விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்,அமெரிக்கா- கடிதம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – மேலும்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம் அறிய ஆவல்.

கடந்த ஒரு வருடமாக, நான் வேலை செய்யும் நிறுவனத்தின் பொருட்டு, வேலைக்கு ஆள் எடுப்பதற்காக நேர்முகம் செய்யாத வாரமே இல்லை என்று சொல்லலாம், அந்த நேர்முகங்களில் கலந்துகொள்பவர்கள், சமீபத்தில் பட்டம் வாங்கிவிட்டு வேலை தேடும் இளைஞர்களிலிருந்து எட்டு வருட அனுபவம் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும் அடக்கம். அவர்களிடம் நான் கேட்கும் கேள்விகளில், இவற்றில் ஒன்றாக இருக்கும்.  உங்களை நான் ஏன் இந்த வேலைக்கு எடுக்கவேண்டும்? மற்றவர்களிடம் இருந்து எப்படி நீங்கள் வேறுபட்டு இருக்கிறீர்கள்?  நீங்கள் வந்ததும் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம்? நீங்கள் இதுவரை செய்த வேலைக்கும், எங்கள் நிறுவன வேலைக்கும் என்ன சம்பந்தம் ?

இந்தக் கேள்விக்கான பதிலில், அவர்கள் எங்கள் நிறுவனத்தின் தளத்தைப் பார்த்திருந்தாலோ, அதன் மூலம் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள் பயன்பாட்டை அறிந்திருந்தாலோ பதில் தெளிவானதாக இருக்கும். அவர்கள் அப்படி ஆராய்ச்சி செய்யவில்லை என்று பட்டவர்த்தனமாக தெரியும் பட்சத்தில், எங்கள் தளத்திற்கு சென்று பார்த்தீர்களா என்று நேரடியாக கேட்டால், ‘நேரம் இல்லை’ என்ற ஒரு பொதுவான பதில் வரும்.  முக்கால்வாசி பேர் சரியாக தன்னைத் தயார் செய்துகொள்ளாமல்தான் வருவார்கள்.

நான் வேலைக்கு ஆள் எடுக்கும் நேர்முகங்களின் அனுபவங்கள் இப்படி இருக்க, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் (அமெரிக்கா) இணைய வரும்  நண்பர்களுடனான, எனது முதல் தொலைபேசி அழைப்பின் அனுபவம் வேறு விதமாக இருக்கும். ‘ஹலோ’ சொல்லி முடித்த அடுத்த கணமே, தளத்தில் வரும் கட்டுரைகள் , கதைகளில் அவர்களுக்கான விருப்பம், ஜெயமோகனை எப்பொழுதிலிருந்து வாசிக்கிறார்கள் , வெண்முரசு நாவல் வரிசை வாசிப்பில் எங்கு இருக்கிறார்கள் என்று நான் கேட்காமல் எல்லாவற்றையும் மூச்சுவிடாமல் ஒப்பித்துவிடுவார்கள்.

ஐந்து நிமிடங்களில், ஜெயமோகனின் எழுத்துக்களால் உருவான தொப்புள்கொடி உறவு எனக்கும், புதிய நண்பருக்கும் உருவாகி இருக்கும். உங்களைத்தான் அப்படி வாசித்து வருகிறார்கள் என்று கொஞ்சம் என்னைப் பற்றியும் குழுவைப் பற்றியும் சொல்லலாம் என்று வாயெடுத்தால், உங்களைத்தான் தெரியுமே தளத்தில் உங்கள் கடிதங்களை வாசித்திருக்கிறோம் என்பார்கள். சங்கப் பாடல்களுக்கு இசை அமைத்தாரே, அவர்தானே என்று ராஜன் சோமசுந்தரத்தைப் பற்றி நான் அறியாத விஷயங்களை சொல்வார்கள். வேணு தயாநிதியை, எனக்கு முன்னரே அறிமுகமானவர்களாக இருப்பார்கள். பழனி ஜோதியா, அந்த கி.ரா.நிகழ்வில் குறுந்தாடி வைச்சுக்கிட்டுப் பாடினாரே, அவர்தானே, நன்றாகப் பாடினார் என்பார்கள். எல்லாவற்றையும்விட ‘எனக்கு அவ்வளவாக பேசவராது, எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற பொய்களையும் அவிழ்த்து விடுவார்கள்.

அவர்கள் அவையடக்கம் என்ற வகையில் சொல்கிறார்கள் என்றாலும், அதை பொய் என்று அறியமுடியதவனா நான் என்று அடுத்து வெண்முரசிலிருந்து ஏதாவது ஒரு துண்டை எடுத்துப் போட்டால் போதும். அவர்களின் பேச்சாற்றலும், விவாதப் பக்குவமும் தெரிந்துவிடும். அம்பைக்கு, படகு ஓட்டுவானே ஒரு குகன் அவன் பேரு .. பேரு.. என்று நான் திணருவேன்.  ‘ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல் நிருதன் உணர்ந்தான்’ என்று அடிக்கோடிட்டு, அம்பை பற்றி சிலாகித்து பேச ஆரம்பித்துவிடுவார்கள்.  இளைய யாதவனின் துவாரகை என்ன ஒரு அழகு என்று நான் சொன்னால், ‘கல்பொருசிறுநுரையில் நீர்க்குமுழி போல் அது அழிவதை வாசிக்க மனது கனமாகிவிட்டது’ என்பார்கள்.

தளத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தகவல் வந்ததும், 25 உறுப்பினர்கள் இருந்த குழு 44 உறுப்பினர்கள் உள்ள குழுவாக பேருறு எடுத்து உள்ளது. இனியுமே இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் எனது தொலைபேசிக்காக காத்திருக்கிறார்கள்.  25 சதம் நண்பர்கள் வெண்முரசை முழுதும் வாசித்து முடித்தவர்கள், என்பது எனது தனிப்பட்ட புரிதல். புதிய நண்பர்கள் வந்து சேர்ந்ததும், அவர்களை அறிமுகம் செய்துகொள்ளும் வண்ணம், ஜனவரி 9-ஆம் தேதி ஒரு இணைய நிகழ்வு நடத்தினோம். பிப்ரவரி மாதம் முதல் , ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை இணைய நிகழ்வு நடத்தலாம் என உள்ளோம். இப்போதைய எண்ணத்தின்படி ஒரு மாதம் வெண்முரசு உரையாடல், மறுமாதம் வேறு நூல் / தத்துவம் / காந்தி பற்றிய உரையாடல் என இருக்கட்டும் என்று உள்ளோம்.

பிப்ரவரி 20, வெண்முரசு நாவல் வரிசையின் முதல் உரையாடல் நடக்க இருக்கிறது. ஜமீலா கணேஷன், ஷங்கர் ப்ரதாப், கிஷொர், முதற்கனல் நூலிலிருந்து அவர்கள் கண்டடைந்ததை உரையாட உள்ளார்கள். வரவிருக்கும் உரையாடல்களுக்கு வடிவைக் கொடுக்கவிருக்கும் சோதனை ஓட்டமாகவே இதை நடத்துகிறோம்.

கலையையும் இலக்கியத்தையும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டு, முன்னின்று நடத்தும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்று இதன் மூலம் அறிந்துகொண்ட நண்பர்கள், ஆர்வம் இருப்பின் [email protected] –க்குத் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைஆகுதி -கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைஇசை திறக்கும் புதிய வாசல்கள்