ஓர் இளைஞரின் குரல்

அன்புள்ள ஜெ

பா.இந்துவன் என்னும் இளைஞர் எழுதிய பதிவு இது. இவர் உங்கள் ஊர்ப்பக்கம். மிகத்தெளிவான மொழியில், தொடர்ச்சியான ஆராய்ச்சிப் பின்புலத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார். உங்கள் கவனத்திற்கு இவர் வரவேண்டும் என்பதனால் சில பதிவுகளை அனுப்பியிருக்கிறேன்

இவருடைய இந்தக்குறிப்பு முக்கியமானது. இன்றைய இந்து இளைஞர்களில் கணிசமானவர்களின் மனநிலை இப்படி மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே பொதுவெளியில் இந்துக்காழ்ப்பை கக்குபவர்கள் இந்த மாற்றத்தை உணர்வதில்லை [ ஆனால் தேர்தல் வரும்போது உணர்கிறார்கள். உடனே வேலேந்திவிடுகிறார்கள்]

இந்தக் குறிப்பில் இவர் சொல்வதுதான் என் அனுபவமும். நானும் குமரிமாவட்டம்தான். இங்குள்ள கிறிஸ்தவ நண்பர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் இந்துவெறுப்பை பதிவுசெய்கிறார்கள். கேட்டால் அது முற்போக்கான நிலைபாடு என்கிறார்கள். இணையவெளியில் இந்து மதம் பற்றிய காழ்பபை கொட்டுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெயர் மாற்றம் செய்யாத கிறிஸ்தவர்கள்தான். கிறிஸ்தவம் சம்பந்தமான ஒரு சிறுவிமர்சனம்கூட அவர்கள் முன்வைப்பதில்லை. முழுக்கமுழுக்க கண்மூடித்தனமான நம்பிக்கைதான். ஆனால் அவர்கள் முற்போக்காளர்கள். இந்துக்களை இழிவுசெய்வதற்கு மட்டும் அவர்கள் பெரியாரியர்கள், மார்க்ஸியர்கள்.

ஆனால் இந்துவாகிய நான் என் குலதெய்வக்கோயில் பூசைக்குச் சென்றுவந்தால் உடனே என்னை சங்கி என்று வசைபாடுகிறார்கள். சபரி மலைக்கு மாலைபோட்டால் சங்கி என்கிறார்கள். இந்த அப்பட்டமான இந்துவெறுப்பும் மதக்காழ்ப்பும் என்னைப்போன்றவர்களை ஆமாம் நான் என் தெய்வத்தை கும்பிட்டால், என் அப்பாவுடன் சேர்ந்து கோயிலுக்குப்போனால் சங்கி என்றால் அப்படியே வைத்துக்கொள் என்று சொல்லும் இடம் நோக்கி தள்ளுகிறது

எஸ்.சுரேஷ்குமார்

நான் சங்கியான கதை

பா. இந்துவன்

(இந்த பதிவை எத்தனைபேர் முழுமையாக படிப்பீர்கள் என்பதை அறியேன். ஆனால் முழுமையாக படித்தால் உங்களில் ஒருவனாக என்னையும் உணர்வீர்கள் என்பதை கூறிக்கொண்டு ஆரம்பிக்கிறேன்)

நான் இந்துவல்ல நீங்கள்??? இந்த தலைப்பில் தொ.பரமசிவன் அவர்கள் குலதெய்வத்தை அடிப்படையாக கொண்டு ஒரு நூல் எழுதியிருந்தார். இந்நூல் பற்றிய விமர்ச்சனம் நடந்தபோது நான் குறுக்கிட்டு நான் இந்துதான் என்றும், ஒரு இந்துவாக நான் பெருமை கொள்கிறேன் என்றும் கூறினேன். உடனே அங்கிருந்தவர்களில் சிலர் என்னை சங்கி என்று அழைத்தார்கள். இதற்கு முன்பு பலர் இப்படி அழைத்திருந்தாலும் இம்முறை நான் ஒரு இந்து என்று கூறியதும் சங்கி என்று அழைத்தது சற்று வியப்பாகத்தான் இருந்தது. அதாவது சமூக வலைதளங்களில் யாரெல்லாம் இந்து என்ற அடையாளத்துடன் பேசுகிறார்களோ அவர்களெல்லாம் சங்கி என்ற தொனியில் தான் சங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்…!

பொதுவாக நான் மதம் சார்ந்து எழுதுகிறேன் என்ற பிம்பம் இருந்தாலும் இன்றுவரை எனது நம்பிக்கையை சிதைத்துவிட்டாய் என்று ஒரு இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்தவ நண்பர்களோ கூறும் அளவுக்கு எழுதியதில்லை என்பதிலும் அப்படி கூறும் அளவுக்கு எழுதக்கூடாது என்பதிலும் கவனமாக உள்ளேன். எனினும் நான் ஏன் இப்படி எழுதுகிறேன்? ஒரு வருடத்திற்கு முன்புவரை எனது பக்கத்தில் மதம் சார்ந்தோ அரசியல் சார்ந்தோ எழுதியதில்லையே? குறைந்தபட்சம் அதுபோன்ற பதிவுகளை பகிர்ந்தது கூட இல்லையே? இருந்தாலும் தற்போது ஏன் எழுதுகிறேன் என்ற கேள்வி என்னை அறிந்த எனது நெருங்கிய நண்பர்களிடம் கூட வெகு நாட்களாக உள்ளது. இந்த கேள்விக்கு பதில் சொல்வதாகவே இந்த பதிவு இருக்கும்…!

சமீபத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்த திஷா ரவியுடைய பழைய பேட்டி ஒன்றை பார்க்க நேரிட்டது. அந்த பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது அதாவது,ஹிந்து தேசியவாதம் பேசுகிற மோடியை மக்கள் எப்படி மீண்டும் தேர்ந்தெடுத்தார்கள் என்பதுதான் அந்த கேள்வி. அதற்கு திஷா ரவி சொல்கிறார்,”பாஜக ஒரு வலதுசாரி கட்சி,அவரால் தன்னுடைய நோக்கத்தை தெளிவாக பெரும்பான்மை மக்களிடம் எடுத்து வைக்க முடிந்தது. பெரும்பான்மையான மக்களை அவரால் அவருடைய சித்தாந்தங்களால் மாற்றம் செய்ய முடிந்தது. முஸ்லிம்கள் சிலர் செய்கிற தவறால் பெரும்பான்மை மக்கள் அவரிடம் ஒருங்கிணைகிறார்கள். சொல்லப்போனால் என்னுடைய பெற்றோரே அவருடைய தீவிரமான ஆதரவாளர்கள் ஆனால் நான் இல்லை” என்கிறார் திஷா ரவி. இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடம் ஒரு விழிப்புணர்வு தோன்ற ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் என்னவெனில் ஒரு இந்து இந்த நாட்டை ஆள்கிறார். அதன் காரணமாகவே மோடி எதிர்ப்பு என்ற பிம்பம் இந்துக்கள் எதிர்ப்பாக மாறி அது வன்மமாக பரவ ஆரம்பித்துவிட்டது. தான் யார், தனது வழிபாடு என்ன என்ற அனைத்தையும் இருட்டடிப்பு செய்துவரும் இந்த சமூகமும் அரசியல் பின்னணிகளுக்கு இடையிலும் இந்துக்கள் தான் யார், தனது அடையாளம் என்ன என்பதை உணர்ந்து வருகின்றனர்….!

இதற்கு முன்பு இதுபோன்ற கிளர்ச்சிகள் எழுந்ததில்லை என்பதுதான் உண்மை. நான் எனது நம்பிக்கை சார்ந்து எழுத காரணம் என்ன? அதாவது நான் சங்கியாக மாற காரணம் என்ன? இதைநோக்கியே இன்றைய பதிவு இருக்கும். முன்பெல்லாம் முகநூலுக்கு வந்தோமா நான்கு லைக் பட்டனை அழுத்தினோமா நான்கு மீம் பார்த்து சிரித்தோமா என்றுதான் முகநூல் வாழ்க்கை அன்றாடம் கழிந்து கொண்டிருந்து….!

ஒரு கட்டத்தில் TIMELINE ல் வரும் எனது நண்பர்களின் பதிவுகளை படிக்க ஆரம்பிக்கும்போது மனதில் சில தடுமாற்றங்களுடன் பல கேள்விகளும் தோன்றும். ஏனெனில் எனக்கு பெரும்பான்மையாக கிறிஸ்தவ நண்பர்களே அதிகம். ஆகவே அவர்களின் பதிவுகள்தான் TIMELINE ல் அதிகம் வரும். அதில் சில நேரடியான பதிவுகள் இந்துக்களை தாக்கியும் சில பதிவுகள் தமிழ் என்ற போர்வையில் இந்துக்களை பழிப்பதாகவே இருக்கும். குறிப்பாக இந்துக்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்குவது, தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோன்ற பின்புல பதிவுகள்தான் அதிகம் இருக்கும்.

ஆனால் எனக்கு ஒரு இந்துவாக எனது நம்பிக்கை சார்ந்த பதிவுகளை பகிர்வதற்கே தயக்கமாக இருக்கும். ஏனென்றால் அடுத்த மத நண்பர்கள் இதை பார்த்தால் சங்கடப்படுவார்களோ அல்லது நாம் பதிவது சரியாக இருக்குமா என்ற கேள்விகளுக்குள் என்னை நானே முடக்கிக்கொள்வேன். இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலாக எனது தர்மததின் மீதே எனக்கு பற்று இல்லை. அதாவது பகவத்கீதையோ அல்லது இந்துதர்மம் சார்ந்த எதாவது தத்துவ நூல்களோ படித்ததில்லை. எதுவுமே தெரியாமல் எப்படி எதிர்த்து கேள்வி கேட்பது என்ற கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்….!(இதே மனநிலையையுடைய இஸ்லாமிய கிறிஸ்தவ நண்பர்களும் எனக்கு உண்டு.)

நான் இதைப்பற்றி சிந்திக்க தொடங்கிய காலகட்டம் அது. நான் ஒருவரின் பதிவை நிதானமாக படிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க என்னுள் கேள்விகளின் எண்ணிக்கை அதிகமானது. நான் படிக்க படிக்க மார்க் மாமா நான் படிக்கும் பதிவுக்கு சம்பந்தமான பதிவுகளை உடனுக்குடன் டைம்லைனில் வரவைத்ததால் பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகமானதால் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு பதிவு வரும் அது சரியா என்று ஆய்வதற்குள் அடுத்த பதிவு வந்து நிற்கும். இவற்றிற்கான பதிலை எங்கே தேடுவது என்று குழம்பிப்போய் முகநூலை விட்டு வெளியேறிய காலங்களும் உண்டு…!

அந்த காலகட்டத்தில் எனது மனதில், மற்றவர்களைப் போல் கிறிஸ்தவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ தாக்கி எழுதவா? அல்லது யாராவது தாக்கி எழுதியிருந்தால் அதை ஆராயாமல் பகிர்ந்துவிடவா என்ற கேள்விகள் அதிகமானது. ஆனால் மனதில் ஒரு தயக்கம். என்னை நண்பர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற ஐயம் மனதில் வேரூன்றியது. ஏனென்றால் நான் பொதுவாக எனது TIMELINE ல் எதுவும் எழுதுவதில்லை. குறிப்பாக எதையும் பகிர்வதும் இல்லை. ஏனென்றால் முகநூலில் வரும் ஒரு நிகழ்வு சரியா தவறா என்று கண்டறிவது எப்படி? என்ற பல கேள்விகள் என்னுள் சுழன்று கொண்டிருக்கும். அப்படி இருக்க எதைப்பற்றி எழுதுவது ? நாம் எழுதுவதற்கு யாராவது எதிர் கேள்வி கேட்டால் எப்படி பதிலளிக்க வேண்டும் என்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன…!

ஆனால் எனது கிறிஸ்தவ, இஸ்லாமிய நண்பர்கள் பகிர்வது மற்றும் அவர்களின் TIMELINE ல் எழுதுவது உண்மையா என்று யோசித்தேன். அதற்காக அவர்களின் பதிவுகளில் சென்று எனக்கு உடன்படாத ஒருசில பதிவுகளுக்கு எதிர் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்களிடம் பேசியபோது ஒன்று மட்டும் புரிந்தது. அவர்கள் ஒரு நிகழ்வை பகிர்கிறார்கள் என்றால் அதுபற்றிய அடிப்படை புரிதல் அவர்களிடம் இருக்காது. அதுபற்றிய சந்தேகங்கள் கேட்டாலும் அவர்களுக்கு சரியான பதில் சொல்ல தெரியாது. ஆனால் மனதில் எந்த சங்கடமும் இன்றி இந்துமத எதிர்ப்பு கருத்துகளை எளிதாக பகிர்ந்துவிடுகின்றனர். இதற்கு உதாரணமாக மோகன் சி லாசரஸ் மற்றும் சற்குணம் போன்றவர்களின் பிரசங்கங்களை கேட்டாலே புரிந்துகொள்ளலாம்….!

நான் ஏன் இவ்வளவு பொறுமையாக இருக்கிறேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தபோது ஒன்று தோன்றியது. பொதுவாகவே இந்துக்களிடம் சகிப்புத்தன்மை அதிகம்தான். அதன் காரணமாகவே என்னால் நமது நம்பிக்கை பற்றிய புரளிச்செய்திகளை பார்த்தும் கூட அதை எளிதாக கடந்து செல்ல முடிந்தது. ஆனால் மாற்று மத நண்பர்கள் மிக எளிதாக மதத்துவேசம் செய்கின்றனர். இதை உறுதிபடுத்த நண்பர்களின் Profile ஐ ஓப்பண் செய்து பதிவுகளை படிக்க துவங்கினேன். கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர்களில் 10ல் 8 பேர் இந்துமத வெறுப்பு பதிவுகளையே பகிர்ந்திருந்தனர். ஆனால் சில இந்து நண்பர்கள் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம், அழகியல் குறித்து பதிவு செய்ததையும் மதம் சார்ந்த எந்த பதிவுகளையும் அவர்களின் பக்கத்தில் இல்லாதது கண்டு வியப்பாக இருந்தது. அதாவது எனது மனநிலையை ஒத்த நண்பர்கள் இருந்ததைக்கண்டு ஆச்சரியம் அடைந்தேன்…!

இறுதியாக ஒரு கட்டத்தில் இதை எதிர்த்து பேச வேண்டும் என்ற நோக்கில் இந்துமதம் பற்றி வரும் பதிவுகளுக்கு என்னால் இயன்ற எதிர் கேள்விகளையும் சான்றுகளையும் கேட்க துவங்கினேன். நான் எப்போது எதிர் கேள்வி கேட்க ஆரம்பித்தேனோ அன்றே எனக்கு RSS கைக்கூலி பட்டமும், பாஜக காரன் என்ற பட்டமும் கிடைத்தது. ஆனால் அன்று RSS என்றால் என்ன என்பதையே நான் அறியேன் என்று எப்படி இவர்களுக்கு புரியவைப்பது என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்த அவதூறுகளை அடுக்கிக்கொண்டே இருந்தனர். எதிர் கேள்வி கேட்பதாலேயே சில நாட்களிலேயே என்னை ”சங்கி” என்று அழைக்கத் துவங்கினர். அதன் பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர் இந்து என்றொரு மதமே இல்லை என்றும் இந்து என்ற பெயரே ஆங்கிலேயன் போட்ட பிச்சை என்றும் கூறி அவமதித்தார். அன்று ஆரம்பித்தேன் எனது தேடுதலை. சங்க இலக்கியங்கள் மற்றும் இந்து சமய வரலாறுகள் என்று எது கிடைத்தாலும் அதை படித்து உள்வாங்குவதே கடமையாக கொண்டேன். நான் படிப்பதோடு நின்றுவிடாமல் அதை அவ்வப்போது BLOGS மற்றும் பல குழுக்களில் எழுதியும் வந்தேன்…!

இத்தனை வேலைப்பளுவிலும் நூல்களை தேடியும், தரவுகளை தேடியும் சில அவதூறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நோக்கிலும் நான் சேகரித்த பொக்கிஷங்கள் ஏராளம். சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு வரலாற்று நூல்கள் என்று தேடி படிக்க படிக்க அது ஒரு போதையாக மாறிவிட்டது. அதனுடன் சில தொல்லியல் துறைசார்ந்த அறிஞர்களின் நட்பும் கிடைத்ததில் இருந்து கல்வெட்டுகளையும் தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன்.(எனக்கு கல்வெட்டுகளை படிக்க தெரியாது. ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் கல்வெட்டுகளை படித்து அதை ஆங்கிலம் மற்றும் தமிழில் தொகுத்து வெளியிட்ட தொகுப்புகளை தேடி படிப்பேன்.)

இந்த தேடுதலின் பலனாகவே இந்து என்ற வார்த்தையே ஆங்கிலேயன் போட்ட பிச்சை என்று அவதூறு பரப்பிய கிறிஸ்தவ நண்பனுக்கு 2000 ஆண்டுகள் பழமையான அவனது பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்தே இந்து என்ற வார்த்தையை எடுத்து அவனது உள்டப்பிக்கே சென்று காட்டியதும் வெட்கித்து தலைகுனிந்து அன்றோடு ப்ளாக் செய்தான். இதே அவதூறை பரப்பிய இஸ்லாமிய நண்பனுக்கு இஸ்லாம் மத ஆராய்ச்சியாளரான அல்_பெரூனி யின் தாரிக் அல் ஹிந்த் என்ற நூலில் பாரதத்தின் ஆன்மீக சித்தாந்தங்களை இந்து என்று பெயரிட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை கொடுத்ததும் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டான்…!

இத்தனை தேடுதல்களின் விளைவாகவே இந்து என்றொரு மதமே இல்லை என்று அவதூறு பரப்பியவர்களுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாரத மக்களை இந்துக்கள் என்று அழைக்கும் கல்வெட்டு சான்றுகளை எடுத்து வீசும் அளவுக்கு எனது வாசிக்கும் பழக்கத்தை நீட்சியுறச்செய்தேன். சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் சார்ந்த நமது வழிபாட்டு முறைகளை எடுத்து பேசுகிறேன் என்றால் எனது வாசிப்புகளுக்கு பின்னால் இத்தனை அலைச்சலகள் உள்ளது. இன்று எத்தனை தமிழ்மொழிப்பற்றாளராக இருந்தாலும் சங்க இலக்கியங்கள் என்று கூறினால் பின்னோக்கி சென்று இடைச்செருகல், ஆரியன், பார்ப்பான் என்று கதறும் அளவுக்கு இந்த சமூகம் விழிப்படைந்துள்ளது. இன்று இந்துக்களிடம் காணப்படும் இறை வழிபாடுகளான சிவன், திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை மற்றும் குல தெய்வங்கள், காவல் தெய்வங்களை உள்ளடக்கிய வழிபாட்டு முறைகள் அனைத்தும் தெள்ளத்தெளிவாக சங்க இலக்கியங்களில் உள்ளன….!

அதோடு பாரதத்தின் இரு கண்களாக போற்றப்படும் மகாபாரதம், இராமாயணம் போன்ற காவியங்களை சங்க இலக்கியங்கள் வெகுவாக பேசுகின்றன. வேதம், ஆகமம் போன்ற வைதீகம் சம்பந்தமான வழிபாட்டு முறைகளும் சங்க இலக்கியங்களில் உண்டு. இவற்றையெல்லாம் எடுத்து பேசினால் ஆதியில் தமிழனாக அறியப்பட்டவன், இன்று இந்துக்களாக இருப்பவனே என்ற உண்மையை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டி வரும் என்பதாலேயே நமது இலக்கியங்களை நமக்கு கற்றுத்தருவதில் கள்ள மௌனம் காட்டுகின்றனர்….!

ஆக என்னை சங்கி என்று அழைத்தாலும் தமிழர்களின் வழிபாட்டு முறைகளை சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் முதலான பல வரலாற்று நூல்களிலிருந்து எடுத்துச் சொல்வதில் பின்வாங்கப்போவதில்லை. இதுபற்றி முகநூலில் எனது பக்கம் மற்றும் BLOG ல் எழுதிக்கொண்டேதான் இருப்பேன். ஆனால் மறந்தும் கூட அடுத்தவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதும் இல்லை, அடுத்தவர் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்குவதும் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். அதோடு நான் அறிந்த எனது தர்மம் சார்ந்த நற்கருத்துகளையே எழுதுகிறேன் என்பதில் ஒரு இந்துவாக பெருமை கொள்கிறேன். இதுவே எனது தர்மம் எனக்கு கற்றுத்தந்த நெறிமுறை….!

(நான்கு மாதங்களுக்கு முன்பு இதே தலைப்பில் எழுதப்பட்ட பதிவின்போது ஐடி ரிப்போர்ட் ஆனது. இருந்தாலும் திரும்பவும் முயற்சித்திருக்கிறேன் .)

– பா இந்துவன்

17.02.2021

 

அன்புள்ள சுரேஷ்குமார்,

ஒரு சமகாலப் பதிவு என்றவகையில் இது முக்கியமான ஒன்று. ஓர் ஆவணம். இழிவுபடுத்தி, வசைபாடி பல்லாயிரமாண்டு வேர்கொண்ட ஒரு பண்பாட்டை ஒழித்துவிடமுடியுமென நினைப்பவர்களுக்கான எதிர்வினை

பா.இந்துவனின் பிற எழுத்துக்களில் முறையான ஆய்வுத்திறனும் அறிவுசார்ந்த ஊக்கமும் உள்ளன. அவர் தொடர்ந்து எழுதுவார் என்றால் தமிழ் அறிவுப்புலத்தில் ஒரு முக்கியமான குரல் என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

ஆனால் இருவகை இடர்களை அவர் சந்திக்கவேண்டியிருக்கும். அதுதான் இவர் எழுதியிருப்பதன் மறுபக்கம். அதையும் இப்போதே சொல்லிவிடவேண்டும். அவர் எப்படி தன்னை இந்து என முன்வைத்துக்கொண்டாலும் சரி, இந்து மெய்ஞானத்தின் பக்கம் தன்னை உறுதியாக நிறுத்திக்கொண்டாலும் சரி, அவர் இன்றைய இந்துத்துவ அரசியலை விமர்சித்தால், இன்றிருக்கும் அரசின் செயல்பாடுகளை சற்றேனும் ஏற்க மறுத்தால், இந்துத்துவர்களின் ஏதேனும் நடவடிக்கைகளை கண்டித்தால் உடனே இந்துவிரோதி என முத்திரை குத்தி வசைபாடப்படுவார். விலைபோய்விட்டார் என்று கீழ்மைப்படுத்தப்படுவார்.

இந்து மரபின் மெய்ஞானிகள் என கருதத்தக்கவர்களே இவர்களின் அரசியலுடன் சற்று முரண்பட்டால்கூட எல்லைமீறி கீழ்மைப்படுத்தப்படும் சூழல் இன்றுள்ளது.எவர் மேலும் இவர்களுக்கு மதிப்பில்லை– இவர்களின் அரசியலை ஏற்றுக்கொண்டால் எந்த போலியையும் பழமைவாதியையும் கொண்டாடவும் தயக்கமில்லை. ஏனென்றால் இந்து மெய்ஞானமோ பாரம்பரியோ இவர்களுக்கெல்லாம் எவ்வகையிலும் பொருட்டல்ல. இவர்களுக்கு தேவை அதிகாரம், அதற்கான அரசியலுக்கு இந்துப்பண்பாடு ஓர் அடையாளம் அவ்வளவுதான்.

இரண்டாவது இடர், சாதி. பா.இந்துவன் நம் மேல்தட்டுச் ஆசாரவாதிகளிடம் இருக்கும் பழமைவாதவெறியை, மானுட அறத்திற்கு எதிரான மேட்டிமை நோக்கை, வெற்றுத் தன்முனைப்பை மெல்ல விமர்சனம் செய்தால் அக்கணமே அவர் ’தகுதியற்றவர்’ என்று ஏளனம் செய்யப்படுவார், அவர் சொல்வதெல்லாம் பிழை என ஒரு கூட்டம் துள்ளிக்குதிக்கும், அவர் கூட்டான தொடர்தாக்குதலுக்கு உள்ளாவார், ஒவ்வொரு வரியும் திரிக்கப்படுவார், தொடர்ச்சியாகச் சிறுமைக்காளாவார்.தனிப்பட்ட தாக்குதல்கள், அவமதிப்புகள் தேடிவரும். இந்து என்றாலே சங்கிதான் என்று சொல்பவர்கள் இந்துவிரோதிகளான அரசியலாளர்கள் மட்டுமல்ல, இந்துத்துவ வெறியர்களும்தான். தனிப்பட்ட தாக்குதல்கள், அவமதிப்புகள் தேடிவரும். அந்தக் கும்பலைப்பற்றியும் சேர்த்துக்கொள்ளும்போதே மேலே உள்ள குறிப்புக்கு உண்மையின் சமநிலை வருகிறது

இவ்விரு நஞ்சும் விரைவில் அவருக்கு ஊட்டப்படவேண்டும் என்றும், அதன்பின்னரும் அவர் மெய்மைக்கான தேடலுடன், தளரான ஊக்கத்துடன் மேலே செல்லவேண்டும் என்றும் விரும்புகிறேன். அப்போதுதான் அவர் உண்மையான இந்து மெய்யியலை, நம் மரபின் ஆன்மிகத்தைத் தொடமுடியும். இல்லையேல் காலப்போக்கில் ஒரு கட்சிக்குரலாக சிறுத்து நிலைகொள்வார். அவருடையது தேர்வு

ஜெ

முந்தைய கட்டுரைராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள்
அடுத்த கட்டுரைஅம்பை இரு கடிதங்கள்