறார். தான் எதிர்க்கும், வெறுக்கும் எல்லா குணாதிசயங்களும் கொண்டவராக அவரை தொகுத்துக்கொள்கிறார். அதற்கேற்ப எதிரியின் எல்லா சொற்களையும், தர்க்கங்களையும் திரிக்கிறார். அதன்பின் வசைபாட ஆரம்பிக்கிறார்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். நான் ஷோபாசக்தி பற்றிய ஒரு விவாதத்தில் சொன்னேன். ஷோபா சக்தி தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அவரை எவரும் விமர்சனம் செய்யலாம், ஆனால் இழிவுபடுத்துவதும் அவதூறுசெய்வதும் நம் இலக்கியச்சூழலை நாமே அழிப்பதற்குச் சமம். அதைச் செய்யக்கூடாது. உளச்சிக்கல்களும் காழ்ப்புகளும் அதற்கு இடமளிக்கலாகாது.
அதை இடதுசாரி இதழ் ஒன்று இப்படி புரிந்துகொண்டிருக்கிறது. ‘எழுதுபவர்களை வாசிப்பவர்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்று ஜெயமோகன் சொல்கிறார்’ ஒரு தலையங்கமே எழுதியிருக்கிறது.எழுத்ததிகாரம் ! சொல்லதிகாரம் !!-ஆசிரியர் குறிப்பு இந்த தலையங்கம் மட்டுமல்ல இதழ் முழுக்கவே இதேவகையான அறியாமையின் களிநடனம்தான்.
காழ்ப்பும் அறியாமையும் சரிவரக்கலந்தால் உருவாகும் மழுங்கல் இது. இதனுடன் உரையாடவே முடியாது. இந்த தரப்பை மட்டும் வாசித்துவிட்டு ‘அதெப்படி, வாசிப்பவன் எழுதுபவனை விமர்சிக்கக்கூடாதா?” என்று ஒரு கூட்டம் கொந்தளிக்கும். அவர்களுக்கு ஒரே ஒருமுறை நான் சொன்னதென்ன என்று சுட்டி கொடுக்கலாம். அதன்பின் அவர்கள் ஆடி நிறைய விட்டுவிட்டவேண்டியதுதான்.
நான் பலமுறை சொன்னதுபோல இதெல்லாம் என்றுமுள்ளது. இன்று எல்லா சொற்களையும் வெளியிட வெளி உள்ளது. ஆகவே இவை மிகப்பெரிதாகத் தெரிகின்றன
ஜெ