நெல்லையில்…

இன்று [13-2-2021] காலை ஆறுமணிக்கே நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் நெல்லை கிளம்பிவிட்டோம். அத்தனை தொலைவு போகும் பயணத்தை மேலும் இனிதாக்கலாமென்று திருக்கணங்குடி [திருக்குறுங்குடி] ஆலயத்துக்குச் சென்றோம். சமீபத்தில்தான் திருக்கணங்குடி சென்றிருந்தேன். இப்போது ஸ்ரீனிவாசன் -சுதா தம்பதி அங்கே இல்லை. ஒரு திருமண விஷயமாக சென்னை சென்றிருக்கிறார்கள்.

காலையில் அந்த விரிந்தகன்ற ஆலயத்தில், கிட்டத்தட்ட தனியாக சுற்றிவருவது ஆழ்ந்த அமைதியை அளித்தது. சீரான கல்தூண்கள், மிக நேர்த்தியாக கல் அடுக்கப்பட்ட கூரை. சாலையென மயங்கச்செய்யும் சுற்றுவழிகள். நின்றகோலத்தில் பெருமாள்.

அங்கே ஆண்டாளுக்கும் சிறு ஆலயம் உண்டு. நம்மாழ்வாருக்கும் ராமானுஜருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. இரு கவிஞர்களும் ஒரு தத்துவஞானியும். ஒரு கவிதை வெளியீட்டுக்குச் செல்லும் வழியில் சரியான தரிசனம்தான்.

பலமுறை இங்கு வந்தபோதும் இதுவரை போகக்கிடைக்காத ஓர் இடம் திருவட்டப்பாறை. இது நம்பிகோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் அப்பால் இள்ளது. இங்கே நம்பியாறு ஒரு வட்டமாகச்  சுற்றிப்போக, நடுவே ஒரு குன்று உள்ளது. அங்கே ராமானுஜர் வந்து தங்கியிருந்ததாக தொன்மம். அங்கே ஒரு சிறுபாறைமேல் ராமானுஜரின் சிறிய புடைப்புச் சிற்பம் உள்ளது. பிற்காலத்தில் அங்கே கட்டப்பட்ட ஒரு மடம் இப்போது ராமானுஜர் ஆலயமாக உள்ளது

நம்பிகோயிலில் சந்திக்கநேர்ந்த ஒருவர் ராமானுஜர் கோயில்கொண்ட திருவட்டப்பாறையைப் பற்றிச் சொன்னார். அவ்வேளையில் சென்றால் மட்டுமே அது திறந்திருக்கும் என்றார். வழிகண்டுபிடிக்க அவரையும் காரில் கூட்டிக்கொண்டோம்.

அழகிய இடம். ஆனால் ஆற்றங்கரை முழுக்க பிளாஸ்டிக் குடிநீர்ப்புட்டிகள் குவிந்து கிடந்தன. அங்கே வரும் ‘பக்தர்கள்’ வீசி எறிந்தவை. ஒரு சிறு பாலத்தின் வழியாக திருவட்டப்பாறைக்குச் சென்றோம். அது டிவிஎஸ் நிர்வாகத்தின் உதவுடன் ஒர் அழகிய மலர்க்காடாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆலயம் தூய்மையாக, தனியாக, ஓசையேதுமின்றி அமைந்திருந்தது. நீர் சுழித்தோடும் ஓசையும் மரங்கள் காற்றிலாடும் ஓசையும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன

நல்லவேளையாக பூசைசெய்யும் அந்தணர் இருந்தார். அவர் கிளம்பிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த மலர்த்தோட்டத்தை பெருவிருப்புடன் பேணுவதாகத் தெரிந்தது. அங்கே வைக்க மரிக்கொழுந்து பதியன்கள் தோவாளையில் கிடைக்குமா என்று விசாரித்தார்.

நாங்கள் நெல்லை சென்றுசேர கொஞ்சம் பிந்திவிட்டது. அங்கே கவிஞர் மதார் [முகமது மதார் கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றுபவர்] பதற்றமாக அழைத்துக்கொண்டே இருந்தார்.

TVK Residency விடுதியில்தான் நான் நெல்லை சென்றால் எப்போதும் தங்குகிறேன். அதன் உரிமையாளர் சிவமீனாட்சி செல்லையா வெண்முரசின் சிறந்த வாசகர்களில் ஒருவர். அறைக்குச் சென்றதுமே வேட்டியை மாற்றிக்கொண்டு அரங்குக்குச் சென்றோம்

நெல்லையில், ஒரு வேலைநாளின் பகலில் , கவிதைக்கூட்டத்திற்கு முப்பதுபேரை எதிர்பார்க்கலாம் என்றார் மணிவண்ணன். பத்துபேர், கூடிப்போனால் இருபது என்று நான் சொன்னேன். நெல்லை போன்ற நகர்களின் சூழலை என்னால் கணிக்கமுடிவதில்லை. அங்கே சென்றபோது எண்பதுபேருக்குமேல் இருந்தனர். அரங்கு முழுமையாக நிறைந்திருந்தது.

ரேடியன் அக்காடமி மாணவர்களுக்கான திறன்பயிற்சியை நிகழ்த்தும் அமைப்பு. நெல்லையிலும் கயத்தாறிலும் தென்காசியிலும் இருந்து நண்பர்கள் வந்திருந்தனர். நெல்லையைச் சுற்றியே எனக்கு அத்தனை நண்பர்கள் இருப்பது அப்போதுதான் மூளைக்கு உறைத்தது. கூட்டம், சொற்பொழிவு என்றில்லாமல் ஓர் வாசக உரையாடலாக ஒன்றை நெல்லையில் அமைக்கவேண்டும். நாலைந்து மணிநேரம் நீடிக்கும் ஓர் அளவளாவல். நண்பர்கள் அனைவரும் பேசும்படியாக

விழா சிறப்பாக நடைபெற்றது. நெடுநாட்களாக அறிமுகமாகியிருந்த ஸ்ரீனிவாச கோபாலனை நேரில் பார்த்தேன். பிகு என்று அழைப்பில் பார்த்தபோது பின்குறிப்பு என நினைத்தேன். பிரவீன்குமார் என்ற இளம் எழுத்தாளரின் புனைபெயர். சிறப்பாக பேசினார். அவர் உட்பட பலர் ஆல் இண்டியா ரேடியோவில் பகுதிநேர வேலை செய்வதாகச் சொன்னார்கள்.

மதியம் விழா முடிந்தபின் விடுதிக்குச் சென்றோம். போகன் சங்கர் வந்திருந்தார். விடுதியில் அமர்ந்து ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். போகன் சிறந்த உரையாடல்காரர். இன்று, வழக்கத்துக்கு மாறாக, பேய் அமானுடம் பற்றிப் பேசவில்லை. தஸ்தயேவ்ஸ்கியைத்தான் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

மாலை ஐந்து மணிக்கு கிளம்பி ஆறரைக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒரு நிறைவான நாள். மதாரின் கவிதைபற்றிய என் உரை இணையப்பதிவாக வரலாம். எல்லா கவிதைகளுமே கவிதையை நோக்கி எழமுயலும், பல கவிதைகள் வெல்லும், இத்தகைய தொகுதிகள் அரிதாகவே வெளிவருகின்றன.

அழகியநம்பியின் நகரில்

முந்தைய கட்டுரைபிறழ்வெழுத்து சில பார்வைகள்-சிவானந்தம் நீலகண்டன்
அடுத்த கட்டுரைகருணாகரன் கட்டுரைகள்- விதைகள் நிறைந்த கூடை