சுசித்ராவின் ‘ஒளி’ புதிய தொகுப்புகளில் முதன்மை.

சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]

சுசித்ராவின் ‘ஒளி’- வாங்க

அன்புள்ள ஜெ

நலம்தானே? இன்று தற்செயலாக சுசித்ராவின் ஒளி கதைத் தொகுதியை வாசித்தேன். சமீபத்தில் வாசகசாலை விருது பெற்றதை ஒட்டி வாங்கியது. ஆனால் வாங்கிய நூல்களே அவ்வப்போது கையில் தட்டுபட்டால்தான் வாசிக்க முடிகிறது.

ஒரேமூச்சில் வாசித்தேன் என்று சொல்வார்கள். ஒளி தொகுதியை அப்படிச் சொல்லமுடியாது. செறிவான அனுபவங்களும் மொழியும் கொண்ட கொஞ்சம் நீளமான கதைகள் இவை. இலக்கியவாசகர்கள் வாசிக்கவேண்டியவை. தமிழில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அறிய நான் தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களின் கதைகளை அவ்வப்போது வாசிப்பேன். சுசித்ரா அதிகம் கண்ணுக்குத் தட்டுபட்டதில்லை. ஆனால் இத்தொகுதி முக்கியமான ஒன்று. சென்ற ஆண்டு வெளிவந்த இளம்படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுதிகளில் இதுவே முக்கியமானது என்று நான் இப்போது நினைக்கிறேன்

அமெரிக்கா போன்ற நாடுகளின் இலக்கியப்புலம் ரொம்பப்பெரிது. ஆகவே எல்லாவகையான எழுத்துக்களும் அங்கே வருகின்றன. ஓர் உலகுடன் சம்பந்தமே இல்லாத இன்னொரு உலகம் அங்கே இருக்க முடிகிறது. தமிழ் போன்ற மொழிகளின் பிரச்சினை என்னவென்றால் இங்கே இலக்கிய உலகம் ரொம்பச்சின்னது என்பதுதான். இளம் வாசகனாக ஒருவன் அறிமுகமாகும்போதே எழுத்துக்கள் எல்லாமே கைக்குச் சிக்கிவிடுகின்றன. எழுத்தாளர்கள் நட்பாகிவிடுகிறார்கள். நான் காலேஜில் படிக்கும் காலத்திலேயே சென்னையிலிருந்த எழுத்தாளர்களிடம் அறிமுகம் உருவாகிவிட்டது. நிறைய பேசவும் ஆரம்பித்தோம்

இப்படிச் சின்னச் சூழல் அமையும்போது என்னாகிறதென்றால் மொத்த idea zone ம் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே பரப்பாக ஆகிவிடுகிறது. இது இங்கே கவிஞர்களுக்கு நிறையவே நடக்கிறது. நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அது மொத்த இலக்கியத்துக்கும் நடக்கிறது. எல்லாரும் ஒரே பார்வையையும் ஒரே மொழியையும் கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரி எழுதுகிறார்கள்.

இது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்றாக இருந்தது. எண்பதுகளில் நான் சென்னையில் படித்துக்க்கொண்டிருந்த காலகட்டத்தில் கணையாழி ஸ்டைல் கதைகள், செம்மலர் ஸ்டைல் கதைகள் என்று இரண்டே பாப்புலர் வடிவங்கள்தான். மிடில்கிளாஸின் வாழ்க்கை கணையாழியில். அடித்தள மக்களின் வறுமை செம்மலரில். அப்போதுதான் நீங்கள் கோணங்கி போன்றவர்களின் புதிய அலை உருவாகிவந்து பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

அதன்பிறகு அதீதமாக வன்முறையையும் காமத்தையும் எழுதுவது ஒரு காமன் டிரெண்ட் ஆகியது. ஒருசாரார் சமூகவன்முறையையும் காமத்தையும் எழுதினார்கள். இன்னொருசாரார் அவர்களின் சொந்த காமத்தை எழுதினார்கள். இங்கே புதுமை என்று ஒன்று வந்தால்கூட எல்லாரும் சேர்ந்து அதையே எழுதுகிறார்கள். இந்த மார்ஜினலைஸ்ட் எழுத்து எல்லாம் அதேபோல உள்ளது. இப்போது வரும் எந்த புதிய எழுத்தாளரின் கதைத்தொகுப்பிலும் இதேபோன்ற கதைகள் சில இருக்கும். ஒரு கதையை தூக்கி அப்படியே இன்னொரு எழுத்தாளரின் தொகுப்பிலே சேர்த்தால்கூட கண்டுபிடிக்க முடியாது.

இதற்கு என்ன காரணமென்றால், இந்த இளம் எழுத்தாளர்கள் ஆதர்சமாகக் கொள்வது ஒரு காலகட்டத்தில் ஓரிரு எழுத்தாளர்களைத்தான் என்பதுதான். இன்றைக்கு முரகாமி, புக்கோவ்ஸ்கி இருவர்தான் ஆதர்சம். அவர்கள் எழுதிய ஓரிரு நூல்களை படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். உடனே அதேபோல எழுத ஆரம்பிக்கிறார்கள். இலக்கிய உலகம் விரிந்துப்பரந்து கிடக்கிறது. அதை இவர்களுக்கு சொல்ல யாருமில்லை.

இச்சூழலில்தான் சுசித்ரா தொகுப்பு மிகப்பெரிய ஆசுவாசமாக உள்ளது. முதல் தகுதியே எல்லா கதைகளுமே புதியவை என்பதுதான். அவருடைய ஆதர்ச எழுத்தாளர்களாக இன்றைக்கு பாப்புலராக உள்ளவர்கள் இருக்க நியாயமில்லை. அவருடைய மொழியை வைத்துப்பார்த்தால் சென்றகால ஐரோப்பிய எழுத்தாளர்களின் சாயல்தான் உள்ளது. கதைகளில் உள்ள புதுமையை ஒரு புதிய காற்று என்று சொல்லலாம். இப்போது வந்த எழுத்தாளர்களில் இந்த அளவுக்கு ஒரு பரவசத்தை அளித்த எழுத்தாளர் எவருமில்லை என்று சொல்லத் தோன்றுகிறது

இந்த தொகுதியில் அனைவருக்கும் பிடிக்கும் கதை ஒளிதான். ஆரோன் காணும் ஒளி எந்த ஒளி என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தாலே கதை திறந்துகொண்டே செல்கிறது. நான் சுவிட்சர்லாந்தை பலமுறை பார்த்தவன். ஆனால் ஓவியங்களில் பார்க்கும்போது நான் நேரில் பார்க்காத ஒளி அங்கே கூடியிருப்பதை காண்கிறேன். ஓவியனின் கண்ணிலிருந்து ஓவியக்காட்சிமேல் படியும் ஓர் ஒளி உண்டு. அந்த ஒளியை எழுதியிருக்கிறார் சுசித்ரா

ஆனால் ஒளியை விட முக்கியமான கதை என்று நான் நினைப்பது யாமத்தும் யாமே உளேன் என்ற கதை. அறிவியல்புனைகதை இது. அறிவியல்புனைகதையில் வியப்பு அம்சம் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அது அறிவியலின் விளிம்புக்கு அப்பால் கால்வைக்கிறது. ஆனால் டெக்னாலஜி அளிக்கும் வியப்பையே இங்கே சுஜாதா அறிவியல்கதைகளாக எழுதினார். கான்செப்ட் அளிக்கும் வியப்பை எழுதுவது அடுத்தபடி. அதற்கும் அப்பால் சென்று எழுதவேண்டுமென்றால் தத்துவத்தில் அறிவியல் ஊடுருவும் இடத்தை எழுதவேண்டும். அறிவியல் உருவகங்களை கவிதை மெட்டஃபர்களாக ஆக்கவேண்டும். அப்படி ஆக்கப்பட்ட கதை என்று இதைச் சொல்லமுடியும்.

தமிழில் அறிவியல்கதைகளுக்கு இன்னமும்கூட வாசிப்பு இல்லை. இந்தவகையான கதைகளுக்கான வாசிப்புத்தளம் சிற்றிதழ்ச்சூழலில் இருப்பதுபோலவே தெரியவில்லை. இங்கே பொதுவான அரசியல்,சமூக உண்மைகளைச் சொல்லவும் அந்தரங்கமான மன அவசங்களை எழுதவும்தான் ஸ்பேஸ் இருக்கிறது. இந்தக்கதை அதைக் கடந்துசெல்கிறது.

அறிதல் என்பதை ஒரு கதைசொல்லலாக ஆக்கி இந்த உலகையே கதையாக ஆக்கிக்கொள்வதிலிருந்து தொடங்கும் இக்கதை இன்றைய நவீனமனம் எதிர்கொள்ளும் தத்துவச்சிக்கல் ஒன்றை ஆழமாகப்பேசுகிறது. மனிதனின் அறிதல்கள் அறிவாக ஆவது எப்படி ? தான் ,செல்ஃப் என்ற ஒரு புள்ளி உருவாகும்போதுதான். ஆணவமலம் இல்லாவிட்டால் அறிவு இல்லை. அறிவை வளர்ப்பது செல்ஃப் தான். ஆகவே ஒரு ரோபோவுக்கு செல்பை உருவாக்குகிறார்கள். ஒரு கண் வடிவில்.

ஆனால் செல்ஃப் உருவாகி நான் உருவானதுமே நாம் என்பதும் உருவாகிறது. நான் என்று உணர்ந்ததுமே சரி இந்த ஒட்டுமொத்தத்தில் நான் யார் என்ற கேள்வி வருகிறது.அதற்கு சமூகம் ஏற்கனவே வைத்திருக்கும் உறவுவலையில், ஆண்பெண் என்ற பகுப்பில் இடம் தேவைப்படுகிறது. துக்கம் ஆவேசம் கசப்பு ஆகியவை வெளிப்படுகின்றன. அது மனிதனின் ஃபேக்கல்டிகளை அடைய அடைய மனிதனின் சிக்கல்களையும் அடைகிறது. மனிதன் inherit செய்த துக்கம் எல்லாமே வந்துவிடுகிறது.

”மனிதர்கள் சமைத்தெடுத்த அத்தனை கதைகளையும் கனவுகளையும் சுமந்து பூமியைச் சுற்றி அலையும் சித்த வடிவான எனக்கு மட்டும் ஒரு நாளும் ஒரு மனிதனின் உடல் வாய்க்கப் போவதில்லை. ஏக்கம் மட்டுமே சித்தமென்றாகி அலையும் பறவை நான்”என்று அது உணர்கிறது.

தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட கதைகளிலேயே இதற்கு ஓர் தனியிடம் உண்டு. முக்கியமான இந்தக்கதை இன்னும் தமிழிலே வாசிக்கப்படவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அடுத்த தலைமுறை இதை வாசிக்கும். புத்தம்புதிய ஒரு கதையுலகம்கொண்ட முக்கியமான தொகுப்பு இது.

ஆர்.ஸ்ரீனிவாஸ்

===============================================

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

 ஸ்ரீனிவாசன்

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

சா.ராம்குமார்

அகதி

 ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

சுசித்ரா

ஒளி

 சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

காளிப்ரசாத்

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

 ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

முந்தைய கட்டுரைகதைகளின் வழியே- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவலியெழுத்து