ராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள்

ராய் மாக்ஸம்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க

இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு வாங்க

உப்புவேலி வாங்க

ராய் மாக்ஸாம் தமிழில் ஏற்கனவே நன்கு அறிமுகமான பெயர். அவருடைய உப்புவேலி சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் எழுத்து பிரசுரமாக வெளிவந்தது. அதன்பின் மறுபதிப்பாக தன்னறம் அதை வெளியிட்டுள்ளது. சிறில் அலெக்ஸின் இயல்பான அழகிய மொழியாக்கத்தில் நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கும் அந்நூல் பிரிட்டிஷ் இந்தியாவைப்பற்றிய மிகப்பெரிய புரிதலை அளிக்கும் ஆக்கம்.

இந்தியா எப்படி பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது, ஆட்சி செய்யப்பட்டது என்பதை உப்புவேலி சித்தரிக்கிறது. இந்தியாவுக்கு குறுக்காக பிரிட்டிஷார் கட்டிய மாபெரும் வேலி உண்மையில் ஒரு குறியீடு. இந்தியாவை அவர்கள் பிரித்தாண்டதன் அடையாளம் அது. இந்தியாவில் மேற்கே விளைச்சல் பெருகி கிழக்கே மழைபொய்த்த சூழலில் மேற்கிலிருந்து கிழக்குக்கு தானியங்கள் செல்வதை முற்றாகத் தடுத்து பெரும்பஞ்சத்துக்கும் முற்றழிவுக்கும் காரணமாகியது அந்த வேலி. தானியங்கள் மேற்குபக்கமிருந்த துறைமுகங்கள் வழியாக இந்தியாவை விட்டு வெளியேற அதுவே அரணமைத்துக்கொடுத்தது

அந்த வேலியின் உருவாக்கம் பற்றிப் பேசும் ராய் மாக்ஸாம் இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் இரு திறப்புகளை அளிக்கிறார். ஒன்று இந்தியாவின் பொருளியலில் உப்பு வகித்த பங்கு. அது ஒரு பண்டமாற்று நாணயமாகவே செயல்பட்டது. இரண்டு, ஊழல் வழியாக இந்தியாவின் மக்களில் இருந்தே வெறும் இருபதாண்டுகளில் பிரிட்டிஷார் உருவாக்கியெடுத்த அதிகாரவர்க்கம். அது செயல்பட்டவிதம்.

இந்தியவரலாற்றின் மாபெரும் அழிவுகளுக்கு காரணமான அந்த வேலியைப்பற்றி இந்தியவரலாற்றில் எவருமே எழுதவில்லை. இருநூறாண்டுகளுக்குள் அது முற்றாகவே மறக்கப்பட்டு, இந்தியவரலாற்றாய்வாளர்களுக்கும் தெரியாத ஒன்றாக ஆகியது. பிரிட்டிஷ் ஆவணக்காப்பகத்தில் பணியாற்றிய ராய் மாக்ஸாம் அங்கிருந்த பிரிட்டிஷ் நில அளவை ஆவணங்களைக்கொண்டும், தானே நேரடியாக இந்தியாவில் பயணம்செய்து அறிந்தவற்றைக்கொண்டும் இந்நூலை உருவாக்கினார்.

சிறில் அலெக்ஸ்

பிரிட்டிஷ் இந்தியாவின்  வரலாற்றைப் பற்றி அதற்குப்பின் நிகழ்ந்த அத்தனை உரையாடல்களையும் இந்த நூல் திசைமாற்றியது. ஆனால் ராய் பிரிட்டனின் மரபான ஆய்வாளர்களால் கடுமையாக வெறுக்கப்பட்டு வசைபாடப்பட்டார். ஐரோப்பிய நிதிக்கொடைகளைக்கொண்டு ஆய்வுகள் செய்யும் இந்தியக் கல்வித்துறையினரும் இந்நூல் உருவாக்கும் பார்வையை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் ராய் இந்தியா ஐரோப்பியரால் சூறையாடப்பட்ட வரலாற்றை The Theft of India என்றபேரில் மேலும் விரிவான ஆவணத்தரவுகளுடன் எழுதினார். அவருடைய நூல்களின் அசைக்கமுடியாத ஆவணத்தன்மையை மறுக்க இயலாமல் அதைக் கடந்துசெல்லவே மேலைநாட்டு ஆய்வுலகம் இன்றும் முயல்கிறது

ராய் மாக்ஸம் எழுதிய இரு நூல்கள் இவ்வாண்டு வெளியாகின்றன. The Theft of India என்ற பேரில் பி.ஆர்.மகாதேவனால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.இந்தியாவின் அடிப்படையான பொருளியல் கட்டுமானம் ஐரோப்பியர்களின் தொடர்கொள்ளையால் எப்படி ஒட்ட சுரண்டப்பட்டது என்பதை அவர்களின் ஆவணங்களைக்கொண்டே காட்டும் நூல் இது

ராய் எழுதிய ஆரம்பகால நூலான Tea: Addiction, Exploitation, and Empire சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் தே- ஓர் இலையின் வரலாறு என்றபேரில் வெளியாகிறது. உலகமெங்கும் காலனிநாடுகளில் காடுகளை அழித்து, அடிமைத்தொழிலாளர் முறையையும் கங்காணி வர்க்கத்தையும் உருவாக்கி பிரிட்டிஷார் தேயிலை வணிகத்தை உருவாக்கியதன் கதை இந்நூல். சிறில் அலெக்ஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார்

பாடப்புத்தகங்களைக் கடந்து, ஐரோப்பிய மேட்டிமைவாதிகளும் அவர்களின் பக்தர்களும் உருவாக்கிய வரலாற்றை மீறி உண்மையான இந்திய வரலாற்றை அறிய ஆர்வமுடையவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல்கள் இவை

உலகின் மிகப்பெரிய வேலி
ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்
ராய் மாக்ஸம் பற்றி இந்திரா பார்த்தசாரதி
உப்புவேலி – தன்னறம் நூல்வெளி
உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை
உப்புவேலி பற்றி பாவண்ணன்
உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை
நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு
பஞ்சம்,சுரண்டல்,வரலாறு
என்ன பிரயோசனம்?
ராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு
முந்தைய கட்டுரைமுதுநாவல்- கடிதம்
அடுத்த கட்டுரைஓர் இளைஞரின் குரல்