கடத்தற்கரியதன் பேரழகு
செம்மீன் வாங்க
வணக்கம் ஜெ
கடந்த மாதம் தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் வாசித்தேன். மீளமுடியாத உணர்வு. வெயில் காயும் கடற்கரை, எதிரே தென்னைமர நிழல்கள், இடையிடையே மீனவக் குடிசைகள், கறுத்தம்மா இவையாவும் அப்படியே படிமம் போல் படிந்து விட்டன. எவ்வளவோ காதல் கதைகளை சிறுவயது முதலே கவனித்திருக்கிறோம். சினிமா முழுக்க காதல்தான். ஆனால் கறுத்தம்மா பரீயின் காதல் எனக்கு அவ்வளவு எளிதானதாக இல்லை. காதலை நாம் என்னதான் தெய்வீகமானதாக ஆக்கிக் கொண்டாலும், இவ்வளவுதான் காதல்…இது என்ன பெரிய விஷயமா என்கிற மட்டுப்படுத்தலும் என்னுள் இருக்கிறது.
ஆனால் செம்மீன் காதலை என்னால் எளிமைப்படுத்த முடியவில்லை. சிலவகைக் கதைகள் நம் நிம்மதியைக் குலைத்து விடும். கதையைப் படித்த சில நாட்களுக்கு மனம் முழுக்க அதுமட்டுமே நிரம்பிக் கிடக்கும். வேறு எதிலும் சிந்தனை செல்லாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவித எண்ணத்தை, உணர்வை ஏற்படுத்தும். ஆனால் நான் இதுவரை படித்த எந்தக் கதைக்கும் அழுததில்லை. செம்மீனைப் படித்து, மறுநாள் இரவு படுத்திருக்கும்போது என்னையும் மீறி அழுதுவிட்டேன். அழுதபோது எனக்கு உங்கள் முகமே நினைவுக்கு வந்தது. உங்கள் அருகில் அமர்ந்து பேசி அழுவது போன்ற உணர்வு. செம்மீன், என் வாழ்நாளில் எனக்கு அணுக்கமான கதையாகிவிட்டது.
பொதுவாக இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் காதல், அது சமூகத்தால் மறுதலிக்கப்படுவது, விருப்பத்திற்கு மாறான திருமண வாழ்வு, காதலுக்காக உயிர்விடுவது போன்ற மிகவும் பழக்கப்பட்ட விஷயமாக இருந்தாலும், அதோடு தொடர்புடைய விஷயங்களையும் நுணுக்கமாகப் பேசுகிறது. ஒவ்வொரு வகையான சமூகங்கள், அதன் தொழில் வாழ்க்கை, அதையொட்டிய அவைகளின் நியதிகள், மதிப்பீடுகள், அதிலுள்ள தனிமனிதர்களுக்கும் அமைப்புக்குமான சிக்கலான முரண்பாடுகள் போன்றவை நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மீனவ வாழ்க்கையில் உள்ள மதிப்பீடுகளும், நியதிகளும் சற்று மூர்க்கமானதாகவே இருக்கும். எல்லா சமூகங்களிலும் உள்ள பொதுவான நியதிகளுக்கும், அதன் தனிமனித விழைவுகள் சுதந்திரங்களுக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது. மீனவ சமுதாயம் போல ஒருவரையொருவர் அதிகம் சார்ந்திருக்கும் வாழ்க்கைச் சூழலில், தனிமனிதர்களே கிட்டத்தட்ட இல்லாத சூழலில் அத்தகைய முரண்பாடுகள் அதிகமாகவே இருக்கும். ஆனால் அதன் உறுப்பினர்கள் தன்னளவில் அந்தரங்கமாக சுதந்திரத்தையும் மீறல்களையும் நாடுபவர்களாகவே இருக்கின்றனர்.
சக்கியும் அக்கம் பக்கத்து மரக்காத்திகளும் வாய்ச் சண்டையில் ஈடுபடும்போது, அத்தனைபேரும் அந்தரங்கமாக பலமுறை மீறியிருப்பது தெரியவரும். அப்போ எவளும் இங்க யோக்கியம் இல்லையா… என்பதாக கறுத்தம்மாவின் மனவோட்டம் சிரிப்பு வரவழைத்தது. வெளிப்படையாக மீறும்போது சமூகத்தின் இழிவுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக நேரிடும். ஏனெனில் அங்கு சமூகப் பாதுகாப்பு என்பது தவிர்க்க முடியாததாகிறது. அமைப்பு தனிமனிதனைப் புறக்கணிக்கிறது. தனிமனிதனோ அந்தரங்கமாக அமைப்பை உதாசீனப்படுத்துகிறான்.
பரீக்குத் தான் கடன்பட்டிருக்கக் கூடாது என்கிற கறுத்தம்மாவின் பதற்றம், உள்ளுக்குள் கறுத்தம்மாவின் காதலை அனுமதிக்கும், ஆனால் அமைப்பைக் கண்டு அஞ்சும் சக்கியின் பதற்றம், கற்புமீறலால் தன் துறை அழிந்துவிடும் என்கிற இருவரின் பதற்றம். கறுத்தம்மா சுயநலமாகத்தான் நடந்துகொண்டாளா ? தன் துறைக்கோ குடும்பத்துக்கோ அவப்பெயரோ அழிவோ வந்துவிடக் கூடாது என்று பயந்தாளேவொழிய பழனியைப் பற்றியோ அவன் வாழ்வைப் பற்றியோ கவலைப்படவில்லை. பழனியைத் திருமணம் செய்யும் முன்பே அவள் பரீயுடன் கடலில் விழுந்து மாய்திருக்கலாம். ஆனாலும் அவள் கணக்குப் போட்டுவிட்டாள்.
‘உங்கள் துறை அழிஞ்சிரக் கூடாது என்பதற்காக எங்களிடம் தள்ளிவிடப் பாக்குறீங்க’ என்ற பழனி ஊர்க்காரர்களின் கோபம். ‘ஆணவம்’ என்று சொல்வதற்கு அருகதையற்றவனாகவே பழனி இருக்கிறான். கிட்டத்தட்ட விதியின் கைப்பாவை. அவனும் விதியால் ஏமாற்றப்பட்டு கருணையின்றிக் கொல்லப்பட்டவனே. அவன்தான் அனாதையாயிற்றே. அதனால் அவன் உடலை கடலம்மாவே உண்டுவிட்டாள். இங்கு அநீதியிழைக்கப்பட்டது கறுத்தம்மா மட்டுமல்ல. பழனியும்தான்.
உங்கள் பத்துலட்சம் காலடிகள் கதை இக்கதையோடு ஒருவிஷயத்தில் ஒத்துப்போகிறது. இக்கதை குறித்து நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா என்று தளத்தில் தேடியபோது கடந்த ஆண்டுதான் செம்மீன் திரைப்படம் குறித்து எழுதியிருந்தீர்கள். நான் அப்போது எதோ ஒரு மலையாளத் திரைப்படம் குறித்த கட்டுரை என்பதாக அதை படித்துக் கடந்துவிட்டேன். தற்போது தற்செயலாக நூலகத்தில் தேடியபோது இது கண்ணில் பட்டது. இது என்னிடம் இருக்க வேண்டிய நூல் என்பதால் வேறொரு நூலை இணையம் வழியாக வாங்கியும் வைத்துவிட்டேன். கதையைப் படித்தபின் திரைப்படத்தயும் பார்த்துவிட்டேன். நான் பழைய படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் இப்படம் எனக்கு சோர்வளிக்கவில்லை. ஏற்கனவே கதையைப் படித்துவிட்டதால் படக்காட்சியைப் புரிந்துகொள்வதற்கு புரியாத மலையாளம் தடையாக இல்லை. சிறந்த திரைப்படம்.
இலக்கிய ஆக்கங்களை சினிமாவாகப் பார்ப்பதில் உள்ள வசதி, சொற்களாகப் படித்தவற்றை அது காட்சிகளாகக் காட்டிவிடுகிறது. நமக்கு ‘உருவம்’ கிடைத்துவிடுகிறது. கறுத்தம்மா, பரீ, மீனவப் படகுகள், தென்னங்கீற்றுகளுக்கு மத்தியில் குடில்கள் போன்றவை காட்சிகளாகப் பதிந்துவிடுகின்றன. நாம் என்னதான் கதைச் சூழலை கற்பனையில் உருவகித்துக் கொண்டாலும், அதைவிடப் படக்காட்சி எளிதில் பற்றிவிடுகிறது. இனி கறுத்தம்மா என்றால் அப்படத்தில் நடித்த கதாநாயகியின் உருவம்தான் நினைவுக்கு வருமேவொழிய அருவமான கறுத்தம்மா அல்ல. இப்படத்தின் முக்கிய அம்சம் பாடல்வரிகள். முழுமையாகப் புரியாவிட்டாலும் ஓரளவு புரிகிறது. அவ்வரிகள் நாவலுக்குத் தொடர்பல்லாத ஏதோவொன்றாக இல்லாமல், அதற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. தினம் இரவு மானஸ மைனே பாடலோடுதான் தூங்கப்போகிறேன்.
இவை எனக்குப் பிடித்த வரிகள். (எழுத்துப் பிழைகளை சகித்துக் கொள்ளவும்)
பண்டோரு முக்குவன் முத்தினு போயி…
படிங்ஙாரன் காட்டத்து முங்கி போயி…
அரையத்தி பெண்ணு தபஸ்ஸிருந்நு…
அவனே கடலம்மா கொண்டு வந்நு…
பண்டோரு முக்குவன் முத்தினு போயி…
படிங்ஙாரன் காட்டத்து முங்கி போயி…
அரையத்தி பெண்ணு பெழச்சு போயி…
அவனே கடலம்மா கொண்டு போயி…
விவேக் ராஜ்