நண்பர்களே,
இந்த மேடையில் நான் வந்து நிற்பதற்கான காரணம் என்ன? ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு குடிநோயாளியாக இருந்து திருந்தியவர்களுக்காக உருவாக்கபப்ட்டது. குடிகாரர்கள் குடிகாரர்களிடம் பேசும் அமைப்பு. நான் ஒரு முன்னாள் குடிகாரன் என்று சொன்னபிறகுதான் இங்கே பேசவே ஆரம்பித்தார்கள். நான் இன்றுவரை குடித்ததில்லை. மதுவகைகளின் வாசனைகளையும் நிறங்களையும் கூட என்னால் சொல்லிவிட முடியாது. அப்படியானால் இங்கே எனக்கு என்ன இடம்?
நண்பர்களே, நான் என் நண்பர்களிடம் இப்படிச் சொல்லிக்கொள்வதுண்டு. ‘நான் ஒரு குடிக்காத குடிகாரன்’ அதைத்தான் இங்கே பேசுவதற்கு எனக்கிருக்கும் தகுதியாக இங்கே சொல்லிக்கொள்வேன்.
ஒரு நிகழ்ச்சியில் இருந்து அதை ஆரம்பிக்கவேண்டும். என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி. எனக்கும் என் அப்பாவுக்குமான உறவு கொஞ்சம் பழைய சாயல் உடையது. அவரிடம் நான் பேஎசியதே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர் முன்னால் நான் போக மாட்டேன். அவரும் என்னை ஏறிட்டுப்பார்க்க மாட்டார். என்னிடம் சொல்லவேண்டியதை அவர் அம்மாவிடம் சொல்வார். அவரிடம் சொல்லவேண்டியதை நான் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்
நினைவில் நிற்கும் ஒரே பேச்சு நான் கல்லூரியில் சேர்ந்த அன்று நிகழ்ந்தது. பணம்கட்டிவிட்டு திரும்புகிறோம். மறுநாள் முதல் நான் கல்லூரியில் படிக்கப்போகிறேன். அப்பா வழியில் இருந்து விலகி ஒரு மாமரத்தடியில் சென்று நின்றார். மாமரத்தின் சிதல்படலத்தை கையால் தட்டிக்கொண்டு பேசாமல் நின்றார். நான் சென்று அருகே நின்றேன்.சட்டென்று அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். மிக அந்தரங்கமான உணர்ச்சிகரமான பேச்சு. அந்த பேச்சின் ஒவ்வொரு சொல்லும் என் நினைவில் இக்கணமும் அழியாமலிருக்கிறது.
அப்பா என்னிடம் என்னைப்பற்றிச் சொன்னார். உன்னை எனக்கு தெரியும். குடிக்காதே. குடித்தால் நீ தெருவில்தான் கிடப்பாய். உன்னால் அதை நிறுத்த முடியாது. பெண்களுடனான உறவில் கவனமாக இரு. நீ உணர்ச்சிகரமானவன். உன்னை குரங்காக ஆட்டி வைப்பார்கள். ஒரு பெண் போதும் உனக்கு. எந்த தொழிலும் செய்யாதே. உன்னால் பணத்தை கையாளமுடியாது. அந்த மனிதர் அதன்பின் அதிக காலம் உயிருடன் இல்லை. உயிருடனிருப்பவர்களிடம் நாம் விவாதிக்கலாம், முரண்படலாம். செத்துப்போனவர்களை என்ன செய்வது? அவர்கள் சொன்னதெல்லாம் மாற்றமுடியாதவை. அவற்றை நான் என் வாழ்நாள் முழுக்க ஒரு என் முழுசக்தியாலும் கடைப்பிடிக்கிறேன். அந்த நெறி என்னை பாதுகாத்தது, எனக்கு வழிகாட்டியது
இன்று எனக்கு ஐம்பது வயதாகப்போகிறது. இப்போது தெரிகிறது, என் அப்பா அளவுக்கு என்னைப்புரிந்துகொண்ட இன்னொருவர் இல்லை என்று. அது மிக இயல்பானதுதான். என் மகனை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். அவனுடைய சஞ்சலங்கள், பயங்கள், ஆர்வங்கள் ,மீறல்கள் எல்லாமே எனக்கு உள்ளங்கையில் இருப்பதுபோல தெரிகின்றன. யோசித்துப்பாருங்கள் இருபது இருபத்தைந்து வருடங்கள் நம்மை வேறுயார் ஒவ்வொரு நாளும் ஆர்வத்துடன் பதற்றத்துடன் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு தெரியாத எது நம்மிடமிருக்கப்போகிறது? அவர்கள் நம்மை புரிந்துகொள்ளாமல் யார் புரிந்துகொள்ளப்போகிறார்கள்?
என் அப்பா என்னை கச்சிதமாகப்புரிந்துகொண்ட விதம் இன்றும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. நான் அப்போது பதினேழுவயதான பையன். வாசிப்பேன், ஆனால் எழுத ஆரம்பிக்கவில்லை. ஆனால் அப்போதும் நான் ஓர் எழுத்தாளன்தான். நண்பர்களே, எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் குடி மிகமிக ஆபத்தானது. நாங்கள் சிங்கத்தை பழக்கும் சர்க்கஸ்க்காரர்கள் போல உணர்ச்சிகளுடன் புழங்கிக்கொண்டிருக்கிறோம்.அதற்கு உணவுபோட்டு, அதன் சடையை சீவி விட்டு, நகங்களை வெட்டி விட்டு, மேடை மேல் ஏறவும் இறங்கவும் சொல்லிக்கொடுத்து, அதை கூடவே வைத்திருக்கிறோம். அதன் வாய்க்குள் தலையை விட்டு வித்தை காட்டுகிறோம்.
மனித உணர்ச்சிகள் மிகமிக கட்டற்றவை. எந்த ஊகத்துக்கும் அப்பாற்பட்டவை. அவற்றின் ஒரே ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் அவை சீக்கிரமே வடிந்து போகும் என்பதுதான். கொஞ்சம் உடலை அசைத்தாலே கூட உணர்ச்சிகள் மாறிப்போகும். உக்கிரமாக கோபம் அல்லது சோர்வு வரும்போது எழுந்து நின்று இரு கைகளையும் தலைக்குமேலே தூக்கினாலேகூட அந்த உணர்ச்சிகள் வடிந்துவிடும் என்கிறார்கள் பழக்கவியல் நிபுணர்கள். அவ்வளவுதான் மனிதன், மிக எளிமையான ஓர் உயிர்தான்.
ஆனால் எழுத்தாளனும் கலைஞனும் அப்படி அல்ல. இயல்பிலேயே உணர்ச்சிகள் அப்படியே பலமணிநேரம் பலநாட்களுக்கு நீடிக்கக்கூடிய ஒரு மனப்பிறழ்வு அவனுக்கு உண்டு. சோர்வோ கோபமோ துயரமோ பரவசமோ அப்படி மேலே எழுந்த கடல்அலை பளிங்கு கல்லாக அசையாமல் நிற்பதைப்போல நிற்கும். அது ஒரு மனச்சிக்கல். அப்ஸெஷன் என்று மருத்துவர்கள் சொல்லலாம். ஆனால் அந்த நிலை இருந்தால்தான் கலைப்படைப்பை உருவாக்க முடியும். கலைப்படைப்பு என்பது ஒரு கடல் அலையை அழியாமல் நிறுத்தக்கூடிய வித்தைதான்.
அப்படிப்பட்ட ஒருவனுக்கு மது எத்தனை ஆபத்தானது! அவனுடைய உணர்ச்சிகளை அது இன்னும் கட்டற்றதாக ஆக்குகிறது. அவனை இன்னும் கிறுக்கனாக்குகிறது. மற்றவர்களைப்போல உணர்ச்சிகள் மேல் கலைஞனுக்கு அறிவின் கட்டுப்பாடு இல்லை. அவனுக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு அந்த உணர்ச்சிகளை அவனால் நுட்பமாக பார்க்கமுடியும் என்பது மட்டும்தான். அந்தக்கட்டுப்பாட்டையும் இல்லாமலாக்குகிறது குடி.
எத்தனை கலைஞர்கள். நினைத்துப்பார்க்கவே மனம் பதைக்கிறது. கொஞ்சநாளாக சந்திரபாபுவின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். என்ன ஒரு உணர்ச்சிகரமான குரல். அந்த முகம். கோமாளியா ஞானியா என்று தெரியாத பாவனைகள். நான் ஒரு முட்டாள் என்று கண்டுகொண்ட புத்திசாலி. எவ்வளவு பரிபூர்ணமான கலைஞன். ஆனால் அவனுடைய கலையை அவனால் முழுமையாக்க முடியவில்லை. எது அவனோ அவனாக இருக்க முடியவில்லை. எத்தனை பரிதாபகரமான முடிவு.
யோசிக்க யோசிக்க என் மனம் கனத்து நிற்கிறது. பலரை நானே பார்த்திருக்கிறேன். மேதைகளான எழுத்தாளர்கள். முப்பது வருடம் கடும் உழைப்பால் எழுந்து வந்த சிந்தனையாளர்கள். பிறவியிலேயே வரம் வாங்கி வந்த கலைஞர்கள். எத்தனையோ பேரை நான் சுமந்துகொண்டு வீட்டில் விட்டிருக்கிறேன். அவர்களில் நான் வழிபடக்கூடிய குருநாதர்களும் உண்டு.
அவர்கள் என்னிடம் எப்படி அவர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எப்படி அந்த மாயப்பேய் அவர்களின் கலையையும் மேதமையையும் அழித்து கேலிச்சித்திரங்களாக ஆக்கியது என்று புலம்பியிருக்கிறார்கள். படைப்புத்திமிர் கொண்ட மேதைகள் குடிக்காக கையேந்தியிருக்கிறார்கள். நேர்மையின் சுவாலை கொண்ட சிந்தனையாளர்கள் கூழைக்கும்பிடு போட்டிருக்கிறார்கள். நெஞ்சுக்குள் படைப்புசக்தி நிறைந்த எழுத்தாளர்கள் எழுதமுடியாமல் மட்கி அழிந்திருக்கிறார்கள். அவர்கள் ஏங்கி உதிர்த்த கண்ணீர் என் தோள்களையும் இதயத்தையும் அமிலம் மாதிரி எரித்திருக்குகிறது.
அப்பா சரியாகத்தான் சொன்னார், நீ ஆரம்பிக்காதே என்று. ஆரம்பித்தாலே போதும். முதல் கோப்பையே போதும். அதை பிறகு நானே உணர்ந்தேன். நான் என் பெரும்பகுதி நேரத்தை குடிமேஜைகளில் செலவிட்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான நண்பர்கள் பல்லாயிரம் முறை எனக்கு மதுவை நீட்டியிருக்கிறார்கள். நான் சொல்லக்கூடியது ஒன்றுதான், ’இதுவரை குடிக்காத ஒரு பெருங்குடிகாரனிடம் நீங்கள் இந்த கோப்பையை நீட்டுகிறீர்கள்’.
ஆகவேதான் எனக்கு எப்போதும் குடிமேல் ஆர்வம் இருந்தது. குடியைப்பற்றி தெரிந்துகொள்ள என்றுமே கவனம் செலுத்தியிருக்கிறேன். குடியை பற்றி பேசக்கூடியவர்கள் இன்று பெருகிவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைப்பேசுகிறார்கள். குடிப்பவர்கள்கூட அதை தெரிந்துகொண்டு பேசுவதில்லை.
வில்லியம் டங்கன் சில்க்வர்த்
நண்பர்களே, குடியின் வரலாற்றில் முக்கியமான பெயர் வில்லியம் டங்கன் சில்க்வர்த். குடியை ஒரு தனிமனிதனின் பழக்கமாக மட்டும்தான் சமூகம் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னுடைய பலவீனம் காரணமாக, தன்னுடைய விருப்பம் காரணமாக அவன் அதை கடைப்பிடிக்கிறான் என்றார்கள். அவனை உபதேசித்தும் கண்டித்தும் திருத்த முயன்றார்கள். மதம் சார்ந்தும் சமூகச்சட்டங்கள் சார்ந்தும் அவனை கட்டுப்படுத்தினார்கள். தண்டித்தார்கள்.
சில்க்வர்த் அதை ஒரு நோய் என்று விளக்கிய முன்னோடியான அறிஞர். குடிகாரர் ஒரு நோயாளி, குடிநோயாளி. அதை முதலில் அவர் உணரவேண்டும். அது தன்னுடைய வாழ்க்கைமுறை அல்ல, தன் பிடியில் நிற்கக்கூடிய ஒரு பழக்கம் அல்ல என்று அவர் அறிய வேண்டும். ’சாயங்காலமானால் எனக்கு கைகால்கள் உதறும், கொஞ்சம் குளிரும், இது என்னுடைய பழக்கம், நினைத்தால் நிறுத்திக்கொள்வேன்’ என்று மலேரியா நோயாளி சொல்வதைபோன்றது நம்முடைய குடிகாரர்கள் பலர் குடியைப்பற்றிச் சொல்வது.
குடிகாரரை ஒரு நோயால் பீடிக்கப்பட்டவர் என அவரது சுற்றமும் சமூகமும் உணரவேண்டும். குணமாவதற்கு மிகமிகக் கஷ்டமான நோய். பலவிதமான உட்சிக்கல்கள் கொண்ட நோய். அந்த நோயில் இருந்து அவர் நினைக்காத வரை மீளமுடியாது. அவரை அவரே மீட்டுக்கொள்ள அவரது சுற்றமும் சமூகமும் உதவவேண்டும். குடிநோயாளிகளில் முழுமையாக மீளக்கூடியவர்கள் ஐந்து சதவீதம்கூட கிடையாது. [குடும்ப பாசம் உறுதியாக இருப்பதனால், இந்த விகிதம் இந்தியாவில் கொஞ்சம் அதிகம் என்கிறார்கள்].
குடி ஒரு நோய் என்ற எண்ணத்தை உருவாக்குவதில் சில்க்வர்த் அவர்கள் ஆற்றிய பெரும்பங்கு இன்று மருத்துவ அறிவியலில் ஒரு வரலாற்று திருப்புமுனையாக கருதப்படுகிறது. சில்க்வர்த் அவர்களால் மீட்கப்பட்ட பில் வில்சன் என்ற குடிநோயாளியால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்த ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ். அந்த மருத்துவமேதையை இன்று நன்றியுடன் நினைத்துக்கொள்வோம்.
பில் வில்சன், நிறுவனர் ஆல்ஹகாலிக்ஸ்அனானிமஸ்
குடி பற்றிய ஆய்வுகளில் மிகச்சமீபமாக நிகழ்ந்துள்ள பாய்ச்சல் என்பது குடிக்கு அடிமைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பாரம்பரியமாகவே வருகின்றன என அறிந்ததுதான். அவை நம் மரபணுக்கூறுகளிலேயே உள்ளன. நாம் குடிக்கும் சாராயத்தை நம் மூளைக்குள் இருந்து எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான வேதிப்பொருள் உள்ளது. டெட்ரோ ஹைட்ரோடைஸோ குயிலோன் [TIQ] . டி.ஐ.க்யூநம் மூளைக்குள் இருக்கும் இந்த ரசாயனம் சாராயத்தை பெற்றுக்கொண்டதும் செயல்பட ஆரம்பிக்கிறது. படிப்படியாக அது மூளையின் பிற ரசாயனங்களை வேலைசெய்யாமலாக்குகிறது. ஆச்சரியம் என்னவென்றால் டி.ஐ.க்யூ மூளையின் பிற ரசாயனங்கள் செய்யும் வேலையை முழுக்க தானும் செய்ய ஆரம்பிக்கிறது.
சென்ற பல ஆண்டுகளில் டி.ஐ.க்யூ பற்றி நிறையவே ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஒவ்வொன்றும் மிக சிக்கலான பதில்களையே கொடுத்துள்ளன. டி.ஐ.க்யூ-க்கு பதிலாக பல ரசாயனங்களை கண்டுபிடித்தார்கள். அவற்றை கொடுத்து குடிநோயாளிகளை மீட்க முடியுமா என்று பார்த்தார்கள். அவை ஒவ்வொன்றும் மூளைக்குள் டி.ஐ.க்யூ செய்யும் அதே வேலையைத்தான் செய்தன. குடியை விட்டு அந்த மாத்திரைகளுக்கு நோயாளியை அடிமையாக ஆக்கின அவை.
டி.ஐ.க்யூ வின் அளவும் தீவிரமும் பெரும்பாலும் மரபுரிமையாக கிடைக்கக்கூடியவை என்கிறார்கள். ஒப்பீட்டளவில் மஞ்சள் இனம் டி.ஐ.க்யூ வின் தீவிரம் குறைவானது என்கிறார்கள். சில இனக்குழுக்களிலும் இந்த ரசாயனத்தின் வீரியம் அதிகம், ஆனால் சிலரிடம் அனேகமாக இல்லை என்கிறார்கள். எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். தட்பவெப்பநிலை. ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்ந்து வாழ்ந்து உருவாகக்கூடிய இயல்புகள். அவை தலைமுறைகளாக கைமாறப்படுகின்றன.
டி.ஐ.க்யூ நம் மூளைக்குள் நமக்கே தெரியாமல் இருக்கும் ஒரு அபாயம். இங்கே நிற்கும் நான் இன்றுவரை குடித்ததில்லை. ஆனால் ஒருவேளை என் தலைக்குள் அந்த பூதம் காத்துக்கொண்டிருக்கலாம். முதல் கோப்பைக்காக. பாலைவனத்தில் வெட்டுக்கிளிகளின் முட்டைகள் ஆயிரம் வருடம் கிடக்கும். ஒரே ஒரு மழை பெய்ததும் பிலுபிலுவென கிளம்பி தேசங்களையே தின்று மொட்டையாக்கிவிடும். அதைப்போல.
சிலநாட்களுக்கு முன்னர் ஒரு விவாதம். ஒருவர் சொன்னார், சாதிப்புத்தி என்று உண்டா என்று. வழக்கமாக வசையாகவே அதை பயன்படுத்துவோம். ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்று நம் வாழ்க்கையில் ஏதேனும் பங்களிப்பாற்றுகிறதா? நான் இன்று சாதிக்குள் மணம் புரிந்து வாழக்கூடியவன் அல்ல. ஆனால் ஒரு சாதிக்குள் நான் பிறந்திருக்கிறேனே, அது எனக்கு எதையாவது கொடுத்ததா? நான் என்னையே கூர்ந்து பார்த்துக்கொள்கிறேன்.
என்னுடைய சாதி போரிடும் சாதி. யாருக்காகவோ யாரிடமோ போரிட்டு கொல்லவும் சாகவும் நூற்றாண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்டது இது. அந்த செயலைச் செய்வதற்குண்டான மனநிலைகள் இந்தசாதிக்கு தலைமுறை தலைமுறையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. குடும்பச்சூழலில் அந்த உணர்ச்சிகளும் நம்பிக்கைகளும் மூளைக்குள் ஏற்றப்பட்டுள்ளன. குலதெய்வங்கள் வழியாக குல ஆசாரங்கள் வழியாக அந்த மனநிலைகள் உள்ளே செலுத்தப்பட்டிருக்கின்றன. பண்டிகை அன்று சர்க்கரைப்பொங்கல் வைப்பவர்களுக்கும் ஆட்டின் கழுத்தை வெட்டி துடிக்கத்துடிக்க கொட்டும் ரத்தத்தை சட்டியில் பிடித்துவந்து பொரியல் வைத்து சாப்பிடுபவர்களுக்கும் அடிப்படை மனநிலைகள் வேறுவேறுதான் இல்லையா?
அந்த மனநிலை பற்பல தலைமுறைகள் தாண்டும்போது மரபுக்குணமாக மாறுமா? மாறும் என்றேநான் நினைக்கிறேன். மரபணுப்பண்புகளில் அடிப்படை உடற்கூறுகளாக , நிறமாக வடிவமாக, ஆகக்கூடியவை பல தலைமுறைகள் வழியாக பரிணாமம் ஆகக்கூடியவை. ஆனால் சில தலைமுறைகளுக்குள்ளாகவே பரிணாமம் பெற்று கைமாறப்படும் சில மரபுக்குணங்களும் உண்டு என்று சொல்லப்படுகிறது. நான் என்னை பார்க்கிறேன். உக்கிரமான முன்கோபத்தை நான் என் முன்னோரிடமிருந்து பெற்றிருக்கிறேன். வேல்கம்பை தூக்கிக்கொண்டு போர்க்களம் போன முன்னோர்களின் பண்பு அது. அந்த முன்கோபத்தின் மறுபக்கம் என்றால் மனச்சோர்வு. அவை இரண்டும் இருந்தால் உருவாகக்கூடிய சர்க்கரை நோய்.
இந்தியாவில் பொதுவாக குடிக்கு அடிமைப்படும் தன்மை மிக அதிகம் என்று சொன்னார்கள். இந்த துறையில் இருக்கும் ஒரு நண்பர் சொன்னார், பொதுவான கணிப்புகளின்படி போர்த்தொழிலை மரபாகக் கொண்ட சாதியினரில்தான் குடி அடிமைகள் மிக அதிகம் என்றார். ஆம், நானும் என் வாழ்நாள் முழுக்க இந்த பாரம்பரியப்பண்புகளுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். இவற்றில் இருந்து என்னை மீட்டுக்கொள்ள என் முழு கல்வியையும் பண்பையும் நான் செலவிட்டுக்கொண்டிருக்கிறேன். இவற்றுடன் இணையக்கூடிய ஒரு பெரிய பேயை உள்ளே உறக்கத்திலேயே வைத்திருக்கிறேன்.
ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் போன்ற அமைப்புகள் நெடுங்காலம் செய்துவந்த பிரச்சாரம் என்பது ‘குடி அளவு மீறுகிறதா என்று கண்காணியுங்கள்’ என்பதுதான். நான்கு அறிகுறிகள். 1. ஒருநாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்திலே குடிக்கத்தோன்றுகிறதா? 2. எல்லா எண்ணங்களும் எப்படியோ குடியுடன் சம்பந்தப்படுகின்றனவா? 3. தனிமையில் இருக்கையில் குடி நினைவு வருகிறதா 4. அன்றாடச்செயல்களான தூக்கம், மலம்கழித்தல் போன்றவற்றுக்கு குடி தேவைப்படுகிறதா? ஏதேனும் ஒன்றுக்கு ஆம் என்றால் கட்டுப்பாட்டை இழந்துவிட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்
ஆனால் இன்றைக்கு ‘தொடங்கவே செய்யாதீர்கள்’ என்பதுதான் பிரச்சாரமாக இருக்கிறது. ஏனென்றால் இது உங்கள் கையில் இல்லை. உங்களுக்குள் இருக்கும் டி.ஐ.க்யூ என்ன நினைக்கிறது, எங்கே கொண்டுசெல்ல விரும்புகிறது என்று உங்களால் சொல்லமுடியாது.
நண்பர்களே, நான் கேரளத்தை நன்கறிந்தவன். இருபதாண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் கிராமங்கள் முழுக்க நூலகங்கள் இருக்கும். வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக இருந்தது அங்கே. நடகங்கள் நடக்கும். கலைநிகழச்சிகள் நடக்கும். அரசியல் விவாதங்களும் போராட்டங்களும் நடக்கும். இன்றைய கேரளம் நேர் மாறாக ஆகியிருக்கிறது. வாசிப்பு அழிந்துவிட்டது. கலைகள் அழிந்துவிட்டன. அரசியல் வெறும் கும்பல்கூச்சலாக ஆகிவிட்டது
என்ன நடந்தது? நான் ஒரு முறை அதை மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனிடம் கேட்டேன். ‘குடிதான்’ என்றார். இந்த சரிவுக்கு நேர் எதிரான ஒரு புள்ளி விவரம் உண்டு. கடந்த இருபதாண்டுக்காலத்தில் கேரளத்தில் மதுவகைகளின் விற்பனை எகிறிக்கொண்டே இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே அதிக மது விற்பனையாகும் மாநிலம் அது.
குடி நம் சமூகத்தில் ஒரு சமூக விலக்கால்தான் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக இங்கே நமக்கு சொல்லப்பட்டது. இன்றும் இங்கே குடிகாரன் மேல் சமூக மரியாதை இல்லை. எப்படி சமூகம் குடிப்பவர்களை நடத்துகிறது என்று இங்கே பேசியவர் சொன்னார். அந்த விலக்குதான் நம் சமூகம் குடிக்கு எதிராக வைத்துள்ள பெரிய தடுப்பு. அந்த தடுப்பு கொஞ்சம் கொஞ்சமாக கேரளத்தில் இல்லாமலாகியது. குடிப்பது ஒரு கேளிக்கை, அது பாவம் அல்ல என்றார்கள் அறிவுஜீவிகள். குடிப்பது நாகரீகம். குடிப்பது உயர்குடி பண்பாடு. குடிப்பது மேலைநாட்டு வழக்கம். இப்படி மெல்லமெல்ல அதற்கெதிரான மனத்தடை அகன்றது.
இன்றுகேரளத்தில் கணிசமான வீடுகளில் விருந்தினர்களுக்கு மதுகொடுத்து உபசரிக்கும் வழக்கம் உள்ளது. வீட்டு உறுப்பினர்கள் அமர்ந்து குடிப்பது சாதாரணமாக உள்ளது. பெண்கள் குடிக்க ஆரம்பிதிருக்கிறார்கள். பீரும் ஒயினும் குடித்தால் தப்பில்லை என்று அவர்களுக்கான நியாயங்கள். திருமணவிழாக்களில் பார்ட்டிகளில் குடி ஒரு கட்டாயமான நிகழ்ச்சி இன்று.
விளைவாக நம்முடைய அந்திகள் நம்மை விட்டு விலகிச்சென்றன. நாம் நம் பகலை முழுக்க வயிற்றுப்பாட்டுக்காக விற்றுக்கொண்டிருக்கிறோம். அந்திகள்தான் நமக்குரியவை. நாம் அரசியலையும் இலக்கியத்தையும் கலைகளையும் பேசுவது அந்திகளில்தான். நாம் குடும்பத்துடன் இருப்பது அந்திகளில்தான். நமக்கான நேரம் என்பது அந்திதான். அந்த அந்திகளை குடி களவாடிவிட்டது. இன்றைய கேரளத்தில் மாலை ஆறுமணிக்கு கேரளம் முழுக்க ஒலிக்கும் குரல் ‘வையுந்நேரத்து எந்தா பரிபாடி?’ சாயங்காலம் என்ன புரோக்ராம்? ஆம், குடிதவிர வேறு ஆர்வங்களே இல்லை. அதுவே அங்கே அனைத்து துறைகளிலும் இன்றுகாணும் தேக்கநிலை.
இங்கே தமிழ்நாட்டிலும் அந்த நிலை சென்னையிலும் கோவையிலும் உருவாகி வருகிறது. குடிக்கு எதிரான மனத்தடைகளை நாகரீகம் என்றபேரில் உடைத்து தள்ளுகிறார்கள். சனிக்கிழமைச்சாயங்காலங்களில் குடிக்காதவன் அன்னியனாக ஆகும் சூழல் உருவாகி வருகிறது. குடிக்காதவர்கள் நண்பர்கள் மத்தியில் வேலைசெய்யுமிடங்களில் எங்கும் தனிமைப்படுகிறார்கள். கட்டுப்பெட்டி என்றும் கோழை என்றும் கேலிசெய்யபப்டுகிறார்கள். ஆகவே தன்னை தக்கவைத்துக்கொள்ளவே குடிக்கவேண்டிய நிலைக்கு ஆணும் பெண்ணும் தள்ளப்படுகிறார்கள்.
இன்று குடிக்கு எதிரான சமூகத்தடைகள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. குடி பாவம் என்றால் இன்று எவரும் கேட்கப்போவதில்லை. குடியைப்பற்றி இன்றைய அறிவியல், நவீன மருத்துவம், என்ன சொல்கிறது என்று எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் போன்ற அமைப்புகளின் பங்களிப்பு இன்னமும் பலமடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கிறது
டேவிட் அட்டன்பரோவின் ஒரு இயற்கைப்படத்தில் ஒரு காட்சியை கண்டேன். ஒரு பூச்சுயிரி [ஃபங்கஸ்] எப்படி இனபெருக்கம் செய்கிறது என்று. அது ஒரு எறும்பின் காலில் ஒட்டிக்கொள்கிறது. சட்டென்று மூளைக்குள் செல்கிறது. உடனே அந்த எறும்புக்கு திரும்பி தன்கூட்டுக்கு செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. கூட்டுக்குள் சென்று மற்ற அத்தனை எறும்புகளுக்கும் அந்த பூச்சுயிரியை அது பரப்புகிறது. பாதிக்கப்பட்ட அத்தனை எறும்புகளின் மூளைக்குள்ளும் சென்று அமர்ந்துகொண்டு அந்த பூச்சுரியி நேராக வெளியே செல்ல சொல்கிறது
எறும்புகள் வெளியே போய் புல்நுனிகளில் ஒட்டிக்கொண்டு காத்திருக்கின்றன. காலையில் மேயவரும் மாடுகளின் வயிற்றுக்குள் செல்வதற்காக. அந்த மாடுகளின் வயிற்றுக்குள் போய் அந்த பூச்சுயிரி இனப்பெருக்கம் செய்கிறது. சாணி வழியாக திரும்பவும் வந்து காட்டில்பரவுகிறது.
தன்னுடைய இனபெருக்கத்திட்டத்துக்காக அந்த எறும்புகளை அந்த பூச்சுயிரி பயன்படுத்திக்கொள்கிறது. எறும்புகளின் சிந்தனைகளையும் செயல்க்ளையும் அது கட்டுப்படுத்துகிறது. சாதாரணமான ஒரு ஃபங்கஸ். மனமோ சிந்தனையோ இல்லாத சாதாரணமான ஒரு உயிர்பூச்சுதான் அது. அந்த எறும்புகள் வரிசையாக புல்நுனியில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். ஏதோ சாபம் பெற்ற உயிர்களைப்போல. அந்த எறும்பு ஒன்றை கூப்பிட்டு ’நீ ஏன் இங்கே இருக்கிறாய்?’ என்று கேட்டால் ’என் சொந்த விருப்பப்படி வந்து அமர்ந்திருக்கிறேன். இதுதான் கேளிக்கை. இதுதான் நாகரீகம்’ என்றுதான் சொல்லும் இல்லையா?
நண்பர்களே மது என்பது மிகச்சாதாரணமான ஒரு ரசாயனப்பொருள். வயிற்றுக்குள் போனதும் அசிடால் டிஹைட்ரேடாகவும் அசிட்டிக் அமிலமாகவும் மாறக்கூடியது. ஆனால் அது நம் முளைக்குள் போய் நம் எண்ணங்களை ஆட்டிப்படைக்க கூடியது. நம் சிந்தனைகளை கட்டுப்படுத்தக்கூடியது. அது நம்முடைய பானம் அல்ல, நம் மூளைக்குள் இருக்கும் டி.ஐ.க்யூ என்ற பேயின் பானம் அது.
நாம் போராடிக்கொண்டிருப்பது அந்த தீய சக்திக்கு எதிராக. அந்த போராட்டத்தை நடத்தக்கூடிய, அதை வென்று மீண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றி
[10-4-2011 அன்று சென்னை பெரம்பூர் அல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பில் பேசியது]
குடி- ஒரு கட்டுரை