எழுத்தின் இருள்- கடிதங்கள்

எழுத்தின் இருள்

அன்புள்ள ஜெ

எழுத்தின் இருள் ஒரு முக்கியமான கட்டுரை. நான் தொடர்ச்சியாக ஒன்றை கவனித்து வருகிறேன். உங்கள் வாசகர்களில் ஒருசாரார் உங்களை குரு என்றும் ஆசான் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் அதை திட்டவட்டமாக நிராகரித்துக்கொண்டே இருக்கிறீர்கள். என் எழுத்தை மட்டும் பார் என்று சொல்கிறீர்கள். அதை ஒரு போலித்தன்னடக்கமாகவோ, வெறும் கூச்சத்தாலோ சொல்லவில்லை. அது ஏன் என்பதற்கான காரணகாரிய விளக்கத்தை அளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். எழுத்தாளன் ஊடகமே ஒழிய அவன் எழுத்து அவனே அல்ல என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.

நான் என் இருபத்தேழு வயதில் முதல்முறையாக ஒரு பேரிலக்கியத்தை வாசித்தேன். நார்வேயில் பணியாற்றியபோது வாசிப்பு தவிர வேறு ஒன்றுமே செய்வதற்கு இல்லாத நிலையில் வாசிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தீவிரமாக மட்டுமே வாசித்தாகவேண்டும் என்ற நிலையை அடைந்தேன். நான் வாசித்த கிளாஸிக் என்பது மோபிடிக். அதன்பிறகு நிறைய வாசித்துவிட்டேன். ஆனால் மோபி டிக் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது

கொந்தளிக்கும் கடலில் திமிங்கலவேட்டைக்குச் செல்பவன் எழுத்தாளனேதான் என நினைக்கிறேன். அவனை அவனுடைய தரிசனமே கொல்லக்கூடும். ஆனால் அவனுடைய வேலை அதுதான். எழுத்திலுள்ள இருட்டு என்பது எழுத்தாளனின் இருட்டுதான். கொந்தளிப்பு அவனுடையதுதான். அவன் திடீரென்று ஒளியை காணக்கூடும். ஆனால் அலையும் கொந்தளிப்பும் அவனுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும்

ஆனால் நீங்கள் எழுதுவதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. ஓர் எழுத்தாளனை ஆன்றவிந்து அடங்கிய சான்றோனாக நினைக்கவேண்டியதில்லை. ஞானியாக நினைக்கவேண்டியதும் இல்லை. ஆனால் அவனுடைய அத்தனை இருட்டையும் கருத்தில்கொண்டு அவனை நம் வழிகாட்டியாகக் கொள்ளலாமே. அவனுடைய கொந்தளிப்புகள் நம் கொந்தளிப்புகள் அல்லவா?

நீங்கள் உங்களை ஆசிரியராக வழிகாட்டியாக நிறுத்தாமல் இருக்கலாம். நீங்கள் தேடிச்செல்வது உங்கள் பாதையை மட்டுமே என்று சொல்லலாம். ஆனால் அந்தப்பாதையை வாசகன் பின்தொடரமுடியும். அவனுக்கு உங்களுடைய குழப்பங்களும் கொந்தளிப்புகளும் ஏமாற்றத்தை அளிக்காது. உங்களுடைய சரிவுகளும் வீழ்ச்சிகளும்கூட கசப்பை அளிக்காது.

வாசகன் உங்களை ஆசிரியனாகவே நினைப்பான். அனுபவங்கள் வழியாக அழைத்துச்செல்பவனே இலக்கிய ஆசிரியன். அவன் ஞானம் வழியாக அழைத்துச்செல்பவன் அல்ல என்று சொல்லலாம். நீங்களே இதை எழுதியிருக்கிறீர்கள்

செந்தில் அறிவழகன்

அன்புள்ள ஜெயமோகன்,

நன்மனதுடையோர் பேறு பெற்றோர். அப்பேறு வெகு சிலருக்கே அமைகிறது. பெரும்பாலோர்கு நன்மை தீமை இடையே தொடர்ந்து நடக்கும் போராட்டமே வாழ்க்கை. இருளின் ஆழமோ ஒளியின் உன்னதமோ அவர்களுக்கு புலப்படுவதில்லை.

ஆனால் கலைஞர்கள் அப்படி அல்ல. முக்குணமும் சம நிலையில் இருப்பின் கலைஞன் தன்னிலையில் ஆழ்ந்து படைப்பை கைவிட நேரிடும். ஆகவே கலைஞன் இருளுக்கும் ஒளிக்கும் இடையே ஊசலாடத்தான் வேண்டும். ஆகவே இலக்கியவாதியை அவனுடைய படைப்பை வைத்து மதிப்பிடுவது ஒன்றே வழி.

நெல்சன்

 

அன்புள்ள ஜெ

எழுத்தின் இருள் முக்கியமான கட்டுரை. நான் என் அலுவலக நண்பர்களிடம் சார்ல்ஸ் புகோவ்ஸ்கியை முன்வைத்து ஒரு விவாதத்தில் இதையே கேட்டிருக்கிறேன். அவர் கட்டற்ற வாழ்க்கை கொண்டவர், அதனால் கலைஞர் என்றால் கதே, டால்ஸ்டாய்,  தாமஸ் மன் முதல் மார்க்யூஸ் லோஸா வரை எவரும் கலைஞர்கள் இல்லையா? இதெல்லாம் அபத்தமான எளிமைப்படுத்தல் என்றேன்

தீமையின் அம்சம் எப்போதும் கலைஞனிடம் உள்ளது. அதை தன் ஆழத்திற்குச் சென்று அறிபவன் கலைஞன். அவன் அடையும் அனுபவங்களில் பெரும்பகுதி அவனுக்குள் நடக்கிறது. அதை அவன் கலைவழியாகவே நாம் காணமுடியும். அவன் அதை வாழ்க்கையில் செய்யவேண்டியதில்லை. அது ஒற்றைப்படையான நடிப்பாகத்தான் முடியும்

கொல்பவனாகவும் சாகிறவனாகவும் ஒரேசமயம் இருப்பவனே நல்ல கலைஞன்

எம்.சந்திரசேகர்

முந்தைய கட்டுரைமலபார்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – முத்துக்குமார்