அந்திம காலத்தின் இறுதி நேசம்- சிங்களக் கதைகள்

மேலுமொரு நாள் தொடங்கியது – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

அன்பின் நண்பருக்கு,

வணக்கம். நலமா?

உங்கள் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ‘மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது‘ சிறுகதையை எழுதிய பெண் எழுத்தாளர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆதிரை பதிப்பகம் மூலம் ஒரு முழுத் தொகுப்பாக இம் மாதம் வெளிவந்திருக்கிறது.

நூலின் பெயர் ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’. சிங்களப் பெண் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகள் ஒரு முழுத் தொகுப்பாக வெளிவருவது இதுதான் முதற்தடவையாகும். இந்த நூல் தற்போது இந்தியா, இலங்கை மற்றும் மேற்கத்தேய நாடுகளில் கிடைக்கிறது. 2021 சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இந்த நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நூலைக் குறித்த திறனாய்வை எழுத்தாளர் உமையாழ் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,

எம்.ரிஷான் ஷெரீப்

உறவு நிலைகளின் திறவுகோல்கள்

உமையாழ்

யதார்த்தவாதக் கதைகளின் காலம் முடிந்துவிட்டதோ என எண்ணும் அளவிற்கு, தமிழில் அங்கனமாய் அமைந்த கதைகளின் மீது காழ்ப்பு உமிழப்படுகிற ஒரு இருண்ட காலத்தில், முழுக்க முழுக்க யதார்த்தையே பேசி, அந்நிய தேசத்தில் தோன்றிய ஒரு தேவதூதன் இருண்மையில் உள்ள எமக்கும் ஒரு தீச்சுடரை ஏற்றி வைப்பதைப் போலமைந்த ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியின் வருகை இது.

ஆயிரம் சொன்னாலும் ஆயிரத்து ஒன்றாவதாகச் சொல்ல இந்த வாழ்க்கையில் ஏதோ ஒன்று எப்போதும் மிச்சம் இருந்துகொண்டே இருக்கிறது என்பது வெற்றுச் சொல்லல்ல. அதை மெய்ப்பிப்பதைப் போல மிக ஆழமாக, மிக மிக நுட்பமாக, மிகுந்த அழகியலோடு மீண்டும் மீண்டும் இந்த ஜீவிதத்தைக் கொண்டாடுகிற கதைகளை எழுதி இருக்கிறார் தக்ஷிலா ஸ்வர்ணமாலி. எல்லாப் பிரிவினைகளையும் தாண்டி மனிதம் பொதுவானது என்பதை இந்தக் கதைகளை வாசிக்கிற போது உணர்ந்து கொள்ள முடிகிறது. தேள்கொட்டுவது போல, உண்மைகள் சுடாமல் இந்தக் கதைகளை கடக்க முடியவில்லை. தமது கற்பிதங்கள் மீதான மற்றுமொரு சாட்டையடியாக வந்து விழுகின்ற கதைமுடிவுகள், அப்படி மட்டுமல்ல, இப்படியும் இதைப் பார்க்கலாம் என எமது கோணல் கோணங்களைச் செப்பனிடுகிற மகத்தான இலக்கியப் பணியை செவ்வனே செய்கின்றன.

மனித ஜீவிதம் மாயைகள் நிரம்பியது. உறவுகள் அந்த மாயைகளின் முடிச்சுகள். அம்முடிச்சுகள் கட்டுண்டு இருப்பதும், கழன்று போவதும் இந்த ஜீவிதத்தின் அடைவுகள். தன்னையும் குழந்தையையும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு பிறத்தாளோடு போன கணவன் மீதும், அவனது காமுகி மீதும் தன் அம்மாவால் எல்லையற்ற பரிவைக் காட்ட முடியும் என்பது மட்டுமல்ல, தன் அம்மாவை இரண்டாந் தாரமாக கட்டிக் கொண்ட, ஏற்கனவே மனைவியை இழந்த சித்தப்பாவால் தன்னுடைய தகப்பனை புரிந்து கொள்ள முடிகிறது என்பது ஒரு பாலக மனதிற்கு எவ்வளவு ஆறுதலான படிப்பினை! மனிதம் துளிர்க்க சற்றே பொறுமையும், எல்லையற்ற அன்பும் போதுமாக இருக்கிறது என்பதை மிக இலகுவாகவே சொல்லி விட முடிகிறது.

பெண் மனதின் மிகச் சிக்கலான பகுதிகளை கண்டடைவது ஒரு ஆண் படைப்பாளிக்குப் பெருஞ் சவால்தான். ஒரு பெண்ணாக தக்ஷிலா அந்த இடங்களை அநாயாசமாகக் கடந்திருக்கிறார். உள்ளத்தாலான நெருக்கத்தை எதுவும் தடை செய்து விட முடியாது போலும். அவன் மாற்றான் என அறிந்த பின்னரும் அவனிடச் சொன்ன பொட்டு, நெற்றியில் பொசு பொசுக்கிறது அவளுக்கு. அவனுக்காக அழுவதற்கு அவள் கொண்ட நேசம் மட்டுமே சாட்சியாக இருக்கிறது.

எனை விட்டுப் போவதற்கு அவளுக்கு ஆயிரங் காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவள் வளர்த்த பூச் செடிகளில் இன்னமும் பூக்கள் பூக்கத்தான் செய்கின்றன என்பதை உணர்த்த எழுத்தாளருக்கு இரண்டு ஜூஸ் கிளாஸுகள் போதுமானதாக இருக்கின்றன.

தக்ஷிலாவின் கதாபாத்திரங்கள் மிகச் சாதாரனமானவர்கள்தான். அவர்கள் மொழியால் எங்களில் இருந்தும் வேறுபட்டவர்கள்தான். ஆயினும் அவர்களது பிரச்சினைகள் ஒன்றும் எந்த மொழி பேசுபவனுக்கும் அந்நியமானதல்ல.

தங்கையின் அருமை பெருமைகளை அறிய அவள் காணாமல் போக வேண்டி இருக்கிறது. தன்னுடைய இருப்பை உணர்ந்து கொள்ள இன்னொருவளுக்கு அப்பழுக்கற்ற நேசம் வேண்டி இருக்கிறது. அந்த நேசத்திற்காக அவள் பணம் கொடுக்கவும் தயாராக இருக்கிறாள். மாங்காய்ப் பூ சொரிந்து கிடந்த முற்றத்தில் ஏன் என்று தெரியாமல் இன்னொருத்தி ஒருவனோடு குந்தி இருக்கிறாள். அம்மாவிடம் இருந்து அப்பாவைத்திருடப் பார்க்கிற பெரியம்மா மீது எங்களுக்கு பரிவேற்படுகிறது. வயதான காலத்தில் அந்தப் பெரியவருக்கு துணையாக இருக்க ஒரு பெண்ணுக்குக் காரணங்கள் இருக்கின்றன. இப்படியாக எத்தனை எத்தனை கதை மாந்தர்களை இந்தத் தொகுப்பு எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த அறிமுகம் மட்டும் இலக்கிய மேன்மையைப் பேச போதுமானதா?

புனைவிலக்கியத்தில் மொழியின் அழகியலுக்குப் பெரும் பங்குண்டு. வாசகனை சொக்க வைக்கிற மொழி வாய்க்கப் பெறுவது அந்த அழகியலின் ஒரு வகைமை. போலவே, மொழிபெயர்ப்புக் கதைகளில் மூலமொழியின் அழகியலைக் கொண்டு வருவது சாதனை. ரிஷான் ஷெரீப் அதைத் திறம்படவே செய்திருக்கிறார். மொழி பெயர்ப்பின் நுட்பங்கள் ரிஷான் ஷெரீபிற்கு தெரிந்திருக்கிறது. தொந்தரவில்லாத வாசிப்பை அது சாத்தியப்படுத்துகிறது. தக்ஷிலாவின் படிமங்களும் தெளிந்த நீர் போன்ற சொற் கோர்வையும் நிச்சயமாகப் பாராட்டப் பட வேண்டியவை. அதைத் தமிழில் சாத்தியப்படுத்திய மொழிபெயர்ப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

புனைவின் உன்னதங்கள் வாசிப்பின் போதான பேருவகையை நிர்ணயிக்கின்றன. தக்ஷிலாவின் கதைகள் வளர்கிற போதே ஒரு மொட்டு மலர்வதைப் போல, தன்னைத்தானே திறந்து கொண்டு முன்னேறுகிறது. வாசகனை உன்னிப்பாக வாசிக்க வைக்கிற இடங்களை அவை சாத்தியமாக்கின்றன. முகஞ்சுழிக்க வேண்டிய இடங்களைப் பரிவோடு நோக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்திச் சொல்கின்றன. மிகச் சாதாரண கதைகளை அத் திறப்புகளும், உணர்த்தல்களும் மேன்மை மிக்க இலக்கியமாக்கி விடுகிறது. அத் திறப்புகளாலும், உணர்தல்களாலும் ஒரு வாசக மனது அடைகிற குதூகலங்கள்தான் படைப்பின் வெற்றி. அப்படியான குதூகலங்களின் தொகுப்பாக இந்தக் கதைகள் இருக்கின்றன.

அடிப்படையான கேள்விகளில் இருந்துதான் உன்னதமான கலையும் இலக்கியமும் கிளர்ந்தெழுகிறது. இந்தத் தொகுதியில் உள்ள கதைகளை,
மானிடத் தொடர்புகள் தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான செயற்பாடுகள் அல்லாமல் சமூக வெளியீடுகளானது ஏன்? என்கிற தக்ஷிலாவின் ஒற்றைக் கேள்வில் கோர்த்து விட முடிகிறது.

உமையாழ்

மனிதர்கள் மீதான எமது வெற்று மதிப்பீடுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை இந்தக் கதைகள் எமக்குணர்த்துகின்றன. மனிதனை அளவுகடந்து நேசிப்பதும், அவர்களது வெளியை மதிப்பதும் எவ்வளவு அவசியம் என்பதை எமக்குக் கற்றுத் தருகின்றன.

அந்த அடிப்படையில் இந்தத் தொகுப்பை மிக முக்கியமான ஒரு தொகுப்பாக முன்னிறுத்த முடியும்.

எமக்கு அண்மையில் வாழ்ந்துகொண்டே மிக மிக அந்நியமாகிப் போன ஒரு சகோதர இனத்துடன் விரும்பியோ, விரும்பாமலோ கலாசார ரீதியாக ஒண்ட முடியாத ஒரு மாயத் திரை எம் முன்னே ஏற்பட்டுப் போயிற்று. சேர்ந்து வாழ்வதற்கு, இந்த வாழ்வை, இந்த வாழ்க்கை முறையைப் பகிர்ந்து கொள்வதற்கு எம்மிடம் எஞ்சி இருப்பது கலையும் இலக்கியமும்தான். அவற்றின் மூலம் எம்மிடையே விழுந்த அந்த மாயத் திரையை அகற்ற முடியும் என்கிற நம்பிக்கையை இந்தக் கதைகள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. எங்களுடைய கதைகள் அந்த மொழிக்குப் போக வேண்டிய அவசியத்தையும் இதே பின்னனியில் நாம் உணர்ந்துகொள்கிறோம்.

எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.

உமையாழ் (Mohamed Abdul Rafeeq Ahamed Luthfi)

முந்தைய கட்டுரைஅம்பை இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைபசுமை முகங்கள்