ஆகுதி- கடிதங்கள்

ஆகுதி-[சிறுகதை] மயிலன் சின்னப்பன்

அன்புள்ள ஜெ

மயிலன் சின்னப்பனின் ஆகுதி படித்தேன். நான் படித்த அவருடைய முதல் கதை. ஏற்கனவே அவருடைய பெயரை கேட்டிருந்தாலும் படித்ததில்லை. கதை சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அதன்பின் உயிர்மை ,கனலி போன்ற இதழ்களில் அவருடைய நான்கு கதைகளைப் படித்தேன். இப்போது இணைய ஊடகம் வழியாகவே நல்ல எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என நினைக்கிறேன். மயிலன் அவர்களில் ஒருவர்

மயிலன் சின்னப்பனின் கதைகளில் உரையாடல்கள் நல்ல ஓட்டத்துடன் இயல்பாக உள்ளன. ஒரு பாரில் புதிய ஒரு பெண்ணைச் சந்தித்து குடிக்கும் ஒரு கதை முழுக்க முழுக்க உரையாடலாகவே எழுதப்பட்டிருந்தது. அதுவும் பேசிப்பேசி பொய்யாக தங்களை முன்வைக்கும் பாவனைகள் பற்றிய கதை. அதுவும் சிறப்பாக இருந்தது. இன்றைய இளம் எழுத்தாளர்களில் உரையாடல்களைச் சிறப்பாக எழுதுபவர் இவர்தான் என நினைக்கிறேன். மற்றவர்கள் உரையாடலை கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் எழுதுகிறார்கள். உரையாடலை எழுதுவது இலக்கியத்தில் முக்கியமானது. இயல்பாகவும் இருக்கவேண்டும். ஆனால் ஆழமும் இருக்கவேண்டும். ஆழம் என்பது அந்த உரையாடலில் கதாபாத்திரக் குணச்சித்திரம் வெளிப்படுவது. சொல்லப்பட்டதற்கு அப்பால் சொல்லப்படாதது தொக்கி நிற்பது.அது இவருடைய கதைகளில் உள்ளது.

ஆகுதி ஒருவாசிப்பில் ஒரு சமூக அநீதியின் கதை. இங்கே நடக்கும் பெரும்பாலான தற்கொலைகள் ஒருவகை கொலைகள்தான். செத்தவ போனா, இருக்கிறவங்க வாழவேண்டாமா என்ற வரியால் அந்த அநீதிகள் தண்டிக்கப்படாமால் போகின்றன. கொலையைச் செய்வது சமூகமேதான். ஆகவே எவருக்கும் குற்றவுணர்ச்சியும் இல்லை. அந்த பெண்குழந்தை படும் பாடு நுட்பமாக, அழுத்தமாக சொல்லப்பட்டிருப்பதனால் மனதை நடுங்கவைக்கிறது. மயிலனின் கதைகள் நான்கு வாசித்தேன். இதுவே நல்ல கதை

ஆனால் கதையின் மையம் அந்தப்பெண்ணுடன் மருத்துவர் தன்னை அடையாளம் கண்டுகொள்வதில் இருக்கிறது. அந்த வரியை எடுத்துக்கொடுத்து நீங்கள் அதற்கு அடிக்கோடு போட்டிருக்கிறீர்கள். அத்தனை மருத்துவர் இருந்தாலும் அந்தப்பெண் அந்த பெண் மருத்துவரையே நம்பி அவளிடம் நடந்ததைச் சொல்கிறாள். அது எந்த சமூகக்காதுக்கும் செல்லவில்லை. அவளைப்போன்ற இன்னொரு செவிக்கு மட்டும்தான் செல்கிறது.

டாக்டர் ஆகுதியான பெண்ணும் தானேதான் என உணருமிடத்தில் கதை இன்னொரு ஆழத்தை அடைகிறது

எஸ்.ராஜகோபால்

 

அன்புள்ள ஜெ

மயிலன் சின்னப்பனின் ஆகுதி கதை இங்கே பலநூறாண்டுகளாக நடைபெறுகிறது. இங்கே தீப்பாய்ஞ்ச அம்மன்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக்கதையில் தீயில் பாய்வது ஒரு சுயவதை , தற்கொலைக்கு வேறுநல்ல வழிகள் உள்ளன என்று ஒருவரி ஒரு டாக்டரால் சொல்லப்படுகிறது. ஆனால் இங்கே பெண்கள் தீயைத்தான் அதிகமாக தேர்வுசெய்கிறார்கள்

அதற்குக் காரணம் அந்த மிதாலஜி அளிக்கும் டெம்ப்ளேட்தான். அது நம் சைக்காலஜியில் உள்ளது. சீதை தீக்குளித்தாள் என்று கேட்டு வளர்கிறோம். தீப்பாய்ஞ்ச அம்மன்கள், உடன்கட்டை ஏறியவர்களின் கதைகள் நம் பெண்களைச் சூழ்ந்து உள்ளன. பெண்கள் தீக்குளிப்பது சாவதற்காக மட்டும் அல்ல, தூய்மையாவதற்காகவும்தான் ஆகுதி என்ற தலைப்பு வழியாக மயிலன் அந்த எல்லா சுட்டு அர்த்தங்களையும் கொடுத்துவிடுகிறார்.

அவர்களுக்கு உடல் ஒரு பெரும்பொறுப்பாகவும் சுமையாகவும் சிறையாகவும் உள்ளது. அதை சிலசமயம் அருவருப்பாக உணர்கிறார்கள். அதை எரித்துச் சாம்பலாக்கிவிடவேண்டும் என நினைக்கிறார்கள். அந்த வார்டு முழுக்க அப்படி எரிந்த பெண்கள். பாதி எரிந்த பெண்கள், முக்கால் எரிந்த பெண்கள். அந்த உடல்களையே போட்டோ எடுக்கும் ஆண்கள். நம் சமூகத்தின் கொடூரமான ஒரு இருண்ட உலகம் அது

அந்த எரிந்த உடலுக்குள் ஓடும் ரத்தத்தை தொட்டுவிட்ட டாக்டரை அந்தப்பெண் அக்கா என அழைப்பது, அதன்வழியாக உருவாகும் அந்த உறவுதான் இந்தியப்பெண்கள் பாதுகாப்புக்காக நம்பியிருப்பது. நிறைய சமயங்களில் அக்காக்கள் மட்டுமேதான் உடனிருக்கிறார்கள். ஆறுதலும் தேறுதலும் சொல்கிறார்கள். இந்தக்கதைக்கு அக்கா என்றுகூட தலைப்பு வைத்திருக்கலாம். ஆழமான கதை, உணர்ச்சிபூர்வமானதும்கூட

எம்.சந்திரசேகரன்

 

முந்தைய கட்டுரைசாமானியர்களின் அடக்குமுறை- கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் சினிமா ரசனை