ஆகுதி-[சிறுகதை] மயிலன் சின்னப்பன்
அன்பு ஜெயமோகன்,
நீங்கள் பரிந்துரைத்த பிறகே ஆகுதி கதையை வாசிக்கத் தலைப்பட்டேன். அக்கதையின் பின்புலமாக இருக்கும் மருத்துவமனைச் சிகிச்சை அறையின் விவரணையே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நெருப்புக்குத் தன்னைக் கொடுத்த பல பெண்களைக் குறித்து நான் எங்கள் ஊரில் கேள்விப்பட்டிருக்கிறேன்; சில வெந்து அடங்கிய பெண்ணுடல்களைச் சுடுகாட்டில் பார்க்கவும் செய்திருக்கிறேன். எனினும், பெருமளவு எரிந்தபின் தகித்துக்கொண்டிருக்கும் பெண்ணுடலை ஆகுதியில்தான் எதிர்கொண்டேன். உடன், மயிலன் சின்னப்பனை வாசிக்காமல் தவறவிட்ட குற்றவுணர்வும் எழுந்தது.
கதையைக் குறித்த வாசிப்பனுபவத்தில் சந்திரசேகரனின் அனுபவம் கதையை எனக்கு இன்னும் அணுக்கமாக்கியது. “எரிந்த உடலுக்குள் ஓடும் ரத்த்ததைத் தொட்டுவிட்ட டாக்டரை அப்பெண் அக்கா என அழைப்பது” எனும் வரி கதையைக் குறித்த விமர்சன வாக்கியமன்று; கதையின் தரிசனம். ஆம், அத்தரிசனத்தின் வழி அக்கதை என்னுள் இன்னும் அழுத்தமாய் அமர்ந்தது.
சத்திவேல்
கோபிசெட்டிபாளையம்
அன்புள்ள ஜெ
ஆகுதி கதையின் வெற்றி அது ஓர் ஒட்டுமொத்தச் சூழலை உருவாக்கியிருக்கிறது என்பதுதான். நவீனத்துவக் கதைகளில் அப்படி சூழல் உருவாவதில்லை. கதையின் மையம் மட்டுமே யதார்த்தமாகச் சொல்லப்படும். இந்தக்கதையில் கதைசொல்லியான டாக்டர், அவளுக்கும் சீனியர் டாக்டருக்குமான உறவு, அவளுக்கும் காதலனுக்குமான உறவு, அதனால் சீனியர் அடையும் எரிச்சல், அவள் தன் முதல் தொழிலனுபவத்தை அடையும் திரில், அதில் கிடைக்கும் சாதனை உணர்ச்சி, அது சாவுடன் சம்பந்தப்பட்டிருக்கும் சிக்கல் எல்லாமே சொல்லப்படுகிறது. இது யதார்த்தவாதக் கதைகளின் இயல்பு. இமையம் எழுதும் கதைகள் இந்த அம்சம் உடையவை. இங்கே யதார்த்தவாதம் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதற்கான சான்று இது
சிறந்த கதை. அந்த கதை உருவாக்கும் அடர்த்தியான யதார்த்தம் திகைக்கவைக்கிறது. இயல்பாகவே நம் சமூகம் ஒரு சிதையாக ஆகி அவர்களை எரிப்பதுபோல ஒரு குறியீட்டுத்தன்மை உருவாகி வந்துவிட்டது.செகாவ், தாமஸ் மன் முதல் சோல்செனித்சின் வரை பலர் எழுதிய ஆஸ்பத்திரிகள், மனநோய்விடுதிகள் நினைவிலெழுகின்றன. அவை நம் சமூகத்தின் குப்பைக்கூடைகள். நம் மனசாட்சியின் இருண்ட புதைகுழிகள். மயிலன் சின்னப்பன் தமிழின் நல்ல கதைகளில் ஒன்றை எழுதியிருக்கிறார்
எஸ்.ரவீந்திரநாத்