இந்துவும் இந்துத்துவரும் – கடிதம்

விவாதங்கள் நடுவே-கடிதங்கள்

விவாதமொழி- கடிதம்

அன்புள்ள ஜெ

நான் வெளிநாட்டில் வசிக்கும் ஓர் இந்தியன், இந்து,அதில் எனக்குப் பெருமையும் உண்டு. உங்கள் தளத்தில் வெளிவந்த கடிதத்தை வாசித்து மிகுந்த மனவருத்தமடைந்தேன்.ஒருவர் எங்கோ உங்களை கேவலமாக வசைபாடுவது வேறு. அதை நீங்களே எடுத்து எங்களுக்கு அளிப்பது வேறு. உங்கள் வாசகர்களின் மனம் அதைவாசித்தால் வருத்தத்துக்கு ஆளாகும்.

அந்த கடிதத்தின் மொழிநடை என்னை மிகுந்த கசப்புக்கு உள்ளாக்கியது. இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வெட்கி நாணவேண்டிய மொழி அது. முக்கால்நூற்றாண்டாக பிராமணர்களை இங்கே வசைபாடியிருக்கிறார்கள். அவர்களைக்கூட எந்த பிராமணரும் இந்த நடையில் திருப்பிப் பேசியதில்லை. ஓர் எழுத்தாளரை, சிந்தனையாளரை இப்படிப் பேசும் பழக்கம் இந்துமதத்தில் எப்போது வந்தது ? நான் நினைக்கும் இந்துமதம் இந்தியாவிலேயே இல்லையா? நினைக்க நினைக்க ஆயாசமாக இருக்கிறது

எம்.சத்யநாராயணன்

அன்புள்ள சத்யநாராயணன்,

அது இந்து மதத்தின் குரல் அல்ல. அது இந்துத்துவர்களின் குரல்.அதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவ்வேறுபாட்டை இந்து மதத்தின் எதிரிகள் அழிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இந்துத்துவர்களும் முயல்கிறார்கள். இந்துக்கள் அவ்வேறுபாட்டை உணர்ந்து பேணியாகவேண்டும்

அரசியல்மனநிலை என்று ஒன்று உண்டு. அது இங்கே ஒரு மூர்க்கமான பிடிவாதமாக, வெறியாக மாறிவிட்டிருக்கிறது. இன்றைய அரசியலே அப்படித்தான்.

ஒரு நிகழ்வு. சிலநாட்களுக்கு முன் இணையத்தில் நிகழ்ந்த ஒரு விவாதம் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். இங்கே இடதுசாரிகள் சிலர் நான் கௌரி லங்கேஷ், கல்பூர்கி கொலையை கண்டிக்கவில்லை என்றும் அவர்கள் கொலையுண்டதை ஆதரித்தேன் என்றும் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மேடைகளில் பேசுகிறார்கள். கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

அதை வாசிப்புப்பழக்கமில்லாத ஒரு இடதுசாரிவெறியர் ஒரு விவாதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். வாசிக்கும் பழக்கமுள்ள சிலர் நான் அக்கொலைகளை கண்டித்து எழுதிய கட்டுரைகளை சுட்டி கொடுத்திருக்கிறார்கள்.

தமிழில் அன்று வெளிவந்த கட்டுரைகளிலேயே மிகக்கடுமையான கண்டனம் என்னுடையது. மற்ற கண்டனங்கள் கவனமான அரசியல்மொழியில் அமைந்த உணர்வற்ற எதிர்வினைகள். நான் ஒன்றுக்குமேற்பட்ட முறை கண்டனம் தெரிவித்திருக்கிறேன். அந்த விசாரணைகளை தொடர்ந்து சென்று மேலும் எழுதியிருக்கிறேன். மலையாளத்திலும் எழுதினேன். என் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும்கூட வெளியாயின.

ஆனால் அந்தச் சுட்டிகள் கொடுக்கப்பட்டதுமே அக்கண்டனங்கள் ‘மழுப்பல்கள்’ என்று சொன்னார்கள் இடதுசாரிகள். அதிலுள்ள குறிப்பான வரிகள் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்தவரிகளையும் ஏற்கமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். ’எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தெரிவித்திருந்தால் அது எதிர்ப்பே அல்ல’ இதுதான் அவர்களின் நிலைபாடு

இது பிழையான புரிதல் அல்ல, இதுதான் அரசியல். ஓர் அரசியல்வெறியனைப் பொறுத்தவரை எதிர்க்கருத்து கொண்டவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கவேண்டிய கீழ்நிலையாளர்கள். கீழ்த்தரமாக வசைபாடப்படவேண்டியவர்கள்.

அந்தந்த சாதியின் உளவியலை ஒட்டி வசை வெளிவருகிறது. எச்சில்பொறுக்கி என்பது இங்கே சமூகக்கீழ்நிலையில் இருக்கும் பழங்குடி- நாடோடி மக்களைக் குறிக்கும் வசை. அத்தகைய பல வசைகள் புழக்கத்திலுள்ளன.

சரி, ஒருவர் ஆதரித்தால் என்ன நிலைபாடு எடுப்பார்கள்? ஆதரித்தால் போதாது, முழுக்க ஆதரிக்கவேண்டும். ஒவ்வொன்றையும் ஆதரிக்கவேண்டும். முழுக்க ஆதரித்தால்கூட போதாது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வரியையும் அப்படியே சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால்கூட போதாது அக்கட்சிக்குள் அவர்கள் இருக்கும் உட்குழுவைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். அக்குழு பெரும்பாலும் சாதிக்குழுவாகவே இருக்கும்.

இந்த அரசியல்சூழல் என்றுமுள்ளது, இன்று மூர்க்கமாகியிருக்கிறது. அதற்கு எல்லா குரல்களையும் பதிவிடும் சமூக ஊடகம் ஒரு காரணம். அதற்குமேல் இதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.

இன்னொரு நிகழ்வு. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எம்.ஜி.ஆரை கேலிசெய்து எழுதி அது விவாதமாக ஆகியது நினைவிருக்கலாம். அப்போது ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து கெட்டவார்த்தைகளால் வசைபாடிக்கொண்டே இருந்தார். நான் அன்று ஒரு கொள்கை வைத்திருந்தேன், அத்தனை தொலைபேசி அழைப்புக்களையும் எடுத்து அவர்களின் வசைகளை கடைசிவரை பொறுமையாகக் கேட்பேன்

ஓராண்டுக்குப் பின் அவரே அழைத்தார். அவர் ஒரு தையல்காரர். ”சார், நான்தான் போன வருஷம் உங்களை கெட்டவார்த்தை சொன்னவன்” என்று அறிமுகம் செய்துகொண்டார்

“சொல்லுங்க” என்றேன். அவர் பெயரே எனக்கு நினைவிருந்தது

“எட்டு வருசம் கழிஞ்சு எனக்கு குழந்தை பிறந்திருக்கு சார். என் வீட்டுக்காரி சொல்றா, நீங்க சரஸ்வதி கடாட்சம் உள்ளவரு. உங்களை திட்டினா குழந்தைக்கு படிப்பு வராதுன்னு”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கு கோபம் ஒண்ணும் இல்லை”என்றேன்

“இல்லைசார் நீங்க சாபம் போட்டா குழந்தைக்கு படிப்பு வராது சார்”

“நான் சாபம் போடல்லை. குழந்தையை வாழ்த்துறேன்… போருமா?”

அவருக்கு நம்பிக்கை வரவில்லை. அவருடைய விலாசம் வாங்கி குழந்தைக்கு ஒரு சிறு தொகை அனுப்பி வைத்தேன். கூடவே என் வீட்டருகே உள்ள கோயிலின் பிரசாதமும் அனுப்பினேன்,

இன்றுகூட அவ்வப்போது அவருடைய அழைப்பு வரும். குழந்தை பற்றிச் சொல்வார். நாகர்கோயிலில் நான் தாக்கப்பட்டபோது செய்தியை பார்த்துவிட்டு கண்ணீருடன் அழைத்தார். தொலைபேசியிலேயே விம்மினார். “அந்த ஊரு வேணாம் சார், நீ நம்மூருக்கு வந்திரு சார்” என்றார்.

அதுதான் இந்து மனநிலை. அவன்தான் இந்து. இந்த அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்கள் அல்ல. இந்த வெறியர்களே இந்துக்கள் என்று சொல்ல இந்து மதத்தின் எதிரிகள் முயல்வார்கள். வெறியர்களும் தாங்களே உண்மையான இந்துக்கள், மற்றவர்கள் போலிகள் அல்லது கோழைகள் என்பார்கள். நமக்காவது வேறுபாடு தெரிந்திருக்கவேண்டும். அந்த வேறுபாட்டை சொல்லிச்சொல்லி நிலைநாட்டவேண்டிய சூழல் இன்றுள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைகுரு- ஆளுமையும் தொன்மமும்
அடுத்த கட்டுரைசென்ற மார்ச்சில்…