மரம்போல்வர் -கடிதங்கள்

மரம்போல்வர்- சுஷீல்குமார்

அன்புள்ள ஜெ,

சுஷீல் குமாரின் ‘மரம்போல்வர்‘ கதை வாசித்தேன். முதலில் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். கதை சுவாரசியமாக இருந்தது. இன்று வரும் கதைகளில் பல அடிப்படையான சுவாரசியத்தை இழந்துவிட்டவை. என்ன காரணத்தால் என்றால் கற்பனையே இல்லாமல் எதையாவது சொல்கிறார்கள். அதோடு கதையை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் நெடுநேரம் சும்மா எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதை சுவாரசியமாக தொடங்கி கடைசி வரை வாசிக்கவைக்கிறது. அதற்காக பாராட்டவேண்டியதுதான்

இன்னொன்று, இந்தக்கதையிலுள்ள மர்மம். அந்த பெரிய மரத்தை வைத்துக்கொண்டு அக்குடும்பத்தின் இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கையைச் சொல்கிறார். ஒரு அன்புக்குரிய மரத்தை முறிக்கவேண்டியிருப்பதுதான் கதை என்றால் இது ஒரு வழக்கமான கதைதான். புளியமரத்தின் கதையில் சுந்தர ராமசாமி சொன்னதுக்குமேல் சொல்வதற்கு இல்லை. இந்தமாதிரியான கதைகள் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. மரத்தை முறிப்பது, பழையவீட்டை இடிப்பது. இதெல்லாமே ஆனந்தவிகடன் தீம்தான்

இந்தக்கதையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அந்த மரத்திற்கு இருக்கும் மிஸ்டிக் தன்மைதான். அப்பாவுக்கு அந்த மிஸ்டிக் தன்மை முக்கியம். அதனால் அந்த மரம் அவருக்கு தெய்வம். ஆனால் பிள்ளைகளுக்கு அது இடத்தை அடைத்திருக்கும் வெறும் மரம். இந்த பார்வை வேறுபாட்டைச் சொல்வதனால் இந்தக்கதைக்கு ஒரு மேலதிகமான குறியீட்டு அர்த்தம் வருகிறது. ஆகவே கதைக்கு ஓர் இலக்கிய அமைதியும் உள்ளது

ஆனால் இந்தக்கதை இன்னும்கூட மெச்சூர் ஆகியிருக்கலாம். மிஸ்டிக் மரம், அதை அடுத்த தலைமுறை தூக்கிவீசிவிடுகிறது. இவ்வளவுதான் இந்தக்கதையில் இருக்கிறது. நாஞ்சில்நாடன் சுடலைமாடனை இப்படி தூக்கிப்போட்டுவிடுவதைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறார். இந்தக்கதையில் அந்த மரம் இன்னும் ஒருபடி ஆழமாக வந்திருக்கவேண்டும். எப்படி என்று சொல்லத்தெரியவில்லை. நாஞ்சில்நாடன் கதையில் இருப்பதைவிட ஒருபடி மேலே செல்லாவிட்டால் இதை எழுதியிருக்கவேண்டாம் அல்லவா?

ஸ்ரீனிவாஸ்

 

அன்புள்ள ஜெ

சுஷீல்குமார் இப்போது நிறைய எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர், அவருடைய தொகுதியும் வரப்போகிறது என்று நினைக்கிறேன், அவருடைய கதைகளில் குமரிமாவட்டத்தின் பண்பாட்டின் நுட்பங்கள் உள்ளன. பாவனைகள் இல்லாத யதார்த்தம் உள்ளது. ஆனால் இரண்டு பிரச்சினைகள். ஒன்று எல்லா கதைகளுமே ஒரே வடிவில் உள்ளன. துண்டு துண்டாக கதையை டாட் போட்டு எழுதுகிறார். அது வாசகனுக்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது.

இந்தக்கதையில் உள்ளதுபோல மிஸ்டிக் அம்சம் பலகதைகளில் உள்ளது. ஆனால் அந்த மிஸ்டிக் அம்சத்துக்கு நவீனப்பார்வையில் ஒரு விளக்கத்தை அளிப்பதில்லை. அதாவது கதையில் ஆசிரியர் உருவாக்கும் மிஸ்டிசிசம் இல்லை. ஏற்கனவே வேப்பமரம் ஒன்று அப்படி இருந்தால் என்னவகையான மிஸ்டிக் உணர்வு இருக்குமோ அதையே பதிவுசெய்கிறார். ஆசிரியரின் பங்களிப்பு என்று ஒன்று இருந்தால்தான் அது அடுத்தகட்டத்துக்குச் செல்லும். மரபிலுள்ள ஒரு தொன்மமோ படிமமோ நவீனக்கதையில் கவித்துவமான கூடுதல் அர்த்தம் அடைந்திருக்கவேண்டும்

சுஷீல்குமார் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்

எம்.சந்திரசேகர்

மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

மூங்கில்- கடிதங்கள்

மறைமுகம், மூங்கில் -கடிதங்கள்
முந்தைய கட்டுரைசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பிப்ரவரி 2021
அடுத்த கட்டுரைநான் அவர் மற்றும் ஒரு மலர்! – எம்.கே.குமார்