உயிரோவியம்

அன்புநிறை ஜெ,

தற்போது வெண்முரசை மிக நிதானமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சில நாட்கள் தோய்ந்து ஊறி சுவைத்துக் கொண்டிருக்கிறேன். ஒற்றை வரி ஒரு மிகப் பெரிய காட்சியாக விரிகிறது, சில பொழுதுகளில் கனவில் வேறு சில கண்ணிகளை மனது இணைத்துக் கொள்கிறது.அகம் அறியும் அனைத்தையும் எழுத இயலாது போலும்.

சிலநாட்கள் முன்னர் முதற்கனல் 12 வாசித்தேன். முதற்கனலின், ஏன் வெண்முரசிலேயே உச்ச தருணங்கள் என சொல்லத் தக்க காசி சுயம்வர மண்டபத்தில் பீஷ்மர் நுழையும் கதைத்தருணம். தொடர்ந்து நிகழும் பீஷ்மரின் அனாயசமான முதல் போர்க்காட்சி. வழக்கமாக அந்த உச்சத்தில் ஏறிக் கொள்ளும் விசை அம்பை கங்கை நீரில் அலைவதும், கங்கை மைந்தன் புறக்கணித்ததும் கங்கைக் கரைக்காடுகளில் நிலமெங்கும் அலைவதும், நீரும் நிலமும் தீர்க்காத அழலை கங்கைக் கரையிலேயே தீபுகுந்து முடிப்பதும் என அதுவரை கதை சென்ற பிறகே கீழே வைப்பது வழக்கம். ஒரு முறை கூட அதற்கு முன்னர் வாசிப்பை நிறுத்த இயன்றதில்லை. அம்பையாகவே பிச்சியாகவே கொற்றவையாகவே ஒவ்வொரு முறையும் வாசிக்க நேரும்.

இம்முறை இந்த ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு அம்பையிடம் சென்று படியும் மனதை விலக்கி அமைதியாக அசைபோட்டுக் கொண்டிருந்தேன். உறக்கத்தின் ஏதோ ஒரு முனையில் இந்த அத்தியாயத்தின் ஓவியர் ஷண்முகவேல் வரைந்த ஓவியமும் அதற்கு மேலே இடம்பெறும் வரிகளும் மனதில் துலங்கி மேலே வந்தது. வெறும் காட்சியாக அல்ல, காணொளி போல் கூட அல்ல மெய்நிகர் அனுபவமாக. அந்தப் படகில் ஏறி காசி பின்னகர்ந்து மறைவதை உணர்ந்தேன். காலையில் அந்த ஓவியத்தை மீண்டும் பார்த்தபோது அது மேலும் பெரிதாக விரிந்தது.

“வெண்நாரை சிறகுவிரிப்பதைப்போல படகுகளின் பாய்கள் விரிந்தன. காசிநகரம் அதன் கோட்டையுடனும் மாளிகைகளுடனும் விஸ்வநாதன் பேராலயத்துடனும் கடல்யானம் போல தன்னைவிட்டு விலகிச்செல்வதைக் கண்டு அமர்ந்திருந்தார் பீஷ்மர்.”

அந்த சித்திரத்தில் அனைத்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றன, பீஷ்மனைத் தவிர. அசையும் கலம், ஒழுகும் கங்கை, வீழ்ந்த ஷத்ரியர்கள் போல சிறகடித்துப் பதறும் பறவைகள், பின்மறையும் காசி, உரு சிறிதாகும் பேருருவன் ஆலயம், அத்தனைக்கும் இடையே அடிமரம் போல காலூண்றி நிற்கும் பீஷ்மன். அவருக்கு அப்போது சஞ்சலங்கள் இல்லை.  பாதை வகுத்த பின்பு பின்வாங்காத உறுதியில் அசலமாக நிற்கிறார். அந்த உறுதியை அசைத்துப் பார்க்க அங்கிருந்தே பின்னர் வருகிறாள் அசலை. இக்காட்சியில் பின்னகரும் காசி எங்கும் நகர்வதில்லை. அது அவரது அந்தக் கணத்து மனநிலை. எடுத்து வைக்கும் காலடியில் உறுதியற்றவன் வாளேந்தவோ வில்லேந்தவோ இயலாது. அந்த உறுதியுடன் நிற்கும் பீஷ்மனைப் பின்னிருந்து பார்க்கும் இந்தப் பார்வைக் கோணம் யாருடையதாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டேன். காயத்துக்குப் பச்சிலைமருந்து இட வந்த சேவகன் அல்ல. அவன் தயங்கியபடி பக்கவாட்டிலிருந்து சற்று உடல் வளைத்தபடிதான் அணுகியிருப்பான். மழைக்காலக் குருவிகள் என அஞ்சிய இரு இளவரசியரும் அல்ல. இது இரைபறிக்கப்பட்ட கழுகு போல என வர்ணிக்கப்படும் அம்பையின் பார்வை. அந்தப் பார்வைக்கு அஞ்சிப் பதறுகின்றனவோ அத்தனை பறவைகளும்!

ஆடும்படகில் உடலில் சமநிலை கூட்டி நின்று அப்பால் கங்கைநீரை நோக்கி நின்றிருந்த பீஷ்மரின்  முதுகைக்காணும் அம்பையின் பார்வை. அது கதையிலேயே வந்திருக்கிறதென்றாலும் இது வெறும் ஒற்றை வரிக்கான ஓவியமன்று. அந்த தருணத்தின் உளநிலைகளை, உணர்வை உயிர்சித்திரமென மாற்றிய உயர்கலை.

எழுத்தும் சித்திரமும் ஒன்றை ஒன்று வளர்க்கும் காட்சி.

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைகண்கூடான காந்தி
அடுத்த கட்டுரைஅஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்