பசுமை முகங்கள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

சக்திவேல் என்னும் தோழமையின் பகிர்வினால் இந்தப் புகைப்படத்தை இன்று கண்டடைய நேர்ந்தது. 25 வருடங்களுக்கு முன்பு 1995ல் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில், மார்க்சிய அறிஞர்களான எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி மற்றும் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், மருத்துவர் வெ.ஜீவானந்தம் மற்றும் இன்னும் முகமறியாத எத்தனையோ ஆளுமைத் தோழமைகளுக்கு மத்தியில் உங்களுடைய முகத்தையும் காண நேர்ந்தது ஒருவித நிறைவையும் மகிழ்வையும் என் மனதுக்குக் கொடுத்தது.

மாறுபட்ட தத்துவங்கள், பன்முகச் சித்தாந்தங்களுக்கு இடையே தமிழ்ச்சூழலில் ஒரு ஆரோக்கியமான நல்லுரையாடல் நிகழத்துவங்கிய காலக்கனிவு என இந்த புகைப்படக் காலகட்டம் நெஞ்சில் பதிகிறது. இந்த காட்சிப்பதிவை உங்களிடம் காண்பிப்பதற்கு மனது ஏனோ விரும்பியது. பின்னோக்கிய காலத்துப் பல நன்னினைவுகளை இப்படம் கண்களுக்குள் நிறைக்கிறது.

நன்றியுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

***

அன்புள்ள சிவராஜ்

மிக விரைவிலேயே நாமும் வரலாறாக ஆகிவிடுவோம் போலிருக்கிறது. இந்த புகைப்படம் ஜீவா அவர்கள் ஊட்டியில் ஒருங்கிணைத்த சூழியல் சார்ந்த முகாம் ஒன்றின்போது எடுக்கப்பட்டது. இதில் சா.கந்தசாமி, சி.ஆர்.ரவீந்திரன்,சுகந்தி சுப்ரமணியன், சுப்ரபாரதி மணியன், சிபிச்செல்வன், எம்.கோபாலகிருஷ்ணன், கௌதம சித்தார்த்தன், நாஞ்சில்நாடன், தேவதேவன் ஆகியோர் இருக்கிறார்கள். நாஞ்சில்நாடன் ஒரு பெண்மணிக்குப்பின்னா பாதிமறைந்து தெரிகிறார். தேவதேவன் கன்னங்கரிய தலைமுடியுடன் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு முன்னால் நின்றிருக்கிறார்.

கால்நூற்றாண்டு கடந்துவிட்டிருக்கிறது!

ஜெ

முந்தைய கட்டுரைஅந்திம காலத்தின் இறுதி நேசம்- சிங்களக் கதைகள்
அடுத்த கட்டுரைநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? சஷி தரூர்