தமிழ் சினிமா ரசனை
அன்புள்ள ஜெ
நீங்கள் சினிமா பற்றி எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். [தமிழ் சினிமா ரசனை, , கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1] நான் நல்ல சினிமாவில் ஆர்வம் கொண்டிருப்பவன். ஓராண்டுக்கு முன் தமிழிலிருந்த ஒரு சினிமா இயக்கத்தில் சற்று ஆர்வம் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சம் கலந்துகொண்டேன். ஆனால் ஓராண்டுக்குள்ளேயே சலிப்பு. அங்கே சினிமாவே கிடையாது.இவர்களின் திரையிடல்களுக்குப் போனால் மொக்கையாக இவர்கள் பேசும் அரசியலைக் கேட்டு ரத்தக்கொதிப்படைந்து வெளியேறவேண்டியிருக்கிறது.
திராவிடர் கழகத்தின் உண்மை பத்திரிகையை இலக்கிய இதழ் என்று சொல்லலாம் என்றால் இவர்களை சினிமா இயக்கம் என்று சொல்லலாம். ஆர்வம் கொண்ட அசடுகள் என்றுதான் எனக்குப் பட்டது. அவர்கள் பேசும் அசட்டுத்தனங்கள், அவர்களின் சூம்பிப்போன அரசியல், அங்கே நிகழும் பேச்சுக்களின் சலிப்பூட்டும் மேலோட்டத்தனம் எல்லாம் என்னை வெளியே அனுப்பிவிட்டது. நான் சண்டைபோட விரும்பவில்லை. என் வேலைச்சுமை அப்படி. ஆகவே என் பெயர் வேண்டாம்.
ஓர் அறிவியக்கம் எதுவாக இருந்தாலும் அது சாராம்சத்தில் தீவிரமானதாக இருக்கவேண்டும். அந்த தீவிரம் நீர்த்துப்போகாமல் இருக்கும்வரைத்தான் அந்த இயக்கம் நிகழும். மலையாள, வங்காள கலைப்பட இயக்கம் பற்றி எழுதியிருந்தீர்கள். அதை தொடங்கியவர்கள் கலைமேல் ஆர்வம்கொண்டவர்கள். பெரும் கலைஞர்கள். சத்யஜித் ரே, அடூர் மாதிரியானவர்கள். இங்கே நல்ல சினிமா என்று பேசுபவர்கள் பராசக்தி கலைப்படம் என்றும் உலகசினிமா என்றும் பினாத்திக்கொண்டிருப்பவர்கள். இவர்களிடமிருந்து இன்னும் பெரிய அறியாமையே வெளிவரும்.
வணிகசினிமா கேளிக்கைக்கு உரியது என எல்லாருக்கும் தெரியும். ஆனால் நல்ல சினிமா என்று சொல்லிக்கொண்டு இவர்கள் இப்படி இங்கேயும் சேற்றைவைத்து அடைப்பதுதான் மிகப்பெரிய அழிவுச்செயல்பாடு. ஒரு மாற்று உருவாகவே முடியாமலாகிவிடுகிறது.
இதற்கு என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?
__
அன்புள்ள –
முதலில் சர்ச்சைகள், வசைகள், ஏளனங்களுக்கு அஞ்சாமல் வெளியே வந்து செயல்படவேண்டும். முன்னால் நின்றிருக்க வேண்டும். தமிழ்ச்சூழலில் உண்மையான செயல்பாடு எதுவானாலும் அது அரைவேக்காடுகளால் எதிர்க்கப்படும், ஏளனம் செய்யப்படும். அதைக் கடந்துசெல்ல துணிவிருக்கவேண்டும்.
இந்தியாவின் திரைப்பட இயக்கம் – கலைப்பட இயக்கம் எப்படி நடைபெற்றதோ அப்படியே இங்கும் ஒன்று நிகழவேண்டும். ஆனால் அது நிகழ்ந்தது அரைநூற்றாண்டுக்கு முன்பு. அன்றிருந்த தொழில்நுட்பச் சூழலில், இன்று அந்தச் சூழல் இல்லை. ஆகவே சூழலுக்கு தக செயல்முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். இன்றைய வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
முதல்விஷயம், இதை நேரில் பார்த்தே எழுதுகிறேன். இன்று முன்புபோல நேரில் சிறுகுழுக்களாக எங்காவது கூடி நல்ல சினிமாக்களை திரையிட்டுப் பார்ப்பது உகந்தது அல்ல. அதற்கு செலவும் முயற்சியும் மிகுதி, அதற்கு அதிகம்பேர் வரமாட்டார்கள். உளச்சோர்வே எஞ்சும்.
ஏனென்றால் சென்ற காலங்களில் நல்ல சினிமாக்களைப் பார்க்க புரஜக்டர் தேவை. ஃபிலிம் ஓட்டப்படவேண்டும். ஆகவே திரையரங்குகளை எடுக்கவேண்டும். அல்லது சிறிய 35 எம்எம் புரஜக்டரில் சினிமாவை ஓட்டவேண்டும். ஆகவே நேரில் கூடியே ஆகவேண்டும்.
இன்று அந்நிலை இல்லை. இன்று சினிமாக்களை வீட்டில் பார்க்கலாம், கைபேசியிலேயே பார்க்கலாம். ஆகவே இன்று நேரில்கூடவேண்டியதில்லை. நேரில்சந்திக்கும் சினிமா ஆர்வலர்கள் இன்று இன்றியமையாதவர்கள் அல்ல. அவர்கள் சினிமாக்களை இணையத்தில் பார்த்து இணையத்திலேயே கூடி இணையத்திலேயே விவாதிக்கலாம். அதிகச் செலவில்லாமலேயே செய்யலாம்
அதாவது இன்று தேவை ‘விர்ச்சுவல் ஃபிலிம் சொசைட்டி’கள். இணையத்திலேயே செயல்பாடுகளை பெரும்பாலும் நிகழ்த்தலாம். அதற்கு அதிக நேரமும் செலவழிக்கவேண்டியதில்லை. அது முதிர்ந்து நல்ல ஒரு சூழல் அமையும் என்றால் பின்னர் நேரிலும் விழாக்களைப்போல நடத்தலாம், கருத்தரங்குகள் ஒருங்கிணைக்கலாம். கூட்டுப்பணம் கொண்டு சினிமாக்கள்கூட எடுக்கலாம்.
முதல் தேவை ஒர் அமைப்பு. ஆர்வமும் பொதுவான புரிதலுமுள்ள நண்பர்கள் கூடி அதை உருவாக்கலாம். அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு
அ. அந்த அமைப்பு சினிமா என்னும் கலையில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டதாக இருக்கவேண்டும்.
ஆ. அதன் அமைப்பாளர்கள், உறுப்பினர்களுக்கு அரசியலார்வம் இருக்கலாம். ஆனால் அந்த அமைப்புக்குள் அரசியல் இருக்கலாகாது. அரசியலை முழுக்க விலக்கியே வைக்கவேண்டும். அரசியல் பிளவுகளை உருவாக்கும். அரசியல்வெறி கொண்டவர்களுக்கு வேறெதிலும் நம்பிக்கையோ ஆர்வமோ இருப்பதில்லை. அவர்களால் மாற்றுக்கருத்துக்களை ஏற்கவே முடியாது. அவர்களால் வேறெந்த செயல்பாட்டையும் ஆற்ற முடியாது
இ. அதன் அமைப்பாளர்கள் நட்புச்சுற்றமாக இருக்கவேண்டும்.எந்நிலையிலும் நட்பே முக்கியமானது. ‘பாரபட்சமற்ற கறாரான விமர்சனத்தை முன்வைப்பது’ போன்ற பாவலாக்களெல்லாம் இருக்கலாகாது. அவை கசப்பையே உருவாக்கும். குறைந்தது இருபதாண்டுகள் நட்புடன் இருப்பவர்களால் மட்டுமே எதையாவது செய்யமுடியும். நட்புச்சூழலுக்காக எந்த சமரசமும் செய்யலாம். எதையும் விட்டுக்கொடுக்கலாம்.
அப்படி ஓர் அமைப்பை உருவாக்கியபின் இன்றைய அவசியத்தேவை ஒரு நல்ல பெரிய இணையதளம். அதை பணம்செலவிட்டு உருவாக்கவேண்டும். அதுவே அத்தனை செயல்பாடுகளுக்கும் மையமாக இருக்கவேண்டும்
அது இரு பகுதிகள் கொண்டிருக்கவேண்டும். ஒருபகுதி அன்றாடச் செயல்பாடுகளுக்கான பகுதி. இன்னொன்று சினிமா பற்றிய அறிவுத்தொகுப்பு
அந்த அறிவுத்தொகுப்பில் பல பகுதிகளாக செய்திகளும் கட்டுரைகளும் பட்டியல்களும் படங்களும் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும்
அ.உலகசினிமாவின் வரலாறு
ஆ.அதன் வெவ்வேறு அழகியல்கொள்கைகள்
இ. அவற்றின் சாதனைப்படைப்புகள்- கூடுமானவரை இணைப்புகளுடன்
ஈ. கலைப்படங்கள்,செவ்வியல் படைப்புகள் பற்றிய விமர்சனங்கள்
ஈ. உலக சினிமாவின் பெரும் படைப்பாளிகளின் வாழ்க்கைகள்
உ. உலகசினிமா பற்றிய நூல்கள்
என அனைத்தும் இடம்பெற்றிருக்கவேண்டும். உடனே முழுமையாக உருவாக்கிவிட முடியாது. ஓரளவு செய்தபின் கூட்டுழைப்பால் பல ஆண்டுகளிலாக அதை முழுமையாக்கியபடியே செல்லவேண்டும், அதற்கு அமைப்பாளர்கள் முயலவேண்டும், அதைப்பற்றி எழுதுபவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று தமிழில் இப்படி ஒரு தளமே இல்லை. நான் எப்போதாவது கோபயாஷி பற்றியோ பெர்க்மான் பற்றியோ தேடினால் எங்காவது கோகுல்பிரசாத் எழுதிய ஓரிரு வரிகள் மட்டுமே வருகின்றன. இன்றைய இளம்ரசிகனுக்கு ஒட்டுமொத்தமாக முழுமையாக அறிமுகம் செய்யும் தளம் ஒன்று இருந்தாகவேண்டும்.
செயல்பாட்டுப் பக்கத்தில் அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய அறிவிப்புகள், அவற்றைப்பற்றிய விவாதங்கள், புதிய சினிமாநிகழ்வுகள் பற்றிய செய்திகள் ஆகியவை வெளியாகவேண்டும். ஒரு நாளிதழின் தன்மை அதற்கு இருக்கவேண்டும். அது நாள் தோறும் வெளியாகிக்கொண்டிருக்கவேண்டும். நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டாலொழிய அதற்கு வாசகர் வரமாட்டார்கள்.
அமைப்பு மற்றும் இணையதளத்திற்கான நிபந்தனைகளாக நான் நினைப்பவை
அ. தன் முழு அடையாளத்துடன் வராத எவரையும் விவாதங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கலாகாது – முழு அடையாளமும் பிரசுரிக்கப்படவேண்டியதில்லை. வெளியிடும் ஆசிரியருக்கு தெரிந்திருக்கவேண்டும்.
ஏனென்றால் இன்று எந்த அறிவுத்தள விவாதத்திலும் பொறுப்பில்லாத ஃபேக் ஐடிகள் பெரிய சீரழிவை உருவாக்குகிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு எந்த உரையாடலும் நடத்தமுடியாது. அதேசமயம் அவர்கள் கடுமையான கசப்புகளை உருவாக்குவார்கள். பிளவுகளை நிகழ்த்துவார்கள். திட்டமிட்டேகூட அதைச் செய்வார்கள். மேலும் அவர்களை நம்பி அடுத்தகட்ட செயல்பாடுகள் எதையும் செய்யமுடியாது
ஆ. சமகால வணிகசினிமா, அரசியல் ஆகியவற்றைப் பற்றிய பேச்சு முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும். பெரும்பாலும் இப்பேச்சுக்கள் ஒரு நல்ல சினிமா பற்றிய பேச்சாக தொடங்கி அங்கே நழுவிச் சென்றுவிடும். இங்க்மார் பர்க்மான் பற்றிய பேச்சை ஐந்து நிமிடங்களில் மோடியின் அரசியலைப் பற்றியதாக ஆக்கிக்கொள்ளமுடியும். அது தவிர்க்கப்படவேண்டும்
ஏனென்றால் என் அனுபவத்தில் அரசியல் – வணிகசினிமா- சாப்பாடு மூன்றும்தான் தமிழின் முதன்மையான அரட்டைப்பொருட்கள். கொஞ்சம் கிரிக்கெட். எந்த வகையான தீவிரமான செயல்பாட்டுக்கும் முதலெதிரி அரட்டைதான். அரட்டை சூழலில் நிறைந்திருக்கிறது. அதுதான் மைய ஓட்டம். இங்கே நாம் உத்தேசிப்பது அதிலிருந்து ஒரு மாற்றுத் தளத்திற்காக. அதை முழுக்கவே தவிர்க்கவில்லை என்றால் சிலநாட்களிலேயே வெளியே நிகழ்வதே உள்ளேயும் நிகழும்
இ. எந்த விவாதமும் மட்டுறுத்தலுடன் நிகழவேண்டும். எங்கும் தொடர்ச்சியாக சினிமாக்கலை என்பதைப் பற்றிய விழிப்புகொண்ட ஒரு குரல் வந்து நோக்கத்தையும், செயல்பாட்டுநெறிகளையும் அறிவுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
ஈ. சினிமா பற்றிய அறிதல்கொண்ட ஆசிரியர்குழு எப்போதும் எல்லாவற்றிலும் தென்படவேண்டும். இல்லையேல் கலைப்படம் என்றபேரில் வணிகசினிமாக்கள், இடைநிலை சினிமாக்கள் எல்லாவற்றையும் கலந்துகட்டிவிடுவார்கள். கிம் கி டுக் மறைந்தபோது இங்கே எழுதப்பட்டவற்றைப் பார்த்தேன். ஒரே புளகாங்கிதங்கள். அவருடைய ஒருபடம் தவிர மற்றவை எல்லாமே வெறும் வன்முறைச்சித்தரிப்புக்கள். அந்த வேறுபாடு தெரிந்தவர்கள் இங்கே இல்லை. கிம் கி டுக்கே கலை மேதை என்றால் தமிழுக்கு என்ன குறை?
உ. ஓர் ஆக்கபூர்வமான இயக்கம் எதிர்நிலைகொண்டிருக்காது. ஆக்கபூர்வமாக, நம்பிக்கையுடன் செயல்படுவதைப் பற்றியே பேசும். கல்வி என்பதே அதன் அடிப்படையாக இருக்கும். கல்வி எப்போதுமே நேர்நிலை உளப்பான்மை கொண்டதே. விமர்சனம் இருக்கலாம், குறைவாக அளவுடன் இருக்கவேண்டும். வசை, கசப்பு ஆகியவை எந்த நல்ல நோக்கம் கொண்டிருந்தாலும் காலப்போக்கில் செயலின்மையை உருவாக்கும்.
*
இத்தகைய ஓர் அமைப்போ தளமோ முழுக்க முழுக்க கலைப்படங்களுக்கான இடமாக இருக்கவேண்டும். வணிகசினிமா எதுவானாலும் முழுமையாக தவிர்க்கப்படவேண்டும். சமகாலத்தில் நடப்பதை கவனிக்கவேண்டாமா, relevant ஆக இருக்கவேண்டாமா என்றெல்லாம் பசப்புவது தமிழ்ச்சூழலின் அரட்டைக்கான ஏக்கமே. நாலுபேர் நம்மை கவனிக்கவேண்டும் என்னும் ஆசையே.
தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் சாண்டில்யனைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கவில்லை. அடூர் கோபாலகிருஷ்ணன் பிரேம்நசீரின் அழகியலும் அரசியலும் என்று பேசிக்கொண்டிருக்கவில்லை. அந்தப்பேச்சு மறைமுகமாக மீண்டும் வணிக சினிமாவை கொண்டாடுவதே. உங்கள் நோக்கம் இன்னொன்றை முன்வைப்பதென்றால் அதையே செய்யவேண்டும். ஏற்கனவே இருப்பதில் இணைந்துகொண்டு அதை முன்வைக்கமுடியாது.
’வணிகசினிமாவிலும்…’ என்று பேசும் பேச்சுக்களைப் பார்க்கிறேன். வணிகசினிமாவுக்குள் நுழைவதற்கான நப்பாசையை மட்டுமே இப்பேச்சுக்களில் காணமுடிகிறது. அதை முழுமையாக நிராகரித்து முழுமையாக கலைப்படங்களுக்குள் மட்டுமே செயல்பாடுகள் நின்றிருக்கவேண்டும். அவ்வண்ணம் ஒரு பத்தாண்டுகளாவது செயல்பட்டாலொழிய அடுத்தகட்ட நகர்வு இருக்காது.
இந்தப் புறக்கணிப்பால் பங்கேற்பாளர்களை இழப்போமா? ஆமாம், இழப்போம். ஆனால் எஞ்சுபவர்கள் அர்ப்பணிப்பும் தீவிரமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களே முக்கியமானவர்கள். அவர்களாலேயே ஏதாவது செய்யமுடியும்.
இது ஊடகப்பொலிவு காலகட்டம். அலையலையாக ஊடகங்களில் இருந்து பொழுதுபோக்கு வந்து குவிகிறது. அவற்றைப்பற்றிப் பேசுவதென்றால் அவற்றுக்கே நேரம்போதாமலாகும். இன்று முக்கால்வாசிப்பேர் இணையத் தொடர்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள். அவை அனைத்துமே எளிய திரில்லர்கள். ஆனால் அவர்கள் அவற்றை ‘அறிவுததும்ப’ பேசிக்கொண்டிருக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கும் பேசுபவர்களுக்கும் பொழுதுபோக்கு என்பதற்கு அப்பால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன் என் தளத்தில் கேம் ஆஃப் த்ரோன் பற்றி ஒரு குறிப்பு எவரோ எழுதிய ஒரு கடிதத்தில் இருந்தது. அதற்கு எதிர்வினைகள் வந்து குவிந்தன. உடனே அவ்விவாதத்தை நிறுத்திவிட்டேன். இல்லாவிட்டால் அதைப்பற்றிய பலநூறு பக்கங்கள் என் தளத்தில் நிறைந்திருக்கும். இன்று அவற்றுக்கு என்ன மதிப்பு?
நம் செயல்பாடுகளை நாம் முடிவுசெய்யவேண்டும். நாம் எதைப்பேசுவதென்று நாம் வகுத்துக் கொள்ளவேண்டும். செல்லும்திசை பற்றிய தெளிவு நமக்கு இருக்கவேண்டும். சூழ அலையடிக்கும் காற்று அதை முடிவுசெய்யுமென்றால் நமக்கு செல்வதற்கான திசையே இல்லை என்று பொருள்.
ஓரு கலைப்பட இயக்கம் கலைப்படங்களையே பேசவேண்டும். கடந்தகாலமானாலும் நிகழ்காலமானாலும். சுமாரான, ஓக்கேயான, சராசரியான படங்களைப்பற்றியும் பேசலாம் என்றாலே அது பெரிய சமரசம். அங்கே வீழ்ச்சி ஆரம்பமாகும். எண்பதுகளில் கேரளக் கலைப்பட இயக்கம் பரதன், பத்மராஜன் பற்றி ஒரு சொல்கூட பேசியதில்லை. தேவையுமில்லை, ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே வெகுஜனத்தால் ஏற்கப்பட்டவர்கள்
மாறாக ஐசண்டீன் முதல் கிரீஷ் காசரவள்ளி வரையிலானவர்களைப் பேசினார்கள். அந்தப்பேச்சு மையத்தை வலுப்படுத்தியது. கலைபற்றிய அளவுகோல்களை நிறுவிக்கொண்டே இருந்தது. கேரளத்தில் நல்ல சினிமாவுக்கு இன்றுமிருக்கும் ஆதரவு அதனால்தான். உதாரணமாக தி கிரேட் இண்டியன் கிச்சன். அது ஒரு நடுவாந்தரப் படம். வணிகப்படம். அதை அங்குள்ள கலைவிமர்சகர்கள் பேசமாட்டார்கள். பொதுவான சினிமா இதழ்களே பேசும். இங்கு அதையே கொண்டாடிக் கூத்தாடுகிறார்கள்.
வணிகசினிமாவுக்கு மாபெரும் விளம்பரவட்டம் உருவாக்கப்படுகிறது. அதைப்பற்றி எது பேசப்பட்டாலும் அதற்கான விளம்பரம்தான். அதை அந்த சினிமா தயாரிப்பாளர்கள் ஊக்குவிப்பார்கள். வணிகசினிமா வட்டத்துக்குள் நிகழும் எதைப்பேசினாலும் அறிந்தோ அறியாமலோ வணிகசினிமாவின் விளம்பர முகவர்களாக ஆவதுதான் இங்கே நடக்கிறது.
வணிகசினிமா பற்றி எதைப்பேசினாலும் அங்கே சிலர் வந்து ஆர்வத்துடன் கலந்துகொள்வார்கள். அதை திட்டினால் ‘ஆமாங்க, இப்பல்லாம் எல்லாம் கமர்ஷியல்குப்பைகள்தான்’ என்பார்கள். ஆனால் நீங்கள் தர்கோவ்ஸ்கி ஒரு நான்கு பத்தி எழுதினால் படிக்கமாட்டார்கள். ஒரு எதிர்வினை இருக்காது.
இந்த வெற்றுக்கும்பலை திரட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை. அவர்கள் வணிகசினிமா ரசிகர்கள், கூடவே தாங்கள் கொஞ்சம் மேலானவர்கள் என்றும் பாவனைசெய்கிறார்கள். அவர்கள்தான் மாஸ்டர் படத்தின் கலைக்கூறுகள் பற்றி ‘ஆராய்ச்சி’க்கட்டுரைகள் எழுதுகிறார்கள். அவர்கள் முகநூலில் உலாத்தட்டும், அந்த மனநோய்வெளிக்கு வெளியே அவர்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதேபோல இன்னொன்றும் முக்கியமானது. எழுத்தாளர்கள், இலக்கியவிமர்சகர்கள், இலக்கியக் கோட்பாட்டாளர்கள் சினிமா தொடர்பாக செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்திய கலைப்பட இயக்கத்தில் எழுத்தாளர்கள் என எவரும் இருக்கவில்லை.அது முழுக்க முழுக்க சினிமாவில் திளைத்தவர்களால் உருவாக்கப்பட்ட அலை. அவர்களில் சிலர் எழுதியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அடிப்படையில் இலக்கியவாதிகளல்ல, ‘சினிமாவாதிகள்’
எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் சினிமாவை இலக்கியம் நோக்கி இழுப்பார்கள். எல்லாவற்றையும் இலக்கிய அளவுகோலால் பார்ப்பார்கள். அவர்களுக்கு அடிப்படையில் சினிமாவின் இலக்கணமும் அழகியலும் புரியாது. அவர்கள் சினிமாவிலிருந்து இலக்கியத்தை மட்டும் உறிஞ்சிக்கொள்பவர்கள். சினிமாவிலிருந்து அரசியலை மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொஞ்சம் மேலானவர்கள் அவ்வளவுதான்.
சினிமாவிலேயே திளைக்கும் ‘சினிமாவாதிகள்’தான் சினிமாவில் எதையாவது செய்யமுடியும். உள்ளிருந்தோ வெளியே இருந்தோ அந்த மாற்றத்தைக் கொண்டுவரமுடியும். அவர்கள் அறியும் சினிமாவை இலக்கியவாதிகள் அறியமுடியாது. ஆகவே இத்தகைய இயக்கங்களில் இலக்கியவாதிகளை உரிய மரியாதையுடன் கொஞ்சம் விலக்கிவைக்கவேண்டும்
சினிமாவின் அழகியல் பற்றிய பேச்சு ஏன் முக்கியம் என்று சொல்கிறேன்? நேற்று என் கட்டுரை வெளியான பின் பல எதிர்வினைகள். [உண்மையில் சினிமாவுக்கு வரும் எதிர்வினை வேறெதற்கும் வருவதில்லை] ஒருவர் கோகுல் பிரசாத் வெளியிட்டுள்ள நல்ல சினிமா பற்றிய ஒரு பட்டியலை அளித்திருக்கிறார். முக்கியமான பட்டியல். தமிழில் இதுதான் இவ்வகையில் முதல்பட்டியல். க.நா.சு 1955 ல் தமிழ் கவிதைகளுக்கும் நாவல்களுக்கும் போட்ட பட்டியல்போல.
இத்தகைய பட்டியல்கள் விவாதத்திற்கான அறைகூவல்கள் மட்டுமே. அதன்மேல் விவாதம் எழலாம். அதை மறுக்கலாம். ஆனால் அப்பட்டியல் நேரடியாக எவருக்கும் உதவாது. பார்க்கவேண்டிய படங்கள், முக்கியமான படங்கள் என ஒரு பொதுப்பட்டியல் என்பது ஒரு தொடக்கம். ஆனால் ஒற்றை அளவுகோலில் எல்லா படங்களையும் பார்க்கவோ, வரிசைப்படுத்தவோ முடியாது. சினிமா உலகமும் இலக்கியம் போலவே வெவ்வேறு அழகியல்நோக்குகள் கொண்டது.
ஒவ்வொரு சினிமாவையும் அதற்குரிய அழகியலுடனேயே பார்க்கவேண்டும். அகிரா குரசோவாவையும் கோபயாஷியையும் ஒசுவையும் ஒரே அழகியலால் பார்க்கமுடியாது. ஒரே மனநிலையுடன் மதிப்பிடவும் முடியாது.அந்தந்த அழகியலை விளக்கி, அதன் அளவுகோல்களின்படி அவர்களின் நல்லபடங்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒரு பட்டியல் உருவாக்கப்படவேண்டும். அவை மறுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு பொதுப்பட்டியலொன்று உருவாகி வரவேண்டும்.
உதாரணமாக க.நா.சுவின் பட்டியலில் ப.சிங்காரம் இல்லை. சிங்காரத்தின் பகடி க.நா.சுவுக்கு ஏற்புடையதல்ல. க.நா.சு யதார்த்தவாதத்தின் பிரச்சாரகர். ஆனால் கநாசுவின் பட்டியல் 90 சதவீதம் தமிழ் நவீன இலக்கியச் சூழலால் ஏற்கப்பட்டாலும் அவரை மீறி சிங்காரம் உள்ளே கொண்டுவரப்பட்டார். க.நா.சு போற்றிய பலர் வெளியேற்றவும்பட்டனர்
இப்போது ஒரு விஷயம் கண்டடைந்தேன், இணையத்தில் கிடைப்பவை எல்லாமே வணிகநோக்குடன், வெவ்வேறு சினிமாத்தளங்களால் போடப்பட்ட பட்டியல்கள். அவற்றில் பெரும்பாலும் வணிக- வெகுஜனப் படங்களே அந்தந்த மொழிகளின் நல்ல படங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. அரிதாக எல்லாமே கலந்துகட்டிய பட்டியல்கள். தெளிவுள்ள விமர்சகர்களின் பட்டியல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன.
*
இன்று குறைந்த செலவில், ஆர்வத்தையும் நட்பையும் முதலீடாகக் கொண்டு ஓர் ‘விர்ச்சுவல்’ அமைப்பை உருவாக்கி முன்னெடுக்கலாம். அது வெற்றிபெறுமென்றால் நேரில்செயல்படும் அமைப்பாக கொண்டுசெல்லலாம். உதாரணமாக, இன்று ஸ்கிரீனிங் தேவையில்லை. ஆனால் ஒரு ஞாயிறன்று பர்க்மானின் ஒரு படம் பற்றி பேசலாம் என முடிவெடுத்து, அந்தப்படத்தை அனைவரும் பார்த்துவிட்டுவந்து பேசலாம். அது பழைய ஸ்க்ரீனிங்க்குக்கு சமம்தான்.
நான் எண்பத்துநான்கு முதல் ஐந்தாண்டுகள் திரைப்பட இயக்கத்தில் செயலாற்றிய அனுபவத்தில் ஒன்றை அறிவேன். எந்தக் கலைக்கும்போல சினிமாவுக்கும் ஓர் அடிப்படை ‘பாடத்திட்டம்’ உண்டு. பார்த்தேயாகவேண்டிய கிளாசிக்குகள், தெரிந்துகொண்டேயாகவேண்டிய அழகியல்கொள்கைகள் , அடிப்படை வரலாறு என சில உண்டு. அவை பற்றிய அடிப்படை அறிதலே இல்லாத பெருங்கூட்டம் இன்று சினிமாவில் கட்சியரசியலை கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறது. அல்லது குறியோ குறியீடோ தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த அடிப்படைகளை புத்தகமாக, கட்டுரைகளாக அளிக்கவேண்டுமென்பதில்லை. ஏனென்றால் சினிமாக்கலையில் உளம்கொண்டவர்கள் நல்ல வாசகர்களாக இருக்கவேண்டுமென்பதில்லை. யூடியூப் காணொலிகளாக பேசியும் காட்சித்துணுக்குகளுடனும் சினிமா பற்றிய அடிப்படைகளை உருவாக்கலாம்.
இந்திய கலைப்பட இயக்கத்தின் முன்னோடிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் 20 நிமிட காணொலிகளை, படங்களுடனும் சுருக்கமான விளக்கத்துடனும், உருவாக்கவேண்டும், ஒரே இடத்தில் அவை கிடைக்கச்செய்யவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. பலரிடம் சொல்லிப்பார்த்தேன், நடக்கவில்லை.
அமைப்புகள் இன்றி பெரிய விஷயங்கள் நிகழாது. ஆனால் தகுதியான நபர்களால் தளர்வின்றி முன்னெடுக்கப்படும் அமைப்புக்களே எதையாவது சாதிக்கின்றன. இக்கட்டுரைகள் வெளிவந்தபின் வரும் கடிதங்களைப் பார்த்தால் கோகுல்பிரசாத் கமலக்கண்ணன் போன்ற பலர் எழுதிவருவதை, அவர்கள்மேல் பலருக்கு நம்பிக்கை இருப்பதை காண்கிறேன். அவர்கள் செய்யலாம்.
சரி, நான் உடனிருப்பேனா? இல்லை. எனக்கு சினிமாமேல் பெரிய ஆர்வம் இல்லை. சினிமா ஓர் எல்லைக்குமேல் என் மூளைக்கு ஏறவுமில்லை. இன்று, சினிமா பார்க்கும் மனநிலையும் சுத்தமாக இல்லை.
ஜெ