விசும்பின் மூன்று கதைகள்- கடிதம்

சிறுகதைகள் வாசிக்க

அன்பு ஜெயமோகன்,

கோபிசெட்டிபாளைய பூங்கா நூலகம் எனக்கு அணுக்கமானது. ஈரோடு மாவட்டத்தின் பல நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். பூங்கா நூலகத்தைப் போன்று எதனோடும் நட்பாக முடியவில்லை. இந்நூலகத்தின் குறிப்புதவிப் பகுதி(Reference Section) காற்றோட்டமான சாளரங்களைக் கொண்டிருக்கும். அருகில் இருக்கும் நகராட்சிப் பூங்கா மரப்பறவைகளின் தொண்டைச் சிணுங்கல்களுடன் வாசிப்பது நற்பேறு. இலக்கியச் சிற்றிதழ்த் தொகுப்புகளை மேசையில் விரித்து வைத்துக் கொண்டு வாசிக்கப் போராடுவது இன்னும் இதம்.

கடந்த பல ஆண்டுகளாக அந்நூலகத்தில் நான் உறுப்பினன். கொரோனா பெருந்தொற்றுச் சூழலால் நூல்களை அலமாரிகளில் இருந்து தேர்ந்தெடுக்க இயலாது. பல நூல்களை ஒரு மேசையில் பரப்பி வைத்திருப்பர். அவற்றில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படி வந்து சேர்ந்ததுதான் விசும்பு(அறிவியல் புனைகதைகள்). முன்பே அத்தொகுப்பின் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனாலும், மறுவாசிப்பில்தான் சில கதைகள் பிடிபட்டதைப் போல் இருந்தன.

விசும்பு தொகுப்பில் மூன்று கதைகள் என்னளவில் முக்கியமானவை. ஐந்தாவது மருந்து, பூர்ணம் மற்றும் உற்று நோக்கும் பறவை. குறிப்பாக, உற்று நோக்கும் பறவை பலமுறை வாசிக்க வைத்தது. கதைகளை அறிமுகம் செய்வதை விட அவற்றை வாசிக்கத் தூண்டுவதான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலே முக்கியம் என நினைக்கிறேன்.

பிரபஞ்சத்தில் மனிதச் சமூகம் தவிர்த்து வேறு உயிர்ச்சமூகம் இல்லை அல்லது இருக்கலாம்(சமூகம் என்பது பருண்மையான உலகைக் குறிப்பதன்று). அதை ஆராய்வதை விடுத்து, மனிதச்சமூகத்தை மட்டும் கவனம் கொள்வோம். நம்மால் அது மட்டுமே இயலும்.

மனிதன் தன் சமூகவாழ்வில் பிளவு, முழுமை எனத்தவிக்கிறான்; நல்லது, கெட்டது என அல்லாடுகிறான். முழுமை, நல்லது போன்றவற்றை விடுதலையாகவும் பிளவு, கெட்டது போன்றவற்றை விலங்காகவும் கொண்டு.. ஊடாடிக் கொண்டே இருக்கிறான். ஊடாட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்தபடியே இருக்கிறது; இனியும் தொடரும் என்றே ஊகம் செய்கிறேன்.

பூர்ணம் கதையில் முழுமனிதன் குறித்த பேச்சு வரும். முழுமனிதனை அதிகாரமே உருவான அதிமனிதன்(நீட்சேவு), ஞானமே உருவான உயர்மனிதன்(அரவிந்தர்) போன்ற வியாக்கியானங்களை நடைமுறை அபத்தத்தால் கேள்விக்குள்ளாக்கும் இடம் அது. நீட்சேவின் அதிமனிதன் தன்னை மட்டுமே முன்வைப்பவன்; தன்னால் எதுவும் சாத்தியப்படும் என உறுதியாக நம்புபவன். அரவிந்தரின் உயர்மனிதன் தன்னை ஒரு பொருட்டாகவே மதியாதவன்; தான் சாத்தியப்படுத்துவதற்கு எதுவுமில்லை என்பதான நம்பிக்கையில் இருப்பவன். இங்குதான் முழுமை, பிளவு குறித்த யோசனை அவசியமாகிறது.

நீட்சே பிளவை முழுமையைப் போன்று பூதாகாரப்படுத்த அரவிந்தரோ முழுமையைப் பிளவின் வழி பிரம்மாண்டமாக்குகிறார். இப்புள்ளியில்தான் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. பிளவு, முழுமை இரண்டும் புறக்கூறுகள் போன்ற தோற்றம் கொண்டவை அல்லது அப்படியே நாம் நம்பத் திணிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில், அவை அகக்குறியீடுகள். அதிமனிதன், உயர்மனிதன் போன்ற சொல்லாடல்கள் வழி அக்குறியீடுகள் விளக்கப் பெறுகின்றன. அவ்விளக்கங்களும் புறத்தன்மை கொண்டவை அன்று. ஒரு மனிதனுக்கு நடைமுறை வாழ்வில் வரும் அகச்சலிப்பைப் போக்குவதற்கான கனவு மனிதநிலைகள் அவை. ஒரு மனிதன் ஒருபோதும் பூர்ண அதிமனிதனாகவோ அல்லது பூர்ண உயர்மனிதனாகவோ தன்னை உருவாக்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அதிமனிதனும் இருப்பான்; உயர்மனிதனும் இருப்பான். இருவரும் வெளிப்படக்கூடிய தருணங்களை முன்கூட்டி முடிவு செய்து விட முடியாது. அதுவே வாழ்வின் மர்மம். அம்மர்மத்தை அறிவியல் கணக்கீடுகளால் நெருங்கி விட முடியும் எனத் தோன்றவில்லை.

பூர்ணத்தின் தொடர்ச்சியாக உற்று நோக்கும் பறவை இருப்பதாகவே கருதுகிறேன் அல்லது அப்படி வாசித்தல் நலம் எனப் பரிந்துரைக்கிறேன். ”மரத்தைத் தறிக்க வேண்டுமென்றால் மனம் உளியாகவும் சுத்தியலாகவும் ஒரே சமயம் மாறும். தன் மனம் ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலை வேறு ஒரு மனம் வேடிக்கை பார்க்கிறது” எனும் வியாக்கியனமே அக்கதையின் வேர். ஒரு மனிதனுக்குள் இருக்கும் அதிமனிதனை அதே மனிதனுக்குள் இருக்கும் உயர்மனிதன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அதேபோன்று உயர்மனிதனை அதிமனிதனும். நடைமுறை வாழ்வில் சலிப்புறும் ஒருவனுக்கு அதைக் கண்டுகொள்ளும் வாய்ப்பு அமைகிறது. அவனையே சாதகன் என்கிறது யோகமரபு. சாதகனைப் பக்தனாகக் கருதிவிடல் ஆபத்து. பக்தன் தன் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்து விடுபவன்; அதில் தீவிர உறுதியோடு இருப்பவன். சாதகனோ குறைந்தபட்சப் பொறுப்பேற்றுக் கொள்கிறவன்; அதன் பொருட்டு செயல்படுகிறவன்; செயல்பாடுகளால் தான் பெறுகின்றவற்றைக் கொண்டு தன்னைப் புனரமைத்துக் கொள்கிறவன்.

நடைமுறைச் சமூக வாழ்வில் நல்லவன், கெட்டவன் போன்ற அடையாளங்களை நிரந்தரப்படுத்தி விட விரும்புகிறோம். நல்லவனே சமூகத்துக்கு அவசியமானவன், கெட்டவன் அழிக்கப்பட வேண்டியவன் என்பதாகவும் யோசிக்கிறோம். அங்குதான் கடும் மனநெருக்கடியை எதிர்கொள்ள நேரிடுகிறது; வாழ்வுச்சம்பவங்கள் புலியின் கண்களாய்க் குழப்பியடிக்கின்றன; பூனையின் காலோசையாய்த் திகைக்கச் செய்கின்றன. ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அல்லது பல சட்டகங்களுக்குள் அவற்றை அடைத்து ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட முடிவதில்லை.

உற்று நோக்கும் பறவையின் காலன்சாமியை மனிதனாகக் கொண்டு சிந்திக்கலாம். அவர் தன்னை சுக்லன், சியாமன் என இரண்டாகப் பகுக்க்கிறார். வளர்நிலவுக் கட்டத்தில் அவர் சுக்லன்; தேய்நிலவில் சியாமன். என் கோணத்தில் சொல்வதானால், சுக்லன் தனிமனிதன்; சியாமன் சமூக மனிதன். சுக்லனை அரவிந்தரின் உயர்மனிதனுக்கும், சியாமனை நீட்ஷேவின் அதிமனிதனுக்கும் இணை வைத்தால் இன்னும் தெளிவு கிட்டும். சுக்லன்(வெண்மை) நன்மைகளை மட்டுமே விரும்புபவன்; சத்வ குணம் கொண்டவன். சியாமனோ(கருமை) காம, வெகுளி, மயக்கம் நிறைந்தவன்; தமோ மற்றும் ரஜோ குணங்கள் கொண்டவன்.

துவாத்மம் எனும் மதம் நடைமுறச் சமூக வாழ்வே. நாமெல்லாம் துவாத்மர்களே. ”ஒரு மதநம்பிக்கையாளன் கண்டிப்பாக ஆளுமைப்பிளவுக் கூறுகளைக் கொண்டிருப்பான். அது குறியீடுகள் மூலம் எல்லையிட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட மனப்பிளவு” எனும் வாக்கியமும், “எந்த அளவுக்கு நாம் கல்வியும் நாகரீகமும் அடைகிறோமோ அந்த அளவுக்கு மனப்பிளவு அதிகரிக்கிறது. ஆம், நாம் இன்று வாழும் இது உண்மையில் ஒரு மாபெரும் மனப்பிளவுச் சமூகம்தான்” எனும் வாக்கியமும் ஊன்றித் தெளிவு கொள்ள வேண்டியவை.

நடைமுறை வாழ்வில் நாம் ஒற்றைத்தன்மையையே வேண்டுகிறோம். ஒளி அல்லது இருள். வாழ்வு ஒளியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒருபோதும் இருளை எதிர்கொண்டுவிடக் கூடாது என்றும் தவிக்கிறோம். சற்று நிதானித்தால், ஒளியின் இருப்பு இருளாலும் இருளின் துலக்கம் ஒளியாலுமே அர்த்தப்படுவதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இன்னும் நிதானித்து யோசித்தால், இரண்டும் வெவ்வேறானவை அல்ல என்பதும் புலப்படலாம். ஒருமையை அல்லது பன்மைகளை இரண்டாகப் புரிந்து வைத்திருக்கும் அபத்தமும் விளங்கலாம். நவீனச் சமூகக்கோட்பாடுகள் இருள் எதிர் ஒளி எனும் முரண்பாட்டை வலியுறுத்தியதன் ஊடாக நம்மைக் குழப்பி இருக்கின்றன.

“நல்லியல்பென்பது தீய இயல்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமே செயல்பட முடியும். அப்படி கட்டுப்படுத்த தீய இயல்பு இல்லாத தூய நிலையில் நல்லியல்பு செயல்பாடு அற்று தேங்கி இல்லாமலாகிறது. அப்படித்தான் இருக்க இயலும். நன்மை என்பது என்ன? தீமையை எதிர்ப்பதே நன்மை. தீமை இல்லாத இடத்தில் நல்லது என்பதே இல்லை” எனும் கதையின் உரையாடல் நீதிமொழியன்று; அகத்தரிசனத்துக்கான சிறுபொறி.

அன்றாட வாழ்வில்       சமயம் ஒருவிதச் சமூகக்கோட்பாடாகவே நிறுவப்பட்டிருக்கிறது அல்லது அப்படியாகத்தான் முன்னெடுக்கப்படுகிறது. அவ்வகையில் சமயப்பயிற்சிகள் நம்மை மீட்டெடுப்பது என்பது சாத்தியமில்லை. அதனால்தான் வள்ளுவன் மெய்ப்பொருள் என அழுத்திச் சொல்லி இருப்பதாக யோசிக்கிறேன். இங்கு மெய்ப்பொருள் என்பது பொய்ப்பொருளுக்கு நேரெதிராக முன்வைக்கப்படும் மாற்றுக்கருத்தன்று. பொருளின் இருமைத்தன்மைகளின் முரணியக்கத்தை, அவ்வியக்கத்தை முரண்பாடுகளாகத் திரித்துப் புரிந்து கொள்ளும் அவலத்தையே அச்சொல் உணர்த்துவதாக ஊகிக்கிறேன். அதனால்தான் வள்ளுவன் எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் எனச் சொல்லி இருக்கிறான் என்பதாகவும் சிந்திக்கிறேன்.

மெய்ப்பொருளை இன்னும் விசாலமாய் யோசிப்பொம். அச்சொல் இருள் அல்லது ஒளியின் பக்கம் நிற்பதைக் குறித்துப் பேசவில்லை. இருளை விலக்கி ஒளியையோ அல்லது ஒளியை ஒதுக்கி இருளையோ தேர்ந்தெடுக்கவும் சொல்லவில்லை. இரண்டையும் கடந்து நின்று சிந்தித்தலையே குறிக்கிறது அல்லது அப்படியாகவே பரிந்துரைக்கிறேன். செயல்பட்டுக் கொண்டிருக்கும் பறவையும்(ஒளி), செயலற்றிருக்கும் பறவையும்(இருள்) ஒரு மரக்கிளையில் இருக்கின்றன. உற்று நோக்கும் பறவை(மெய்ப்பொருள்) அங்கு இல்லாமல் இருக்கிறது. பக்தி மரபின் நெற்றிக்கண் அல்லது யோக மரபின் மூன்றாவது கண் எனும் உருவகத்தின் வழி மெய்ப்பொருளை ஓரளவு நெருங்கலாம்.

”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” எனும் கந்தரனுபூதிப் பாடலின் முதல்வரி இருளையும் ஒளியையும் குறிப்பிடுவதாகவும், “மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்” எனும் அடுத்த வரி மெய்ப்பொருளைச் சுட்டுவதாகவும் சிந்திக்கிறேன். ஒரு மலரின் பூத்தலை ஒளியாகவும், உதிர்தலை இருளாகவும் கொள்வோம். பூத்தலையும், உதிர்தலையும் கொண்டா நாம் மலரைக் கவனிக்கிறோம். அதன் நறுமணத்தைக் கண்டல்லவா அதை மலரென்கிறோம். பூத்தலையும், உதிர்தலையும் கடந்து மலரை நறுமணமாகப் புரிந்து கொள்வதே மெய்ப்பொருள்.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஎழுதுவது- கடிதம்
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 12