தல்ஸ்தோய் மனிதநேயரா?
அன்புள்ள ஜெ,
இந்தக் கட்டுரையின் துணையுடன் மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடிந்தது. பல இடங்களில் புதிய திசைகள் திறந்துகொண்டன. மேலும் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, தல்ஸ்தோயின் அழகியல்-அறவியல் பற்றிய புரிதல் ஆழமானது.
பெற்றதை தொகுத்து எழுதுகிறேன்:
மானுடவாதத்தின் லட்சிய மனிதன்
மானுடவாதம் என்ற சிந்தனைக்கும், அறிவொளிக்கால விழுமியங்களுக்கும், சீர்திருத்தவாத கிறிஸ்துவத்தின் கொள்கைகளுக்கும் இறுக்கமான தொடர்பு உள்ளது. ஆதி கத்தோலிக்க மதத்தில் மனிதன் இல்லை. கடவுள், உலகம் மட்டும் தான். சீர்திருத்தவாத கிருத்துவத்தோடு தான் மூன்றாவது கண்ணியாக மனிதன் என்ற தனியன் பிறக்கிறான்.
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பா முழுவதும் பார்த்த மறுமலர்ச்சிக்கால ஓவியங்களையும் சிற்பங்களையும் எண்ணிப்பார்க்கிறேன். குறிப்பாக ஃப்ளோரென்ஸ் நகரில் பார்த்தவை. பதினான்காம் நூற்றாண்டில் ஜோட்டோ, ஃபிலிப்போ லிப்பி முதலிய ஓவியர்கள் தான் மடோனா கையில் இருக்கும் ஏசுவை தத்ரூபமான மனிதக்குழந்தையாக முதன்முதலாக காட்சிப்படுத்தத் தொடங்குகிறார்கள் (இணைத்துள்ள படங்கள் – 1. பர்லிங்கியரோவின் 13ஆம் நூற்றாண்டு இத்தாலிய பைசண்டைன் பாணி ஓவியம் 2. ஃபிலிப்போ லிப்பியின் 15ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக்கால ஓவியம்). ராஃபேலும் டாவின்சியும் அதை வளர்த்தெடுக்கிறார்கள். ஒருவேளை ஐரோப்பாவில் – உலகவரலாற்றிலேயே – மனிதன் என்ற கருத்து பிறந்ததே அப்போதுதான்.
அதே காலகட்டத்தைச் சேர்ந்த மைகெலான்ஜெலோவின் பளிங்குகல் டேவிட் மற்றொரு “தூய மனிதனின்” வடிவம். ஆற்றலையும் உறுதியையும் அறத்தையும் வெளிப்படுத்தும் உருவம். அது கிரேக்கத் தொன்மமும் கிறிஸ்தவத் தொன்மமும் ஒரு மனித உருவில் இணையும் புள்ளி. அதே டேவிட்டின் உருவை நூறு வருடங்கள் முன்னால் டானடெல்லோ வெண்கலத்தில் வடித்திருக்கிறார். அந்த இரு சிற்பங்களைப் பார்த்தாலே அந்த நூறு வருடங்களில் “மனிதன்” என்ற கருதுகோள் அடைந்த தூரம் நமக்குத் துலக்கமாகும்.
ஐரோப்பாவில் மனிதன் என்ற கட்டமைப்பை உருவாக்கியதில் ஷேக்ஸ்பியருக்கு பெரிய பங்கு உண்டு என்று ஹரோல்ட் ப்ளூம் சொல்கிறார். அதுவரை வந்த இலக்கியம் அனைத்திலுமே பாத்திர படைப்பு என்பது ஒற்றைப்படையானதாக இருக்கும் என்கிறார். ஆனால் ஷேக்ஸ்பியர் தான் ஐரோப்பிய இலக்கிய வரலாற்றிலேயே முதன்முதலாக தனக்குள்ளே பேசிக்கொள்ளும் மனிதனை, பேச்சுக்கும் செயலுக்கும் இடையே விலக்கம் உள்ள காம்ப்லெக்ஸான, உண்மையான கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். மெக்பெத், இயாகோ, ரோஸலிண்ட் என்று பலரை சொன்னாலும் அதன் உச்சமாக அவர் சொல்வது ஹாம்லெட். (படம் பற்றி)
மானுடவாதக் கொள்கை சொல்லும் லட்சிய மனிதனில் ஏசுக்குழந்தை, டேவிட், ஹாம்லெட் மூவரால் உருவாக்கப்பட்ட ஓர் உருவகம் என்று எனக்குத் தோன்றுகிறது. குழந்தையின் கலங்கமற்ற மனது. டேவிட்டின் ஆற்றல். ஹாம்லெட்டின் உன்னதத்தன்மை. இவற்றின் வெளிப்பாடே மனிதன். மானுடவாதம் மனிதனை சாராம்சத்தில் கலங்கமற்றவன், ஆற்றல்மிக்கவன், வாழ்க்கையில் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்கையிலும் என்றும் உன்னதமானவன் என்று வகுத்துக்கொள்கிறது. (நீங்கள் கட்டுரையில் குறிப்பிடும் ஜீன் வால்ஜீன் இந்த லட்சணங்களில் பொருந்துகிற ஒரு கதாபாத்திரம்). ஆனால் அப்படி வகுத்துக்கொள்ள அதற்கு எந்த நிதர்சன ஆதாரமும் இல்லை என்று நாம் கவனிக்கிறோம். செவ்வியல் கலையின் உச்ச வெளிப்பாடுகளை இணைத்தே இந்தச் சித்திரத்தை அது வந்தடைகிறது.
(இன்றிலிருந்து பார்த்தால் நாம் எப்போதுமே மனிதர்களாகத்தானே இருந்திருப்போம், ‘மனிதன்’ எப்படி உருவாக்கப்பட்டவனாக இருக்கமுடியும் என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்படி வரலாற்றுரீதியாகப் பார்த்தால், மனிதன் கலை மூலமாகவே தன்னை கண்டுகொள்கிறான் என்று தெரிகிறது. அதாவது கலை தொட்டுக்காட்டும் உருவகங்களைக் கொண்டே மனிதன் தன்னை உருவாக்கிக்கொள்கிறான். பதினாறாம் நூற்றாண்டு இத்தாலியில் ஏழை விவசாயி ஒருவன் டேவிட்டை பார்க்க நேர்ந்திருந்தால் அவன் மனம் எப்படிப் பதறியிருக்கும்? தன் தசைகளில் வெளிப்படும் ஆற்றலையும் உறுதியயையும் அதுவரை அவன் கவனித்திருக்கமாட்டான். ஆனால் அப்பொது கண்டுகொண்டுவிடுவான். இது என் ஆற்றல் அல்லவா என்று. இப்படி கலையில் அவன் பார்க்கும் உருவம் அவன் பிரக்ஞையை விஸ்தீரணம் அடையச்செய்கிறது. அதைக்கொண்டு அவன் தான் யார் என்று வகுத்துக்கொள்கிறான். ஆக மனிதன் என்று நாம் சொல்வதும் ஒரு புனைவு கட்டுமானமே. இதுவே பெரிய பயத்தை உண்டாக்கும் ஓர் அறிதல். எப்படி விஞ்ஞானம் இந்த உலகத்தைப்பற்றி அறியாதவற்றை கண்டுபிடித்து நாம் அறிந்த உலகத்தை மேலும் மேலும் அகலமாக்குகிறதோ, அப்படி கலை மனிதனுக்குள் அறியாதவற்றை சுட்டிக்காட்டிச் சுட்டிக்காட்டி அவன் ஆழத்தை அதிகமாக்குகிறது. இன்று நான் ‘மனிதன்’ என்று சொல்வதும் ஒரு புனைவு தான். என்றால் நாளை மனிதனுக்குள்ளிலிருந்து மேலும் என்னென்ன ஆழங்கள் வரவிருக்கின்றனவோ?)
தல்ஸ்தோய் – அழகியலும் அறவியலும்
இந்த ‘லட்சிய மனிதன்’ மீது தான் தல்ஸ்தோய் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார். தல்ஸ்தோய் யதார்த்த தளத்தில் நின்று வாழ்க்கையைப் பார்த்தார். மனிதனையும் யதார்த்த அளவுகோலால் அளக்கிறார். யதார்த்தத்தில் மனிதன் எப்படியிருக்கிறான்? எளிதில் கலங்கம் கொள்பவனாக, எளிமையானவனாக, ஆற்றலற்றவனாக, ஊழின், விறுப்புறுதியின் விசைகளில் அடித்துச்செல்லப்படுபவனாக இருக்கிறான் என்று அவர் கண்டு புனைவில் நிறுவுகிறார்.
தல்ஸ்தோயின் பார்வையில் மனிதன் ‘உண்மையில்’ ஒரு கட்டுமானம் அல்ல. ஒரு ஆர்க்கிடைப் அல்ல. ஒரு இலட்சியவாத வடிவம் அல்ல. போரும் அமைதியும் போன்ற நாவலில் வரக்கூடிய பாத்திரங்களின் ‘சுய’த்திற்கு கட்டுக்கோப்பான வடிவம் இருக்கிறதா? இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது. அந்த நாவலில் பெரிய பாத்திரங்கள் அனைத்திற்கும் சில அடிப்படை குணாதிசயங்கள் இருக்கின்றன. உதாரணம், பியர் ஆரம்பம் முதலாகவே தேடல் மனோபாவம் கொண்டவனாக இருக்கிறான். ஆண்ட்ரூ ‘சினிக்கா’க இருக்கிறான். நடாஷா உயிரோட்டமுள்ளவளாக இருக்கிறாள். ஆனால் அவர்கள் அனைவருமே கதைநகர்வில் மாற்றமடைகிறார்கள். அடிப்படை குணங்கள் மாறுவதில்லை, ஆனால் அதன் வெளிப்பாடு வெவ்வேறு விதங்களில் சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடுகின்றன. வீழ்ச்சியும் உன்னதமும் கொள்கின்றன. ஆக, தல்ஸ்தோய் ‘சுயம்’ என்பதை மாற்றங்கள் நிகழக்கூடிய ஒரு அடித்தளமாகவே உருவகித்ததாக நினைக்கிறேன். அந்த ‘சுயம்’ அடிப்படையில் நல்லதோ, தீயதோ அல்ல.
மாறாக, மானுடவாதம் உருவகிக்கும் இலட்சிய மனிதனின் கட்டமைப்பில் அப்படியான மாற்றங்களைப் பற்றிய பேச்சுக்கு இடம் இல்லை. சாரம்சத்தையே அது நோக்குகிறது. சாராம்சத்தில் மனிதன் கலங்கமற்றவன், ஆற்றல்மிக்கவன், உன்னதமானவன். அதன் அடிப்படையிலேயே மனிதர்கள் சமமானவர்கள், சுதந்திரத்திற்கு உரியவர்கள். அதுவே அவன் சுயத்தின் இயல்பு. அவன் சுய இயல்பு அடிப்படையில் நன்மை குணம் கொண்டது. இதை தல்ஸ்தோய் அனேகமாக ஏற்கமாட்டார்.
மனிதனின் லட்சிய வடிவத்தைப் பற்றி தல்ஸ்தோய் எண்ணிப்பார்த்தாரா? எண்ணிப்பார்த்தார், ஆனால் அதையும் யதார்த்தமாகத்தான். நெபோலியன் அப்படி ஒரு லட்சிய உருவகம். அவனை யதார்த்தமாகவே பரிசீலிக்கிறார். அவனுடைய பலவீங்களை, மூடத்தனங்களை, காட்சிப்படுத்துகிறார். ப்ளாடன் காராடேவ் இன்னொரு லட்சிய வடிவம். அவனை மட்டுமே மெல்லிதாக ஒரு லட்சிய உருவகமாக அவர் விட்டுவைக்கிறார் என்று நினைக்கிறேன். ஆயினும் பியேர் அவன் மூலமாக அடையும் வாழ்க்கைசார் ஞானம் அவனுடைய வாழ்க்கைவட்டத்துக்குள்ளேயே யதார்த்தமாக இயல்பாக அவனுக்கு நிகழ்கிறது. ஆக மனிதன் எப்படிப்பட்டவன், வாழ்க்கையில் அவன் எப்படி இருக்கிறான் என்பது தான் தல்ஸ்தோயின் முதன்மைப் புனைவுத் தேடலாக இருந்தது என்று அறியமுடிகிறது.
மனிதன் ‘எப்படி இருந்தாகவேண்டும்’, அதை மனிதன் எப்படி அடையமுடியும் என்ற தேடல் அவருக்கு இருந்ததா? அந்த கேள்வியை நோக்கிய தேடல் வாழ்க்கையின் பிற்பாதியிலேயே அவருக்கு வருகிறது. ஓரளவு அன்னா கரீனினாவில் லெவின் கதாபாத்திரத்தில் அதைக் காணலாம். புத்துயிர்ப்பில் அவர் அந்த கேள்வியை மேலும் பரிசீலிக்கிறார். “மனிதன் எப்படி இருந்தாகவேண்டும்? தன்னுடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுபவனாக இருக்க வேண்டும்,” என்கிறார். ஆக மனிதனின் ஆதி இயல்பு பாவம்; அதை குறைக்கவும், செய்தவற்றிற்கு ஈடுசெய்வதுமே அவன் செய்யக்கூடியது என்று இந்த காலகட்டத்தில் தல்ஸ்தோய் நம்பியதாக எண்ணமுடிகிறது. மனிதன் தன்னைக் குறைத்துக்கொள்ளவே முடியும், கூட்டிக்கொண்டு எய்த எந்த இலக்கும் இல்லை என்பதே அவர் மனிதனைப் பற்றி ஒட்டுமொத்தமாக எண்ணியது என்று கூறலாம்.
இந்த இலக்கை அவர் வந்து அடைந்ததற்கு மற்றொரு காரணம், நடுவயதில் – புத்துயிர்ப்பு வெளியாவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னால், அன்னா கரினீனா எழுதிக்கொண்டிருந்த காலத்தில் – அவருக்குள் நிகழ்ந்த ஆன்மீகக் கலகங்கள். இந்தக்காலகட்டத்தில் தான் அவர் வாக்குமூலம் என்ற நூலை எழுதுகிறார். இந்த கட்டுரையை மொழியாக்கம் செய்தபோது ஊடே அந்த நூலையும் வாசித்தேன். தல்ஸ்தோய் மனிதனைப் பற்றி என்ன எண்ணினார் என்ற கேள்விக்கு, அவர் தன்னைப் பற்றியே என்ன எண்ணினார் என்ற வடிவில் ஒரு பதில் இந்த நூலில் உள்ளது. அதில் வெளிப்படும் அவருடைய குழப்பங்கள் அனைத்துமே அவருடைய அறிவுசார்ந்த, கறாரான, யதார்த்தப் பார்வையின் வழியே உருவாகிவந்தவை என்ற எண்ணமே உருவானது.
தல்ஸ்தோய்க்கு தான் ஏன் வாழவேண்டும் என்ற கேள்வி வருகிறது. வாழ்க்கைக்கு உள்ளார்ந்த அர்த்தம் இல்லை என்று அவருடைய யதார்த்த அறிவு அவருக்குச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தெரியாமல் இருந்தால் வாழலாம். அல்லது தெரிந்தே சுய ஏமாற்றுச் செய்துகொண்டு புலனின்பங்களில் தன்னை கரைத்துக்கொண்டு வாழலாம். அல்லது இனி வாழ்ந்து பிரயோஜனம் இல்லை என்று தற்கொலை செய்துகொள்ளலாம். தல்ஸ்தோய் நான்காவது வழியைத் தேர்ந்தெடுக்கிறார். ஏதாவது பார்வை திறக்காதா என்ற (அவர் பார்வையில்) வீணான, கோழைத்தனமான நம்பிக்கையோடு வாழ்கிறார்.
ஒரு கட்டத்தில், இந்த உலகத்தில் தன்னைப்போல் அறிவாளிகள் அல்லாது பிற மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள், என்று கேட்கிறார். அவர்கள் கடவுளை நம்புகிறார்கள், நம்பமுடிகிறது என்பதால் அவர்கள் வாழ்கிறார்கள் என்ற பதிலைச் சென்று அடைகிறார். தானும் நம்பிக்கையாளன் ஆனால் தனக்கும் வாழ அர்த்தம் கிடைத்துவிடும் என்று மதத்திற்குள் நுழைகிறார். நம்பிக்கை அவருக்கு எளிதாக வரவில்லை. ஆனால் நம்பிக்கை மீது நம்பிக்கையை அவருக்கே உரித்தான குருட்டுத்தனமான தீர்மானத்துடன் நொறுக்கிப்பிடித்து வரவழைத்துக்கொள்கிறார் (என்ன தான் இருந்தாலும் அவர் கிறிஸ்துவைப்போல் தூய்மையான, டேவிட்டைப்போல ஆற்றல் மிக்க, ஹாம்லெட்டைப்போல உன்னதமான மனிதன் அல்லவா?)
ஆனால் யதார்த்தத்தில் அந்த நம்பிக்கையை அவரால் இயல்பாக தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்று தான் நினைக்கிறேன். அவர் அதை ஒரு கோட்பாடாக ஆக்கிக்கொண்டு தான் தன் பிற்கால வாழ்க்கையைக் கடந்தார் என்று சொல்லத்தோன்றுகிறது. அதற்குக் காரணம், அவர் அறிவொளிகாலத்தவர் என்பது தான். தல்ஸ்தோய் அறிவொளிகாலத்தின் தலைமகனார். அவர் எப்போதும் அறிவாலேயே வழிநடத்தப் பட்டவர். அறிவை அதன் உச்சபட்ச சாத்தியம் வரை சென்று தொட்டவர். அவர் அறிவின் ஒளியில் மனிதர்கள் எளிமையானவர்களாக, ஏன், வக்கிரமானவர்களாகக் கூட தென்பட்டனர். தூயவன், ஆற்றல்கொண்டவன், உன்னதமானவன் என்ற அறிவொளிக்கால இலட்சிய மனித உருவை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மனிதனைச் சார்ந்து, தன்னைச்சார்ந்து ஒரு pessimism வளர்த்துக்கொள்கிறார்.
அதை ஒரு அறவியல்நோக்காக வடித்துக்கொள்கிறார். மனிதன் இயல்பில் பாவி, தன் பாவங்களை குறைத்துக்கொள்ள தன் வாழ்வை எளிமைப்படுத்தி குறைத்துக்கொள்வதே அவன் செய்யக்கூடியது என்று. அவருடைய பிற்காலம் முழுவதுமே இந்த அறவியல் பார்வையால் வழிநடத்தப்படுவதை நாம் காண்கிறோம்.
மேற்குலகத்தில் ஜார்ஜ் ஆர்வெல் முதலியோர் தல்ஸ்தோயின் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தை ஒரு நமிட்டுச் சிரிப்புடன் எழுதிவைத்திருப்பதைக்கண்டு நாம் எரிச்சல் கொள்ளலாம். நமக்கு ஒழுக்கம் சார்ந்த கட்டுப்பாடுகள், விரதங்கள் முதலியவை அன்னியமானவை அல்ல. நம் மரபில் சிரமணர்கள் அப்படி உடலை வறுத்தி நோன்பிருந்திருக்கிறார்கள். நம்முடைய துறவு அமைப்பின் அடிதளமே மெய்மனதை அடக்கிப் பழக்கும் இவ்வித பயிற்சிகள் தான்.
ஆனால் நம் மரபில் நமக்கு வாய்க்கும் கூடுதலான ஒன்று தல்ஸ்தோய்க்கு வாய்க்காமல் போனதாக எனக்குத் தோன்றுகிறது. அது அவருக்கு பெரிய இழப்பும் கூட. அதை இயல்பான ஒரு மலர்வுணர்வு என்று சொல்லத்தோன்றுகிறது. அது உள்ளுணர்வு சார்ந்தது. அதற்கு கற்பனாவாதத்தின் ஒரு சாயல் தேவை. உலகத்தின் அழுக்குகள் அனைத்துக்கும் அடியில் எங்கோ நம் உள்ளுணர்வு உணரக்கூடிய ஒரு இசைவு. ஓர் அழகு. தல்ஸ்தோய்க்கு அந்த உள்ளுணர்வு இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவருடைய அறிவே அவருடைய பிரதான அறிவுக்கருவியாக இருந்திருக்கிறது. சில நேரங்களில், தன் உள்ளுணர்வு தலைதூக்கும் வேளையில் தன் அறிவைக்கொண்டு அதன் தலையில் தட்டி அடங்கச்செய்தாரோ என்று நினைக்கவைக்கிறது.
தல்ஸ்தோய் சிரவணபெலகோலா பாகுபலிக்கு முன் நின்றிருந்தால் என்ன சொல்லியிருபார்? நடராஜர் சிற்பம் அவருக்குள் என்ன செய்திருக்கும்? காந்தார புத்தரின் அமைதியான முகத்தைக் கண்டிருந்தால் மனிதரைப்பற்றிய அவர் உணர்வு என்னவாகியிருக்கும்? சிந்தனையென்றில்லாமல் புலன் அனுபவமாக இந்திய சித்தாந்தங்களின் சாரத்தை அவர் அடைந்தாரா? இப்படி எண்ணிக்கொள்கிறேன்.
இதெல்லாம் ஊகம். ஆனால் நமக்கு இரண்டு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று, அழகியல். கடைசி காலம் வரை, தல்ஸ்தாய் ‘அறிதலு’க்காக எழுதிய புனைவின் அழகியல் யதார்த்தவாதமாகவே இருந்தது. அவர் கற்பனாவாதத்தை முற்றாக நிராகரித்தே தன்னுடைய யதார்த்தவாத பாணியை உருவாக்கினார். அறிவைக்கொண்டே, யதார்த்தத்தில் பொறுத்தியே, அவர் வாழ்க்கையை ஆறாய்ந்திருக்கிறார் (அவரை ஒரு rational analyst என்று சொல்லலாம்). அதை அவர் மீறவே இல்லை. இரண்டாவது, அறவியல். அவர் அறவியல் என்பது பாவ-பிராயச்சித்த கணக்குகளாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் கீதையிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகளை மட்டும் வைத்தே அவருடைய அறவியல் நிலைப்பாட்டை ஒருவரால் வகுக்கமுடியும். அதற்கு மதிப்பு இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அதில் சிக்கிக்கொண்டவரையில் அதை மீறிய ஒன்றை அவரால் பார்க்கமுடியவில்லை. தல்ஸ்தோயின் அழகியல், அறவியல் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. வாழ்க்கையை யதார்த்தமாகப் பார்த்ததாலேயே அவர் மனிதனை, தன்னை உட்பட, பாவக்கட்டாக நோக்கினார், ஆகவே ஒழுக்கவியலை வலியுறுத்தினார். இரண்டுமே தல்ஸ்தோயின் சிறப்பியல்புகள். அவர் அடிப்படை குணநலத்திலிருந்து உதித்தவை. அவர் பலவீனங்களும் அவையே.
உங்கள் கட்டுரையிலிருந்து தூரம் சென்று, ஒட்டுமொத்தமாக தல்ஸ்தோயின் அழகியல், அறவியல் நோக்கை இப்படித் தொகுத்துக்கொண்டேன்.
*
இருந்தாலும் ஒன்று மிஞ்சுகிறது. அது தல்ஸ்தோயின் நாவல்களை மீண்டும் எண்ணிப்பார்க்கும்போது உருவாகும் சிந்தனை.
தல்ஸ்தோயின் நாவல்களை வரிசையாக பார்க்கிறபோது, அவர் போரும் அமைதியும் வழியாக வாழ்க்கையை நோக்கிய யதார்த்தமான சமநிலைப்பார்வை ஒன்றை அடைந்ததாகத் தோன்றுவதுண்டு. பியேர் மற்றும் குட்டுசோவின் பாத்திரங்கள் இரண்டுமே யதார்த்தத்தில் நின்று யதார்த்தத்தின் வழியாகவே நிறைவு கண்டவர்கள். மாறாக அன்னா கரீனீனா ஒப்புநோக்க சந்தேகமும் குழப்பங்களும் கொண்டதாக இருக்கிறது. தல்ஸ்தோயின் நாவல்களிலேயே அதிகமான கனவுத்தன்மை கொண்ட நாவல் அது. விசித்திரமான, பகுத்தறிவுக்கு அப்பார்பட்ட ஒத்துமைகள் கொண்டது. ஜுரவேதனையின் தீவிரம் வெளிப்படும் அளவில் சில இடங்கள் அமைந்திருக்கிறது. யதார்த்தவாதத்தின் கட்டில் நின்றாலும் அந்த நாவலில் வேறொரு ஆற்றல் இருக்கிறது. ஒழுக்கத்தை ஒழுங்கு மீறிய தளங்களைத் தொட்டுப் பரிசீலிக்கிறது. நிலையான பதில்களை அந்த நாவல் அளிப்பதில்லை, மேலும் கேள்விகளையே விட்டுச்செல்கிறது. போரும் அமைதியும் தல்ஸ்தாயிலிருந்து அன்னா கரினீனாவின் தல்ஸ்தோய் மாறுபடுகிறார். இவ்விறு நாவல்களின் மனநிலைகளை, அழகியல்கருவிகளை, ஒரு வாசகர் தனித்தனியாக பின் தொடர்ந்து சென்றால் இரு வேறு வாழ்க்கைப் பார்வைகளை அடையலாம் என்று நினைக்கிறேன்.
அதன் பின் தல்ஸ்தாய் மேலும் மாற்றமடைந்தார். புத்துயிர்ப்பை எழுதிய ஆசிரியர் இன்னொருவர். அந்த மாற்றத்தை பின் தொடரலாம். அவர் அழகியலை, அறவியலை, தொகுத்துச் சிந்திக்கலாம். ஆனால் அது முழு சித்திரம் அல்ல. நாவல்களில் மேலும் மிஞ்சியிருக்கிறது.
ஆக தல்ஸ்தோய் அவர் வாழ்க்கையில் அடைந்தவற்றைப் பின் தொடர்ந்து சென்று வந்த பிறகு மீண்டும் அவர் நாவல்களுக்கே திரும்புகிறேன். அவரை மீறிய ஒருவர், அவரே கண்டுகொள்ளாத ஒருவர், அவர் நாவல்களில் இருக்கிறார் என்ற நம்பிக்கையால். பிரக்ஞையை மீறீ ஆசிரியரில் நிகழ்ந்தவை அந்த நாவல்களில் இருக்கின்றன. அதில் எனக்கு ஒரு சமிக்ஞை விட்டுவைத்திருக்கிறாரா என்று மீண்டும் தேடுகிறேன்.
*
ஷேக்ஸ்பியரும் தல்ஸ்தோயும்
போன வருடம் ஷேக்ஸ்பியரை பற்றி தல்ஸ்தோய் எழுதிய விமர்சனத்தைப் பற்றி ஒரு வாசகர் கடிதம் உங்கள் தளத்தில் பிரசுரமானது. அதற்கான பதிலில், தல்ஸ்தோயின் விமர்சனத்திற்குக் காரணம் அவர்களுக்கிடையே அழகியல்ரீதியாக இருந்த தூரம் என்ற கருத்தை ஒட்டி எழுதியிருந்தீர்கள். தல்ஸ்தோய் யதார்த்தவாதி, ஷேக்ஸ்பியர் கற்பனாவாத சாயல் கொண்ட செவ்வியலாளர், என்று. இந்தக் கட்டுரையுடன் இணைத்து அந்த கட்டுரையும் வாசித்தபோது மேலதிக புரிதலுக்கு வழிவகுத்தது.
தல்ஸ்தோயின் அழகியலும் அறவியலும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், அவர் ஷேக்ஸ்பியரை அழகியல்ரீதியாக நிராகரிக்கும் அதே வேளையில் அறவியல் ரீதியாகவும் நிராகரிக்கிறார். உதாரணத்திற்கு, அவருக்கு ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் மிகையாக பேசுவது, நீண்ட தன்னுரைகளை அளிப்பது, ஆபாச நகைச்சுவை சொல்வது முதலியவை ‘கட்டுக்கடங்காமல்’ இருப்பதாகத் தென்படுகிறது. அழகியல்ரீதியாக அது பிழை என்கிறார். மானுடர் ‘கட்டுக்கடங்கி’ இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தும் ஒழுக்கவியலுக்கு இத்துடன் சம்பந்தம் உள்ளதாக நினைக்கிறேன். ஷேக்ஸ்பியரின் ‘மண்வாசம் கொண்ட’ அழகியல் தல்ஸ்தோயை அருவருக்க வைப்பதாகத் தெரிகிறது.
அடிப்படையில், ஷேக்ஸ்பியர் லௌகீகமானவர். இறைவாதி அல்ல, மானுடவாதி. அவருடைய நாடகங்களில் வெளிப்படும் ஒட்டுமொத்த அறவியல் நோக்கு என்ன என்ற சர்ச்சை இருப்பதாகத் தெரிகிறது. அதாவது அப்படி ஒரு அறவியல் நோக்கு என்று ஒன்று அவருக்கு இருந்ததா, அல்லது மேடையின் தேவைகளுக்காக கதாபாத்திறங்கள், அவர்கள் பேசும் வசனங்கள் முதலியவற்றை தன் போன போக்கில் அவர் உருவாக்கினாரா என்று.
ஆனால் பொதுவாக, லௌகீக யதார்த்தத்தில் செல்லுபடியாகும் அறவியலையே அவர் பரிந்துரைக்கிறார் என்று சொல்லலாம். மனிதன் வாழ, செய்தாகவேண்டியதை செய்தாகவேண்டும். சூதோ தந்திரமோ போரோ. ஆனால் எந்த விதமான மிகை வெளிப்பாடும் பொதுவாக நன்மை அளிப்பதில்லை. மனிதனின் இயல்பு அது, சில நேரங்களில் ஏனென்றே தெரியாமல் மிகையாக வெளிப்படுகிறான் – ஷேக்ஸ்பியரின் இந்தப் பார்வை தல்ஸ்தோய்க்கு எரிச்சலை அளித்ததை வாசிக்க முடிகிறது.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவரை, அவருக்கு வாழ்க்கைச்சாரத்தை நோக்கிய சீரான தேடல் இருந்ததா என்று சொல்ல முடியவில்லை. வாழ்க்கை பற்றிய அபிப்பிராயங்கள் அவருக்கு இருந்தன. வெவ்வேறு கதாபாத்திரங்களின் பேச்சுகளின் வழியே வெளிப்படுபவை. உலகத்திற்கும் மனிதனுக்குமான உறவைப்பற்றியே அவர் பேசினார். ஆகவே அவர் மானுடவாதி. உலகத்தில் மனிதனின் இடம் என்ன? அவன் எப்படி செயல்படவேண்டும்? எப்போது அவன் தோற்கிறான்? போன்ற கேள்விகளை கேட்டார். மனிதனின் நிறைவு இந்த உலகத்திலே தான் நிகழ்வதாக அவர் எண்ணினார். மனிதனின் இக உலக வாழ்க்கையை மீறி அவர் சிந்தனை போகவில்லை.
வாழ்க்கைச்சாரத்தை நோக்கியத்தேடல் தல்ஸ்தோயில் இருந்தது. ஆனால் அவரிடம் இருந்தது அறிவொளி காலத்தின் ஆயுதமான தூய அறிவும், தன்னுடைய மரபிலிருந்து கிடைத்த கிறிஸ்துவ நம்பிக்கையும்தான். அதைக்கொண்டே அவருடைய ஆன்மீகத்தையும் மெய்யியலையும், நிலம் சார்ந்த அவருடைய மற்ற கேள்விகளுடன் இணைத்து, உருவாக்கிக்கொண்டார். வாழ்வில், நிலத்தில், கிறிஸ்துவ நம்பிக்கையுடன் கூடி தனக்கென்று ஓர் ஆன்மீகத்தை உருவாக்கிக்கொண்டார்.
ஆக ஷேக்ஸ்பியர், தல்ஸ்தோய், இருவருமே வாழ்க்கையில் எய்தக்கூடிய நிறவை பற்றியே பேசினார்கள். ஷேக்ஸ்பியர் அதை லௌகீகமாக அணுகினார், தல்ஸ்தோய் ஆன்மீகமான அணுகினார் என்று எளிமைப்படுத்திச் சொல்லலாம்.
ஷேக்ஸ்பியருடைய பாணி செவ்வியல் என்றாலும், அவர் பார்வை இறைநோக்கற்ற மானுடவாதமாக இருந்தது. ஆகவே அவருடைய நாடகங்களை secular bible என்று குறிப்பிடும் ஆங்கிலேயர் இருக்கிறார்கள் – பைபிலைப்போல அது அவர்களுக்கு மானுடத்தைப்பற்றி ஒரு தொன்மக்கட்டை அளிக்கிறது என்பதால். பகுத்தறிவு பேசிய இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
மாறாக தல்ஸ்தோய் ஆன்மீகவாதி. கடவுளை ஏற்றுக்கொண்டவர். மானுடவாதி அல்லர். மனிதனைப்பற்றி கறாரான யதார்த்தமான புரிதல் கொண்டவர். ஆகவே தன் ஆழம்வரை சென்று உண்மையான தேடலில் ஈடுபட்டவர். ஆனால் ஒரு தூய யதார்த்தவாதியால் செல்லக்கூடிய தூரம் மட்டுமே ஆன்மீகமாக அவரால் செல்லமுடிந்தது. அதற்கு மேல் போக தல்ஸ்தாயிடம் ஆயுதங்கள், கருவிகள் இல்லை. அறிவையும் நம்பிக்கையையும் இணைக்கத்தெரியாமல், இழுபறி வேதனையிலேயே இறந்துபோனார். ஆகவே இன்று மேற்குலகத்தின் கண்களில் ஒரு பழைய மனிதராக, வரட்டு ஒழுக்கவாதியாக, தேவையில்லாத மதப்பேச்சு பேசுபவராக, பார்க்கப்படுகிறார்.
(இந்தக்கட்டுரையில், தல்ஸ்தோய் இங்கே நமக்கு எப்படி பொருளாகிறார் என்ற கேள்வியிலிருந்து தொடங்கிகிறீர்கள். நான் ஷேக்ஸ்பியரை அதேப்போன்று எண்ணிப்பார்க்கிறேன். அவருக்கு தமிழ்நாட்டில், இந்தியாவில் பொருள் என்ன? அவர் ஆன்மீகப்பார்வைக்கு, வாழ்க்கை நோக்குக்கு, அழகியலுக்கு இன்று, இந்த நிலத்தில் மதிப்பு என்ன? ஷேக்ஸ்பியர் காலனிய பிரித்தானிய நன்கொடைகளான ரயில்கள், நிர்வாக அமைப்பு, ஆங்கில மொழி போன்றவற்றுடன் இந்தியாவுக்குள் நுழைந்தவர். அந்த பொதியை அவர் தோளிலிருந்து இறக்கி வைத்து அவரோடு மனிதருக்கு மனிதராக நாம் இன்று உரையாட முடியுமா?)
ஜார்ஜ் எலியட் என்ற யதார்த்த மானுடவாதி
தல்ஸ்தோய் மானுடவாதி அல்ல. ஏனென்றால் மானுடவாதம் சொல்லும் லட்சிய மனிதனின் பிம்பத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மானுடவாத சிந்தனைக்கும் யதார்த்த மனிதனுக்கும் இடையே இருக்கும் தூரத்தை ஒரு எழுத்தாளர் பரிசீலித்திருக்கிறார். அவர் தல்ஸ்தோயின் சமகாலத்தவரான ஜார்ஜ் எலியட்.
ஜார்ஜ் எலியட் மனிதனை உலகத்தில் வைத்துப் பார்த்தாலும், அவன் வாழ்க்கையில் மதமும், கடவுள் என்ற உருவகமும் கொள்ளும் பங்கு என்ன என்ற கேள்வி அவருக்கு இருந்தது. அவருடைய சிந்தனையை மதச்சார்பற்ற மானுடவாத கிறிஸ்தவம் என்று சொல்லலாம்.
ஜார்ஜ் எலியட்டின் பார்வையை மூன்று சிந்தனையாளர்கள் வடிவமைத்தார்கள். ஒன்று, தத்துவவாதி ஸ்பினோட்ஸா. உலகத்தின் மூலக்கூறாக இருக்கும் பொருள் தான் கடவுள், ஆகவே மொத்த உலகமும் கடவுளின் வடிவம் என்ற சிந்தனை அவருடையது. இரண்டாவது டேவிட் ஸ்ட்ராஸ். யேசு கிறிஸ்து ஒரு வரலாற்று மனிதர், பைபில் சொல்லும் அற்புதங்களெல்லாம் தொன்மங்கள் என்ற வாதத்தை முதன்முதலாக முன்வைத்தவர். மூன்றாவது ஹெகெலிய சிந்தனையாளரான லுட்விக் ஃபோயர்பாக். “கிறிஸ்துவத்தின் சாரம்” என்ற நூலை எழுதியவர். அதில் கடவுள் என்பது மனிதனின் உச்ச குணங்களின் வெளிப்பாடு என்று வாதிட்டிருந்தார். கடவுள் மனிதனில், அவன் நடத்தையில், நிகழ்வதாகச் சொன்னார். மனிதனில் கருணை வெளிபட்டால், அது தான் கடவுள். இந்த பார்வை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானுடவாத சிந்தனையாளர்கள் அனைவரையும் பாதித்தது. மார்க்ஸ் முதல் வாக்னர் வரை.
இந்த மூன்று நூல்களும் அவை தனித்தனியாக வெளியான காலத்தில் மிகவும் சர்ச்சைக்குறியவையாக இருந்தன. மூன்று நூல்களையும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் ஜார்ஜ் எலியட். உலகமே கடவுள், இயேசு ஒரு மனிதர், மனிதன் தான் கடவுள் என்ற மூன்று சிந்தனைகளும் பதமாக வெந்து கனிந்த இசைவு அவர் பார்வையில் தென்படுகிறது.
ஜார்ஜ் எலியட் பிறப்பால் சீர்திருத்தவாத கிருத்துவர். பத்தொன்பது வயதில் நம்பிக்கை உடைந்து மதத்திலிருந்தும் தேவாலயத்திலிருந்தும் விலகுகிறார். இதனால் குடும்பத்தினரோடு விலக்கம் ஏற்படுகிறது. தனியாக வருகிறார். உலகத்தில், மனிதர்களில் இருக்கும் நற்குணமே கடவுள் என்ற மானுடவாத இறையியல் சிந்தனையை அடைகிறார்.
அவர் நாவல்கள் பலவற்றில், விதிவசத்தால் சமூகத்திலிருந்து தனிமைப்படும் மனிதர்கள் தோன்றுகிறார்கள். ஆசிரியர் பார்வையில் இவர்கள் பாவப்பட்ட மனிதர்கள். மனிதன் தன்னுடைய சுற்றத்தாருடன், ஊர் உறவுடன், சேர்ந்து வாழ்கையில் நிறைவாக இருக்கிறான். மற்றவர்களுக்கு உதவியாக, கருணையுடன், வாழ முடிந்தால் அங்கே அவன் கடவுளாக ஆகிறான். தனிமைபட்ட மனிதன் கடவுளிடமிருந்தே விலகியிருக்கிறான், கடவுளாலேயே பழிக்கப்பட்டிருக்கிறான். மனிதன் மனிதனுடன் இசைந்து வாழும்போதே அவன் லட்சிய மனிதனாக ஆகிறான். இதுதான் சுருக்கமாக ஜார்ஜ் எலியட்டின் மனிதப்பார்வை.
சிலாஸ் மார்னர் நாவலில் தவறாக திருட்டுப்பட்டம் கட்டி வாழ்க்கையை இழந்த சிலாஸ் கசப்பானவனாகிறான். சமூகத்திடமிருந்து விலகி வருகிறான். பெரிய கஞ்சனாகிறான். அவன் சேகரித்து வைக்கும் தங்கமும் அவனிடமிருந்து திருடப்படுகிறது. அப்போது பனியில் அனாதையாக விடப்பட்ட ஒரு பெண்குழந்தையை கண்டடைகிறான். அவளை தத்தெடுத்து வளர்க்க அவன் முடிவுசெய்ததும் அவன் வாழ்க்கையின் திசை மொத்தமும் மாறுகிறது. குழந்தைக்காக மீண்டும் சமூகத்தில் இணைகிறான். சமூகமும் அவனை ஒரு தந்தை என்று இணைத்துக்கொள்கிறது. அந்த ஆற்றலில் அவன் புதியவனாகப் பிறக்கிறான். அவனுக்கு அடையாளமும் இடமும் உருவாகிறது. அவனுடைய மலர்வு அவன் மொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்து வளர்ந்து வாழ்கையில் அனைவரும் நிறைவு காண்கிறார்கள்.
விதியாலும், தன் உளவியலாலும், தனிமையில் கட்டுண்டிருக்கிறான் சிலாஸ். இது யதார்த்தம். ஆனால் அதை மீறிய கனிவும் ஆற்றலும் அவனுக்கு அவனுடைய சமூகத்தில் அமைகிறது. மனிதன் தன்னை விரித்துக்கொண்டால் உலகத்தை, உலகத்திலேயே நிறைவை அடையமுடியும். இது இறையிலலை மானுடமயமாக்குவதன் வழியாக விளையும் இலட்சியவாதம்.
சிலாஸ் மார்னரில் கனவுத்தன்மையோடு இந்த சிந்தனையின் வீச்சை நிகழ்த்தும் ஜார்ஜ் எலியட், அவருடைய மற்ற நாவல்களில் அதன் யதார்த்த எல்லைகளை பரிசீலிக்கிறார். ஆடம் பீட், தி மில் ஆன் தி ஃப்ளாஸ் முதலிய நாவல்களில்.
இந்த சிந்தனையில் ஜார்ஜ் எலியட் மானுடவாதத்தின் லட்சிய மனிதனின் பிம்பத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மனிதனை யதார்த்தத்தில் வைத்தே பார்க்கிறார். அவனுடைய நெறிமீறல்களை, மனசாட்சியுடனான போறாட்டங்களை, அறம் சார்ந்த கேள்விகளை, நுணுக்கமாக காட்சிப்படுத்துகிறார். அவருடைய கதைமாந்தர் நுண்மையான வன்முறைகளை ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக்கொள்கிறார்கள். ஆக மனிதன் யதார்த்தத்தில் சறுக்கலடையும் குணம் கொண்டவந்தான். ஆனால் ‘சாராம்ச நன்மை’ என்பது மனிதர்களுக்கிடையிலான உறவில், ஒருவரோடுஒருவர் அவர்கள் கொள்ளும் இசைவில், கருணையில் இருக்கிறதென்று அவர் கதைகள் சொல்கின்றன. அப்படி மனிதன் கருணை நோக்கித் தன்னை செலுத்திக்கொள்ளும் வேளையிலெல்லாம் அவன் தனக்கென்று ஒரு சொர்கத்தைப் படைத்துக்கொள்கிறான்.
‘தல்ஸ்தாய் மானுட நேயரா’ கட்டுரையை வாசித்தபோது, மானுடவாத அடிப்படைகள் கொண்ட பிற்கால மார்க்சிய சிந்தனை ஜார்ஜ் எலியட்டின் இந்த பார்வையையும் பரிசீலித்திருக்கலாம் என்று தோன்றியது.
சுசித்ரா
தல்ஸ்தோயின் மனிதாபிமானம்- கடிதங்கள்