அறம்- கடிதங்கள்

அறம் விக்கி

அன்புள்ள ஜெ,

இந்த புகைப்படத்தை இன்று இணையத்தில் கண்டேன். வெயிலில் ஒளிரும் பனி அற்ற எவெரெஸ்ட் மலை முடி. சற்றே தேன் கலந்த பொன் போல! எனக்கு இது ‘பெருவலி’ சிறுகதையில் கோமல் கண்ட கைலாச மலை உச்சியை நினைவூட்டியது. இன்று காலை மீண்டும் படித்தேன்.

சட்டுன்னு கன்ணத்தெறந்தேன். என் கண்ணுமுன்னால பொன்னாலஆன ஒரு கோபுரமா கைலாசம் வானத்திலே தகதகன்னுநின்னுட்டிருந்தது. அதோட ஒருபக்கம் கண்கூசற மஞ்சளிலே மின்னுது.இன்னொருபக்கம் வளைவுகளிலே இருட்டோட புடைப்புகள் பொன்னா ஜொலிக்குது.பொன். ஆகாசத்துப்பொன். பரிசுத்தமான பொன்மலை. மனுஷன் அள்ள முடியாத செல்வம்இன்னும்இருக்கு. இத்தனைக்கு அப்பாலும் அது அங்க இருக்கு. எப்பவும்இருந்துண்டேதான் இருக்கும்”

  

டி.கார்த்திகேயன்

 

அன்புள்ள ஜெ

அறம் வரிசைக் கதைகளில் அதிகம் பேசப்படாது போன கதை தாயார் பாதம். அந்தக்கதையில் மனிதாபிமான அம்சம் இல்லை, பதிலாக வாழ்வதன் கொடுந்துயரம் உள்ளது. ஆனால் அந்த துயர் மிக அமைதியாக போகிறபோக்கில் சொல்லப்பட்டுள்ளது.

அந்தக்கதை என் குடும்பக்கதை. சில மாதங்களுக்கு முன்பு என் பாட்டி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு கல்யாணவீட்டில்வைத்து கூப்பிட்டதுமே ஓடி வரவில்லை என்பதனால் என் தாத்தா வெற்றிலைக்கோளாம்பியை எடுத்து அப்படியே பாட்டிமேல் கொட்டியதைச் சொன்னார்

“வேற என்ன செய்ய? குளிச்சு புடவை மாத்திட்டு வந்து சோலியப்பாத்தேன்”என்று சாதாரணமாகச் சொன்னார். அந்த வாழ்க்கையின் ஒரு பிரம்மாண்டம் தாயார் பாதத்தில் இருக்கிறது. தேன் அபிஷேகம் செய்த குரல். ஆனால் நடப்பது எச்சில் அபிஷேகம்

ஆர்.எஸ்.கணேஷ்

அன்புள்ள ஜெ

நான் அறம் கதைகளை முன்பே படித்திருந்தேன். இன்று வாழ்க்கையில் அதை ஓர் அனுபவமாக அடைந்தேன். நாங்கள் எட்டுபேர் என் ஆசிரியருக்கு அன்பான மாணவர்களாக இருந்தோம். எட்டுபேரில் சோடைபோனவன் நான். படிப்பை சரியாக முடிக்கவில்லை. வேலை சரியாக அமையவில்லை. இப்போது ஒரு கமிஷன் கடை வைத்து பிழைப்பை ஓட்டுகிறேன்.

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஆசிரியரைப் பார்த்தோம். நான் அவரை சந்திக்காமல் ஒளிந்துகொண்டேன். நான் பெரிய சயண்டிஸ்ட் ஆக வருவேன் என அவர் நினைத்திருந்தார். மற்றவர்கள் அறிமுகம் செய்துகொண்டார்கள். நான் தலைகாட்டவில்லை

ஆனால் அவர் என்னை கேட்டுக்கொண்டே இருந்தார். நான் கிளம்புவதற்குள் என்னை பிடித்துவிட்டார். எதுவுமே கேட்கவில்லை. வாழ்த்தினார். மகிழ்ச்சியாக பேசினார்.  “அப்பப்ப வந்து பாரு” என்று மட்டும் சொன்னார். என் வாழ்க்கை ஒரு தோல்வி என்று சொல்லவில்லை. அப்படி நினைப்பதாகவே தெரியவில்லை

நான் வீடுவரைக்கும் மனசுக்குள் அழுதுகொண்டே இருந்தேன். மத்துறு தயிர் என வந்து சென்று இடை தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து என்பது என்ன என்று புரிந்தது

கே.அருணாசலம்

அறம் சிறுகதைகள்

அறம்

சோற்றுக்கணக்கு

மத்துறு தயிர்

வணங்கான்

தாயார் பாதம்

யானை டாக்டர்

மயில் கழுத்து

நூறு நாற்காலிகள்

ஓலைச்சிலுவை

மெல்லிய நூல்

பெருவலி

கோட்டி

உலகம் யாவையும்

முந்தைய கட்டுரைஉற்றுநோக்கும் பறவை, நம்பிக்கையாளன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசித்திரை- கடிதம்