குரு- ஆளுமையும் தொன்மமும்

ஒரு நண்பர் இந்த வரியை அனுப்பியிருந்தார். “குரு நம்மில் ஒரு பகுதியாகிவிட்டபின் அவர் ஒரு மானுடரல்ல. ஒரு கோட்பாடாகிவிடுகிறார்”. ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய குரு -பழம்பெரும் ஞானத்தின் பத்துவாயில்கள் என்ற நூலில் இருந்து ஒருவரி.

அந்த வரியைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் என் ஆசிரியர்களை, குருவடிவான நித்யாவைப் பற்றி எழுதும்போது அந்த மனிதரைப்பற்றி எழுதவில்லை. அவருடைய ஆளுமைத்திறனைப்பற்றிக்கூட எழுதவில்லை. அவர் எனக்கு எவ்வகையில் பொருள்படுகிறார் என்றே எழுதுகிறேன். அவரை எப்படி நான் என் சிந்தனையாக, என் தரிசனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன் என்றே எழுதுகிறேன்.

ஆகவே நான் இல்லாமல் அவரைப்பற்றி என்னால் எழுத முடியாது. நான் ஆடி, அவர் மலை. மலை எத்தனையோ பெரிது, அசைவிலி, பேருரு. ஆடியால் அள்ளப்பட்ட மலையே நம்மால் காட்டப்படுகிறது.அதுவே இயல்வது என்பது ஒருபுறம், அது மட்டுமே உகந்தது என்பதே மேலும் பொருத்தமானது.

இதை எத்தனையோ முறை எழுதிவிட்டேன். ஆனாலும் முதிரா உள்ளங்கள் ‘அவரைப்பற்றி எழுதும்போது நீ எப்படி உன்னைச் சேர்த்துக்கொள்கிறாய்?’ என்று கேட்பதுண்டு. அவர்களுக்கு ஆசிரியர் என்பவர் ஓர் அனுபவநிலை என்று மட்டுமே பதில்சொல்ல முடியும்

குரு என நாம் குறிப்பிடுவது நாமுணர்ந்த  ஓர் அக உருவகத்தை. ஆகவேதான் ஒரே ஆசிரியர் வெவ்வேறு மாணவர்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறார். உளப்பதிவுகளில் தரவுகள்கூட மாறுபடுகின்றன. காலம்செல்லச்செல்ல அவரைப்பற்றிய சித்திரம் மங்கலடைவதில்லை, வளர்ந்து ஓங்குகிறது. அவர் இருந்தபோது சிறிதாக இருந்த பல நிகழ்வுகள் மிகப்பெரிய அழுத்தமும் ஆழமும் கொண்டவையாக ஆகின்றன.

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

மாணவன் கொள்ளும் இந்த தன்வயத்தன்மையே ஆசிரியனை அழிவற்றவனாக ஆக்குகிறது. நெஞ்சிலிருந்து நெஞ்சுக்கு, சொல்லில் இருந்து சொல்லுக்கு சென்று வாழச்செய்கிறது. ஆசிரியர் என்பவர் வெறும் நினைவு அல்ல. அவர் வாழும் படிமம். காலப்போக்கில் தொன்மம்.

ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் கன்னட வீரசைவ மரபிலிருந்து வந்தவர். ஆனால் முழுக்கமுழுக்க நவீன இலக்கியவாதி. அவருடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றிய நூல்கள் நவீன உள்ளம் தொன்மையான ஆன்மிகத்தைச் சந்திக்கும் தருணங்களால் ஆனவை.

’குரு’ அவருடைய முக்கியமான நூல்களில் ஒன்று. ஆனந்த் ஸ்ரீனிவாசன் அதை அழகிய மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார். சென்ற சில மாதங்களில் வெளிவந்த நவீன ஆன்மிக நூல்களில் முதன்மையானது இது.

குரு-பழம்பெரும் ஞானத்தின் பத்து வாயில்கள். ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ்- வாங்க

முந்தைய கட்டுரைஅந்தக்கதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்துவும் இந்துத்துவரும் – கடிதம்